TNPSC Thervupettagam

மொழி பிரச்னையும் காவல்துறையும்

July 16 , 2023 545 days 307 0
  • வாணிபம் செய்ய வந்தவர்களின் ஆக்கிரமிப்பை அகற்ற இந்தியாவே போராட வேண்டியதிருந்தது. இன்றைக்கு நிலைமை மாறி வர்த்தகம் செய்ய வாருங்கள் என சிவப்பு கம்பளம் விரித்து அழைக்கிறோம். மாற்றம் ஒன்றே மாறாதது. காலத்தின் கட்டாயம் நாம் தனித்திருக்க இயலாத சூழ்நிலை.
  • உலகளாவிய பரிணாம வளர்ச்சியில் தேவைகளை பூர்த்தி செய்யவும், இயற்கை சூழலை நிலைப்படுத்தவும், தீவிரவாதத்தை வேரறுக்கவும், விரைவான கருத்துப் பரிமாற்றங்களுக்கும் வீட்டை விட்டு மட்டுமல்ல, நாட்டை விட்டும் சென்று கொண்டிருக்கிறோம்.
  • ஒருபுறம் விவசாயம் பெருக வேண்டும் என்று விரும்புகிறோம். அதே நேரத்தில் விவசாயக் குடும்பத்துப் பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதைப் பெருமையாக சொல்லிக் கொள்கிறோம். கார்ப்பரேட் வளர்ச்சியை விரும்பாத மாதிரி கருத்து உலவுகிற அதே நேரத்தில் கூகுள் சுந்தர் பிச்சை ஒரு தமிழர் என்று பெருமையாகப் பேசுகிறோம்.
  • தமிழகத்து இளைஞர்கள் அதிகமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், அவர்கள் அனைவருமே தமிழகத்தில் பணியாற்ற இயலாது என்பதுதான் எதார்த்தம். பல மாநிலங்களில் பணிபுரிவோர் பல மொழிகளை பயின்று பணியில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதுதான் உண்மை.
  • 1965 ஜனவரி 26 முதல் ஹிந்தி ஆட்சி மொழியாகும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 18 நாட்கள் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறையினர் பலர் உயிரோடு எரிக்கப்பட்டனர். போராட்டம், அரசியல்வாதி, மாணவர்கள் கைகளிலிருந்து விலகி சமூக விரோதிகளின் கைகளுக்குப் போனபோதுதான் துப்பாக்கி சூடு நடைபெற்று உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகமானது.
  • காவல்துறையினரும் தமிழர்கள்தானே? அவர்களுக்கும் தமிழ் உணர்வு இருக்கத்தானே செய்யும்? அப்போது பணியிலிருந்த காவலர் புத்திசிகாமணி துப்பாக்கியால் தபால் நிலைய ஹிந்தி பலகையை சுட்டதால் கைது செய்யப்பட்டார். துப்பாக்கி சூட்டில் இறந்த மாணவன் ராஜேந்திரன், காவலர் முத்துக்குமரனின் மகன்.  இச்செய்திகள் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
  • விருப்பம் உள்ளவர்கள் ஹிந்தி பயின்று கொள்ளலாம் என்ற நிலைப்பாடு அன்று இருந்திருக்குமேயானால் இன்றைய நிலை வேறு விதமாக இருந்திருக்கும். திணிப்பைத் தவிர வேறு விதத்தில் ஹிந்தியை ஒரு தலைமுறையினர் படித்து விட்டனர்; இன்றும் பலர் பயிலுகின்றனர்; பலர் பயில  விரும்புகின்றனர். இதனை மறுக்க முடியாது.
  • "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று மகாகவி  பாரதியார் உறுதியுடன் முழங்குவதற்கு அடிப்படைக் காரணம் அவருக்கு இருந்த பன்மொழிப் புலமையே.
  • பதினொரு ஆண்டுகள் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., எதிர்க்கட்சி பிரமுகர்கள் என பதினெட்டு பேரின் உயிர்ப்பறிப்புக்குக் காரணமான "பவேரியா' கொள்ளையர்களின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிந்ததற்கு காரணம் தமிழகத்தில் பணியாற்றிய வட இந்திய அதிகாரிகளின் ஒத்துழைப்பு அல்லவா?
  • இந்தியாவில் தங்கம் அதிகமாக அணிவது தமிழகத்து பெண்கள் என்பதை தெரிந்துகொண்ட வங்கதேச கொள்ளையர்கள் எல்லை தாண்டி வந்து ரயிலேறி சென்னை வந்து கிரில் கொள்ளையர் என்ற பெயரில் தொல்லை கொடுத்ததற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவியது காவலர்களின் வடமொழி அறிவன்றோ.
