TNPSC Thervupettagam

மோடிக்கு இது நல்ல எதிர்வினை கெலாட்

August 16 , 2023 337 days 188 0
  • இந்தியாவில் நான் கூர்ந்து கவனிக்கும் அரசியல் தலைவர்களில் ஒருவர் அசோக் கெலாட். கண்ணியமான அரசியல் பண்பாட்டைப் பேணுபவர் என்பதோடு, தன்னுடைய செயல்பாடுகளால் அரசியல் எதிரிகளுக்குப் பதில் அளிக்க முற்படுபவர்.
  • ராஜஸ்தானில் காங்கிரஸும், பாஜகவும்தான் பெரிய கட்சிகள்; மூன்றாவது சக்தி என்று சொல்லத்தக்க அளவுக்குக்கூட வலுவான கட்சிகள் பக்கத்தில் கிடையாது. 2019 மக்களவைத் தேர்தலில், ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளையும் வென்றதோடு, பதிவான வாக்குகளில் 51.5% வாக்குகளை அள்ளிய பாஜக, 2024இல் ஆட்சியைத் தக்க வைக்க ராஜஸ்தானை முக்கியமான தளமாக நம்பி இருக்கிறது. 2023 இறுதியில் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ள சூழலில், அரசியல் களம் கடும் சூட்டை எதிர்கொள்கிறது.
  • காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில், அதிலும் காங்கிரஸும் பாஜகவும் பிரதான கட்சிகளாக உள்ள மாநிலங்களில், முதல்வர்களுக்கும் பிரதமருக்கும் இடையேயான உறவு எவ்வளவு பாரதூரமாக இருக்கும் என்பது வெளிப்படையானது. இத்தகு சூழலிலும், பொது மேடைகளில் வெளிப்படையாக கெலாட்டை பிரதமர் மோடி பாராட்டும் சூழல் ஏற்பட்டது. “அரசியல் களம் கடுமையான போட்டிச் சூழலை உருவாக்கியிருக்கும் இந்நாட்களிலும், வளர்ச்சிப் பணிகளில் கை கோக்க வேண்டும் என்று எண்ணுபவர் கெலாட்” என்று பேசியதோடு, “கெலாட் என் நண்பர்” என்றும் பேசினார் மோடி.
  • ராஜஸ்தானில் நடந்த ‘வந்தே பாரத் ரயில்’ தொடக்க விழாவில் பங்கேற்றதற்காகத்தான் கெலாட்டை இப்படிப் பாராட்டினார். அதற்குச் சில மாதங்கள் முன்பும் தன்னுடன் பொது மேடையைப் பகிர்ந்துகொண்டதற்காக இப்படி மோடி பாராட்டியிருந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடி அரசுக்கு எதிராகக் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தபடி நாடு தழுவிய நடைப்பயணத்தில் ஈடுபட்டிருந்த காலகட்டத்திலும் தன்னுடைய மாநிலத்தில் நடந்த பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க கெலாட் தயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தருணங்களைத் தன்னுடைய மாநிலத்துக்கான கோரிக்கைகளைப் பிரதமரிடம் நேரடியாக முன்வைக்க வாய்ப்புகளாகப் பயன்படுத்திக்கொண்டார் கெலாட். அதேசமயம், அவருடைய நயத்தகு அணுகுமுறை பிரதமர் மோடியையும் அதே அணுகுமுறையை நோக்கி இழுத்தது. ஆச்சரியப்பட ஏதுமில்லை, காந்தி மறைந்து மூன்றாண்டுகளுக்குப் பின், 1951இல் பிறந்தவர் என்றாலும், காந்தியால் ஆழமாக ஈர்க்கப்பட்டவர் கெலாட். காந்தியின் வார்தா ஆசிரமத்தில் கொஞ்ச காலம் கழித்தவர்.
