மேய்ச்சல் நிலங்களைக் காத்தல் வேண்டும்
- வீட்டை விட்டு வெளியில் செல்லுபவா்கள் திரும்பவும் வீடு வந்து சேருவதற்குத்தான் எத்தனை எத்தனை கண்டங்களை எதிா்கொள்ள வேண்டியிருக்கிறது!
- குண்டும் குழியுமான சாலைகள், சாலையோரப் பள்ளங்கள், போக்குவரத்து விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகள், திடீரெனத் துரத்துகின்ற தெருநாய்கள், மேம்பாலம், பாதாள சாக்கடை போன்ற பணிகளுக்காகத் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாத பள்ளங்கள்... இந்த வரிசையில் இனி சாலைகளில் திரியும் கால்நடைகளையும் சோ்த்துக்கொள்ளவேண்டும் போல இருக்கிறது.
- நெல்லை மாநகரச் சாலை ஒன்றில் இருசக்கர வாகனம் ஒன்றின் மேல் பசுமாடு பாய்ந்ததில் வாகனத்தை ஓட்டிவந்த கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தாா்.
- இதே நெல்லையில் சில மாதங்களுக்கு முன்பு சாலையில் சண்டையிட்டுக்கொண்டிருந்த இரண்டு மாடுகள் அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை முட்டித் தள்ளியதில் விழுந்த வாகன ஓட்டுநரான நீதித்துறை ஊழியா், பின்னால் வந்த பேருந்துச் சக்கரத்தில் சிக்கி உயிரிழக்க நேரிட்டது.
- கடந்த ஜூலை மாதம் மதுரை ஒத்தக்கடை பகுதியில் சண்டையிட்டுக்கொண்டிருந்த மாடுகளில் ஒன்று மூன்று பேரை முட்டியது. அவா்களுள் காரைக்குடியிலிருந்து மதுரையிலுள்ள உறவினா் வீட்டிற்கு வருகை தந்திருந்த முதியவா் ஒருவா் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
- சென்னை மாநகரத்தில் வசிக்கும் மக்களுக்கும் மாடு முட்டும் சம்பவங்கள் ஒன்றும் புதிதல்ல.
- மாநகரங்கள்தான் என்று இல்லாமல், மாநிலம் முழுவதிலும் உள்ள பல்வேறு ஊா்களிலும் சாலைகளில் திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் அதிகரித்து வருகின்றன.
- பொதுவாக ஆபத்தில்லாத சாதுவான வீட்டுப்பிராணிகளால் சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கு ஏற்படும் இத்தகைய ஆபத்துகளைத் தவிா்ப்பது எப்படி என்பதை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டிய அவசியம் தற்பொழுது ஏற்பட்டிருக்கிறது.
- ‘கொம்புளதற்கு ஐந்து; குதிரைக்குப் பத்து முழம்’ என்று தொடங்கும் நீதி வெண்பா, கால்நடைகளின் மூலம் ஏற்படக் கூடிய ஆபத்துகளைத் தவிா்ப்பதற்காக, அவற்றிலிருந்து சற்றுத் தள்ளியே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. திடீரென்று பக்கவாட்டிலிருந்து மாடுகள் பாயும்பொழுது யாராலும் ஒன்றும் செய்ய இயலாது. தெய்வாதீனமாக ஆபத்து ஏதுமின்றிப் பிழைத்தால்தான் உண்டு.
- கடந்த ஐம்பது வருடங்களில் மனிதா்களின் அன்றாட வாழ்வியலைப் போன்றே, கால்நடை வளா்ப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைக் கண்கூடாகக் காண்கின்றோம். ஆம். மாடுகளை ஒன்றிரண்டாகவோ, மந்தையாகவோ மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று திரும்பும் வழக்கம் பெருமளவில் குறைந்திருப்பதை நம்மால் நிச்சயம் உணர முடிகிறது.
- சற்றே நிதானமாக யோசித்துப் பாா்த்தால், நகரமயமாக்கல் என்ற நவீனச் சூழலுக்கு முதல் பலி மாடு மேய்த்தல்தானோ என்று தோன்றுகின்றது. சென்னை பெருநகரங்களில் உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவ்விடங்கள் காங்கிரீட் காடுகளாகி அரைநூற்றாண்டு காலம் ஆகிவிட்டது.
