- அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட தேசிய அறக்கட்டளை (National Trust) செய்திருக்கும் காரியங்கள் அளப்பரியவை.
- முதன்மையாக, இந்த அறக்கட்டளையானது அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கானது.
- இதில் மனவளர்ச்சி குன்றியோர், ஆட்டிச நிலையாளர்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு உடையோர் போன்றவர்கள் இந்தக் குடைக்குள் வருவார்கள்.
- அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடுடைய குழந்தைகள் அனைவருக்கும் பொதுவான சிக்கல்கள் சில உண்டு: தகவல் தொடர்பின்மை - சிலரால் அறவே பேசவே முடியாது, பேசும் சிலராலும் நினைப்பதையெல்லாம் அடுத்தவருக்குச் சரியாகப் புரிய வைக்கும் அளவு தெளிவாகப் பேசிவிட முடியாது, சமூகத்தில் கலந்து பழகும் தன்மைக் குறைவு, நடத்தைச் சிக்கல்கள், நரம்பியல் சிக்கல்கள் எனப் பட்டியல் நீளும்.
- இதனால், இவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடச் சிக்கல்களை நாம் ஓரளவு பேசியிருக்கிறோம். ஆனால், சட்டபூர்வமான சிக்கல்கள்?
- எந்தவொரு சட்டபூர்வமான ஒப்பந்தம் அல்லது பத்திரம் என்றாலும் அதில் ‘இன்னாராகிய நான் என் சுயநினைவுடன் இதை ஒப்புக்கொண்டு கையெழுத்திடுகிறேன்’ என்று முடியுமல்லவா, அப்படிச் சுயநினைவுடன் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கும் இடத்தில் இந்தக் குழந்தைகள் பெரும்பாலும் இருப்பதில்லை.
- வங்கிக் கணக்கு தொடங்குவதிலிருந்து சொத்துப் பிரச்சினைகள், பல்வேறு முடிவுகள் எடுப்பதில் ஏற்படும் சட்டச் சிக்கல்கள் எனப் பிரச்சினைகளின் பட்டியல் பெரியது.
அறக்கட்டளையின் பங்களிப்புகள்
- 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இயல்பாகவே அவர்களின் பெற்றோர்தான் காப்பாளரும். எனவே, பிள்ளைகள் நலன் சார்ந்த முடிவுகளைப் பெற்றோர் தாமாகவே எடுக்க முடியும்.
- ஒரு சராசரியான, நரம்பியல் சிக்கல்கள் ஏதுமில்லாத குழந்தை 18 வயது நிறைவடைந்ததுமே வளர்ச்சியடைந்த நபராக (Adult) அறியப்படுவார். தனக்கான முடிவுகளைத் தாமே எடுக்கும் சட்டபூர்வமான உரிமை அவருக்கு வந்துவிடுகிறது.
- அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடுடையவர்கள் ஆயுள் முழுமைக்கும் பெற்றோரோ அல்லது வேறு யாரேனும் காப்பாளராக இருந்தே ஆக வேண்டிய தேவை உள்ளது. இதைச் சட்டபூர்வமாகவும் பதிவுசெய்தாக வேண்டும்.
- இப்படி சட்டபூர்வக் காப்பாளரை நியமிப்பதில் தேசிய அறக்கட்டளையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. மாவட்டம்தோறும் உள்ளூர் குழு (Local Level Committee - LLC) ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் காப்பாளர் நியமனத்துக்கான விண்ணப்பங்களைப் பெறுவது, அவற்றைப் பற்றி விசாரித்து முடிவெடுத்து காப்பாளரை நியமிப்பது, காப்பாளரின் செயல்பாடுகளில் சந்தேகம் தோன்றினால் உடனடியாக அந்நியமனத்தை ரத்துசெய்வது போன்றவற்றை இந்த அறக்கட்டளை செய்துவருகிறது.
- இந்தக் குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவர் இருப்பார். மாவட்ட அளவில் இந்தச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளும் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவரும், மாற்றுத்திறனாளி ஒருவரும் உறுப்பினர்களாக இருப்பார்கள். மேலதிகமாக மருத்துவர், வழக்கறிஞர், உளவியலாளர், மாவட்ட நல்வாழ்வுத் துறை அதிகாரி ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெறுவதுண்டு.
- அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடு உடையோர் தம் காப்பாளரின் துணையுடன் தங்களது வங்கிக் கணக்குகளைப் பராமரிக்கத் தேவையான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி மூலம் தெளிவாக்கியது தேசிய அறக்கட்டளையின் முக்கியச் சாதனையாகும்.
- பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏழை எளிய சிறப்புக் குழந்தைகளுக்குப் பல்வேறு உதவிகளைத் தேசிய அறக்கட்டளை வழங்குகிறது.
