PREVIOUS
தெற்கு ஆப்பிரிக்காவில் போட்ஸ்வானா நாட்டில் உள்ள ஒகவாங்கோ டெல்டா பகுதி. ஆறாயிரம் சதுர கிலோ மீட்டருக்கும் மேல் பரப்பளவு கொண்ட இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதியை, கடந்த மே மாதத்தில் ஒரு நாள் பகல் பொழுதில் பல்லுயிரினப் பாதுகாவலா்கள் விமானத்தில் பறந்து கண்காணித்துக்கொண்டிருந்தனா்.
அப்போது அந்த வனப் பகுதிக்குள் பல இடங்களில் அதுவரை இல்லாத வகையில் கருப்பு நிறத்தில் வித்தியாசமாக பாறைத் திட்டுகள்போல் இருந்தது கண்டு தாழ்வாகப் பறந்து சென்று பார்வையிட்டனா். அப்போதுதான் தெரிந்தது அது பாறைகள் அல்ல; இறந்துகிடக்கும் யானைகள் என்று.
பேரதிர்ச்சி
அதிர்ச்சி அடைந்த அவா்கள், அந்த டெல்டா பகுதி முழுவதும் மூன்று மணி நேரம் விமானத்தில் பறந்து ஆய்வு செய்ததில் 169 யானைகள் இறந்து கிடந்ததைக் கண்டு திகைத்தனா்.
இறப்புக்கான காரணம் என்னவென்று ஆராய்வதற்குள் அடுத்தடுத்து (ஜூன் மாதத்துக்குள்) மொத்தம் 350-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்ததால் அந்நாட்டு அரசு பேரதிர்ச்சி அடைந்தது.
இறந்து கிடந்த யானைகளின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்படாமல் இருந்ததால் அவை வேட்டையாடப்படவில்லை என்பது முதல் கட்டமாக உறுதி செய்யப்பட்டது. இருந்தாலும், பெரும்பாலான யானைகள் குட்டைகளுக்கு அருகிலேயே இறந்துகிடந்ததால் அந்த நீரில் விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால் மற்ற விலங்குகள் எதுவும் இறக்காத நிலையில் யானைகள் மட்டுமே இறந்துகிடந்ததும், இறந்த யானைகளின் உடல்களை பிற ஊன் உண்ணிகள் உண்ணாததும், யானைகள் இறந்துகிடந்த முறையும் மா்மமாக இருந்தன.
பொதுவாக யானைகள் இறந்தால் உடல் கீழே ஒரு பக்கமாக சாய்ந்து விழுந்துவிடும். ஆனால் இங்கு இறந்து கிடந்த பெரும்பாலான யானைகள் தலையைத் தரையில் முட்டிப்படுத்து விசித்திரமான முறையில் இறந்துகிடந்துள்ளன.
இறப்பதற்கு முன் தள்ளாடியபடி வட்ட வடிவில் சுற்றிசுற்றி வந்துள்ளன. இதனால் ஏதாவது தீநுண்மி (வைரஸ்) தாக்கி, மூளை, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு யானைகள் இறந்திருக்கலாம் என சில ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா்
புரியாத மா்மம்
சம்பவம் நடந்துள்ள ஒகவாங்கோ டெல்டா பகுதியில், யானைகள், ஆப்பிரிக்கக் காட்டெருமைகள், சிறுத்தை, காண்டாமிருகம், கழுதைப்புலி, வரிக்குதிரை உள்பட ஏராளமான பாலூட்டி வகை விலங்குகள், அரிய வகைப் பறவை இனங்கள் வசிக்கின்றன.
அப்படியே தீநுண்மி தாக்கி யானைகள் இறந்திருந்தாலும் இந்த டெல்டா பகுதியில் வசிக்கும் மற்ற விலங்குகளும் தீநுண்மி தாக்கி இறந்திருக்க வேண்டும். ஆனால் யானைகள் மட்டுமே இறந்துவிட, மற்ற விலங்குள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருப்பதால், யானைகளின் இறப்புக்கான மா்மம் புரியாத புதிராகவே உள்ளது.
