- கடந்த 27.9.2024 அன்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் குருவம்மாள் (A.Guruvammal vs The commissioner of police Madurai city and others) என்பவரின் வழக்கில், நீதிபதி பரத் சக்ரவர்த்தி வழங்கிய தீர்ப்பு மிக முக்கியமானது. குருவம்மாள் தாக்கல் செய்திருந்த மனுவின் சாராம்சம் இதுதான்: 10 ஆண்டுகளுக்கு முன்பு குருவம்மாளின் மகன் முருகன் (எ) கல்லுமண்டையன் என்ற 26 வயது நிரம்பிய இளைஞனைத் தேடிச் சீருடை அணியாத காவல் துறையினர் அவருடைய வீட்டுக்கு வந்தனர்.
- முருகன் வீட்டில் இல்லாததால் குருவம்மாள், அவரது மகள், மருமகன், பேரன் ஆகியோரைத் தூக்கிச் சென்று சித்ரவதை செய்தனர். தனது குடும்பத்தினரைக் காவல் துறை தூக்கிச் சென்றதை அறிந்து, காவல் நிலையத்தில் முருகன் சரணடைந்திருக்கிறார். அன்றைய நாளே முருகனையும் மற்றொரு நபரையும் அப்போதைய உதவி காவல் ஆணையர் வெள்ளைத்துரை சுட்டுக்கொன்றுவிட்டார்.
- போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் தனது மகன் கொல்லப்பட்டதாகத் தனக்குச் சொல்லப்பட்டதாக மனுவில் குறிப்பிட்டிருந்த குருவம்மாள், அது மோதல் கொலையல்ல என்றும், சரணடைந்த தனது மகனைக் காவல் துறையினர் படுகொலை செய்துவிட்டனர் என்றும் பின்னர் அது குறித்துத் தான் புகார் கொடுத்தும் அது எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். காவல் மரணங்களுக்கு நீதிபதியின் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்; ஆனால், தனது மகனின் மரணத்தில் அதுபோல நடத்தப்படவில்லை; நீதி மறுக்கப்பட்டுள்ளது என 10 ஆண்டுகளாக ஒரு சட்டப் போராட்டத்தை குருவம்மாள் என்கிற அந்தத் தாயார் நடத்தியுள்ளார்.
எது நீதி?
- மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் ஹென்றி டிபேன், ஆர்.கருணாநிதி ஆகிய வழக்குரைஞர்கள் குருவம்மாளுக்கு ஆதரவாக நின்றுள்ளனர். காவல் துறையின் சார்பில் வெள்ளைத்துரை என்ற அதிகாரியையும் மற்ற இருவரையும் கொல்லப்பட்டவர்கள் தாக்க வந்ததாகவும் தற்பாதுகாப்புக்குச் சுட்டதாகவும் வாதாடப்பட்டது. காவல் துறை அதிகாரி வெள்ளைத்துரை 10க்கும் மேற்பட்ட மோதல் கொலைகளை நடத்தியுள்ளார். கொல்லப்பட்ட அனைவரும் குறிப்பிட்ட அதிகாரியைத் தாக்க முயன்றது குறித்து நீதிமன்றம் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளது.
- தமிழகக் காவல் துறை ஒரு சிறந்த காவல் துறையாக இருக்கும்போதும் சமீபத்திய அதன் போக்கு கவலை அளிப்பதாக உள்ளதாகவும், கைது செய்யப்படும் நபர்கள் காவல் துறையினரைத் தாக்க முயல்வதாகக் கூறி, அவர்களைச் சுட்டுக் கொல்வது தொடர்கிறது என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மேலும், கைது செய்யப்பட்ட நபர்கள் தப்பிக்க முயலும்போது அடிபட்டுவிட்டதாகக் கூறி அவர்களின் கை, கால்கள் உடைக்கப்படுவது அதிகரித்துள்ளது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.
- சமூகத்தில் பொதுப் புத்தியில் இது போன்ற மோதல் கொலைகள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் போக்கு அடிப்படையிலேயே தவறானது; சமூகத்தைப் பின்னுக்குத் தள்ளக்கூடியது. இது போன்ற மோதல் கொலைகளில் எப்போதும் வழக்கமாகக் கட்டமைக்கப்படும் கதையாடல்களை உரிய விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஏனெனில், இந்தப் போக்கு சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசமைப்பு வழங்கிய உரிமைகள், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களான நீதிமன்றங்கள் ஆகியவற்றின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. மேலும், இது கடந்த காலத்துக் காலனி ஆதிக்கத்தை நினைவுபடுத்துகிறது.
- முழுமையாக ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளது. உடனடியாக மரண தண்டனை வழங்குதல் / தண்டனையை விரைவாகக் கொடுப்பதன் மூலம் குற்றம் குறையும் என்கிற பொய்யான நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இது ஒருபோதும் உண்மையல்ல. சட்டம் மற்றும் சட்டத்தின் வழியில் மட்டுமே இறுதியான தீர்வு இருக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. குருவம்மாளின் மகன் முருகன் கொலையை நியாயமான முறையில் மீண்டும் காவல் துறை உயர் அதிகாரி விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதி பரத் சக்ரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
காவல் வன்முறைகள்:
- குருவம்மாள் போன்ற எளிய மனிதர்களின் அறம் சார்ந்த சட்டப் போராட்டங்கள், பல சமயம் நமது பரந்த சமூகத்தின் பொதுப் பார்வையிலோ அல்லது ஊடகத்தின் வெளிச்சத்திலோ விழுவதில்லை. அவர்கள் நியாயங்களைப் பொதுச் சமூகம் ஒரு படிப்பினையாகக் கொள்வதில்லை. சட்டத்தின் வழி தீர்வு கோரி அந்த மூதாட்டியின் நெடிய போராட்டம் நடந்துள்ளது. தமிழகத்தின் ஏதோ ஓர் இடத்தில் யாரேனும் ஒருவர் காவல் துறையினரைத் தாக்க முயலும்போது சுட்டுக் கொல்லப்பட்டதாக அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன.