  • ஒருவன் திருப்பூர் ஆண்டிபாளையத்தில் ஏழு ஆண்டுகள் தங்கி சாப்பாட்டுக் கடை ஆரம்பித்து, மளிகை கடை, சலூன் கடை நடத்தி வந்தான். இறைச்சியோடு மதுபானமும் வியாபாரமும் செய்தான். சுமார் 150 நபர்களை அழைத்து வந்து திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் வேலைக்கு சேர்த்தான்.
  • பின் திருமணமும் செய்து இரு பெண்களைப் பெற்று அவர்களுக்கு தமிழரசி, இளவரசி என்று தமிழ்ப் பெயரைச் சூட்டினான். பின் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்திற்கு சென்றபோது அவன் கைது செய்யப்பட்டான். காரணம், அவன் சர்வதேச பயங்கரவாத அமைப்போடு தொடர்புடையவன் என்று தெரியவந்ததால்.
  • மாவட்ட நுண்ணறிவுப் பிரிவும் மாநில தனிப்பிரிவும் முன்கூட்டியே இதனை சரியான திசையில் கண்காணிக்க முடியாததற்குத் தடையாக இருந்தது எது? மொழிப் பிரச்னைதானே?
  • 18 கண்ணி வெடிகள் மூலம் 108 உயிர்களைப் பறித்தவன் பற்றி தகவல் கொடுத்தால் பரிசு என்று ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பிகார் மாநிலங்கள்அறிவித்தன. அந்த நபர் ஸ்ரீபெரும்புதூரில் ஸ்வீட் மாஸ்டராக வேலை செய்துவந்ததைக் கண்டறிந்து தமிழக காவல்துறை பிடிக்க முடிந்ததற்கு முக்கிய காரணம் ஹிந்தி தெரிந்த ஆய்வாளர் ஒருவர் காவல்துறையில் பணியாற்றியதுதான். 
  • பார்டர் ஸ்டேஷன் கிரிமினல்ஸ், பார்டர் ஸ்டேட் கிரிமினல்ஸ் என்பதையெல்லாம் தாண்டி இன்றைக்கு சர்வதேச குற்றவாளிகள் வரைக்கும் நிலைமை போய்விட்டது.
  • சென்னை செளகார்பேட்டையில் வட இந்தியர் ஒருவர் குடும்பத் தகராறில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு போன்று பல வழக்குகளில் நடவடிக்கை தாமதமாவதற்குக் காரணம் மொழி பிரச்னைதான். முன்பெல்லாம் காவல் நிலையத்தில் பணியாற்றுகிற உருது, ஹிந்தி தெரிந்த ஒரு சில காவலர்களை துருப்பு சீட்டாக பயன்படுத்துவார்கள்.
  • அது மட்டுமல்ல, இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகள் ஜாமீனில் போய்விட்டால் அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வது என்பது குதிரைக் கொம்புதான். நீதி தேடி நெடுப்பயணம் செய்ய வேண்டிய நிலை.
  • ஆந்திர, கேரள, கர்நாடக மாநில காவல்துறையினர் பல மொழிகள் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வட இந்தியா சென்றால் துரிதமாக புலன் விசாரணை மேற்கொள்ள ஹிந்தி மொழியை கற்று வைத்திருக்கிறார்கள். 
  • தில்லி திகார் ஜெயிலினுடைய பாதுகாப்பை தமிழ்நாடு சிறப்புக் காவல்படை ஏற்ற போது தமிழ் மட்டுமே தெரிந்த நம்முடைய காவலர்கள், மொழி தெரியாமல் சிரமப்படக்கூடாது என்ற எண்ணத்தில் ராணுவத்தில் பணியாற்றி பின் தமிழக காவல்துறை அதிகாரியாக இருந்த ஒருவர் மூலம் ஹிந்தி மொழி கற்பிக்கப்பட்டது.
  • ஆனால், "அவர் ஒரு ஹிந்தி வெறியர்' என அவர் மீது சிலர் புகார் அனுப்பினர். இதனை அறியாமை என்று சொல்வதா? முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையிடும் முட்டாள்தனம் என்பதா
  • சில ஆண்டுகளுக்கு முன்பு அகில இந்திய காவல்துறையினரின் சந்திப்புக்காக (டூட்டி மீட்) அகமதாபாத் சென்ற தமிழக காவலர் ஒருவருக்கு இருதயக் கோளாறு ஏற்பட, அதனைப் பிறரிடம் தெரிவிக்க இயலாத நிலையில் உடன் சென்றிருந்த ஹிந்தி தெரிந்த அதிகாரி உடனே மருத்துவரிடம் அழைத்துச்சென்று காவலரை பிழைக்க வைத்ததற்கு காரணம் அவருக்குத் தெரிந்த அந்த மொழியல்லவா?