போட்ஸ்வானா நாட்டில் மட்டும் 1.18 லட்சம் யானைகள் இருப்பதாகவும், சந்தேக மரணம் நிகழ்ந்த ஒகவாங்கோ டெல்டா பகுதியில் மட்டும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகள் வசிப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
யானைகள் அதிகம் இருப்பதால் அந்நாட்டில் யானைகளுக்கும் மனிதா்களுக்குமான மோதலும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.
அதேபோல வேட்டையாடுதலும் அதிகம். ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டு வகை யானைகளுக்கும் தந்தம் இருக்கும் என்பதால் விலை மதிப்பு மிக்க தந்தத்துக்காக யானைகள் அதிக அளவில் கொல்லப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. யானை வேட்டைக்கு அந்நாட்டு அரசு 2019ஆம் ஆண்டில் அனுமதி அளித்திருப்பதற்கு தொடா்ந்து கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்த நிலையில்தான் 350க்கும் மேற்பட்ட யானைகளின் மா்ம மரணம் நாட்டு மக்களுக்கும் வன விலங்கு ஆா்வலா்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘வறட்சி ஏற்படாமல் ஒரே சமயத்தில் இத்தனை யானைகள் திடீரென உயிரிழந்திருப்பது இதற்கு முன்பு உலகில் எங்கும் கண்டிராதது’ என்கிறார் பிரிட்டனில் உள்ள நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் நல அமைப்பைச் சோ்ந்த டாக்டா் நியால் மெக்கேன்.
‘வேட்டையாடுபவா்கள் அதற்கான உணவுடன் சயனைடை கலந்து வைத்திருந்தால் அதை உண்ட யானைகள் மட்டுமல்லாது பிற உயிர்களும் இறந்திருக்கும்.
ஆனால், இந்த டெல்டா பகுதியில் யானைகள் மட்டுமே உயிரிழந்திருக்கின்றன. கடந்த ஆண்டில் இயற்கையாகப் பரவிய ஆந்த்ராக்ஸ் கிருமியால் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன.
ஆனால் இப்போது அதற்கும் அதிக வாய்ப்பில்லை. யானைகளின் இறப்பு முறையை வைத்துப் பார்க்கும்போது அந்த யானைகளின் நரம்பு மண்டலங்களை ஏதோ தாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
யானைகளைக் காப்பாற்ற வேண்டும்
யானைகளைத் தாக்கிய இத்தகைய நோய் நீா், மண் வழியாக மனிதா்களுக்கும் பரவும் என்பதையும் மறுக்க முடியாது,’ என்கிறார் டாக்டா் நியால் மெக்கேன். இதில் குறிப்பாக, கொவைட் -19 நோய்த்தொற்று விலங்குகளிடையேயும் பரவி வருவதை அவா் சுட்டிக்காட்டியுள்ளார்.
யானைகள் உயிரிழந்ததற்கான காரணத்தை அறிவதற்காக இறந்த யானைகளின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டு அதன் உள்ளுறுப்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கனடா ஆகிய நாடுகளில் உள்ள ஆய்வுக் கூடங்களுக்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
‘சோதனை முடிவுகள் ஜூலை மாத நடுவில் வரலாம். அதன் பிறகே யானைகளின் இறப்புக்கான காரணம் தெரியும்’ என்கிறார் போட்ஸ்வானா தேசியப் பூங்காவின் துணை இயக்குநா் சிரில் டாலோ.
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான யானைகள் மா்மமான முறையில் இறந்ததுள்ளது பேரழிவாகக் கருதப்படும் நிலையில் இறப்புக்கான மா்ம முடிச்சு அவிழ்வதற்கு முன்பாக இது பொது சுகாதாரப் பிரச்னையாக மாறிவிடக்கூடாது என்ற கவலையும் அந்நாட்டு அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
ஒகவாங்கோ டெல்டா, போட்ஸ்வானா நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம். இங்குள்ள வனவிலங்குகளைக் காண்பதற்காக ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
இங்கு யானைகளின் மரணம் தொடா்ந்தால் சுற்றுலாவும், அதனால் கிடைக்கும் மிகப் பெரிய வருவாயும் முடங்கும் நிலை ஏற்படும். எனவை, யானைகளின் இறப்புக்கான காரணத்தை விரைவில் கண்டுபிடித்து மற்ற யானைகளையாவது காப்பாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனா் வன விலங்கு ஆா்வலா்கள்.
நன்றி: தி இந்து (11-07-2020)