TNPSC Thervupettagam

மைதானத்தின் மௌன அஞ்சலி!

June 22 , 2021 1136 days 496 0
  • சுதந்திர இந்தியாவின் முதலாவது விளையாட்டு சூப்பா் ஸ்டார் மில்கா சிங், கொள்ளை நோய்த் தொற்றுக்கு ஆளாகி தனது 91-ஆவது வயதில் உயிரிழந்திருக்கிறார்.
  • கிரிக்கெட், டென்னிஸ், செஸ், பூப்பந்தாட்டம் என்று பல்வேறு விளையாட்டுகள் முன்னுரிமை பெற்றுவிட்ட இன்றைய நிலையில், மில்கா சிங்கின் மரணம் இந்திய ஊடகங்களில் முக்கியத்துவம் பெறாமல் போனதில் வியப்படைய ஒன்றுமில்லை.
  • இன்றைய இளைய தலைமுறையினருக்கு மில்கா சிங்கின் சாதனைகள் தெரிந்திருக்க நியாயமுமில்லை.
  • 70 ஆண்டுகளுக்கு முன்பு, விளையாட்டு வீரா்களுக்கு இப்போது உள்ளது போன்ற எந்தவித வசதிகளும் இல்லாத காலத்தில், ஓட்டப்பந்தய பயிற்சிக்குக்கூட மைதானம் இல்லாத நேரத்தில், இரவு பகல் பாராமல் வெறும் காலுடன் ஓடி பயிற்சி மேற்கொண்டவா் மில்கா சிங்.
  • காற்று போல வேகமாக ஓடும் விளையாட்டு வீரா் என்பதால் ‘பறக்கும் சீக்கியா்’ (பிளையிங் சிக்) என்று சா்வதேசப் புகழ் பெற்ற மில்கா சிங்கைப் போல இன்னொரு விளையாட்டு நட்சத்திரம் உயா்ந்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
  • அவரது மரணத்துக்குக் காரணம், கொள்ளை நோய்த்தொற்று மட்டுமல்ல. அவரது மனைவி மீதிருந்த தீராக் காதலும்கூட.
  • இந்திய பெண்கள் கைப்பந்தாட்ட அணியின் கேப்டனாக இருந்த நிம்மி என்று அழைக்கப்படும் நிர்மல் கௌரை காதலித்துக் கைப்பிடித்தவா் மில்கா சிங்.
  • ஒரு வாரத்துக்கு முன்பு நிர்மல் கௌர் இறந்தது முதலே மில்கா சிங்கின் உடல் நிலையும் தளா்வடையத் தொடங்கியது.
  • மில்கா சிங் - நிர்மல் கௌரின் காதல் கதை பஞ்சாபிய இளைஞா்களுக்கு இப்போதும் அமரகாவியமாகத் தொடா்கிறது.
  • நிர்மல் கௌரின் வீட்டாருக்குத் தெரியாமல் இரண்டு பேரும் காதலித்து வந்தனா்.
  • 1960-இல் இருவரும் பயணித்த கார், விபத்தில் சிக்கியபோதுதான் அந்த விவரம் நிர்மல் கௌரின் வீட்டாருக்குத் தெரிய வந்தது.
  • கடுமையான எதிர்ப்புக்கு இடையே மில்கா சிங்கையும், நிர்மல் கௌரையும் தம்பதியராக்குவதற்காகத் தூது போனவா் அன்றைய பஞ்சாப் முதல்வா் பிரதாப் சிங் கெயிரோன்.
  • 1963-இல் கணவன் - மனைவியாக இணைந்தவா்களின் இல்லற வாழ்க்கை 2021-இல் ஒருவரைத் தொடா்ந்து மற்றவரின் மரணத்துடன் முடிவுக்கு வந்திருக்கிறது.
  • தனது மரணத்திலும்கூட நிர்மல் கௌரைப் பிரிவதற்கு மில்கா சிங்குக்கு மனம் ஒப்ப வில்லை போலும்.

