TNPSC Thervupettagam

மைதிலி சிவராமன் எனும் களப்போராளி!

June 6 , 2021 1332 days 695 0
  • அமெரிக்க அரசின் கறுப்பின மக்கள் மீதான ஒடுக்குமுறையை, சிறிய நாடான கியூபா தீவிரமாக எதிர்த்த செயல் மைதிலி சிவராமனை ஈர்த்தது. அப்போது அவர் ஐநா சபையின் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
  • அவருக்கு கியூபப் புரட்சியால் எழுந்த சமூக மாற்றங்களை நேரில் பார்க்கும் விருப்பம் இருந்தது. கியூபாவை எதிரி நாடாக நினைக்கும் அமெரிக்காவில் வசிக்கும் மைதிலி எப்படி கியூபா செல்வது? அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரியாமல் முதலில் மெக்ஸிகோ சென்றார்.
  • அங்கிருந்து கியூபா சென்றார். புரட்சியும் புரட்சிக்குப் பின் பொதுவுடைமை நாடாக மலர்ந்த கியூபாவின் செயல்பாடுகளும் அவருக்கு நம்பிக்கையளித்தன. மைதிலியின் மனத்தில் இருந்த பொதுவுடைமைச் சிந்தனை மேலும் சுடர்விடத் தொடங்கியது.
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும், சிஐடியு தொழிற்சங்கத் தலைவராகவும், அனைத்திந்திய ஜனநாயகச் சங்கத்தின் அகில இந்தியத் தலைவராகவும் தன் வாழ்க்கையின் ஐம்பதாண்டுகளைப் போராட்டங்களில் கழித்த தலைவர் மைதிலி சிவராமன்.
  • வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கம்யூனிஸச் சித்தாந்தத்தின் மீது ஈர்க்கப்பட்ட மைதிலி தன் வாழ்நாள் முழுக்கக் களப் போராளியாகவே இருந்தவர். மென்மையும் உறுதியும் துணிவும் கொண்ட தலைவர்.
  • பெண்ணுரிமைப் போராளி. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, அல்சைமர் எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்த மைதிலி, மே 30 அன்று காலமானார்.

களப்போராளி

  • ஆந்திராவின் காக்கிநாடாவில் 1939 டிசம்பர் 14 அன்று வீட்டின் ஐந்தாவது மகளாக, கடைக் குட்டிப் பெண்ணாகப் பிறந்தவர் மைதிலி. அவரது தந்தை சிவராமன் சென்னையில் பொறியாளராக இருந்ததால், மைதிலி படித்து வளர்ந்தது சென்னையில்தான்.
  • படிப்பில் ஆர்வமாக இருந்த மைதிலி, மாநிலக் கல்லூரியில் பிஏ (ஹானர்ஸ்) ‘அரசியல் அறிவியல்’ படித்தார். டெல்லியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷனில் (ஐஐபிஏ) பொது நிர்வாகத்தில் முதுகலை டிப்ளமோ முடித்தவுடன், 1963-ல் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.
  • நியூயார்க் மாநிலத்திலுள்ள சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் எம்ஏ பட்டம் பெற்றார். ஐநா சபையின் இந்தியத் தூதரகத்தில் சில ஆண்டுகள் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றினார்.
  • அமெரிக்க அதிகாரத்தை எதிர்க்க நினைக்கும் தான், ஐநா சபைப் பணியில் இருப்பது நியாயமற்றது என்று எண்ணிய மைதிலி, உடனடியாகத் தன் பணியைத் துறந்தார்.
  • இந்தியா திரும்பிய மைதிலிக்குப் பொதுவுடமைச் சமூகம் மலர வேண்டும் என்ற கனவு மட்டுமே தீவிரமாக இருந்தது. அவருடைய உயரிய கல்வித் தகுதிக்காகக் கிடைத்த ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் பணி உள்ளிட்டவற்றையும் ஏற்க வில்லை.
  • இந்தியாவில் வினோபாவின் பூமிதான இயக்கம் தீவிரப்பட்டுக்கொண்டிருந்த வேளை. அதில் தன்னை இணைத்துக்கொள்ள வினோபாவின் ஆசிரமத்தில் தங்கி, அவ்வியக்கத்தின் நோக்கத்தை அறிந்தார். தன் பொதுவுடமைச் சித்தாந்தத்துக்கு இவ்வியக்கம் முழுமையாகத் துணை நிற்காது என்று எண்ணிய மைதிலி, அங்கிருந்து வெளியேறினார்.
  • 1968 டிசம்பர் 25. கீழ்வெண்மணி கிராமத்தில் கூலி உயர்வு கேட்டுப் போராடியதால், ஏழை விவசாயக் கூலிகள் 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர்.
  • செய்தியறிந்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த காந்தியச் செயல்பாட்டாளர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுடன் சேர்ந்து கீழ்வெண்மணிக்குச் சென்றார்.
  • விவசாயக் கூலிகள் மேல் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமையைப் பற்றி ஆங்கில இதழ்களில் கட்டுரைகளை எழுதினார்.
  • கீழ்வெண்மணி சம்பவத்தை உலகின் கவனத்துக்குக் கொண்டுசென்றதில் மைதிலிக்குப் பிரதானப் பங்குண்டு. தீவிரமான களப்பணியாளராக மைதிலி தன்னை அர்ப்பணித்துக் கொண்டது வெண்மணி சம்பவத்துக்குப் பிறகுதான்.