  • தாய்மொழி, தமிழ்நாடு, தமிழ் வளர்ச்சி, தமிழ் கலாசாரம், தமிழர் பண்பாடு, செம்மொழிப் பெருமிதம் இவற்றிலெல்லாம் யாருக்கும் மாற்று கருத்தே இல்லை.
  • இன்றைக்கு தமிழகத்தின் நிலை என்ன? மும்பையில் தாராவி தெற்கிலிருந்து சென்றவர்களின் இருப்பிடம். ஆனால் இன்றைக்கு வடக்கிலிருந்து தெற்காக காற்று வீசுகிறது. காற்றை தடுத்திட இயலாது என்பதே எதார்த்தம்.
  • மேற்கு வங்கம், ஒடிஸா, பிகார், ஜார்க்கண்ட், அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சுமார் 10.67 லட்சம் பேர் தமிழகத்தில் பணி புரிந்துகொண்டு இருக்கிறார்கள். இவர்களில் 27 % பேர் உற்பத்தித் துறையிலும் 14 % ஜவுளித் துறையிலும் 11 % கட்டடத் தொழிலிலும் உள்ளனர்.
  • குக்கிராமங்களில் கூட வடமாநிலத்தவர்களை பார்க்க முடிகிறது. அவர்களில் மிகக் குறைவான விழுக்காட்டினர் குற்றச்செயலில் ஈடுபட வாய்ப்பிருப்பதை மறுப்பதற்கில்லை. அவர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது எப்படி?
  • பிரபல இனிப்புக்கடை முதல் விமான நிலையக் கட்டுமானப் பணி வரை பல பணிகளில் பல லட்சம் வட இந்திய இளைஞர்கள் வேலை செய்கிறார்களே அவர்கள் ஒவ்வொருவரையும் கண்காணிப்பது என்பது எளிதான செயலா?
  • விமானத்தில் வந்து செயின் பறிப்பு செய்து விமானத்திலேயே தப்பிச் செல்கிற, திருடிய இருசக்கர வாகனங்களை வட இந்தியா செல்லும் பார்சல் வாகனங்களில் அனுப்பி வைக்கிற வட இந்திய குற்றவாளிகளின் செயல்களுக்கு முழுமையான முற்றுப்புள்ளி வேண்டுமானால், தமிழக காவல்துறையினருக்கு அவர்கள் மொழி தெரிந்திருப்பது அவசியமில்லையா?
  • மொழி பிரச்னையால் அவர்களை பிடிக்க முடியாமல் போகும்போது சம்பந்தமில்லாதவர்களைப் பிடித்து குற்றச்செயல்களில் சம்பந்தப்படுத்துவது புதிய குற்றவாளிகளை உருவாக்கிவிடாதா?
  • உலகம் மாறி வருகிறது என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரிகிறது, புரிகிறது. நவீன கருவிகள், சாதனங்கள் வந்தாலும் உண்மையான குற்றவாளியைப் பிடிக்க வேண்டுமானால் தமிழக காவல்துறையினர் பல மொழிகள் தெரிந்தவர்களாக இருப்பது அவசியம். 
  • தமிழக காவல்துறையினருக்கு பயிற்சியின் போது ஹிந்தி மொழியை பேசக்கூடிய அளவாவது கற்றுக் கொடுக்கிற முயற்சியை செய்ய வேண்டும். உயர் அதிகாரிகள் அரசுக்கு அழுத்தம் தந்து எடுத்துரைத்து செயல்படுத்த வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும்.
  • அது நிறைவேறினால் தமிழக காவல்துறை இந்தியாவிலேயே சிறந்த காவல்துறையாக விளங்கும்.
  • சென்னை தீவுத்திடலில் அமைந்திருந்த பொருட்காட்சியில் காவல்துறை அரங்கத்திலிருந்த பார்வையாளர் புத்தகத்தில் பொதுமக்களில் ஒருவர் எழுதியிருந்த வாசகம் என் நினைவுக்கு வருகிறது. அது - "குற்றச்செயல்களில் தொடர்புடையவர்களைப் பிடியுங்கள்; தொடர்பில்லாதவர்களைப் பிடிக்காதீர்கள்'.

நன்றி: தினமணி (16 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்