TNPSC Thervupettagam

மொழியின் தோற்றம், வளர்ச்சி

February 27 , 2022 890 days 11024 0
  • மக்கள் தங்களுக்கு இடையேயான கருத்து பரிமாற்றத்திற்கு பயன்படக்கூடிய ஒரு சாதனமாக மொழி விளங்குகின்றது. அவரவர் தங்கள் தாய்மொழி வழியாகத் தொடர்பு கொள்ளும் அதேவேளையில் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரக்கூடிய பல்வேறு மொழி சார்ந்த மக்களோடு தொடர்பு கொள்வதற்கு இன்றைய நிலையில் பன்மொழி அறிவும் அவசியமாகிறது.
  • உலகில் பிறந்த ஒவ்வொருவரும், ஒவ்வொரு உயிரும் தன் தாயினை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றுவது இயல்பு. அவ்வகையில் மக்களின் வாழ்வை வளமாக்கக்கூடிய, நலமாக்கக்கூடிய எதனையும் தாய்க்குச் சமமாக எண்ணுவது இயல்பாகும். அதனால்தான் தாய்மொழி, தாய்நாடு என்று மொழியினையும் நாட்டினையும் போற்றுகின்றனர். பறவைகளும் விலங்குகளும் குறிப்பிட்ட சில ஒலிகளால் கருத்துக்களைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன. அந்த ஒலிகள் பொருளற்றன.
  • வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமாய் ஒலி மூலம் அச்சம், ஆசை போன்ற உணர்ச்சிகளை வெளியிடுகின்றன. இதன்மூலம் கருத்துக்களைத் தெளிவாகத் தெரிவிக்க இயலாது. புவியில் வாழும் உயிரினங்களில் மனிதன் மட்டுமே உணர்வையும் கருத்தையும் பிறருக்கு உணர்த்தக்கூடிய நிலையில் இருக்கின்றான். மனித இனத்திற்கு இடையே தொடர்பு உண்டாவதற்கு மொழியே அடிப்படைக் கருவியாக அமைந்துள்ளது.
  • இம்மொழியானது இயற்கையாக அமைந்தது அல்ல. மொழியை உருவாக்கியவன் மனிதனே. தொடக்கத்தில் கருத்தினை வார்த்தையாக வெளியிட்டான். பின்னர் ஒவ்வொரு வார்த்தையாக இணைத்து சொற்றொடராக அமைத்துக் கொண்டான். இதுவே பேச்சு மொழியாக மாறியது. பேச்சு மொழியைப் போலவே எழுத்து மொழியும் மனிதனால் அமைக்கப்பட்ட ஒன்றாகும். இதனடிப்படையில் வெவ்வேறு ஒலிகளுக்கு வெவ்வேறு வடிவங்கள் உருவாக்கினர் ஒவ்வொரு மொழி பேசும் இனத்தவர்களும்.
  • பல ஆண்டுகளாக மொழியின் தோற்றம் பற்றி பல்வேறு அறிஞர்கள் ஆய்வு செய்து இருக்கிறார்கள். அவர்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒவ்வொரு இன மக்களும் மொழியின் தோற்றத்திற்கு கடவுளே காரணம் என நம்பியதோடு அது தொடர்பான புராணக் கதைகளை உருவாக்கி வழங்கி வருகின்றனர்.
  • சிவ வடிவங்களில் சிவபெருமானின் ஒரு கையில் தீ அகல் நெருப்பு (ஔி) மறு கையில் உடுக்கையும் (ஒலி) அமைத்திருப்பது வழக்கம். சிவனின் ஒரு கை உடுக்கையிலிருந்து எழுகின்ற ஒலியிலிருந்து ஒருபுறம் வடமொழியும் மறுபுறம் தமிழும் தோன்றியதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
  • அதேபோன்று பழங்காலத்து கிறித்துவ மதம் சார்ந்தவர்கள் மனிதர்களை படைத்த கடவுள் உடனே மொழியையும் படைத்துத் தந்தார் என்று கூறினர். கடவுள் படைத்த ஆதாம் ஒவ்வொரு பொருளாக கடவுள் முன்பு கொண்டுவர கடவுள் அப்பொருள்களுக்கெல்லாம் பெயர் கொடுத்தார். அப்பொருள்களின் பெயரை ஆதாம் கூற மொழி வளர்ச்சி பெற்றது எனக் கிறித்துவர்கள் நம்பினர். எகிப்தியர், சீனர், கிரேக்கர் போன்றோர் மொழியைத் தோற்றுவித்தவர் கடவுளே என்று கூறுகின்றனர்.
  • உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த பண்டைய மக்கள் “எழுத்து” கடவுளின் தோற்றம் என்றே நம்பினர். எழுத்தைத் தோற்றுவித்தவர் கடவுள் என்றே கருதினர். எகிப்தியர்கள் “தோத்” என்னும் கடவுள் எழுத்தைத் தோற்றுவித்ததாக நம்பிக்கை தெரிவித்தனர்.
