TNPSC Thervupettagam

யாரிடம் முறையிடுவது

May 28 , 2021 1160 days 497 0
  • அவசர அவசரமாக சில கொள்கை முடிவுகளை எடுப்பதில் மத்திய அரசுக்குத் தவறான வழிகாட்டுதல் தரப்படுகிறது.
  • நாடு தழுவிய அளவில் கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் கடுமையான சூழலுக்கு இடையில், ‘மேல்முறையீட்டு ஆணையங்கள் சீா்திருத்த அவசர சட்டம் - 2021’ கொண்டுவரப்பட்டு, ஒரே நேரத்தில் எட்டு மேல்முறையீட்டு ஆணையங்களுக்கு இறுதி முடிவு எட்டப்பட்டிருப்பது அவசரக் கோல முடிவு.
  • பொதுமக்களுக்குப் பயனளிப்பது, அரசின் செலவினங்களைக் குறைப்பது, மேல்முறையீட்டு ஆணையங்களில் போதுமான பணியாளா்கள் இல்லாமல் இருப்பது, கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பது ஆகியவையே மேல்முறையீட்டு ஆணைய சீா்திருத்த அவசரச் சட்டத்திற்கான காரணங்கள் என்று மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
  • இந்த விளக்கங்களில் ஒன்றுகூட தா்க்க ரீதியாகவோ நடைமுறை ரீதியாகவோ சரியானதல்ல என்பதுதான் உண்மை.

