மொழி பெயர்க்கப்பட வேண்டிய முன்னோடி
- மொழிபெயர்ப்பென்னும் சிரமமான காரியத்தைச் சந்தோஷமாக மேற்கொண்டு உலக இலக்கியத்தைத் தமிழில் கொண்டுவந்து சேர்த்த எழுத்தாளர் க.நா.சுப்ரமண்யம். அவரது ஆக்கங்கள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கான விடையைத் தேடும்போது முதலில் நமக்குக் கிடைப்பது ‘A Movement for Literature’. 1986ஆம் ஆண்டு அவருக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றுத் தந்த ‘இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்’ என்ற நூலை வெங்கட் சாமிநாதன் மொழிபெயர்த்திருக்கிறார். சாகித்ய அகாடமியே இந்நூலை 1998ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
- புதுக்கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் எனப் புனைவிலக்கிய வகைமைகளில் தொடர்ந்து பங்களித்தவர் க.நா.சு. ‘மயன் கவிதைகள்’ என்கிற தன்னுடைய புதுக்கவிதை நூலுக்காக ‘குமாரன் ஆசான் விருது’ பெற்ற அவரது கவிதைகள் ஆர்.பார்த்தசாரதி, நகுலன் போன்றவர்களால் ஆங்கிலத்தில் வெகுகாலத்திற்கு முன்பு மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. ஆனால், அவை பலரின் கவனத்திற்கு வராமலேயே போய்விட்டன.
- க.நா.சு.வின் சிறுகதைகள் அவராலேயும் மற்ற எழுத்தாளர்களாலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவை பல்வேறு இதழ்களிலும் சிறுகதைத் தொகுப்பு நூல்களிலும் வெளியாகிச் சிறைபட்டுக் கிடக்கின்றன. அவை இனிமேல்தான் நூலுருவம் பெறவேண்டும்.
- நாவலைப் பொருத்தவரையில் அவரது ‘அசுரகணம்’ மா.தட்சிணாமூர்த்தி மொழியாக்கத்தில் 1976ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகியுள்ளது. 1968ஆம் ஆண்டு இதே நாவலை பி.சபாபதி, சிங்கராசாரியார் இருவரும் இணைந்து தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளனர். ‘வாழ்ந்தவர் கெட்டால்’ நாவல் ‘The Fall’ என்கிற தலைப்பில் நகுலனால் மொழிபெயர்க்கப்பட்டு சாகித்ய அகாடமியின் ‘இந்தியன் லிட்ரேச்சர்’ (Indian Literature) இதழில் 1978இல் வெளியானது. சென்ற ஆண்டு ஸ்ரீநிவாச கோபாலன் இதைக் கண்டெடுத்துப் பதிப்பித்துள்ளார். நூலை ஜீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியிட்டுள்ளது.
- தமிழக அரசு தமிழ் இலக்கியத்தை உலக மொழிகளுக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவ்வேளையில், க.நா.சு.வின் சிறந்த ஆக்கங்களான ‘பொய்த்தேவு’, ‘ஒருநாள்’, ‘அசுரகணம்’, ‘வாழ்ந்தவர் கெட்டால்’, ‘ஆட்கொல்லி’ போன்ற புத்தகங்கள் ஆங்கிலத்திலும் பிற உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்படியான முயற்சியே அவர் காலத்தை மீறி நிற்கும் கலைஞன் என்பதை மீண்டும் மெய்ப்பிக்கும்.
- (க.நா.சுப்ரமண்யத்தின் பிறந்த நாள் ஜனவரி, 31)
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 01 – 2025)