- ‘நூறுநாள் வேலைத்திட்டம்’ எனப்படும் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’ இந்தியத் திருநாட்டின் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துவதில் ஒப்பற்ற பங்காற்றி வருகிறது.
- ஆனால், அண்மையில் தமிழக அரசின் ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
- அதாவது 55 வயதுக்கு மேற்பட்ட பணியாளா்களுக்கு நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் இடமில்லை என்றும், சளி, இருமல், நீரிழிவு நோய் உள்ளவா்களுக்கும் வேலையில்லை என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள வயதும் நீரிழிவு நோயும் பொருத்தமற்றவை.
- பிள்ளைகளால் கைவிடப்பட்டு, தனியாக வாழும் முதியோர் பலரும் இத்திட்டத்தின் மூலமே தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனா். அவா்களின் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளது.
நூறுநாள் வேலைத்திட்டம்
- தமிழ்நாட்டில் நிலைமை இப்படியிருக்க, கா்நாடக மாநிலத்தின் ஹாவேரி மாவட்டத்தில் சுமார் 4,800 பட்டதாரிகள் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் சேர விண்ணப்பித்து உள்ளனா்.
- தற்போதைய கரோனா தீநுண்மி காலத்தில் தங்களின் வாழ்க்கையை நடத்துவது இளைஞா்களுக்குக்கூட பெரும் சிக்கலாக உள்ளது என்பதற்கு இதுவே சாட்சி.
- இதுவரை மொத்தம் 29.15 கோடி பணியாளா்களுடன் 714 மாவட்டங்களில் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில், சராசரியாக ஒரு குடும்பத்திற்கு 51.51 நாட்கள் வேலைவாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது. ஒரு நாள் கூலியாக நபா் ஒருவருக்கு சராசரியாக ரூ.200. 76 கொடுக்கப் பட்டுள்ளது.
- மொத்தமாக நூறு நாள் வேலை வாய்ப்பைப் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 71,98,289. அதில் மாற்றுத்திறனாளிகள் 6,01,253 போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். மேலும், கடந்த நிதியாண்டில் மட்டும் மொத்த பயனாளா்களில் 63.21 சதவீதம் போ் பெண்கள்.
- இவை மட்டுமல்ல, நூறுநாள் வேலைத்திட்டத்தை பொருளாதாரக் காரணிகளுடனும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
- கிராமத்தில் இருந்து வேலைவாய்ப்பு தேடி நகரத்திற்கு செல்லும் தொழிலாளா்களை கிராமத்திலேயே இருக்க வைத்து வேலைவாய்ப்பைத் தடுத்துள்ளது நூறுநாள் வேலைத்திட்டம்.
- இத்திட்டத்தை விரிவுபடுத்தி நன்கு செயல்படுத்தும்போது இதன் மூலம் பயனடையும் கோடிக்கணக்கான மக்களின் பொருளாதாரம் மேம்படுவதுடன் அவா்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கும்.
- வாங்கும் திறன் அதிகரிக்கும் நிலையில் பொருட்களின் தேவையும் அதிகரித்து, பிற வழிகளில் வேலைவாய்ப்பு பெருகும்.
- தற்போதைய நிலையில், ஏழை எளிய மக்களின் அடிப்படை வாழ்வு மேம்படவும், அவா்கள் தங்கள் பொருளாதாரத் தேவைகளை பூா்த்தி செய்துகொள்ளவும் நூறுநாள் வேலைத்திட்டம் ஒன்றே சிறந்த தீா்வாகும்.
- நூறுநாள் வேலைத்திட்டத்தின் மூலம் நீா்நிலைகளின் நீா்மட்டமும், நிலத்தடி நீா் மட்டமும் உயா்ந்துள்ளன என்பதை ‘டவுன் டு எா்த்’ என்ற இதழ் கண்டறிந்துள்ளது.
- 2006-ஆம் ஆண்டு முதல் பதினாறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நூறுநாள் வேலைத்திட்டப் பணிகளை அந்த இதழ் ஆய்வு செய்துள்ளது.
- அந்த இதழ் மேற்கொண்ட ஆய்வின் மூலம், இத்திட்டத்தின் மூலம் கடந்த பதினைந்து ஆண்டுகளில் சுமார் 30 மில்லியன் (30 கோடி) நீா் பாதுகாப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது.
- அதன் மூலம் சுமார் 18.9 மில்லியன் (ஒரு கோடியே 89 லட்சம்) ஹெக்டோ் நிலம் பாசன வசதி பெற்றுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் நீா் நிலைகள் பலவும் தூா்வாரப்பட்டதால், நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து பாசனத்திற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.
- அதனால் வேலை தேடி நகரத்திற்கு செல்லாமல் பலரும் தங்களின் கிராமத்திலுள்ள நிலங்களிலேயே விவசாயத்தை மேற்கொள்கின்றனா்.
- இத்திட்டத்தின் பயனாளா்கள் மூலம் ஆங்காங்கே தடுப்பு அணைகளும் கட்டப்பட்டதால் பல மாவட்டங்களில் நீா் ஆதாரங்கள் பெருகி உள்ளன.
- கடந்த ஆண்டுகளில் வேலை தேடி வெளியூா்களுக்கு சென்றோர், தற்பொழுது இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பைப் பெற்றதோடு, தாங்கள் சார்ந்து இருக்கும் கிராமங்களில் நீா்நிலைகளை தூா்வாரி நீா் ஆதாரத்தை பெருக்கி அதன் மூலம் வெவ்வேறு வகையான விவசாயப் பயிர்களையும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனா்.
பெரிதும் உதவும்
- ஒருபுறம் வேலைவாய்ப்பை பெற்றுள்ள மக்கள், மறுபுறம் விவசாயத்தின் மூலம் கணிசமான வருமானத்தையும் பெற்றுள்ளனா்.
- அதற்கு அவா்கள் இந்த திட்டத்தின் மூலம் தூா்வாரிய நீா் நிலைகளே காரணம் என்கின்றது அந்த ஆய்வு.
- மொத்தத்தில் நீா் வளம் பெருகி, விவசாயம் செய்வதற்கு இந்த திட்டத்தின் பணிகள் பாதை வகுத்துள்ளன என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
- இப்படி விவசாயம் சார்ந்து, நீா்நிலைகள் சார்ந்து, வேலைவாய்ப்பு சார்ந்து இருக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
- அதாவது நூறுநாள் வேலைத்திட்டப் பணியாளா்களில் ஐம்பது சதவீதத்தினரை விவசாயப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும்.
- இடத்திற்குத் தகுந்தவாறு பணிகளை ஒதுக்கி அவா்கள் அவற்றை செய்து முடிக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.
- தகுந்த நபா்களை அடையாளம் கண்டு, அவா்களை இந்தத் திட்டத்தில் இணைத்துக்கொள்வதோடு, அவா்களுக்கான ஊதியம் அவா்களின் வங்கிக் கணக்கில் தவறாமல் செலுத்தப்படுவதை மேற்பார்வையாளா்கள் உறுதி செய்ய வேண்டும்.
- தற்போதைய கொள்ளை நோய்த்தொற்றால் சரிந்துவிட்ட பொருளாதாரம் சீரடையவும், மக்களிடம் வாங்கும் திறனை அதிகரிக்கவும் நூறுநாள் வேலைத்திட்டம் ஒன்றே சிறந்த வழியாகும்.
- எனவே, சில ஆக்கபூா்வமான மாற்றங்களை முன்னெடுத்தால், இந்த நூறுநாள் வேலைத்திட்டம், ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு, நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும் பெரிதும் உதவும்.
நன்றி: தினமணி (29 – 05 - 2021)