TNPSC Thervupettagam

யார் இந்த அகலிகை?

March 2 , 2025 2 days 25 0

யார் இந்த அகலிகை?

  • தொன்மக் கதாபாத்​திரங்​களுள் மிக முக்​கியமான இடம் அகலிகைக்கு உண்டு. காலந்​தோறும் அகலிகை​யின் கதை மீள் வாசிப்புச் செய்​யப்​பட்டுக்​கொண்டே இருக்​கிறது. அகலிகை​யின் கதையை வெள்​ளக்​கால் ப.சுப்​பிரமணிய முதலி​யார் ‘அகலிகை வெண்பா’ என்ற பெயரில் மூன்று காண்​டங்​களாகப் பிரித்து விரிவாக எழுதி​யிருக்​கிறார். அகலிகையை மணந்​து​கொள்ள நடைபெற்ற போட்​டி​யில் இந்திரன் திட்​ட​மிட்டுத் தோற்​கடிக்​கப்​படு​கிறான். அகலிகை மீதுள்ள காமமும் முனிவர்​மேல் கொண்ட கோபமும் இந்திரனின் அறிவை மழுங்கச் செய்​கிறது. அகலிகை​யைப் பாலியல் வன்முறை செய்​கிறான். ‘நீ மனதால் கற்பிழக்க​வில்லை’ என்று கௌதமர் அகலிகையை ஏற்றுக்​கொள்​கிறார். ஆனாலும் அவளது மன அமைதிக்​காகச் சில காலம் கல்லாக இருக்​கட்டும் என்று முடி​வெடுக்​கிறார். இவ்வாறு காலந்​தோறும் அகலிகை​யின் வரலாற்றின்​மீது புனை​வுத் தன்மைகள் கூடிக்​கொண்டே சென்​றிருப்பதை அவதானிக்க இயல்கிறது.
  • மரபிலக்​கி​யங்கள் அகலிகை​யைத் தவறு செய்​தவளாகத் தொடர்ந்து சித்திரித்​துக்​கொண்டே வந்திருக்​கின்றன. நவீன இலக்​கி​யங்​கள், அகலிகை தரப்பு நியா​யத்தை வெவ்​வேறு வடிவங்​களில் தொடர்ந்து பேசி வருகின்றன. இவ்வகை​யில், அகலிகை​யின் கதைமீதான மரபிலக்​கி​யத்​தின் இடைவெளிகளை நவீன இலக்​கி​யங்களே நிரப்பி வருகின்றன. இந்திய மொழிகளில் அகலிகை​யின் கதை அதிக அளவில் எழுதப்​பட்​டிருப்​பதாக எழுத்​தாளர் பிரபஞ்சன் கூறுகிறார். புது​மைப்​பித்தனே ‘அகலிகை’, ‘சாப​விமோசனம்’ என்று இரு கதைகளை எழுதி​யுள்​ளார். காவி​யம், சிறுகதை, நாவல், நாடகம், கவிதை எனப் படைப்​பின் எல்லா வகைமை​களி​லும் அகலிகை​யின் கதை எழுதப்​பட்​டுள்​ளது.
  • திராவிட இயக்க எழுத்​தாளர் தி.கோ.சீனிவாசன் அகலிகை குறித்து எழுதி​யுள்ள ‘பாவ​மும் சாபமும்’ என்ற சிறுகதை தனித்து​வ​மானது. மறுமலர்ச்சி சிந்​தனை​களைத் தம் கதைகளில் அதிகம் எழுதி​யவர் தி.கோ.சீனிவாசன். உருவத்​தைவிட உள்ளடக்​கத்​திற்கே இவரது புனை​வுகள் முக்​கி​யத்துவம் கொடுத்​துள்ளன. ‘ஆடும் மாடும்’ இவரது புகழ்​பெற்ற நாவலாகும். ‘உலக அரங்​கில்’, ‘கொள்​கை​யும் குழப்​ப​மும்’, ‘எல்​லைக்கு அப்பால்’ ஆகிய மூன்று சிறுகதைத் தொகு​திகளை வெளி​யிட்​டுள்​ளார். அகலிகையே ஓர் எழுத்​தாளரிடம் தன் கதையைச் சொல்​வதாக தி.கோ.