  • ஜோத்பூரில், தொழில்முறை மாயாஜாலக்காரரான லக்ஷ்மண் சிங் கெலாட்டின் மகனாகப் பிறந்த கெலாட்டுக்குத் தன்னுடைய தந்தையைப் போன்று ஒரு மாயாஜாலக்காரராக வேண்டும் என்பதே இளவயது ஆசையாக இருந்தது. தந்தையுடன் நாட்டின் பல பகுதிகளுக்கும் காட்சிகளுக்காகப் பயணித்த கெலாட்டுக்கு, மேஜிக் சிறுவயதிலேயே அத்துபடி ஆகியிருந்தது. சமூகப் பணிகளில் அவருக்கு இருந்த ஈடுபாடும், காந்தியத்தின் தாக்கமும் அவரை அரசியல் நோக்கித் தள்ளின. கல்லூரி மாணவராக இருந்த காலகட்டத்தில், வங்கதேச அகதிகள் முகாமில் சேவைப் பணியில் ஈடுபட்டிருந்த கெலாட்டின் செயல்பாட்டைக் கவனித்து அவரை காங்கிரஸுக்குத் தூக்கியவர் பிரதமர் இந்திரா காந்தி.
  • தொடர்ந்து, சஞ்சய் காந்தியாலும், ராஜீவ் காந்தியாலும் பின்னர் சோனியா காந்தியாலும் ஊக்குவிக்கப்பட்டார் கெலாட். ஜாட்டுகள், குஜ்ஜார்கள், மீனாக்கள் என்று பெரும்பான்மைச் சாதிகளின் ஆதிக்கம் மிகுந்த ராஜஸ்தான் அரசியலில், சிறுபான்மைச் சாதியான மாலி சமூகப் பின்னணியிலிருந்து வந்தவர் என்பது கெலாட் ஒரு பொதுவான இடத்தை அடைய உதவியாக இருந்தது. காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகிய பிறகு - சோனியாவின் தற்காலிகத் தலைமையின் தொடர்ச்சியாக - அந்தப் பதவிக்கு நேரு குடும்பத்தால் அழைக்கப்பட்டவர்; தான் அந்தப் பதவிக்கு உகந்தவன் இல்லை என்று நிராகரித்தவர் கெலாட். இந்த இடம் நோக்கி அவர் நகர்வதற்கு முக்கியமான காரணங்கள் ஐந்து: அவருடைய எளிமையான வாழ்க்கை, இலகுவான அணுகுமுறை, அமைப்பைப் பிரதானப்படுத்திய செயல்பாடு, எல்லாச் சமூகத்தினரையும் அரவவணைக்கும் நெகிழ்வுத்தன்மை, எல்லாவற்றிலும் முக்கியமாக எளியோரிடத்திலான கரிசனம்.
  • இந்த வாரத்தில் மீண்டும் ராஜஸ்தான் சென்றிருந்தார் மோடி. சென்ற ஆறு மாதங்களில் மோடி ராஜஸ்தான் செல்வது இது ஆறாவது முறை. அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். கெலாட் அரசைக் கடுமையாகச் சாடினார். இதை ஒட்டியோ என்னவோ பிரதமரின் அரசு நிகழ்ச்சியில், முதல்வரின் உரை கடைசி நேரத்தில் நீக்கப்பட்டது. “பிரதமரே, நீங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில், மூன்று நிமிடத்துக்குத் திட்டமிடப்பட்டிருந்த என்னுடைய உரை கடைசி நேரத்தில் உங்களுடைய அலுவலகத்தால் நீக்கப்பட்டதால், இம்முறை மேடையில் உங்களை வரவேற்க இயலவில்லை; இந்த ட்விட் வழியாக வரவேற்கிறேன்!” என்று ட்விட் செய்தார் கெலாட். பிரதமர் அலுவலகம் இதை ட்விட்டரில் மறுத்தாலும், அதற்கும் ஆதாரத்தோடு எதிர்வினையாற்றினார் கெலாட்.
  • உள்ளபடி, இங்கே நாம் பேசப்போகும் விஷயத்தின் மையம் மோடிக்கும், கெலாட்டுக்கும் இடையிலான இந்த உரசல் அல்ல; மோடியின் கதையாடலுக்கு ஆக்கபூர்வமான ஓர் எதிர்க் கதையாடலை இன்று கெலாட்தான் உருவாக்கியிருக்கிறார் என்பது ஆகும்.
