TNPSC Thervupettagam

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்: சூழலியலாளர்கள் வலியுறுத்தல்

August 8 , 2024 158 days 126 0

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்: சூழலியலாளர்கள் வலியுறுத்தல்

  • மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என சூழலியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
  • கேரள மாநிலம், வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவம்போல மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் பிற பகுதிகளிலும் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. சுமார் 1.60 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரதான மாநிலங்களாக கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகியவை உள்ளன. இதில் முழுமையான சுற்றுலா மாவட்டம் என்றால் அது தமிழகத்தின் நீலகிரி மாவட்டம்தான்.
  • ஆனால், நீலகிரி மலை அண்மைக்காலமாக தனது பொலிவை இழந்து கான்கிரீட் காடாக மாறி வருகிறது என பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், வயநாட்டில் நிகழ்ந்த சம்பவங்களைத் தொடர்ந்து நீலகிரி மலையைக் காப்பாற்ற வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது.
  • மலைப் பகுதிகளில் உள்ள மண்ணுக்கும் சமவெளிப் பகுதிகளில் உள்ள மண்ணுக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன. மலைப் பகுதிகளில் பாறைகளுக்கு மேல் படிந்துள்ள மண் மென்மையானதாகவே கருதப்படுகிறது. அதனால்தான் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் இந்த மலையை சேதப்படுத்தாமல் வாழ்ந்துள்ளனர். அத்துடன் மழைப் பொழிவும் சீராக இருந்ததால் மண் அரிப்போ அல்லது நிலச்சரிவோ ஏற்படவில்லை.

ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்...:

  • 1818-இல் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னர் நீலகிரியின் தன்மையே மாறிவிட்டது. நீலகிரியிலிருந்த இயற்கைப் புல்வெளிகளும், சதுப்பு நிலங்களும் அழிக்கப்பட்டு பிரிட்டனின் சூழலுக்கேற்ற யூகலிப்டஸ், சீகை போன்ற மரங்கள் நடவு செய்யப்பட்டன. ஆனால், இது நீலகிரியின் சூழலுக்கே ஒவ்வாதவையாகும்.
  • இந்நிலையில், வயநாட்டில் நிகழ்ந்தது காலநிலை மாற்றத்தால் எனக் கூறப்பட்டாலும், இதில் மனிதத் தவறுகளே பிரதானமாகும். இத்தகைய அபாயம் தமிழகத்துக்கும் ஏற்படலாம் என்ற சூழலில் தமிழக அரசு இதில் உடனடியாகத் தலையிட வேண்டும் என சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.

தடை செய்ய வேண்டும்:

  • தமிழக வன உயிரின வாரிய உறுப்பினரும், சூழலியல் செயற்பாட்டாளருமான ஓசை காளிதாசன் கூறியதாவது:
  • மலைப் பகுதிகளில் கட்டடங்கள் கட்டும்போதும், புதிதாக சாலைகள் அமைக்கும்போதும் நீர்வழிப் பாதைகளும் இடம் மாறுகின்றன. நீர் ஓரிடத்தில் குவிந்து ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக வெளியேறும்போதுதான் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.
  • தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 950 மி.மீ. ஆகும். ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் சராசரி மழை அளவு 2,000 மி.மீ. ஆகும்.
  • எனவே, மழைப் பொழிவு அதிக அளவில் இருக்கும் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். பேரிடரைத் தடுக்க மலைப் பகுதிகளில் நிலத்தைச் சேதப்படுத்துதல், சூழலுக்கு ஒவ்வாத தாவரங்களை வளர்த்தல், கட்டடமயமாதல் போன்றவற்றைத் தடை செய்ய வேண்டும்.
  • தற்போது வயநாட்டில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருந்தாலும், எதிர்காலத்தில் நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளிலும் இதே நிலை ஏற்படலாம்.
  • நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 2019-ஆம் ஆண்டில் 24 மணி நேரத்தில் 911 மி.மீ. மழை பதிவானபோது பெரும் பாதிப்புகள் ஏற்படாததற்கு அங்கு மனிதர்கள் வசிக்கவில்லை என்பதே முக்கியக் காரணமாகும்.
  • எனவே, மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க வேண்டும் எனில் தமிழக அரசு உடனடியாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். மலையின் தாங்கு திறனுக்கேற்ற வகையில் சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். மலைப் பகுதிகளில் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கானோர் கூடும் நிகழ்வுகளைத் தவிர்த்து அவற்றை முறைப்படுத்த வேண்டும் என்றார்.

நிலச்சரிவுக்கு காரணம்:

  • இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (டபிள்யூ டபிள்யூ எஃப்) அமைப்பின் ஆலோசகர் எஸ்.மோகன்ராஜ் கூறியதாவது:
  • மலைப் பகுதிகளில் அதிக அளவிலான கட்டடங்களைக் கட்டுவது, மலையைக் குடைந்து சாலைகளை விரிவாக்குதல் போன்றவை நிலச்சரிவுக்கு முக்கியக் காரணிகளாக அமைகின்றன.
  • அதேபோல, நீர்வழிப் பாதைகளைக் கண்டறிந்து அவற்றைப் பராமரிப்பதோடு, சதுப்பு நிலங்களையும் மீட்டெடுக்க வேண்டும். திட்டமிடப்படாத வளர்ச்சி சேதத்தையே ஏற்படுத்தும் என்பதால், இதற்காக தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நீர்வழிப் பாதைகளை மீட்டெடுக்க வேண்டும்

  • அஸ்ஸாமில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் எஸ்.மணிவண்ணன் கூறியதாவது:
  • மலைப் பகுதிகளைக் காப்பாற்ற வேண்டும் எனில் புதிய கட்டுமானங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதோடு, நிலப் பயன்பாட்டை மாற்றுவதற்கான விதிமுறைகளையும் கடுமையாக்க வேண்டும்.
  • மலை மாவட்டங்களில் நிலப் பயன்பாடுகள் குறித்த சட்டங்களை மாற்ற வேண்டும். தேயிலைத் தோட்டங்களை அழித்து விவசாய நிலங்களாக மாற்றும்போது மண் அரிப்பு அதிகரிக்கிறது. அத்துடன் நீர்வழிப் பாதைகளும் தடுக்கப்படுகின்றன. இதைக் கண்காணிக்க வேண்டும். 60 டிகிரிக்கும் அதிகமான சரிவான பகுதிகளில் கட்டடம் கட்டுவதை தடை செய்ய வேண்டும்.
  • மலைப் பகுதிகளில் மண்ணின் தன்மையால் ஏற்படும் பாதிப்புகளைவிட நிலப் பயன்பாட்டின் மாற்றங்களாலேயே பேரிடர்கள் அதிகரித்து வருகின்றன.
  • எனவே, இவற்றை முறைப்படுத்துவதோடு, நீர்வழிப் பாதைகளை தடுப்பதை தவிர்க்கவும் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.

நன்றி: தினமணி (08 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்