சீனிவாசன் எழுதி​யிருக்​கிறார். திராவிட இயக்​கத்​தவருக்​குக் கம்பரா​மாயணத்​தின் மீது ஒவ்வாமை உண்டு. அதிலுள்ள மிகு கற்பனையைப் பலர் விமர்​சனம் செய்​துள்ளனர். கம்பரின் பிரதியை நடைப்​பியலுக்கு நகர்த்​தும் பணியை​யும் திராவிட இயக்​கத்​தவர் செய்​துள்ளனர். தி.கோ.சீனிவாசனும் அகலிகை என்ற தொன்மக் கதையின் மீது படிந்​துள்ள மாய யதார்த்​தத்​தைத் தன் புனை​வினூடாக நீக்க முயன்​றிருக்​கிறார். கௌதமரின் சாபத்​தின் மூலமாக இந்திரன் உடல் முழுக்கப் பெற்ற புண்​ணுக்கு (இடக்​கரடக்​கல்) தி.கோ.சீனிவாசன் புதிய விளக்​கத்தை அளிக்​கிறார்.
  • ‘கோதமரை நான் மணக்க​வில்லை; அவருக்கு என்னைக் கொடுத்​தார்​கள். இந்திரன் என்னைக் கெடுக்க​வில்லை; என்னால் அவன் பாழானான்’ என்கிறாள் தி.கோ.சீ.​யின் அகலிகை. தி.கோ.சீ. புனைவுபடி இந்திரனும் அகலிகை​யும் சிறு​வயது முதலே ஒன்றாக வளர்ந்​தவர்​கள். ஒருவரையொருவர் விரும்​பிய​வர்​கள். எதையும் இழக்க விரும்பாத என்னை முற்றும் துறந்த முனிவருக்கு மணம் செய்​து​கொடுத்து என்னைத் துயரத்​துக்கு உள்ளாக்​கினார்கள் என்பது அகலிகை​யின் வாதம். ‘கடவுள் அளித்த வேட்​கை​யைக் கணவனுக்​காகக் கட்டுப்​படுத்துவது தெய்வ விரோத​மா​கா​தா?’ என்கிறாள் அகலிகை. அதனால் தன் வேட்​கை​யைப் பிற ஆண்களிடம் தீர்த்​துக் கொள்​கிறாள்; பால்​வினை நோய்க்கு ஆளாகிறாள். இந்தச் சூழலில்​தான் இந்திரன், கௌதமரின் வேடத்​தில் வந்து அகலிகை​யைக் கூடி அந்நோயைத் தானும் பெற்றுக்​கொள்​கிறான்.
  • இது கம்பரது பிரதி​யின்​மீது நிகழ்த்​தப்​பட்ட மறுவாசிப்​பாகவே கருதுகிறேன். தி.கோ.சீனிவாசனின் அகலிகை, திராவிட இயக்கச் சிந்தனை உள்ளவள். கடவுள் மறுப்​பாளர். தனது இழிநிலைக்கு இச்சமூகமே காரணம் என்பது அவளது குற்​றச்​சாட்டு. விருப்ப​மில்​லாமல் நடைபெற்ற முனிவருடனான திரு​மணமே அனைத்​திற்​கும் காரணம் என்கிறாள். ‘கல் இயல் ஆதி’ என்று கௌதமர் அகலிகைக்​குச் சாபமிட்​ட​தாகக் கம்பர் எழுதி​யிருக்​கிறார். இதனை இவர் கேள்விக்கு உட்படுத்து​கிறார். ‘கல்​லாகப் போ என்றால் உருவற்ற சிறு கல்லாக ஆக மாட்​டாள்; உருவுள்ள சிலை​யாகத்​தானே ஆவாள்?’ என்கிறார். கம்பரின் அகலிகை ​மீது நிகழ்த்தப்​பட்ட மறுவாசிப்​பாகவே இந்தக் கதையை அணுக வேண்​டி​யிருக்​கிறது. வேதகால குறிப்பு​கள்படி இந்​திரனும் அகலிகை​யும் சிறு​வயது ​முதலே ஒன்​றாகப் பழகிய​வர்​கள்; ​காதலர்​கள் என்று எழுத்தாளர் பிரபஞ்​சன் குறிப்​பிடு​கிறார்.இன்​றும் அ​விழ்க்க ​முடியாத ஒரு பு​திர் அகலிகை​யின் தொன்​மக் கதை. இன்னும்அகலிகை​யைப் பற்​றி ஆ​யிரம்​ கதைகள்​ மலரட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்