- இந்தக் குழந்தைகளுக்குத் தேவையான ஆரம்பக் கட்ட சிகிச்சைகளுக்கான மையங்கள், பகல் நேரப் பாதுகாப்பு மையங்கள் போன்றவற்றைத் தொடங்கி, அவற்றை நடத்தத் தேவையான நிதி உதவி, வழிகாட்டுதல்களை வழங்குகிறது. அனாதையாக விடப்பட்ட சிறப்புக் குழந்தைகளுக்கான இல்லங்களையும் தேசிய அறக்கட்டளை அமைத்துவருகிறது.
‘நிரமயா’ காப்பீடு
- உடல் நலத்துக்கான காப்பீட்டுத் திட்டங்கள் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கு எட்டாக்கனியாகவே இருந்த நிலையில், ‘நிரமயா’ காப்பீட்டுத் திட்டத்தைத் தேசிய அறக்கட்டளை ஏற்படுத்தியுள்ளது.
- இதன் மூலம் சிறப்புக் குழந்தைகளின் மருத்துவச் செலவு, தெரபிக் கட்டணங்கள் போன்றவற்றை உதவித்தொகையாகப் பெற முடியும். பெரும்பாலான சிறப்புக் குழந்தைகளுக்கு இயல்பிலேயே பல்வேறு நரம்புச் சிக்கல்களும் இருப்பதால், இவர்களின் மருத்துவச் செலவு என்பது நடுத்தர வர்க்கம், ஏழைகளுக்குக் கடும் நெருக்கடியைத் தரக்கூடிய ஒன்று என்பதை மனதில் வைத்துப் பார்த்தால்தான் இந்தக் காப்பீட்டின் முக்கியத்துவம் புரியும்.
- சிறப்புக் குழந்தைகளுக்குத் தேவையான தொழில் பயிற்சிகளை அளிப்பது, அவர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த உதவுவது போன்றவற்றிலும் தேசிய அறக்கட்டளையின் வழிகாட்டுதல்களும் நிதி உதவிகளும் முக்கியமானவையாக உள்ளன.
- 1999-ம் ஆண்டின் நாடாளுமன்றக் கடைசி வேலை நாளில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய அறக்கட்டளைக்கான சட்டம், 21-ம் நூற்றாண்டை ஒளிமிக்கதாக ஆக்கியது என்றே சிறப்புக் குழந்தைகளின் பெற்றோரும் சமூகத் தொண்டர்களும் நினைத்திருந்தனர்.
- இந்த அறக்கட்டளைகளின் பணிகளை விரித்தெடுத்து இன்னமும் செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கின்றன. ஏற்கெனவே கடந்த ஆறு ஆண்டுகளாக தேசிய அறக்கட்டளையின் தலைவர் பதவி நிரப்பப்படாமலே உள்ளது. நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, பல்வேறு நலத்திட்டங்கள் கிடப்பில் உள்ளன. 2007-ல் ஐ.நா. வழங்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான விதிமுறைகளை ஏற்று இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.
- எனவே, அதற்குத் தகுந்தபடி மாற்றுத்திறனாளிகளுக்கான இந்தியச் சட்டங்களை மாற்றியமைக்க வேண்டியது அவசியம். 2016-ல் அதற்கான சட்டம் இயற்றப்பட்டுவிட்டபோதும், அதற்குத் தகுந்தபடி தேசிய அறக்கட்டளைச் சட்டத்திலும் தேவையான மாற்றங்களைச் செய்திருக்க வேண்டும். அது இன்னும் நடக்கவில்லை.
அறக்கட்டளையின் எதிர்காலம்
- இந்திய எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கை ஒன்று, இந்தியாவில் 69 குழந்தைகளில் 1 குழந்தை மனநிலை குன்றியவராகவோ அல்லது ஏதேனும் பிற அறிவுசார் வளர்ச்சிக் குறைபாட்டுடனோ பிறக்கிறது என்கிறது.
- இந்தியாவில் 2-9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 7.5 - 18.5% வரை நரம்புசார் வளர்ச்சிக் குறைபாடுகள் காணப்படுவதாகச் சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
- நாட்டில் சிறப்புக் குழந்தைகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் தேவைகளை ஓரளவுக்கேனும் நிறைவேற்றிவரும் ஒரு அமைப்பை வலுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
- இப்படியெல்லாம் இருக்க, தேசிய அறக்கட்டளையைக் கலைப்பது தொடர்பான செய்திகள் கசியத் தொடங்கியிருப்பது உண்மையில் அதிர்ச்சிகரமானது.
- தங்கள் முடிவுகளைத் தாங்களே எடுக்க முடியாமல், தங்களின் தேவைகள் என்ன, உரிமைகள் என்னென்ன என்பது போன்ற எந்தவித அறிதல்களும் இல்லாமல் சமூகத்தின் மனசாட்சியை மட்டுமே நம்பி வாழும் சிறப்புக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் முக்கியக் கடமைகளில் ஒன்று.
- இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தில் அரசுக்கு இருக்கும் தார்மீகப் பொறுப்பை விட்டுக்கொடுக்கக் கூடாது.
நன்றி: தி இந்து (15-10-2020)