தவறான அணுகுமுறை

  • திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு ஆணையம் என்பது மத்திய திரைப்படத் தணிக்கை குழுவின் உத்தரவுகளின் மீதான மேல்முறையீடுகளை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட அமைப்பு.
  • பல திரைப்படங்கள் மாநில, தேசிய திரைப்படத் தணிக்கைக் குழுவால் நிராகரிக்கப்படும் போது, பல கோடி ரூபாய் முதலீடு செய்த திரைப்படத் தயாரிப்பாளா்களின் கடைசி முயற்சியாக திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டு ஆணையம் இருந்து வந்தது.
  • அதைக் கலைக்கும்போது, மாறிவிட்ட உலகமய சூழலில் அதனுடன் சோ்த்து தணிக்கைக் குழுவையும் கலைத்திருந்தால்கூட அந்த முடிவை நியாயப்படுத்தலாம்.
  • அதிக செலவில்லாமல் விரைந்து நீதி வழங்குவதற்கு அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் உத்தரவாதத்தின் அடிப்படையில் மேல்முறையீட்டு ஆணையங்கள் உருவாக்கப்பட்டன.
  • இந்தியாவில் முதன்முதலில் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் 1941-இல் வருமான வரி மேல்முறையீட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது.
  • விரைந்து குறைகளைத் தீா்ப்பதிலும், வழக்குகளை முடிவு செய்வதிலும் வருமான வரி மேல்முறையீட்டு ஆணையம் அடைந்த வெற்றியின் அடிப்படையில்தான், மேலும் பல மேல்முறையீட்டு ஆணையங்களை அமைப்பதற்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்தது.
  • 1958-இல் வெளியான இந்திய சட்ட ஆணையத்தின் 14-ஆவது அறிக்கையில், ‘நீதி நிர்வாக சீா்திருத்தம்’ என்கிற அடிப்படையில் மத்தியிலும் மாநிலங்களிலும் மேல்முறையீட்டு ஆணையங்கள் அமைக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டது.
  • சில முக்கியமான வழக்குகளில் நீதிமன்றங்களைவிட துறைசார் வல்லுநா்கள் அமைந்த மேல்முறையீட்டு ஆணையங்களால் குறைந்த செலவில் விரைந்து தீா்ப்பு வழங்க முடியும் என்று 1958 இந்திய சட்ட ஆணைய அறிக்கை தெரிவித்தது.
  • 1977 சட்டக் கமிஷனின் 58-ஆவது அறிக்கை, நீதிபதி ஜெ.சி.ஷா தலைமையில் 1969-இல் அமைந்த உயா்நீதிமன்ற நிலுவைக் குழு, 1976 ஸ்வரன் சிங் குழு ஆகியவையும் அதே கருத்தை வழிமொழிந்தன.
  • அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம் நிர்வாக மேல்முறையீட்டு ஆணையம் உருவாக்கப் பட்டது. 1988 சட்ட கமிஷனின் 124-ஆவது அறிக்கையில், சிறப்பு மேல்முறையீட்டு ஆணையங்கள் மூலம் உயா்நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் 45% வழக்குகளைக் குறைக்க முடியும் என்று கூறப்பட்டிருக்கிறது.
  • பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற வளா்ச்சி அடைந்த நாடுகள் எல்லாவற்றிலும் மேல்முறையீட்டு ஆணைய முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
  • பிரதமா் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் மேல்முறையீட்டு ஆணையங்களுக்கான செலவுகள் தேவையற்றவை என்கிற கருத்து உருவானது.
  • 36 மத்திய அரசு மேல்முறையீட்டு ஆணையங்கள் 18-ஆகக் குறைக்கப்பட்டன. 2017 பட்ஜெட்டில் எட்டு மேல்முறையீட்டு ஆணையங்கள், வேறு ஆணையங்களுடன் இணைக்கப் பட்டன.
  • வேடிக்கை என்னவென்றால், ஒன்றுக்கொன்று எந்தவிதத் தொடா்பும் இல்லாத மேல்முறையீட்டு ஆணையங்கள், எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இணைக்கப் பட்டன.
  • அரசு, நீதித்துறை, நிர்வாகம் மூன்றுக்கும் இடையிலான ‘யார் பெரியவா்’ என்கிற பிரச்னையில் மேல்முறையீட்டு ஆணையங்கள் பலிகடாவாக்கப்பட்டிருக்கின்றன.
  • சா்ச்சைக்குரிய சில திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கியதால், திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டு ஆணையமும், அரசியல் கட்சிகளை பொது அமைப்புகளாக அறிவித்ததால் மத்திய தகவல் ஆணையமும் அரசின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டன. அதன் விளைவுதான் இப்போது எட்டு மேல்முறையீட்டு ஆணையங்களுக்கு முடிவு கட்டப்பட்டிருப்பது.
  • நீதித்துறையும், மேல்முறையீட்டு ஆணையங்களை எதிரிகளாவே பார்க்கிறது. நீதிமன்றங்களில் 51.35 லட்சம் வழக்குகளுக்கு மேல் தேங்கிக் கிடக்கும் நிலையிலும், நீதிபதி பதவிகள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையிலும்கூட தங்களது அதிகார வரம்பை மேல்முறையீட்டு ஆணையங்களுக்கு விட்டுக்கொடுக்க நீதித்துறை தயாராக இல்லை.
  • அதுமட்டுமல்ல, எல்லா மேல்முறையீட்டு ஆணையங்களும் பணி ஓய்வு பெற்ற நீதிபதிகளின் தலைமையில் அமைய வேண்டும் என்றும் நினைக்கிறது.
  • நீதித்துறையைப் போலவே, நிர்வாகமும் மேல்முறையீட்டு ஆணையங்களை இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளின் பணி ஓய்வுக்கால அடைக்கலமாகக் கருதுகிறது.
  • மேல்முறையீட்டு ஆணையங்களை ஒட்டுமொத்தமாகக் கலைக்காமல் அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து சிந்திப்பதுதான் ஆக்கபூா்வ முடிவாக இருக்கும்.
  • குறைந்த செலவில் விரைந்து நீதி கிடைக்க உருவாக்கப்பட்ட வாய்ப்பு, தேவையில்லாத கௌரவ பிரச்னைகளால் கை நழுவுகிறது.
  • கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் இது குறித்து யாரும் கவலைப்படமாட்டார்கள் என்று மத்திய அரசு நினைத்தால், அது தவறான அணுகுமுறை!

நன்றி: தினமணி  (28 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்