- பொதுச் சமூகம் அதனை ஒரு சிறு செய்தியாகக் கடந்துபோகிறது. கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கை, கால்கள் உடைக்கப்பட்டு, காவல் துறையினரே அதை ஒளிப்படம் எடுத்து ஊடகங்களுக்கான செய்தியாக்கும் காலத்தில் இருக்கிறோம். காவல் நிலையக் கழிப்பறைகளில் விழுந்தவர்கள் எனக் கிண்டலடிக்கும் வெகு மக்கள் ஊடகங்கள் நம்மோடு பயணிக்கின்றன. காவல் வன்முறைகளை இயல்பான ஒன்றாகப் பார்க்க மக்களைப் பழக்கப்படுத்துவது ஒரு வகையில் ஒரு மோசமான வன்முறை.
- ஆட்சியாளர்கள் இந்த வகையில்தான் மக்களை ஆள்கிறார்கள் என்றால், அது ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட சவால். காவல் துறையினரின் அனைத்துச் சட்டவிரோத வன்செயல்கள், கொலைகளைப் பாதுகாப்பது முதலமைச்சரின் பணி அல்ல. அவர் இவற்றைத் தடுத்திருக்க வேண்டும்.
- வேடிக்கை பார்ப்பது அல்லது கருத்துக் கூறாமல் போவது காவல் வன்முறைகளை நியாயப்படுத்துவதே ஆகும். சகித்துக்கொள்ள முடியாத காவல் சித்ரவதைகளின் போக்கைப் பார்த்துத் தனது அறச்சீற்றத்தை மேற்கண்ட குருவம்மாளின் வழக்கில் உயர் நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. எளிய மனிதர்களின் உயிர் வாழும் உரிமை காவல் துறையின் விருப்பு வெறுப்பு சார்ந்தது எனில், மக்களாட்சி முற்றுப்பெற்றுவிட்டதாக உணர வேண்டும்.
அரசின் பொறுப்பு:
- காவல் வன்முறைகளில் நாம் பாதிக்கப்பட மாட்டோம் என்கிற திடமான நம்பிக்கை, அவற்றைக் கொண்டாடவும் கடந்துபோவதற்குமான மனநிலையை உருவாக்குகிறது. சாத்தான்குளத்தில் எந்தத் தவறும் செய்யாத ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய எளிய வணிகர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை மறந்துவிடக் கூடாது.
- அவர்களின் கொலையை நியாயப்படுத்திய காவல் துறையின் கதையாடல்களைச் சமூகம் மறக்கவில்லை. தவறு செய்தவர்களைத் தண்டிப்பது எனக் காவல் வன்முறையை நியாயப்படுத்தினால், அந்தத் தண்டனை அதிகாரம் காவல் துறையினருக்கு சட்டத்தில் எங்கே வழங்கப்பட்டுள்ளது?
- குற்றங்களைத் தொழில் முறையில் செய்பவர்களைச் சட்டத்தின் வழியில் நிறுத்தித் தண்டனை பெற்றுத்தர முடியும். சில குற்ற வழக்குகளில் சாட்சிகள் கலைக்கப்படுவதால் விடுதலை நிகழ்கிறது. இது காவல் துறையினர் சட்டத்தின் முன் சாட்சிகளை நிறுத்துவதில் காட்டும் கவனச் சிதறல்களால் நிகழ்வதாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான திட்டங்கள் இருந்தபோதும், அரசின் நிர்வாகத் தாமதங்களால் அது பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது.
- சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குதல் மற்றும் உரிய குற்ற முறையீடு ஆகியவை தொழில் முறைக் குற்றவாளிகளைச் சட்டத்தின் மூலம் தடுக்கப் போதுமானவை. இவ்வளவுக்கும் இந்தியாவிலேயே அதிகத் தடுப்புக் காவல் சிறைவாசம் தமிழகத்தில்தான் விதிக்கப்படுகிறது.
- தமிழக முதல்வர் நாள்தோறும் நிகழும் இந்தக் காவல் வன்முறைகளைத் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். காவல் துறையின் மோதல் சாவுகளை அவர் ஏற்றுக்கொள்கிறாரா என்பதும் முக்கியமான கேள்வி. உள் துறை அமைச்சர் என்ற பொறுப்பை வகிக்கும் அவர், தவறு செய்யும் காவல் அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கைகளை ஜனநாயக ஆர்வலர்கள் அறிய விரும்புகின்றனர்.
- சிறைக் கொடுமைகள், சித்ரவதையை நெருக்கடி நிலைக் காலத்தில் அனுபவித்த ஒருவர் நடத்தும் ஆட்சியில், சித்ரவதையே காவல் துறையின் மொழியாக மாறுவது ஏற்புடையதல்ல. ஒவ்வொரு காவல் வன்முறையும், சித்ரவதையும் நீதி பரிபாலன முறை என்ற நீதிமன்றங்களின் மீது நிகழ்த்தும் தாக்குதல் என்பதை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மோதல் சாவுகள், காவல் வன்முறைகள்-சித்ரவதைகளைத் தடுக்கச் சமூகத்தின் அனைத்துத் தரப்பும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய தருணம் இது!
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 10 – 2024)