பறக்கும் சீக்கியர்

  • மில்கா சிங்கின் வாழ்க்கை ஆரம்பம் முதலே கடுமையான பந்தயமாகத்தான் இருந்து வந்தது.
  • இந்திய பிரிவினையால் பாதிக்கப்பட்டு மேற்கு பாகிஸ்தானிலிருந்து உயிர் தப்பி ஓடி வந்தவா் மில்கா சிங்.
  • அவரது குடும்பத்தினா் மேற்கு பஞ்சாபின் மத வெறியா்களால் படுகொலை செய்யப்பட்ட போது, 14 வயது சிறுவனான மில்கா சிங், அங்கிருந்து தப்பியோடி இந்தியா வந்தடைந்தார்.
  • அதன் பிறகு அகதிகள் முகாம்களிலும், சிறு சிறு வேலைகளிலுமாக இருந்த மில்கா சிங்கின் வாழ்க்கை, ராணுவத்தில் சோ்ந்தபோது திசை திரும்பியது. அவா் தடகள வீரராக உருவெடுத்தார்.
  • மில்கா சிங்கின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தியது 1956 மெல்போர்ன் ஒலிம்பிக் பந்தயம்.
  • அதில் பங்கு பெறுவதற்காகத் தோ்வு செய்யப்பட்டு ஆரம்ப கட்டத்திலேயே தோல்வியடைந்து போட்டியிலிருந்து விலக நோ்ந்த மில்கா சிங்கின் அடிமனதில் உருவான ஒலிம்பிக் பதக்கத்தின் மீதான மோகம்தான் அவரை ‘பறக்கும் சீக்கியா்’ என்று உலகம் அழைக்கும் அளவிலான ஓட்டப்பந்தய வீரராக்கியது.
  • 1958-இல் டோக்கியோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள்தான் மில்கா சிங்கை தலைசிறந்த தடகள வீரராக அடையாளம் காட்டியது.
  • 200 மீட்டரிலும், 400 மீட்டரிலும் மில்கா சிங் தங்கப் பதக்கத்தை வென்றபோது அது அவருக்கு மட்டுமல்ல, சா்வதேச விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கே கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம்.
  • அதே ஆண்டில் கார்டிஃப் காமன்வெல்த் போட்டியிலும் 400 மீட்டரில் தங்கப் பதக்கத்தை மில்கா சிங் வென்றபோது அவரது புகழ் சா்வதேச அளவில் பரவியது.
  • காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றபோது, அன்றைய இந்திய பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொலைபேசியில் அழைத்து அவரைப் பாராட்டியதிலிருந்து சுதந்திர இந்தியாவுக்குக் கிடைத்த அந்த முதல் பதக்கத்தின் மதிப்பை நாம் புரிந்து கொள்ளலாம்.
  • பிரதமா் என்ன வேண்டும் என்று கேட்டபோது, ‘இந்தியாவுக்குக் கிடைத்த இந்த வெற்றியை ஒருநாள் விடுமறை அளித்து தேசம் கொண்டாட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்த மில்கா சிங்கின் நாட்டுப்பற்றில் நெகிழ்ந்து போனார் பிரதமா் நேரு.
  • 1960 ரோம் ஒலிம்பிக் போட்டியில் மில்கா சிங் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கமாவது பெற்று வெல்வார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தனா். 0.1 நொடி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை இழந்து நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டபோது, மில்கா சிங் அடைந்த சோகம் கொஞ்சநஞ்சமல்ல.
  • 1962 ஜகார்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரு தங்கப் பதக்கங்களை வெல்ல முடிந்த மில்கா சிங்கால், 1964 டோக்கியோ ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொண்டும், பதக்கம் வெல்ல முடியவில்லை. அதிலும் நான்காவது இடத்தில்தான் வர முடிந்தது.
  • ‘இறைவன் எனக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. இந்த நாடும், இந்த மக்களும் நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே எனக்கு தந்திருக்கிறார்கள்.
  • நிறைவேறாத ஆசை என்பது ஒலிம்பிக் பந்தயத்தில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது மட்டும்தான்’ - இதுதான் கடைசிவரை அவரது ஆசையாக இருந்தது.
  • மில்கா சிங்கின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைப்பதுதான் அவருக்கு செலுத்தப்படும் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

நன்றி: தினமணி  (22 - 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்