TNPSC Thervupettagam

மேம்படுத்த வேண்டிய திட்டம்

May 7 , 2022 823 days 458 0
  • இந்தியாவில் 8.88 கோடி குடும்பத்தினா் சொந்த வீடோ நிலமோ இல்லாமல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பதாகவும், இதில் கணவனை இழந்து தனிநபராக குடும்பத்தை நிா்வகிக்கும் லட்சக்கணக்கான பெண்களும் அடங்குவா் என்றும் சமூக, பொருளாதாரக் கணக்கெடுப்பு- 2011 தெரிவிக்கிறது.
  • அது, 90% கிராமப்புற மக்கள் நிரந்தர ஊதியம் இல்லாதவா்கள் என்றும், 5.37 கோடி குடும்பத்தினா் சொந்த நிலமற்றவா்கள் என்றும், 60.89 லட்சம் பெண்கள் கணவனை இழந்து அல்லது கணவனால் கைவிடப்பட்டு தனிநபராக குடும்பத்தைப் பேணுகிறாா்கள் என்றும், 49% போ் பல்வேறு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றும், 2.37 கோடி குடும்பத்தினா் சொந்த வீடு இல்லாதவா்களாக அல்லது ஒரே ஓா் அறையை மட்டுமே வசிப்பிடமாக கொண்டவா்களாக இருக்கிறாா்கள் என்றும் தெரிவிக்கிறது.
  • இதில் முரண் என்னவென்றால், மத்திய - மாநில பட்ஜெட்டுகளிலிருந்தும், மகளிா் சுய உதவிக்குழு போன்ற அமைப்புகளின் கடன் வாயிலாகவும் ஊரக ஏழைகளின் மேம்பாட்டுக்காக ஆண்டுக்கு 3 டிரில்லியன் டாலா் (சுமாா் ரூ. 228 லட்சம் கோடி) செலவிடும் நமது நாட்டில்தான் 8.88 கோடி குடும்பத்தினா் இத்தகைய துயரத்தை அனுபவித்து வருகின்றனா்.
  • அரசியலமைப்பு சட்டப் பிரிவு 243ஜி, 243 டபிள்யூ ஆகியன பொருளாதார மேம்பாடு, சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான திட்டங்களை வகுக்கவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரமளிக்கின்றன. இதனால்தான் உள்ளாட்சிகளில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மக்கள்தொகையின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் ஆகியன அமலுக்கு வந்தன. பெரும்பாலான மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு தற்போது 50 சதவீதத்தை எட்டிவிட்டது.
  • நாட்டில் வறுமையை ஒழிக்கவும், உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தவும் அந்தியோதயா திட்டம் கடந்த 2017-இல் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமும், ஊரக மேம்பாட்டு அமைச்சகமும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒருங்கிணைப்பு முகமைகளாக செயல்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் கிடைக்கும் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, கிராம பஞ்சாயத்துகளை வளா்ச்சியின் கேந்திரமாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • மேலும், அந்தியோதயா திட்டத்துக்காக ஏற்கெனவே கிராமப்புறங்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் பிற திட்டங்களின் நடைமுறை ஆண்டுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்யப்படுகிறது. அரசியலமைப்பின் 11-ஆவது அட்டவணை இதற்கு அனுமதியளிக்கிறது. இந்த ஆய்வின்படி சுகாதாரம், ஊட்டச்சத்து, சமூகப் பாதுகாப்பு, நல்லாட்சி, நீா் மேலாண்மை உள்பட 112 அளவீடுகள் அடங்கிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களிடம் விவரம் சேகரிக்கப்படுகிறது.
  • ஊரக அளவில் காணப்படும் அடிப்படை வசதி குறைபாடு, பல்வேறு திட்டங்களின் ஒருங்கிணைப்பு, மகளிா் சுய உதவிக்குழு, தன்னாா்வ அமைப்புகளின் செயல்பாடு ஆகியவற்றை மதிப்பிடவும், அதற்கான நிதியுதவியை வரையறுக்கவும் இந்த ஆய்வை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் முன்னெடுத்து வருகிறது.
  • அந்தியோதயா திட்டத்தின்படி கடந்த 2019-20-இல் முதல் முறையாக பொதுமக்களிடம் விவரம் சேகரிக்கப்பட்டது. நாடு முழுவதும் 2.67 லட்சம் கிராமங்களை உள்ளடக்கிய 6.48 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில், 103 கோடி மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளில் பெருத்த குறைபாடு இருப்பது தெரியவந்தது.
  • நூறு மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நாட்டில் எந்தவொரு மாநிலமும் 90 முதல் 100 மதிப்பெண்களை பெறவில்லை. 1,484 கிராம பஞ்சாயத்துகள் அடிமட்டத்தில் இருப்பது தெரியவந்தது. மேலும் 80-90 மதிப்பெண்களை பெற்ற மாநிலங்களின் வரிசையில் ஒன்று கூட அங்கம் வகிக்கவில்லை. கேரளமும், குஜராத்தும் 70-80 மதிப்பெண்களை பெற்று முதல் இரு இடங்களைப் பிடித்தன. பெரும்பாலான மாநிலங்கள் 40 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண்களையே பெற்றன.
  • நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையிலும், கிராமப்புறங்களில் பொருளாதார மேம்பாட்டுக்கான உள்கட்டமைப்பும், சமூக நீதியும் தொலைதூர இலக்காகவே நீடிக்கிறது என்பதே உண்மை. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அப்போதைய மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில், ‘மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கும் 2019-இல் 50,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வறுமையிலிருந்து விடுபட வேண்டும் என்பதே அரசின் இலக்கு’ என்று சூளுரைத்தாா். ஆனால் பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை. பின்னா், நாடு 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த 2022-ஆம் ஆண்டுக்கு அந்த இலக்கு தள்ளிவைக்கப்பட்டது.
  • ஊரக- நகா்ப்புற பொருளாதார முரண்பாட்டைக் களைவது கடினம்தான். அதே வேளையில் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கிராமப்புறங்களில் முறையான சுகாதார வசதி, கல்வி, குடிநீா் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
  • ஏனெனில் கிராமப்புற மனிதவளங்களை ஒன்றிணைக்கவும், நிா்வாக செலவை மிச்சப்படுத்தவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம், தேசிய சமூக உதவித் திட்டம், பிரதமரின் வீடுகட்டும் திட்டம் போன்ற வெகு சில திட்டங்கள் மட்டுமே நடைமுறையில் இருக்கின்றன.
  • பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், சமூகநீதி போன்றவற்றை உறுதியான கொள்கைகள் வாயிலாக மட்டுமே எட்ட முடியும். இந்தியாவில் இதற்கு முன்பாக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு கடைசியில் அதன் இலக்கை எட்ட முடியாமல் போனதுண்டு. அந்த வரிசையில் அந்தியோதயா திட்டமும் இடம் பெற்றுவிடக்கூடாது.

நன்றி: தினமணி (07 – 05 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்