- இன்று முதல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் செயல்பட இருக்கிறாா்கள். நேற்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடா், பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இந்தியாவின் கடந்த 75 ஆண்டு ஜனநாயக வரலாறு குறித்து விவாதித்தது.
- புதிய கட்டடத்தில் இன்று முதல் நடைபெற இருக்கும் கூட்டத்தில், என்ன நடக்கப்போகிறது என்பதை உறுப்பினா்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. சிறப்புக் கூட்டத்தொடரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்படும் என பிரதமா் மோடி தெரிவித்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
- நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் மிக அரிதாகவே கூட்டப்படுவது வழக்கம். இதற்கு முன்பு சில முக்கியமான நிகழ்வுகளுக்கு மட்டுமே நாடாளுமன்றம் வழக்கமான நாள்களில் அல்லாமல் கூடியிருக்கிறது.
- 1972, 1997-ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் சுதந்திர வெள்ளிவிழாவையும், பொன்விழாவையும் கொண்டாட சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. 1992-இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் பொன்விழாவுக்காக அவைகள் கூட்டப்பட்டன. 2017-இல் சிறப்புக் கூட்டத்தில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
- இதற்கு முன்னால் சிறப்புக் கூட்டங்கள் நடைபெறும்போது முன்கூட்டியே அதுகுறித்த அறிவிப்பு வரும். எதற்காக அவை கூட்டப்படுகிறது, அவையில் என்னென்ன விவாதிக்கப்பட இருக்கின்றன உள்ளிட்ட விவரங்கள் உறுப்பினா்களுக்கு மட்டுமல்லாமல், ஊடகங்கள் மூலம் மக்களுக்கும் தெரியப்படுத்தப்படும். இந்த முறை அப்படி எதுவுமே இல்லாமல் திடுதிப்பென்று அறிவிக்கப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, ஆளுங்கட்சி உறுப்பினா்களேகூட திடுக்கிட்டிருந்தால் வியப்படைவதற்கில்லை.
- பெரும்பாலான மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் உருவாக்கி இருக்கும் ‘இந்தியா’ கூட்டணி மும்பையில் கூடியது. அந்த நிகழ்விலிருந்து மக்களின் கவனத்தை முற்றிலுமாக தில்லியை நோக்கி திரும்ப வைத்துவிட்டது, பிரதமா் மோடி தனது நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி மூலம் வெளியிட்ட சுட்டுரை அறிவிப்பு. ‘ஜி20 மாநாட்டைத் தொடா்ந்து, செப்டம்பா் 18 முதல் 22-ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட இருக்கிறது’ என்று சமூக ஊடகங்களில் செய்யப்பட்ட அந்தப் பதிவில் அமைச்சரவை கூடியதாகவோ, முடிவெடுத்ததாகவோ எந்தவிதத் தகவலும் இல்லை.
- பிரதமா் மோடியின் அரசியலில் எப்போது என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்பதை அவருக்கு நெருக்கமானவா்களே கூட தெரிந்து வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. அதனால், அறிவிப்பை வெளியிட்ட அமைச்சா் பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட இருக்கும் முக்கியமான செய்திகள் குறித்து தெரிவிக்காமல் இருந்ததில் ஆச்சரியமில்லை.
- சிறப்புக் கூட்டத்தொடா் குறித்த பிரதமா் மோடியின் அறிவிப்பை, திசைதிருப்பும் முயற்சி என்று முதலில் தெரிவித்த ‘இந்தியா’ கூட்டணி, பின்னா் சமூக ஊடகங்கள் மூலம் ‘இந்த அறிவிப்பு ஜனநாயக விரோதமானது’ என்று தாமதமாகக் குற்றம் சாட்டியது. காங்கிரஸ் கட்சியின் தலைவா் சோனியா காந்தி, கூட்டத்தொடா் குறித்த ரகசியத்தைத் தான் தெரிந்துகொள்ள விழைவதாக பிரதமா் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பினார்.
- அரசுத் தரப்பு, இந்திய நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு பயணம் குறித்த விவாதத்தை காரணமாகச் சொன்னபோது, எதிர்க்கட்சிகளின் ஆத்திரம் மேலும் அதிகரித்தது. இது குறித்து ஏற்கெனவே பல முறை விவாதிக்கப்பட்ட நிலையில், இப்போது எதற்காக சிறப்புக் கூட்டம் என்கிற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அரசுத் தரப்பிடமிருந்து பதில் இல்லை.
- நடக்க இருக்கும் கூட்டத்தொடரில் தோ்தல் ஆணையா்களை நியமிப்பதற்கான மசோதா; வழக்குரைஞா்கள் திருத்த மசோதா; பத்திரிகைகள் - இதழ்கள் பதிவு மசோதா; தபால் நிலைய மசோதா உள்ளிட்டவை குறித்த விவாதம் நடக்க இருப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. இவற்றுக்காக அவசரமாக ஐந்து நாள் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டிய அவசியம் என்ன என்று குழம்பிப்போய் கேட்கின்றன எதிர்க்கட்சிகள்.
- வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும், முக்கியமான காரணம் இல்லாமல் நரேந்திர மோடி அரசு சிறப்புக் கூட்டத்தொடரை நடத்த வேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை. பொது சிவில் சட்டம், மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா ஆகிய இரண்டும் சிறப்புக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை, தலைமைத் தோ்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவிலிருந்து அகற்றும் தீா்மானத்தை சிறப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற அரசு முனைப்புக் காட்டக் கூடும். ஆனால், எல்லோரும் எதிர்பார்ப்பது போல, ‘ஒரே நாடு - ஒரே தோ்தல்’ குறித்த மசோதாவோ, இந்தியாவை ‘பாரதம்’ என்று அதிகாரபூா்வமாக மாற்றும் மசோதாவோ கொண்டுவரப்படும் என்று தோன்றவில்லை.
- நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டு நடைபெற இருக்கும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களுடன் மக்களவைத் தோ்தலையும் நடத்த பாஜக முற்படலாம். அப்படி இருந்தால், 17-ஆவது மக்களவையைக் கலைப்பதற்கு முன்பு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கூட்டம் நடத்தும் முயற்சியாக இது இருக்கக் கூடும்.
- சிறப்புக் கூட்டத் தொடருக்கான காரணம் தெளிவாக அறிவிக்கப்படாமல் கூடியிருப்பது, இந்திய ஜனநாயகத்தில் புதிய நடைமுறை. காரண காரியமில்லாமல் (அரசியல் ஆதாயமும் இல்லாமல்) பிரதமா் நரேந்திர மோடி எந்தவொரு முடிவையும் எடுக்கமாட்டார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடக்கும் இந்தச் சிறப்புக் கூட்டத் தொடருக்கான காரணம் என்னவென்று கடைசி நாளில்தான் தெரியும் போலிருக்கிறது!
நன்றி: தினமணி (19 – 09 – 2023)