TNPSC Thervupettagam

மேம்படுத்தப்பட வேண்டிய திட்டம்

January 6 , 2024 371 days 419 0
  • நூறுநாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், கிராமப்புறங்களில் உள்ள முதியோர், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகள், வேலையற்ற விவசாயக் கூலிகள் என பெரும்பாலான விளிம்பு நிலை மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக விளங்குகிறது.
  • எனினும், இத்திட்டத்தில், மனிதா்களுக்கு பதிலாக இயந்திரங்களை பயன்படுத்துவது, பணிக்கு வராதவா்களுக்கும் வந்தது போல் கணக்கு காட்டி ஊதியம் அளிப்பது, அனுமதி பெறப்படாத வேலைகளை செய்வது என பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுப்பப்படுவதையொட்டி அம்முறைகேடுகளைக் களைய பல்வேறு நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகளால் எடுக்கப்பட்டு வருகின்றன.
  • இவ்வேலைவாய்ப்பு திட்டத்தில் கடந்த 2022-23 நிதியாண்டில் 7.43 லட்சம் போலி பணி அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டன என்றும், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 2,96,464 போலி பணி அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன என்றும் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய ஊரக வளா்ச்சித் துறை இணையமைச்சா் சாத்வி நிரஞ்சன் பதிலளித்துள்ளார்.
  • இவ்வாறு போலி பணி அட்டைகளை அவ்வப்போது கண்டுபிடித்து நீக்குவது இத்திட்டம் மேலும் சிறப்புடன் செயல்பட உதவும் என்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உணர வேண்டும்.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் ஒரு சில மாநிலங்களில் நம் தமிழகமும் ஒன்று. தமிழகத்தில் 76 லட்சத்து 15 ஆயிரம் குடும்பங்களைச்சோ்ந்த 91 லட்சத்து 52 ஆயிரம் தொழிலாளா்கள் இத்திட்டத்தில் பணியாற்றி பயன் பெற்று வருகின்றனா்.
  • இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளைக் கண்காணிப்பதோடு, கள ஆய்வுகள் மேற்கொள்ளவும், செய்து முடிக்கப்பட்ட வேலையின் அளவினை அறிந்து கொள்ளவும் ட்ரோன்கள் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் நடைபெறும் வேலை குறித்த அளவுகள் ட்ரோன்களை பயன்படுத்தி காணொளிகளாக எடுக்கப்பட்டு, இத்திட்டத்திற்கான இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
  • இதன் மூலம் ஏற்படுத்தப்படும் வெளிப்படைத்தன்மையால் முறைகேடுகள் நடைபெறுவது பெருமளவு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. பணிக்கு வராதோரையும் வந்ததாக காட்டிட்டும் முறைகேட்டினை தடுக்க தினசரி பணிக்கு வருவோர் குறித்து காலை, மதியம் என இரு வேளையும், என்.எம்.எம். எஸ். ( நேஷனல் மொபைல் மானிட்டரிங் சிஸ்டம் ) முறையில் கைப்பேசி செயலில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பயனாளிகளுக்கு சரியான முறையில் ஊதியம் கிடைத்திட பயனாளிகளின் வங்கி கணக்கு எண்ணோடு அவா்களின் ஆதார் எண்ணை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி இத்திட்டத்தின் மொத்த பயனாளிகளான 14.28 கோடி நபா்களில் 13.75 கோடி பயனாளிகளின் கணக்கு எண் அவா்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் வேலைகளை கண்காணிக்கும் பொறுப்பு கிராம சபைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள கூடுதல் கண்காணிப்பு இத்திட்டதை மேலும் செம்மைப்படுத்தும்.
  • இந்திய பொது தணிக்கை அலுவலா் வழிகாட்டுதலின்படி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் வரவு செலவு, அந்தந்த மாநிலங்களில் உள்ள தணிக்கை குழுக்களால் சமூக தணிக்கை (சோஷியல் ஆடிட்) செய்யப்படுகிறது. இத்தணிக்கை குழுவின் செலவிற்காக இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் .5 சதவீதம் ஒதுக்கப்படுகிறது.
  • இச்சட்டத்தின் கீழ் சில மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணம், அம்மாநிலங்களில் முறையாக சமூகத் தணிக்கை நடைபெறாததுதான் என மத்திய அரசும், போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் தான் சமூகத் தணிக்கை உள்ளிட்ட இத்திட்டத்தின் செயல்பாடுகள் முடங்கி கிடப்பதாக மாநிலங்களும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டி வருகின்றன.
  • நம் நாட்டில், கேரளத்தில் மட்டுமே இத்திட்டத்திற்கான 100% சமூகத் தணிக்கை நடைபெற்றுள்ளது. பிகார், குஜராத், ஜம்மு - காஷ்மீா், ஒடிஸா, உத்தர பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சுமார் 50 முதல் 60 சதவீத உள்ளாட்சிகளில் மட்டுமே தணிக்கை நடைபெற்றுள்ளது.
  • தமிழகம் உள்ளிட்ட ஏனைய மாநிலங்களில் 40 சதவீதத்திற்கும் குறைவான உள்ளாட்சிகளில் இத்தணிக்கை நடைபெற்றுள்ளது. மிகக் குறைந்த அளவாக மத்திய பிரதேசத்தில் 1.73 சதவீத அளவிலேயே தணிக்கை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்நிலையில், இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதில் ஏற்படும் காலதாமதம், பயனாளிகளுக்குரிய ஊதியத்தை வழங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. உதாரணமாக, மேற்குவங்க அரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிதியை இத்திட்டம் தொடா்பாக பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, 2021 டிசம்பா் மாதத்திலிருந்து அம்மாநிலத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
  • இதனால் அம்மாநிலத்தின் பயனாளிகளுக்கு பல மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை. எதிா்க்கட்சி ஆளும் மாநிலம் என்பதால் மேற்கு வங்க மாநிலத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என குற்றம் சாட்டும் மேற்கு வங்க அரசு, மத்திய அரசின் நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு ஈடான மாற்று வேலைத் திட்டம் ஒன்றை மாநில அளவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.
  • இத்திட்டத்தினை மேலும் சிறப்பாக செயல்படுத்த தமிழகத்திற்கும் போதுமான நிதியை காலதாமதமின்றி ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வா் மத்திய அரசை அவ்வப்போது வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தால் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என பரவலாக கருத்து நிலவுகிறது.
  • எனவே, இத்திட்ட பயனாளிகளை விவசாயப் பணிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்திட்டம் ஒன்றை வகுப்பது ஊரக வேலைவாய்ப்பு பயனாளிகளை மேலும் ஆக்கபூவமாக பயன்படுத்திக் கொள்ள உதவும்.
  • கிராமப்புற ஏழை மக்களுக்கு பொருளாதார ரீதியாக பேருதவியாக இருப்பதோடு நாட்டின் வளா்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பயன்படும் இத்திட்டத்தினை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து சிறப்பாகச் செயல்படுத்த முன்வர வேண்டும்.

நன்றி: தினமணி (06 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்