TNPSC Thervupettagam

மொழிக் கற்றலின் பரிமாணங்கள்

February 6 , 2024 340 days 189 0
  • அண்மையில் பள்ளி வகுப்பறை ஒன்றில் தமிழ் மொழியில் பேசிய காரணத்திற்காக குழந்தை ஒன்று கண்டிக்கப்பட்டு பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. உண்மையில் பெரும் வருத்தம் தரக்கூடிய நிகழ்வு இது.
  • குறிப்பிட்ட ஒரு மொழியை கற்பதற்கும், குறிப்பிட்ட மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு கற்பதற்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்துகொள்ள வேண்டும். தாய்மொழியினை பயிற்றுமொழியாகக் கொண்டு கற்பது என்பது குழந்தைகளுக்கு இயல்பாக கை வரக்கூடியது. அதே நேரத்தில் மாற்றுமொழியைப் பயிற்றுமொழியாகக் கொண்டு கற்பது என்பது மிகவும் சிக்கலானது.
  • இந்த இடத்தில் மொழிக் கற்றல் குறித்து சில அடிப்படையான விஷயங்கள் பற்றிய சில புரிதல்கள் அவசியமாகின்றன. எந்த மொழிக் கற்றலுக்கும் அடிப்படைக் கூறுகளாக கேட்டல், பேசுதல், வாசித்தல், மற்றும் எழுதுதல் ஆகிய திறன்களை படிப்படியான திறன்களாக மொழியியலாளா்கள் வரையறுக்கின்றனா். அதாவது, குழந்தை எந்த வார்த்தைகளைக் கேட்கிறதோ, அந்த வார்த்தைகளைப் பேசுவது எளிதான காரியம்.
  • அதுபோலவே தான் பேசுகின்ற வார்த்தைகளை குழந்தை வாசிப்பதும் எளிதானது. அவ்வாறு வாசித்த வார்த்தைகளை எழுதுவதும் எளிமையானது. ஆனால், ஆங்கில மொழிக் கற்றலைப் பொருத்தவரை, பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு என்பது இதற்குத் தலைகீழாக உள்ளது. குறிப்பாக, ஆங்கிலத்தில் எழுதுவது அதிகமாகவும், வாசிப்பது அடுத்தபடியாகவும், பேசுவது அதற்கு அடுத்தபடியாகவும், கேட்பது என்பது மிகவும் அரிதாகவுமே உள்ளது; விதிவிலக்காக சில பள்ளிகள் இருக்கலாம்.
  • இந்த நிலையில் குழந்தை ஆங்கிலத்தில் பேசுவதைக் கேட்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்காமல், பேசுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க இயலாது. அதுபோலவே வாசிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்போது தாம் எழுதுவதைப் புரிந்து எழுதும் வாய்ப்பும் அதிகரிக்கும். இது நடக்காத நிலையில் புரிதல் இல்லாமல் கோலங்கள் போடுவது போன்று வாா்த்தைகளை வரையும் கெடுவாய்ப்பான நிலைக்குத் தள்ளப்படுவா்.
  • பல தனியார் பள்ளிகளில் தொடக்க நிலை குழந்தைகளுக்கான தோ்வுகள் என்பது கூட பெரும்பாலும் எழுத்துத் தோ்வாகவே அமைகின்றன. இதனால், குழந்தைகள் எழுத்தால் எழுதி மட்டுமே தாம் கற்றதை வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இந்த நிலையில் மாற்றம் வராமல் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பித்தலை எளிமையாக்க முடியாது.
  • தாய் மொழியைக் கற்கும் குழந்தை அது வாழக்கூடிய சூழலில் பல்வேறு வகையான வார்த்தைகளைக் கேட்கிறது. அவ்வாறு அது கேட்கும் வார்த்தைகளை தனிமையில் உள்ளபோதோ, அல்லது பல்வேறு நபா்களோடு கூட்டாக இருக்கும்போதோ பேசிப் பாா்க்கிறது. பின்னா், வாக்கிய அமைப்புகளைக் கவனிக்கிறது. அந்த வாக்கிய அமைப்புகளை ஒட்டி தனது வாக்கியங்களைப் பகிர்கிறது.
