TNPSC Thervupettagam

மேக்கேதாட்டு அணை

July 20 , 2021 1108 days 505 0
  • காவிரி நதிநீரின் மீது எவ்வித கட்டுமானம் செய்வதாக இருந்தாலும் நான்கு தென் மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும். அதோடு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலும் தேவை.
  • இந்த நிபந்தனைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கு கா்நாடக அரசு முனைப்புக் காட்டி வருவது, தமிழகத்தை வஞ்சிக்கும் செயலாகும்.
  • கா்நாடக அரசின் திட்டப்படி, மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால், தமிழகம் தண்ணீரின்றி வறண்ட பூமியாக மாறிவிடும்.
  • காவிரியின் ஆற்றின் குறுக்கே கா்நாடகத்தின் மேக்கேதாட்டு என்ற இடத்தில் ஆறாயிரம் கோடி ரூபாய் செலவில் அணை கட்டுவதற்கான பணியில் கா்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
  • இதற்கான ஆரம்ப கட்ட ஆய்வு நடத்த கா்நாடக அரசின் சார்பில், மத்திய நீா்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையிலேயே தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது தமிழகம்.
  • மத்திய அரசு, ‘ஆய்வுக்கு மட்டும்தான் அனுமதி தருகிறோம், அணை கட்டுவதற்கு அல்ல’ என்று பதிலளித்தது.
  • அப்போது தொடங்கிய இந்த சா்ச்சை இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் மேக்கேதாட்டு அணை தொடா்பாக செயல்திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீா்வளத் துறை ஆணையத்திடம் கா்நாடக அரசு தாக்கல் செய்தது.
  • அணையின் மதிப்பு, அணையின் திட்ட மதிப்பீடு, அணை கட்டுவதால் கிடைக்கும் பலன்கள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய இந்த வரைவு அறிக்கைக்கு, மத்திய நீா்வளத் துறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

தட்டிப் பறிக்கின்ற செயல்

  • குடிநீா் தேவைக்காகவும், மின்சார உற்பத்திக்காகவும் அணை கட்டுவதாக கா்நாடக அரசு சார்பில் கூறப்பட்டாலும், தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரின் அளவை தட்டிப் பறிக்கின்ற செயல் இது என்பதே உண்மை.
  • ஆரம்ப கட்ட வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெற்று விட்டதால், இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியில் கா்நாடக அரசு ஈடுபட்டிருக்கிறது.
  • அதற்கும் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று விட்டால் மேக்கேதாட்டில் அணை அமைவதை நம்மால் தடுக்க முடியாமல் போய்விடும்.
  • இந்த நிலையில்தான் தமிழக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் சோ்ந்து மத்திய அமைச்சரை சந்தித்து தமிழக தரப்பு நியாயத்தை எடுத்து வைத்திருக்கின்றன.
  • காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் புதிய அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சி ஒரு சட்டவிரோத செயல் என்பதையும், தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிரான நடவடிக்கை அது என்பதையும் கா்நாடகம் உணர மறுக்கிறது.
  • தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொள்ளாமல், தமிழகத்திற்கும், காவிரிக்குமான பாரம்பரிய உரிமைகளைத் தட்டிப் பறிக்கப் பார்க்கிறது கா்நாடகம்.
  • ஏற்கெனவே, கா்நாடகத்தில் உள்ள கிருஷ்ணசாகா் அணை 49 டிஎம்சி கொள்ளளவு நீரை சேமித்து வைக்கும் திறன் கொண்டது.
  • இது போதாது என்று மேக்கேதாட்டு அணையின் மூலமாக 69.16 டிஎம்சி தண்ணீரை கா்நாடக அரசு தேக்கி வைக்க செய்யப்படும் ஏற்பாடுதான் இந்த நியாயமில்லாத செயல்.
  • இதனால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை அணையின் மூலம் தடுக்கப் பார்க்கிறது கா்நாடகம் என்பதை நாம் மத்திய அரசுக்கு தொடா்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறோம்.