  • பரப்பளவில் நாட்டிலேயே பெரியதானதும், சிக்கலான புவியமைப்பைக் கொண்டதுமான ராஜஸ்தானைத் திறம்பட நிர்வகிப்பது ஒரு சவால். கண்ணியமான அரசியல் தலைவரான கெலாட் முதல்வர் பதவியில் அமரும்போதெல்லாம் ஆக்கபூர்வமான சில முன்னெடுப்புகளை முயற்சிக்கக்கூடியவர்; வெகுவிரைவில் மூன்றாவது ஆட்சிக் காலத்தை நிறைவுசெய்யவிருக்கும் கெலாட் சமீபத்தில் ராஜஸ்தான் சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கும் ஒரு சட்டமானது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரு முன்னுதாரணமானது என்பதோடு, பிரதமர் மோடியின் அரசியலுக்கு நேரடி சவாலையும் விடுப்பதாக அமைந்திருக்கிறது.
  • எளிய மக்கள் வாழ்விலும், அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்தியிலும் எழுச்சிகரமான மாற்றத்தை உருவாக்க வல்ல சட்டம் என்றே கெலாட் அரசு நிறைவேற்றியுள்ள ‘குறைந்தபட்ச உத்தரவாத வருமானச் சட்ட’த்தைக் கூற வேண்டும். ராஜஸ்தானின் எந்தக் குடிநபருக்கும், 125 நாட்களுக்குக் குறைந்தபட்ச வேலை உத்தரவாத உறுதியை இந்தச் சட்டம் அளிக்கிறது. முன்னதாக, 2005இல் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசானது, நாடு தழுவிய அளவில் கிராமப்புற மக்களுக்கான 100 நாட்கள் வேலை உறுதிச் சட்டத்தைக் கொண்டுவந்ததையும், இரு தசாப்தங்களாக அது உண்டாக்கியிருக்கும் சீர்மிகு மாற்றங்களையும் நாம் அறிவோம். ராஜஸ்தான் அரசு நிறைவேற்றியுள்ள சட்டமானது, கிராமப்புற வேலையளிப்பை 125 நாட்களாக அதிகரித்திருப்பதோடு, நகர்ப்புறங்களிலும் 125 நாட்கள் வேலையளிப்பை உறுதிபடுத்துகிறது. மேலும், முதியவர்கள் போன்று உடல் உழைப்பு வட்டத்துக்குள் வரும் சாத்தியமற்றோர் அனைவரும் ஆண்டுதோறும் 15% உயர்வோடு கூடிய ரூ.1,000 மாத ஓய்வூதியம் பெறவும் வழிவகுக்கிறது.
  • கெலாட்டின் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் ராஜஸ்தானுடைய பொருளாதாரம் 75% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மாநிலத்தின் உற்பத்தி, தனிநபர் வருமானம் ஆகியவற்றிலும் இது பிரதிபலிக்கிறது. இந்த வளர்ச்சியை மாநிலத்தின் எளிய மக்களோடு பகிர்ந்துகொள்ளும் கடமையாகவே இத்திட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாக கெலாட் கூறுகிறார்.
