TNPSC Thervupettagam

மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன?

September 21 , 2020 1580 days 734 0
  • அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நம் முன்னோர்கள் நாட்டுக்கென்று ஓர் ஆட்சி மொழி வேண்டும் என்று கருதியதன் விளைவாக, இந்தி ஆட்சிமொழியாக்கப்பட்டது.
  • ஆங்கிலம் இணைப்பு மொழியாகத் தொடர்வதற்கு, 1950 தொடங்கி 15 ஆண்டுகள் காலநிர்ணயம் செய்யப்பட்டது.
  • பின்னர் நடந்த உயிரோட்டமிக்க போராட்டங்களின் விளைவாக இந்தி பேசாத மாநிலங்களின் எதிர்ப்புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், மொழிவாரி மாநிலங்களை உருவாக்கியதோடு ஆங்கிலம் தொடர்ந்து இணைப்பு மொழியாக நீடிக்கவும் வழிவகுத்தார் அன்றைய பிரதமர் நேரு. அதன்படி உருவான சட்டம்தான் ஆட்சிமொழிகள் சட்டம், 1963.
  • இணைப்பு மொழியாக ஆங்கிலம் நீடிக்க அரசமைப்புச் சட்டம் நிர்ணயித்த காலக்கெடு 1965-ம் ஆண்டுடன் முடிவடைந்ததால் 1967-ல் ஆட்சிமொழிகள் திருத்தச் சட்ட கொண்டுவரப்பட்டது.
  • அதன் அடிப்படையிலேயே இன்றும் ஆங்கிலம் தொடர்கிறது. அந்தந்த மாநிலத்தில், அந்தந்த மாநில மொழிகள் ஆட்சிமொழியாக இருந்துவருகின்றன. இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட, 22 மொழிகளில் ஒன்றுதான் இந்தியும்.
  • அப்படி இருக்க இந்தி மற்ற மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதைத் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் விரும்பவில்லை.

அண்ணா வழியில் உறுதி

  • அண்ணா முதல்வராக இருந்தபோது 23.01.1968-ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருமொழிக் கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
  • மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம். அதை நடைமுறைப்படுத்தவும் மாட்டோம். அந்த வகையான சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
  • அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் தற்போதைய முதல்வர் பழனிசாமியும் அந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.
  • 1963 மற்றும் 1967-ல் சட்டத்தை நடைமுறைப்படுத்த சட்டவிதிகளை மத்திய அரசு 1976-ல் உருவாக்கியபோது, அதன் முகப்பிலேயே, தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனாலும், இந்த விலக்கு தற்காலிகம்தான். நிரந்தரத் தீர்வு வேண்டுமென்றால், அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் ஆட்சிமொழிகளாக ஆக்கப்பட வேண்டும்.
  • உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் இதே கருத்தைத்தான் கூறியிருக்கிறார். இது சாத்தியமா என்றுகூடச் சிலர் கேட்கலாம்.

காஷ்மீரும் சிங்கப்பூரும்

  • சமீபத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு 5 மொழிகளை ஆட்சிமொழிகளாக மத்திய அரசு ஆக்கியிருக்கிறது.
  • அது சாத்தியப்படும்போது, 32 மாநிலங்கள் அடங்கிய இந்தியாவில் 22 அட்டவணை மொழிகளை ஆட்சிமொழிகளாக ஆக்குவது மட்டும் ஏன் சாத்தியமாகாது?
  • ஆங்கிலத்தை எட்டாவது அட்டவணையில் மேலும் ஒரு மொழியாகச் சேர்த்துவிட்டால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.
  • ஆங்கிலத்தை அப்புறப்படுத்தவே முடியாது. ஆங்கிலம் ஒரு அயல்நாட்டு மொழி என்று சிலர் வாதிடுகிறார்கள். அப்படியானால் நேபாளம் நமக்கு வேற்று நாடுதானே. நேபாளிகள் கணிசமாக இந்தியாவில் வாழ்கிறார்கள் என்பதால், அவர்கள் பேசும் நேபாளி மொழி மட்டும் அட்டவணை மொழியாக எந்த அடிப்படையில் சேர்க்கப்பட்டது?
  • சிங்கப்பூரில் ஆங்கிலம் உட்பட (சீனம், மலாய், தமிழ்) 4 மொழிகள், அந்த நாட்டின் ஆட்சி மொழியாக உள்ளது.
  • இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையில் ஆங்கிலோ இந்தியர்கள் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். ஆங்கிலம்தான் அவர்களுடைய தாய்மொழி. எனவே, ஆங்கிலத்தையும் அட்டவணை மொழிகளில் ஒன்றாகச் சேர்ப்பதில் என்ன தவறு?