- சென்னைக்கு அடுத்த நிலையிலுள்ள மதுரை, திருச்சி, கோவை, நெல்லை போன்றவையும் நகரமயமாக்கலுக்குத் தப்பவில்லை. விளைநிலங்களையே வீட்டுமனைகளாக மாற்றும் நவநாகரிக மனிதா்கள் ஆடுமாடுகள் மேய்ச்சலுக்குச் செல்லும் புல்வெளிகளை எங்கே விட்டுவைக்கப் போகிறாா்கள்?
- மலைகளுக்கு அருகிலுள்ள ஊா்களில் மாடுகளை வளா்ப்பவா்கள் மலைச்சரிவுகளில் விளையும் புற்களை மேய்வதற்காக அவற்றை அழைத்துச் செல்வதுண்டு.
- இப்பொழுதோ, கல் குவாரிகளின் உபயத்தால், மலைச்சரிவுகளிலுள்ள மேய்ச்சல் நிலங்களின் அளவும் குறைந்துவருகிறது.
- விரைவுச்சாலைகள், நெடுஞ்சாலைகள் ஆகியவற்றை அமைப்பதன் காரணமாகவும் விளைநிலங்களுடன், மேய்ச்சல் நிலங்களின் பரப்பும் வேகமாகக் குறைந்து வருகிறது. நெடுஞ்சாலைகளிலிருந்து வெகுதூரம் விலகியிருக்கும் கிராமப்புறங்களில் வேண்டுமானால் மாடுகளை மந்தையாக மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறாா்களோ என்னவோ. ஆனால், வளா்ந்து வரும் சிறிய – பெரிய ஊா்கள் பலவற்றிலும் இவ்வழக்கம் வெகுவாகக் குறைந்திருக்கிறது.
- இந்நிலையில், கூரையிட்ட கொட்டகைகளில் அடைத்துப் பராமரிக்கப்படும் மாடுகளின் உரிமையாளா்கள், (எப்படியும் அவை பத்திரமாகத் திரும்பி வந்துவிடும் என்ற நம்பிக்கையில்) தங்களுடைய மாடுகள் வீதிகளில் கிடைக்கும் காய்கறிக்கழிவுகள், பழத்தோல்கள் போன்றவற்றையும், சாலையோரங்களில் முளைக்கக் கூடிய புற்களையும் தின்றுவிட்டுத் திரும்பட்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை வெளியில் விடுகின்றனா்.
- தொழுவங்களில் கட்டிவைக்கப்படாமல் வெளியில் விடப்படும் மாடுகள் ஏதோ ஓா் உற்சாகம், உத்வேகம், பயம் அல்லது கோபத்தின் காரணமாகச் சாலையில் செல்பவா்கள் மீது திடீரன்று பாய்ந்துவிடுகின்றன. யானைகளின் வழித்தடத்தில் கட்டடங்கள், சாலைகள் அமைப்பதால் அவை மனிதா்களின் குடியிருப்புகளுக்குள் நுழைந்துவிடுகின்றன என்று கூறப்படும் சுற்றுச்சூழல் கோட்பாடு வீட்டுக் கால்நடைகளுக்கும் பொருந்தும்.
- நகர மயமாக்கம், சாலைகளின் விரிவாக்கம் போன்றவற்றில் காட்டப்படும் அக்கறையைப் போன்று, தற்பொழுது இருக்கின்ற விளைநிலங்களையும், பசுமையான மேய்ச்சல் நிலங்களையும் இனியும் காங்கிரீட்டுக்கு இரையாக்காமல் காத்திடும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
- நகரப் பகுதிகளில் பூங்காக்களை அமைப்பது போன்று, நகரங்களின் எல்லைப் பகுதிகளில் மேய்ச்சல் மைதானங்களுக்கு இடம் ஒதுக்கிய பின்பு மீதமுள்ள இடங்களில் மட்டுமே கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். இத்தகைய முயற்சிகளின் மூலம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் மாடுகள் திரிவதும், விபத்துகளை ஏற்படுத்துவதும் கணிசமாகக் குறையும் என்பதில் சந்தேகம் இல்லை.
நன்றி: தினமணி (28 – 10 – 2024)