  • நல்லது. எந்த வகையில் இது பிரதமர் மோடிக்கு எதிர்க் கதையாடல்? இன்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிர்வாகத்தை நகையாட மோடி முன்வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று, ‘இலவச அரசியல்!’ கெலாட் அரசு மீது இதே குற்றச்சாட்டை முன்வைத்தார் மோடி. ஏனென்றால், ரூ.25 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டம், ரூ.10 லட்சம் வரை விபத்துக் காப்பீடு அளிக்கும் திட்டம், கால்நடைகளுக்கு காப்பீடு வழங்கும் திட்டம், 100 அலகுகள் வரையிலான பயன்பாட்டுக்குக் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் என்று மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது கெலாட் அரசு. பாஜக இதை விமர்சிக்க ‘லாபர்தி சியாஸி’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியது. சமூகத்தில் இருப்பவர்கள் – இல்லாதவர்கள் என்று இரு பிரிவுகளை உருவாக்கி, இல்லாதவர்களை அரசியல்ரீதியாக இழுக்க நடத்தும் மலிவான இலவச அரசியல் என்று இதற்குப் பொருள் தரலாம். மோடி உருவாக்கிய இந்தச் சொல்லாடலையே தன்னுடைய மக்கள் நலத் திட்ட அரசியல் பிரச்சாரத்துக்கான பெயராக இப்போது மாற்றிவிட்டார் கெலாட். அவருடைய அரசு பிரம்மாண்டமான வகையில் நடத்தும் மக்கள் கூடுகைக்கான பெயர், ‘லாபர்தி உத்சவ்’. மக்கள் நலத் திட்டங்களை வழங்குவதோடு, பயனாளிகளோடு நேரடியாக உரையாடும் நிகழ்ச்சியாகவும், தன்னுடைய அரசின் சாதனைகளைப் பேச ஒரு வாய்ப்பாகவும் இதைப் பயன்படுத்திக்கொள்கிறார் கெலாட்.
  • மோடி – கெலாட் இரு தனிநபர்கள் அல்லது இரு தலைவர்களுடைய பார்வை என்பதற்கு அப்பாற்பட்டு, இதில் கவனிக்க வேண்டிய அம்சம், மக்கள் நலத் திட்டங்கள் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் நெடிய தாக்கம். எல்லா அரசியல் தலைவர்களுக்குமே தேர்தல் வெற்றியும் அதற்காக மக்களை ஒருங்கிணைப்பதும் முக்கியமானதாக இருக்கிறது. கெலாட் போன்றவர்களின் உத்தி சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட வகையில் மக்களை ஈர்ப்பதற்கான வழியாக இருப்பதோடு, சமூகத்தில் செல்வந்தர்கள் – எளியோர் இடையிலான வேறுபாட்டின் தொலைவையும் கசப்பையும் மீச்சிறு வகையிலேனும் குறைக்கிறது.
  • குறைந்தபட்ச வருமானச் சட்டம் போன்ற ஒரு முன்னெடுப்பு இந்தச் செயல்பாடுகளில் கூடுதல் முக்கியத்துவம் மிக்கது. ஒரு மக்கள் நலத் திட்டத்தை எந்த ஓர் அரசும் எப்போது வேண்டுமானாலும் நிதி நிலைமையைச் சுட்டிக்காட்டி நிறுத்திக்கொள்ளலாம்; அரசின் உத்தரவாதத்தை அளிக்கும் ஒரு சட்டமோ குடிமக்களுக்குச் சட்டரீதியாகக் கேள்வி கேட்கும் உரிமையையும் அதிகாரத்தையும் அளிக்கிறது; இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில், கேள்வி கேட்பாரற்ற நிலையில் உள்ள பல கோடி தொழிலாளர்களின் வாழ்க்கையில் அரசு எத்தகைய ஆக்கபூர்வ இடையீடுகளில் ஈடுபட முடியும் எனும் சாத்தியப்பாட்டை விரிக்கிறது;  குடிமக்களின் கண்ணியமான வாழ்க்கையை அரசின் கடமை ஆக்கும் பயணத்தில் முக்கியமான மைல்கல் ஆகிறது.
  • சொற்களில் நிகழும் அரசியல் எதிர்வினைளைக் காட்டிலும் ஆக்கபூர்வச் செயல்பாடுகளின் வழி நிகழும் இத்தகு எதிர்வினைகளே இன்றைய அரசியல் களத்தில் முக்கியமானவை. அந்த வகையில், கெலாட்டின் இந்த முன்னெடுப்பானது, பாஜகவுக்கான காங்கிரஸின் தரமான எதிர்வினை என்று சொல்லலாம்!

நன்றி: அருஞ்சொல் (16  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்