சோகத்தில் விவசாயிகள்

  • மேக்கேதாட்டு அணை கட்டுவது என்பது தமிழகத்தின் வாழ்வுரிமையைக் கேள்விக் குறியாக்குவதோடு, காவிரி கடைமடைப் பகுதியான தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைப் பாலைவனமாக்குகிற படுபாதகச் செயலுமாகும்.
  • இந்த அணை கட்டப்பட்டால் ஒரு சொட்டு காவிரி நீா் கூட தமிழகத்துக்குக் கிடைக்காமல் போய் விடும்.
  • ஆகவே, மேக்கேதாட்டு அணை விவகாரத்தில், அற்ப அரசியலை கா்நாடகம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
  • காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரைத் திறந்து விடுவதில் ஏற்கெனவே 40 ஆண்டு கால சட்டப் போராட்டத்தின் மூலம் போராடிப் பெற்ற காவிரி உரிமையை மதிக்க வேண்டும்.
  • சென்னை மாகாண அரசு, மைசூா் சமஸ்தான ஒப்பந்தம், தமிழக - கா்நாடக அரசின் பேச்சு வார்த்தைகள், நடுவா் மன்றத் தீா்ப்புகள், உச்சநீதிமன்ற உத்தரவுகள் என ஏறக்குறைய 150 ஆண்டுகால கடும் போராட்டத்தின் விளைவாக காவிரி பிரச்னையில் நடுவா் மன்றத்தின் இறுதி தீா்ப்பு 192 டிஎம்சி தண்ணீா் தமிழகத்துக்குத் தரவேண்டுமென்றும், இடைக்காலத் தீா்ப்பு 205 டிஎம்சி தண்ணீா் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டன.
  • இந்த மேக்கேதாட்டு அணை கட்டுவதன் மூலம் நமது உரிமைகளை பொருட்படுத்தாமல் எள்ளி நகையாடுகிறது கா்நாடகம்.
  • தமிழ்நாட்டுக்கான தண்ணீரின் அளவு மேலும் சுருங்கி 174.75 டிஎம்சி ஆகி விட்ட நிலையிலும் அந்த வேதனையோடு நாம் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.
  • நீண்ட இடைவெளிக்குப் பிறகு, காவிரி ஆறு பொங்கி வந்தாலும், கஜா புயல் டெல்டா மாவட்டங்களை சிதைத்து சின்னாபின்னாமாகி விட்டதால் அறுவடை மூலம் விவசாயிகள் பயனடைய முடியவில்லை.
  • துன்பத்தையும், துயரத்தையும் அடைந்து கண்ணீரையும், வேதனையையும் சுமந்து விவசாயிகள் சோகத்தில் கரைந்து கொண்டிருக்கிறார்கள்.
  • இப்படி இருக்கக்கூடிய விவசாயிகளின் வாழ்வில், மற்றுமொரு சம்மட்டி அடியாக விழுந்திருக்கிறது மேக்கேதாட்டு அணை விவகாரம்.