  • பாபிலோனியர் “நேபோ” என்னும் கடவுளாலும், யூதர்கள் “மோசஸ்” என்ற கடவுளாலும், கிரேக்கர் “ஹெர்மஸ்” என்ற கடவுளாலும் எழுத்துகள் தோற்றுவிக்கப் பட்டதாகவே கருதி வந்தனர். தேவாரப் பதிகம்கூட “எண்ணாகி எண்ணுக்கோர் எழுத்துமாகி” என்று இறைவனைப் பாடுகின்றது.
  • இந்தியாவில் கலைமகளான சரசுவதியை கல்விக்கடவுளாகக் கருதுகின்றோம். வடமொழியில் ஹயக்ரீவரை எழுத்துக் கடவுளாக நம்புகின்ற மரபும் நம்மிடையே இன்றுவரை தொடர்கின்றது.
  • மொழியின் தோற்றம் பற்றிப் பல்வேறு கொள்கைகள் நிலவுகின்றன. ஒரு மிருகத்தின் அல்லது பறவையின் ஒலியினை உற்றறிந்து, அதனைப் போன்றே ஒலித்து, அதனை உணர்த்துவதால் அந்த ஒலிக்குறியீடுகளின் மூலம் புதிய சொற்கள் படைக்கப்பட்டன எனவும், மனிதனுக்கு ஏற்படும் உணர்ச்சிகளான வெறுப்பு, வியப்பு, அழுகை, மகிழ்ச்சி முதலியவற்றின் மூலம் வெளிப்படும் ஒலியசைவுகளின் வாயிலாகச் சில சொற்கள் தோன்றின எனவும் கூறுகின்றனர்.
  • மொழித் தோற்றத்தைப் பற்றிய மற்றொரு கொள்கை இதற்கு மாறானது. அக்கொள்கையினர் கடவுள் பொருள்களைப் படைத்தார் என்றும், மனிதனே அவற்றிற்குப் பெயர் கூறினான் என்றும் கூறுவர்.
  • மற்றொரு கொள்கையான இயற்கைக் கொள்கையில் மொழியைப் படைத்தவன் மனிதனே என்பர். இவர்கள் பரிணாமக் கோட்பாட்டின் தந்தை எனக் கருதப்படும் தார்வின் என்ற அறிவியல் அறிஞர் கூறிய பரிணாமம் (Evolution) என்ற கொள்கை அடிப்படையில் மொழியானது இயற்கையாக அமைந்த ஒன்று என்று கூறுவர்.
  • அறிவியல் முறைப்படி மொழியை ஆராய்வதற்கு வழிகாட்டியவர் எர்டர் (Herder) என்பவராவார். இவர் மனிதனிடம் அமைந்த தூண்டுதல் ஒன்றே மொழியின் தோற்றத்திற்குக் காரணம் என்றார் சர் வில்லியம் சோன்சு மொழிகள் ஒரே மூலத்தில் இருந்துதான் தோன்றியிருக்க வேண்டும் என்ற கருத்தை முதன் முதலில் கூறினார்.
  • தமிழ், கிரேக்கம், இலத்தீன், வடமொழி ஆகியன தொன்மை வாய்ந்த மொழிகளாகும். மொழியின் வளர்ச்சி மாறிமாறி வருவதற்கு அதில் படைக்கப்படுகின்ற இலக்கண இலக்கியங்களும் ஒரு காரணமாகும். ஒரு மொழிக்கு உயிர் ஒலி வடிவமாகும்.
  • காலத்தின் வேறுபாட்டால் எந்த ஒரு மொழியும் மாற்றத்திற்குட்படுவது இயல்பு. அது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். உலக மொழிகளுள் அதிக எழுத்துகளைக் கொண்ட மொழி சீனமொழிதான்.
  • இன்றைய நிலையில் மொழிகள் பல உருவாகி உலகம் முழுவதும் மனித இனம் வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறது. உலகில் உள்ள மொழிகளின் மொத்த எண்ணிக்கை 2796 என அமெரிக்க மற்றும் பிரெஞ்சு மொழியியலாளர்கள் கூறுகின்றனர்.
  • மொழி உணர்வு என்பது மொழி பற்றிய கருத்துகள் அறிவுநிலை அல்லாது உணர்வு நிலையில் பார்க்கப்படுவதேயாகும்.
  • நாடுகளிடையே ஏற்பட்ட மறுமலர்ச்சி பண்பாட்டு வளர்ச்சி தேசிய உணர்ச்சி தொழில் வளர்ச்சி, குடியேற்ற ஆதிக்க வளர்ச்சி போன்றவற்றிற்கு மொழியே அடிப்படையாக அமைந்தது. அச்சுத்தொழில், கல்வி அறிவு வளர்ச்சி, சமய வளர்ச்சி, சுதந்திர உணர்வு போன்றவை வளர்ந்து செழிக்கக் காரணமாக அமைந்தது சிறுபான்மையினரின் மொழிப்பற்றே. இவ்வாறு மொழிப்பற்று வீறுகொண்டெழுந்த வரலாற்றை அறியலாம்.