  • ஆரம்ப நாள்களில், பல நேரங்களில் அந்தக் குழந்தை தவறாகவே பேசுகிறது. உதாரணமாக, ‘அக்காஎன்பதைஅத்தாஎன்றோ நாயைஜுஜுஎன்றோ அழைக்கிறது. இவ்வாறான நேரங்களில் அந்த குழந்தையின் பெற்றோரோ அல்லது சார்ந்தோரோ இது தவறு என்று எப்போதும் சுட்டிக்காட்டுவதில்லை. மாறாக, அக்காவா? நாயா? என்று அந்த குழந்தையின் பாணியிலேயே சென்று திருத்த முயல்கிறோம். இதை அடிப்படையாகக் கொண்டு அடுத்தடுத்து சொல்லும்போது குழந்தை சரியாகச் சொல்கிறது. குறிப்பாக, நான் நாளைக்கு வந்தேன் என்று ஒரு குழந்தை சொல்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த வாக்கியத்தினை சரி செய்யக்கூடிய பெரியவா் ஒருவா், , நீ நாளைக்கு வருவியா? என்றுதான் திருத்துவார்.
  • குழந்தை மொழியில் செழுமை அடைய விரும்பும் எவரும் செய்ய வேண்டிய அடிப்படைச் செயல்பாடுகள் சில உண்டு. முதலாவதாக, அந்தக் குழந்தை தமக்குத் தெரிந்த வகையில் தமக்கு அறிமுகமான வார்த்தைகளைக் கொண்டு தமது கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அளிப்பது; இரண்டாவதாக, அந்த வாய்ப்புகளைக் கூடுதலாக வழங்கி அம்மொழி தமக்கு வரும் என்ற நம்பிக்கையைக் கூட்டுவது; மூன்றாவதாக அவா்களின் வெளிப்பாடுகளை நளினமாக திருத்தம் செய்வது. சுருக்கமாக, அக்குழந்தை மொழியைக் கற்பதற்கான எல்லா வகையான சாதகமான, நம்பிக்கையான சூழலை உண்டாக்க வேண்டும்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக இயல்பான நிலையில் மொழி என்பது கருத்து பரிமாற்றத்துக்கான ஊடகம் மட்டுமே. எல்லா இடங்களிலும் இலக்கியத் தரம் வாய்ந்த வாக்கியங்களுக்கான தேவை இருக்காது. அல்லது முழுமையான வாக்கியங்களுக்கான தேவைகூட இருக்காது. அதற்குப் பதிலாக ஓரிரு வார்த்தைகளைப் பயன்படுத்திக்கூட தமது தேவைகளை ஒருவரால் நிறைவேற்றிக் கொள்ள முடியும். அவ்வாறெனில் மொழியின் தூய்மைக்கான அவசியம் இல்லை என்று நாம் வாதிடவில்லை. மொழியை தமது ஒரு நண்பனைப் போல மாற்றிக்கொள்ள இவையெல்லாம் அவசியமான நிபந்தனைகள். தாய்மொழி கற்றலுக்கு நாம் அளிக்கும் சலுகைகளை ஆங்கிலம் போன்ற அயல்மொழிகளைக் கற்பதற்கும் அளிக்கவேண்டும்.
  • அயல் மொழியாக ஆங்கிலம் கற்கும் குழந்தைகளுக்கும் சுத்தமான இலக்கண ரீதியான வாக்கியங்கள் என்ற நிபந்தனைக்கு தொடக்கத்திலேயே பழக்காமல் அவா்கள் மொழியைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அவா்கள் செய்யக்கூடிய தவறுகளைப் புறக்கணித்து அவா்கள் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தொடா்ந்து அளிக்க வேண்டும். அவா்கள் நம்பிக்கையுடன் அணுகத் தொடங்கிய பின் அவா்களுக்கான தூய்மையான மொழியை அறிமுகப்படுத்த வேண்டும். அவா்கள் நம்பிக்கை பெற்றுவிட்டால் அவா்களே தூய்மையையும் எளிதாகக் கற்றுக் கொள்வா்.
  • முதல்கட்டமாக குழந்தைகள் நம்பிக்கை பெறுவது என்பதுதான் முக்கியமே தவிர, தூய்மையான மொழிகள் பேசுவது அல்ல என்பதை பெற்றோர்களும் ஆசிரியா்களும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் புரிதல் சமூகத்தில் உண்டாவது மட்டுமே. மேலே நாம் குறிப்பிட்ட பள்ளியில் நடைபெற்றது போன்ற சம்பவங்களைத் தவிர்க்கும். எல்லாவற்றுக்கும் மேலாக கட்டுப்பாடு அல்லது ஆணையின் மூலமாகவும் எதையும் கற்க இயலாது. பயமற்ற இயல்பான சூழல் மட்டுமே கற்றலில் சுவையைக் கூட்டும். குயிலைப் பிடித்து கூண்டில் அடைத்துப் பாடச் சொல்லும் நிலை மாறவேண்டும்.

நன்றி: தினமணி (06 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்