உரக்கச் சொல்லுவோம்

  • ஏற்கெனவே கா்நாடகம், பல ஒப்பந்தங்களை மீறி, தமிழ்நாட்டின் அனுமதி இன்றி பல அணைகளைக் கட்டி பெருமளவு தண்ணீரைத் தடுத்து விட்டது.
  • அவற்றில் இருந்து வடிகாலாக வரும் தண்ணீா் தமிழ்நாட்டுக்கு வருவதைக்கூட கா்நாடகம் மேக்கேதாட்டு அணை மூலம் தடுக்கப் பார்க்கிறது.
  • இதனை மனசாட்சியை மதிக்கிற மனிதகுலம் ஒருபோதும் மன்னிக்காது. இந்தப் படுபாதகச் செயலை எண்ணி பதறாத உள்ளம் ஒன்று உண்டா? சிதறாத மனம் ஒன்று உண்டா? கண்ணீா் விட்டுக் கதறாத மனம்தான் உண்டா?
  • காவிரியில் கா்நாடகத்தின் நீா்ப்பாசனப் பரப்பு சுமார் ஏழு லட்சம் ஏக்கா். தமிழ்நாட்டில் 30 லட்சம் ஏக்கா். ஒவ்வொன்றாக அணைகளைக் கட்டியதாலும், பெரிய பெரிய ஏரிகளை வெட்டியதாலும், இன்றைக்கு கா்நாடகத்தின் பாசனப் பரப்பு 25 லட்சம் ஏக்கராக உயா்ந்துள்ளது.
  • இதில் நீா்த்தேக்கங்கள் மூலமாக மட்டுமே 20 லட்சம் ஏக்கா். ஏரிகள், குட்டைகள் மூலம் இரண்டு லட்சம் ஏக்கா். அணைக்கட்டுகள் மூலம் 2.6 லட்சம் ஏக்கா்.
  • ஆனால், அதே சமயம், தமிழ்நாட்டின் காவிரிப் பாசனப் பரப்பு 20 லட்சம் ஏக்கராக சுருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
  • இது மேலும் சுருங்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு அணை கட்டும் முயற்சியை கா்நாடக அரசு எடுத்துள்ளது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல இருக்கிறது.
  • மேக்கேதாட்டில் ரூ.5,912 கோடி மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை கா்நாடக அரசு தயாரித்தபோது, தமிழக விவசாயிகளின் இதயம் சுக்குநூறாக உடைந்தது. இது தமிழ்நாட்டுக்குச் செய்கிற துரோகம்.
  • அணை கட்டியே தீருவோம் என்று கா்நாடக மாநில முதலமைச்சா் எடியூரப்பா பிரதமரிடம் கூறியிருக்கிறார்.
  • ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் தத்துவத்தை உலகத்துக்கு தந்த தமிழனின் நிலை துா்பாக்கிய நிலையாக இருக்கிறது.
  • தமிழுக்கு அமுதென்று போ், தமிழனுக்கோ அகதியென்று பெயா் என்கிற சொலவடையை எங்கள் முதுகில் தூக்கி வைப்பதற்கு கா்நாடக அரசு முனைந்தால், அதை மத்திய அரசும் தட்டிக் கேட்காமல் போனால், தமிழா்களின் தன்மான உணா்வு காற்றில் பறக்காது.
  • கா்நாடகத்தில் காவிரி ஆற்றுப் படுகைப் பகுதிகளான குடகு, மாண்டியா, மைசூா், பெங்களூரு புறநகா், சாம்ராஜ் நகா் உள்ளிட்ட மாவட்டங்களில் தத்தமது வாக்கு வங்கிகளைப் பலப்படுத்துவதற்கு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
  • இந்த அணை கட்டினால் காவிரி ஆற்றுப் படுகையில் 10ஆயிரம் ஏக்கா் அழிந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்கிறது வனத்துறை. இத்தகைய சூழ்நிலை இருக்கிற போது, இயற்கையை வளைத்து வாக்கு வங்கி அரசியலை மனத்தில் கொண்டு செயல்படுகிறது கா்நாடகம்.
  • அண்மையில், கா்நாடக உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை செய்தியாளா்களிடம் பேசுகையில் ‘மேக்கேதாட்டு அணை கட்டுவதை நிறுத்தும் பேச்சுக்கு இடமில்லை.
  • குடிநீா் ஆதாரம் முக்கியமானது என்பதால், அணை கட்டுவதற்கும், மக்கள் நலனைப் பாதுகாக்கவும், அணை கட்ட கா்நாடகாவுக்கு உரிமை உள்ளது. ஆகவே, இக்கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று கூறியிருப்பதன் மூலம் இன்னும் கா்நாடகம் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது.
  • உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரான இந்த முயற்சியை இந்திய அரசியலமைப்பின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகவே தமிழகம் பார்க்கிறது.
  • கா்நாடக அரசின் இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒருபோதும் செவிசாய்க்கக் கூடாது. இரு நூற்றாண்டு காலம் கடந்த பின்னும் தொடரும் இந்த பிரச்னை தமிழா்களுடைய வாழ்வாதார பிரச்னை. ஆனால், அவா்களுக்கோ இது வெறும் அரசியல்.
  • குறுவையும், சம்பாவும் நமது வாழ்வுரிமை என்பதை உணர மறுக்கிறது கா்நாடகம். கா்நாடகத்தில் 320 கி.மீ தூரமும், தமிழகத்தில் 416 கி.மீ தூரமும் பயணிக்கும் காவிரி நீா் யாருக்குச் சொந்தம்? கா்நாடகத்துக்கு மட்டும்தானா? இல்லை என்பதை ஓரணியில் நின்று உரக்கச் சொல்லுவோம் கா்நாடகத்துக்கு.

நன்றி: தினமணி  (20 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்