  • மொழிப் பற்றினாலேயே பல சமுதாய அரசியல் புரட்சிகளும் விழிப்புணர்ச்சிகளும் ஏற்பட்டதை அறியலாம். இலங்கையில் தமிழர்களும், பாகிஸ்தானில் இந்தி மொழியினரும், இந்தியாவில் பஞ்சாபி மொழி பேசும் சீக்கியரும் செய்துவரும் செயல்கள் சான்றாகும்.ஒரு நாட்டின் சிறுபான்மையினர் தத்தம் பண்பாட்டையும், மொழியையும் விட்டு விடாமல் கூடுதல் மாற்றத்திற்கும் இடம் தராமல் பெரும்பான்மையினரோடு ஒன்றி வாழ்வதற்கும் மொழிப்பற்று முக்கிய காரணமாகும். இந்தியா பல மொழிகள் பேசப்படுகின்ற அருங்காட்சியகமாக இருப்பதற்கும்,  பல மொழிகள் பேசப்படுவதற்கும் அந்தந்த மொழி பேசுபவர்களின் மொழிப்பற்றே காரணமாக அமைகின்றது.
  • மொழி மனிதன் பிறரோடு கலந்து வாழக் கருவியாக அமைகின்றது. தான் பிறந்து முதலில் அன்னையோடு பேசுகின்ற மொழியையே ‘தாய்மொழி’ என்பர். பிறந்ததும் மழலை மொழியில் பேசுவதே தாய்மொழி எனப்படுகிறது. இன்றைய உலகில் பல நாட்டவரும் பல மொழியினரும் மிக அதிகமாக நெருங்கிக் கலந்து பழகும் பான்மையில் ஒருவர் பல்வேறு மொழிகளைக் கற்பினும், ஒவ்வொருவருக்கும் தாய்மொழி என்ற ஒன்றிடம் தனிப்பற்று உண்டு.
  • ஆங்கிலத்தில் வல்லவரான காந்தியடிகள் தம் வாழ்வு நூலைத் தம் தாய்மொழியாம் குஜராத்தியிலே எழுதினார். உலகப் புகழ்பெற்ற கீதாஞ்சலியைக் கவிஞர் தாகூர் முதலில் தாய்மொழியாகிய வங்க மொழியிலேயே எழுதினார். ஒருவர் தம்மை மறந்த நிலையிலும், மாறுபட்ட நிலையிலும் அவர்தம் உள்ள அடித்தளத்தில் உருவாவதே தாய்மொழி.
  • குழந்தையுடன் முதன்முதல் அவள் தாயே பழகி அக்குழந்தைக்குப் பேசக் கற்றுக்கொடுக்கிறாள். அது இயல்பாக அவர்தம் தாய்மொழியாகவே இருக்கும். தாய்வழியே பின்னர் தந்தை, உற்றார், மற்றாரை உணரும் அந்த குழந்தைக்கு இளமையில் தாய் கற்றுத் தந்த அந்த மொழியே தாய்மொழியாக அமையும். எனவே, அந்த வகையில் மனிதன் என்றும் போற்ற வேண்டியது தாய் தந்த தாய்மொழியேயாகும்.
  • இன்று உலகத் தாய்மொழி நாள். தமிழகத்திலும்கூட பெரும் அளவிற்கு மொழிப்போர் நடைபெற்று பல தமிழ் இளைஞர்கள் இன்னுயிர் நீத்ததை நாம் அறிவோம். ஆனால், நாம் செய்த தியாகம் உலக அரங்கில் கொண்டு செல்லப்படவில்லை என்பதே உண்மை.
  • ஆனால், அதே நேரத்தில் கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்கமொழியினை ஆட்சிமொழியாக அறிவிக்கக்கோரி அம்மக்கள் 1952ஆம் ஆண்டு நடத்திய போராட்டத்தின்போது நான்கு மாணவர்கள் உயிர் நீத்தனர். இவர்களின் நினைவாக சாகித் மினார் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது.
  • வங்கதேசத்து அரசின் பெரும் முயற்சியாலும் உலகின் பல்வேறு அமைப்புகளின் ஆதரவு காரணமாகவும் வங்கமொழிப் போரில் ஈடுபட்டு உயிர்நீத்த மாணவர்களின் நினைவாக ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ அமைப்பால் பிப்ரவரி 21ஆம் நாள், 1999ஆம் ஆண்டு பொது மாநாட்டின் 30ஆவது அமர்வில் இந்நாள் அனைத்துலக தாய்மொழி நாளாக அறிவிக்கப்பட்டது.
  • உலகில் உள்ள பல்வேறு சமூகங்களின் மொழி பண்பாட்டு தனித்தன்மையைப் பேணிக் காப்பதுடன் அவற்றிற்கிடையேயான ஒற்றுமையை உருவாக்கும் நாளாக இந்நாளை யுனெஸ்கோ அறிவித்தது. 2000ஆம் ஆண்டு முதல் இந்நாள் உலகத் தாய்மொழி நாளாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

நன்றி: தினமணி (27 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்