உயரிய இடம்

  • சென்னையில் சிம்சன், டிவிஎஸ், மெட்டல் பாக்ஸ், அசோக் லேலண்ட், டேபலெட் இந்தியா, பாலு கார்மென்ட்ஸ் போன்ற தொழிற்சங்கங்களின் போராட்டத் தலைவராகத் தொழிலாளிகளோடு சேர்ந்து களத்தில் நின்றிருக்கிறார்.
  • ரேஷன் தட்டுப்பாடு, தண்ணீர் பிரச்சினை, கழிப்பறை வசதி, பெண்கள் மீதான வன்முறை, திரைப்படங்களில் ஆபாசம், பெண் உரிமை உள்ளிட்ட பெண்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு முன்னணிப் போராளியாகக் களம் நின்றிருக்கிறார். சட்டரீதியான தீர்வுகளுக்கும் வழிவகுத்திருக்கிறார்.
  • கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களுக்குத் தன் மகள் செல்வதை மைதிலியின் தந்தை சிவராமன் விரும்பவில்லை.
  • கட்சிப் பணிகளுக்குச் சென்றுவிட்டு, தாமதமாக வீட்டுக்குத் திரும்பும் மைதிலிக்கு அவரது தந்தை கதவைத் திறக்க மாட்டார். வீட்டில் சாப்பாடு போடக் கூடாது என்பார். தாயார் பங்கஜம் தான் மைதிலிக்கு ஆறுதல்.
  • களப்பணியோடு எழுத்திலும் பத்திரிகைத் துறை மீதும் மைதிலிக்கு நாட்டம் இருந்தது. அமெரிக்காவில் இருந்தபோது நண்பர்களாகியிருந்த இந்திய நண்பர்களான ப.சிதம்பரம், என்.ராம்ஆகியோருடன் சேர்ந்து, ‘ரேடிகல் ரிவ்யூ’ என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார் மைதிலி.
  • ‘ரேடிகல் ரிவ்யூ’ இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்ற வந்த கருணாகரனோடு இருந்த ஒத்த சிந்தனையால் இருவரும் வாழ்க்கையிலும் இணைந்தனர்.
  • தன்னுடைய அர்ப்பணிப்புகளுக்காகச் சமூகத்திடமிருந்து எந்தப் பிரதிபலனையும் பெறாமல், கடைசி வரை கடைநிலைக் களப்போராளியாக மட்டுமே நிலைநிறுத்திக்கொண்டவர் மைதிலி.
  • ‘வெண்மணி ஒரு காலத்தின் பதிவு’, ‘ஆண் குழந்தைதான் வேண்டுமா?’, ‘கல்வித் துறையில் வறுமையால் நசுக்கப்படும் குழந்தைகள்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதினார் மைதிலி.
  • மைதிலியின் மகள் கல்பனா தன் அம்மாவைப் பற்றி, ‘காம்ரேட் அம்மா’ என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார். கல்பனாவுக்கு மட்டுமல்ல; இன்றும் களங்களில் நின்று போராடிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் காம்ரேட் அம்மாதான். அரிதின் முயன்று அவரடைந்த உயரிய இடம் அது!

நன்றி: இந்து தமிழ் திசை (06 - 06 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்