TNPSC Thervupettagam

யுவ புரஸ்கார் - நிலத்தின் வாசனை மிக்க எழுத்து

June 24 , 2023 514 days 306 0
  • எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன் எனப் பெரும் எழுத்தாளர்கள் புழங்கும் நாகர்கோவில் பின்னணியில் தனக்கென ஓர் எழுத்து வெளியை ராம் தங்கம் தன் சிறுகதைகள் வழி கண்டடைந்துள்ளார். தமிழ் யதார்த்தவாதக் கதைகளில் எழுத்தாளர் வண்ணதாசன் உருவாக்கிய ஒரு பாணியைத் தொடர்பவர் என ராம் தங்கத்தின் கதைகளை மதிப்பிடலாம்.
  • ராம் தங்கத்தின் கதைகளில் இருக்கும் பிரதேசத்தன்மை, தொன்ம வழிபாடுகள் பற்றிய விவரிப்புகள் அவதானிக்கப்பட வேண்டியவை. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு உள்ளக, சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் முரண்கள் எல்லாவற்றையும் புனைவின் கலைநேர்த்தி குன்றாமல் எழுதிவிடுகிறார். ஒருவன் தனது வட்டாரத்தன்மையைக் காவு கொடுத்து, உலகத்தரம் பெறவேண்டும் என்று அவசியமில்லை என்பதை ராம் தங்கம் அறிந்திருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் வருகிற உரையாடல்கள் நிலத்தின் வாசனையோடு இருக்கின்றன.
  • ராம் தங்கத்தின் ‘திருக்கார்த்தியல்’, ‘ராஜவனம்’ ஆகிய கதைத் தொகுப்புகள் யதார்த்த பண்பு கூடியதொரு சமகாலப் படைப்புகளுக்கான சான்றுகள். வாழ்வின் மீது கவிந்துபோயிருக்கும் கண்ணுக்குத் தெரியாத ‘ஊழ்’ ராம் தங்கத்தின் கதைகளின் பிரதான கதாபாத்திரங்கள் மீதும் சுழன்றாடுகிறது.
  • திருக்கார்த்தியல்’ தொகுப்பில் உள்ள பதினோரு கதைகளில் பலவும் நினைவோட்ட உத்தியைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கும். கதைகள் பசியால் சிதிலமாக்கப்பட்ட சிறுவர்களைச் சுற்றியே நிகழ்கின்றன. ரணம் பொருந்திய, விரும்பத்தகாத புறக்கணிப்புகளைச் சந்தித்தவர்களைச் சுற்றியும் நிகழ்கிறது. நலிவின் சரிவுகளுக்குள் ஜீவிக்கும் விளிம்புநிலை மனிதர்களைத் தன் கதையூடாக மொழியின் நிழலில் இருத்தியிருக்கிறார் ராம் தங்கம்.
  • பசியை ஒழிப்பதற்குத்தான் உலக அறங்கள் ஒன்றுசேர வேண்டும். ‘திருக்கார்த்தியல்’ கதையில் வருகிற செந்தமிழ் என்கிற ஆறாவது வகுப்பு படிக்கும் சிறுவனின் உணவு குறித்த ஏக்கமும் அதற்காக அவன் ஒரு ஊரையே நடந்து முடித்துச் சோர்ந்துபோகும் காட்சியும் ஒருவகையில் நாடகத்தனமான முடிவாகவே இருப்பினும் அதுவே யதார்த்தமாகவும் இருக்கிறது.
  • ஒரேயொரு கொழுக்கட்டைக்காக விடுதியை விட்டு ஊருக்குள் நுழையும் சிறுவனின் சித்திரம் பலரால் நம்ப முடியாதது. ஆனால், அமுக்கப்பட்ட ஒரு மனிதனின் பசியும் ஏக்கமும் இப்படித்தான் அலைக்கழிக்கும். திருக்கார்த்திகை அன்று நாகர்கோவில் வட்டாரத்தில் அவிக்கப்படும் பனை ஓலைக் கொழுக்கட்டைக்காக ஒரு பாலகன்அலைந்து திரியும் வேளையில், சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவுகூர்கிறார். ஒளி ஏற்றி வெளிச்சம் பரப்பிய அந்நாளில் அதேவழியாக நடந்துபோன ஒரு சிவத்தைப் பட்டினியோடு கைவிட்ட இருள் அந்தக் கதை முடிவில் வாசகனுக்குத் தெரிந்துவிடுகிறது.
  • ஊழிற்பெருவலி’ சிறுகதையில் வருகிற பெண்ணின் கடந்த காலமும் நிகழ்காலமும் வாழ்வுக்கும் தற்கொலைக்குமான தன்மைகளோடு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற கதைகள் நிறையவே நமக்கு வாசிக்கக் கிடைக்கும். ஆனால், ஊரால் பலாத்காரம் செய்யப்பட்ட ஒருத்தியின் குரலை இந்தக் கதைக்கு முன்னர் வேறு எந்தக் கதையும் பதிவுசெய்வில்லையோ என்று யோசிக்குமளவு இது முக்கியமானது.
  • ராம் தங்கத்தின் கதைகள் விளிம்புநிலையில் வாழும் மனிதர்களையே பேசுகின்றன. ஆனால், எங்கும் குரல் உயர்ந்து கோஷமாய் மாறவில்லை. உலகுக்கு உபதேசம் செய்விக்க எண்ணவில்லை. மனித இன்னல்களை வாழ்வின் களத்திலிருந்து நேரே தரிசிக்கிறார். லத்தீன்-அமெரிக்கச் சிறுகதையைப் போல, ஒரு மேற்கத்தியச் சிறுகதையைப் போல எழுதிப் பார்க்க எண்ணும் குளறுபடியான சிக்கல்கள் இந்தத் தொகுப்பில் ராம் தங்கத்திற்கு நேரவில்லை. இனியும் நேர்ந்துவிடாது தன்னை அவர் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் அவர் மூலம் அசலான சிறுகதைத் தொகுப்பைத் தமிழ் மொழி பெற்றிருக்கிறது.

நன்றி: தி இந்து (24 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்