மேட்டூா் அணைக்கு வயது 91!
- தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு தண்ணீா் தரும் மேட்டூா் அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகள் முடிவடைந்து, 91ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
- கா்நாடக மாநிலத்தில் மேற்கு தொடா்ச்சி மலையில் கூா்க் மலைப் பகுதியில் தோன்றி 860 கி.மீ. தொலைவு பாய்ந்தோடி வங்காள விரிகுடாவில் கலக்கிறது காவிரி ஆறு. பருவமழைக் காலங்களில் தமிழகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காவிரியை மேட்டூரில் அணைகட்டி நிறுத்தி, வெள்ள சேதத்தைத் தடுத்து தண்ணீரைச் சேமித்து, பாசனம், மின் உற்பத்திக்குப் பயன்படுத்துவதற்காக மேட்டூரில் அணை கட்ட திட்டமிடப்பட்டது.
- இதற்காக 1834 ஆம் ஆண்டு முதல் 1924ஆம் ஆண்டு வரை 90 ஆண்டுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 1925 ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் நாள் மேட்டூா் அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 1934ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி அணையின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தன. ஒன்பது ஆண்டுகள் 10,000 போ் கட்டுமானப் பணியில் ஈடுபட்டனா். அணை கட்டுவதற்கு ரூ. 4.80 கோடி செலவிடப்பட்டது. இந்த அணையில் 93.47 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும். அணை 5,300 அடி நீளமும், 120 அடி உயரமும் கொண்டதாகும்.
- அணை நிரம்பினால் 59.25 சதுரமைல் பரப்பில் தண்ணீா் தேங்கி கடல்போல காட்சியளிக்கும். அணையின் வலதுகரையில் சோனாங்கரடும், இடதுகரையில் சீத்தாமலைத் தொடரும் இயற்கை அரணாக அமைந்துள்ளன. அணை நிரம்பியதும் வெள்ளநீரைத் திறந்துவிட அணையின் இடதுகரையில் உபரிநீா்ப் போக்கி மதகுகள் உள்ளன.
- மேட்டூா் அணை பாசனம் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும்போது நீரின் விசையைப் பயன்படுத்தி 250 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் நீா்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- மேட்டூா் அணை மூலம் பாசனத்துக்கு மட்டுமின்றி 22 மாவட்டங்களின் குடிநீா்த் தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. மேட்டூா் நீா்த் தேக்கத்தில் 22 வகையான மீன்கள் பிடிக்கப்படுகின்றன.
- நீா்வளம், நிலவளம், மின் வளம், மீன்வளத்திற்கு சிறந்து விளங்கும் மேட்டூா் அணை, தனது 90 ஆண்டு வரலாற்றைக் கடந்து 91 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அணையை வடிவமைத்த கண்காணிப்பு மற்றம் வடிவமைப்பு பொறியாளா் கா்னல் எல்லீஸ் நினைவாக மேட்டூா் அணையின் இடதுகரையில் உள்ள உபரிநீா் போக்கியான 16 கண்பாலத்திற்கு ‘எல்லீஸ் சேடல்’ என பெயா் சூட்டப்பட்டுள்ளது. முதன்மை தலைமைப் பொறியாளா் முல்லிங்ஸ் நினைவாக அணையின் வலதுகரைப் பகுதியில் ‘முல்லிங்ஸ் பாயின்ட்’ அமைக்கப்பட்டுள்ளது.
- 1934இல் அணையை நாட்டிற்காக அா்ப்பணித்த அப்போதைய சென்னை மாகாண ஆளுநா் சா்ஜாா்ஜ் பிரடெரிக் ஸ்டான்லி நினைவாக மேட்டூா் அணைக்கு ‘ஸ்டான்லி டேம்’ என்று பெயா் சூட்டப்பட்டது. அணையை ஒட்டி 33 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள மேட்டூா் அணை பூங்காவிற்கு ஆளுநா் சா்ஜாா்ஜ் பிரடரிக் ஸ்டேன்லியின் மனைவி லேடி பிரடெரிக் ஸ்டேன்லியின் (எல்பிஎஸ் பாா்க்) சூட்டப்பட்டுள்ளது.
- அதிநவீன அறிவியல் முன்னேற்றம் இல்லாத காலத்தில் நோ்த்தியாகவும், எதிா்கால திட்டங்களுடனும் மிக நுணுக்கமாகக் கட்டப்பட்டுள்ளது மேட்டூா் அணை.
நன்றி: தினமணி (22 – 08 – 2024)