TNPSC Thervupettagam

யார் நல்லாசிரியர்?

September 5 , 2019 1764 days 818 0
  • மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் பெற்றவர்களுக்கு அடுத்தபடியாக நாம் அனைவரும் போற்றுவது ஆசிரியர்களைத்தான். குரு எனும் ஆசிரியர்களுக்கு அடுத்துத்தான் தெய்வமே எனும்போது அவர்களின் முக்கியத்துவம் அனைவருக்கும் புரியும்.

ஆசிரியர்களின் பணி

  • ஆனால்,  இப்போது ஆசிரியர்களின் பணி என்பது வேலைப்பளு இல்லாத, ஊதியம் அதிகம் உடைய, அதிக விடுமுறைகள் கொண்ட,  பெண்களுக்கான பணியாக மாறிவிட்டது. 
     
    கடந்த காலங்களில் ஆசிரியர் பணி என்றால் ஒரு மரியாதை இருந்தது. கிராமங்களில்  ஒற்றை ஆசிரியரின் சொல் வேத வாக்கு.  ஆனால்,  இப்போது மாணவர்கள், குருவை மிஞ்சிய சிஷ்யனாக இருக்கின்றனர்.
  • ராட்சசி திரைப்படத்தில் மாணவர்களின் தகுதி குறித்துக் கேள்வி கேட்கும் ஆசிரியர்களிடம் தலைமை ஆசிரியை தகுதியில்லாத ஆசிரியர்களை நீக்கலாமா என்பார். சினிமாவுக்கு வேண்டுமானால் இது சிறப்பாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமா? ஆசிரியர் சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்களா
  • வேறு எந்தத் தொழிலை விடவும் ஆசிரியப் பணி என்பது சிறப்பு வாய்ந்தது.  இப்போதும் ஒரு சில ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு பாடத் திட்டத்தைத் தாண்டி வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக் கொடுக்கின்றனர். அவர்களின் பெருமை சம்பந்தப்பட்ட கிராமங்களைத் தாண்டி வருவதில்லை. ஆனால்,  ஏதோ ஒரு சமயத்தில் மெழுகுவர்த்தியான ஆசிரியர்களின் புகழ் ஒளி வெளியில் தெரிகிறது.

உதாரணம்

  • முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பள்ளியில் படித்தபோது பறவைகள் பறப்பது குறித்துப் பாடம் நடத்தியது புரியவில்லை என்று கூறினாராம்.  கடற்கரைக்குச் சென்று பறவைகள் பறப்பதைப் புரிய வைத்த ஆசிரியர் கலாமின் மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் என்பது இப்போதைய ஆசிரியர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
  • பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி மையத்தில் (ஐ.ஐ.எஸ்சி.) கடந்த ஆண்டு,  தங்கள் ஆசிரியையின் பெயரில் ரூ.1 கோடிக்குக் கட்டடம் கட்டி பெருமைப்படுத்தியுள்ளனர் மாணவர்கள்.  இப்போதும் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடத்திட்டத்தைத் தாண்டி தங்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருகின்றனர். அந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் என்றுமே முன்மாதிரிதான்.
  • தான் கூறியதை மீறி கிரிக்கெட் கிளப்புக்கு விளையாடியதால் ஆத்திரமடைந்த ஒரு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவரைக் கத்தியால் குத்தினார். இதன் மூலம் எதிர்கால இந்தியாவில் ஒரு கிரிக்கெட் வீரரின் கனவை முனையிலேயே அந்த ஆசிரியர் ஒடித்துவிட்டாரே.

தேர்வுகள்

  • ஒரு மாணவனின் வாழ்க்கையில் பொதுத் தேர்வுகள் என்பது மிகவும் முக்கியமானது. பொதுத் தேர்வுகளில் விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களின் தவறுகளால் பாதிக்கப்படுவது மாணவர்களின் வாழ்க்கை என்பதை உணர மறுக்கிறார்கள். எத்தனை மாணவர்களின் எதிர்காலக் கனவு சிதைக்கப்படுகிறது?
    தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை எங்கும் எதிலும் முறைகேடுகள்.
  • அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்துவதில் எத்தனை மோசடிகள்? கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தரே ஆசிரியர்களிடம் லஞ்சம் வாங்கியதான முறைகேட்டில் கைது செய்யப்பட்டார். இதுபோன்று பல மோசமான உதாரணங்கள். 
  • உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்தவரை ஆசிரியர்களின் நிலை நன்றாக இருந்ததாக பலர் கூறுகின்றனர்.  ஆனால்,  இன்று  நிலைமை அப்படி இல்லை. இப்போது மத்திய அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கிராமப் பள்ளி ஆசிரியர்களுக்கும் உண்டு. ஆனால் மத்திய, மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தகுதிகள், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான்.  மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தகுதிக்கேற்ப இவர்களின் தகுதியையும் உயர்த்த வேண்டும்.
  • சுமார் 95 சதவீதத்துக்கும் மேலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார்பள்ளிகளில்தான் படிக்க வைக்கின்றனர். அந்த அளவுக்கு சக ஆசிரியர்களின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். பள்ளிப் படிப்பைத் தனியார் பள்ளிகளில் தொடரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் உயர் கல்வியைத் தொடர விரும்புவது அரசுக் கல்லூரிகளில்தான்.

அரசுப் பள்ளிகளில்

  • எனவே,  அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அரசுக் கல்லூரிகளில் மத்திய, மாநில அரசுகள் இடம் ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கான சலுகைகளைக் குறைக்க வேண்டும்.
  • விருது வழங்கத் தேர்வு செய்யும்போது தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்து வழங்க வேண்டும். அப்போதுதான் விருதுக்கும் மதிப்பிருக்கும்; பெறுபவருக்கும் திருப்தியிருக்கும்.
  • அதை விடுத்து விருதை வாங்குவதால்  என்ன பலன்
    ஆசிரியர்களின் அடிப்படைத் தகுதியை உயர்த்தி தொழில்நுட்ப ரீதியாக அவர்களைத் தயார்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களால் நாளைய தலைமுறையைச் சிறப்பாக உருவாக்க முடியும்.
  • முன்னாள் குடியரசுத் தலைவரும் ஆசிரியருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள்தான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் இவர்கள் எனது ஆசிரியர்கள் என்பதை ஒவ்வொரு மாணவரும் பெருமையுடன் நினைவில் நிறுத்தி வணங்கினால் அதைவிடச் சிறந்த விருது ஏது
  • உண்மையாய் மாணவர்களை நேசித்து அவர்களை ஏற்றி விட்ட, ஏற்றி விடக் காத்திருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உளப்பூர்வமான ஆசிரியர் தின வாழ்த்துகள்.

நன்றி: தினமணி (05-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்