மொழி எதேச்சாதிகாரம்

  • மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி... இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்தான் என்பதை உணர வேண்டும்.
  • மாநில உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். மொழி எதேச்சாதிகாரம் கூடாது.
  • சமீபத்தில் ஆயுஷ்மருத்துவத் துறையின் செயலாளர் காணொளிப் பயிற்சியின்போது இந்தி தெரியாதவர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறலாம் என்று சொன்னது அவருக்கு அரசமைப்புச் சட்டப் புரிதல் இல்லாததையே காட்டுகிறது.
  • அப்படிப்பட்டவர்கள் அரசமைப்புச் சட்டத்தின் கூறு 350-யைப் படித்துப் பார்க்க வேண்டும்.
  • இதுபோன்ற மொழி எதேச்சாதிகாரம் என்பது இன்றோ நேற்றோ தொடங்கியதல்ல. 1946-ல் அரசமைப்புச் சட்ட அவையின் முதல் கூட்டத்திலேயே உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.வி.துலேக்கர் இந்துஸ்தானியில்தான் பேசினார்.
  • அப்போது கூட்டத்துக்குத் தலைவராக இருந்த பிஹாரைச் சேர்ந்த சச்சிதானந்த சின்ஹா, அவரைப் பார்த்து ராஜாஜி போன்றவர்களுக்கு இந்துஸ்தானி தெரியாது. உங்களுக்குத்தான் ஆங்கிலம் தெரியுமே அதில் பேசலாமேஎன்றதற்கு அவர் ஆங்கிலம் எனக்குத் தெரிந்தாலும் இந்துஸ்தானியில்தான் பேசுவேன்.
  • ராஜாஜிக்கு நான் பேசுவது புரியவில்லை என்றால் கூட்டத்தை விட்டு வெளியேறலாம். இந்துஸ்தானி தெரியாதவர்கள் இந்த நாட்டை விட்டே போய்விட வேண்டும்என்று கோபமாகப் பேசியிருக்கிறார். இன்னும் அத்தகைய மனோநிலை நீடிப்பது நல்லது அல்ல.

மறு ஆய்வு மனு ஏன்?

  • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும்கூட, அவையும் அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்தானே என்பதைக்கூட கருத்தில் கொள்ளாமல், அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?
  • இந்தியாவின் கட்டமைப்பைக் காப்பாற்றுவதும், உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதும் மத்திய அரசின் கடமையல்லவா?
  • இந்தியா மீது பற்றுகொண்ட பிரிட்டிஷ் பத்திரிகையாளர் டான்.டெய்லர் இந்த நாட்டில் ஏதோ ஒரு கட்டுமானம் தென்படுகிறது, அதை நாட்டு உணர்வு என்று மட்டுமே சொல்ல முடியும்என்று எழுதினார்.
  • அந்தக் கட்டுமானம் பாதுகாக்கப்பட வேண்டும். உணர்வு மதிக்கப்பட வேண்டும்.
  • மத்திய அரசின் மொழிக் கொள்கை கவலை அளிக்கக் கூடியதாகவும், ஏமாற்றமளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது என்ற தமிழக முதல்வர் பழனிசாமி சொன்னதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு தான் ஓர் ஒன்றிய அரசு என்ற நிலையில் மொழிக் கொள்கையை மறுபரிசீலிக்க வேண்டும். அதுவே பிரச்சினைக்குத் தீர்வு.

நன்றி:  தி இந்து (21-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்