யூடியூப் அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?
- தனியார் யூடியூப் அலைவரிசைகளில் வெளியாகும் நிகழ்ச்சிகள் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகின்றன. ஆபாசப் பேச்சு, அவதூறு போன்றவைதான் இதுபோன்ற சர்ச்சைகளுக்கு வழிவகுக்கின்றன.
- சமீபத்திய ஒரு நேர்காணலில் தமிழ் சினிமா நடிகைகள் குறித்து ஆபாசமாகப் பேசியதற்காக மருத்துவர் காந்தராஜ், யூடியூப் ஊடகர் முக்தார் ஆகியோர் மீது பொதுவெளியில் ஆபாசமாகப் பேசுதல், பெண்களின் கண்ணியத்துக்கு இழுக்கு விளைவித்தல் உள்ளிட்ட சில குற்றங்களைத் தண்டிப்பதற்கான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. நடிகையும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான உள்ளகப் புகார் குழுவின் தலைவருமான ரோஹிணி, சென்னை நகரக் காவல் ஆணையர் ஏ.அருணிடம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நச்சுக் கருத்தாளர்கள்:
- காந்தராஜ், முக்தார் இருவரும் ஆபாசமாகப் பேசுவது இது முதல் முறையல்ல. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை நேர்காணல் எடுத்துள்ள முக்தார், பெரும்பாலும் மூத்த ஆண் பிரபலங்களிடம் அவர்களுடைய கடந்த காலக் காதல்கள், உறவுகள் தொடர்பாக இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையிலான கேள்விகளைக் கேட்பார். காந்தராஜ் இதற்கு முன்பு பல பேட்டிகளில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய நச்சுத்தன்மை வாய்ந்த கருத்துகளைப் பேசியிருக்கிறார்.
- சில ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப் அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஆண்களுக்கு இடையிலான தன்பால் உறவினால் எய்ட்ஸ் நோய் பரவுகிறது என்று அறிவியலுக்குப் புறம்பான கருத்தை அவர் உதிர்த்தார். இந்த நேர்காணல் பரபரப்பாகப் பேசப்பட்டதை அடுத்து, தொடர்ந்து பல யூடியூப் அலைவரிசைகளில் அவர் நேர்காணல் அளித்துவருகிறார். பெரும்பாலும் சினிமா, அரசியல் பிரபலங்கள் குறித்து அதிர்ச்சிகரமான, ஆதாரமற்ற, நச்சுத்தன்மை வாய்ந்த கருத்துகளையும் வெளிப்படுத்துகிறார்.
- ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமா துறையிலும் அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், தமிழ் சினிமாவில் நிகழும் பாலியல் அத்துமீறல் குறித்த விவாதம் அதிகரித்துள்ளது. நடிகை ராதிகா உள்ளிட்ட சிலர் இது குறித்துத் துணிச்சலான கருத்துகளைப் பதிவுசெய்துள்ளனர். தமிழ் சினிமாவைப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான பணிகளில் ரோஹிணி உள்ளிட்ட நடிகைகள் முனைப்புடன் ஈடுபட்டுவருகின்றனர். அதேநேரம், ஹேமா கமிட்டி விவகாரத்தை சில யூடியூப் ஊடகங்கள் ஆபாசக் குப்பைகளை அதிகரிப்பதற்கான வாய்ப்பாகவும் பயன்படுத்துகின்றன.
- தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடிவரும் பெண்களிடம் பாலியல் உறவைக் கோரும் ஆண் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், முகவர்கள் போன்றோரை உரிய ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவதாக இந்த உரையாடல்கள் நிகழ்ந்தால் வரவேற்கலாம். ஆனால், வாய்ப்புகளைப் பெறுவதற்காக நடிகைகள் பாலியல் சமரசம் செய்துகொள்கிறார்கள் என்கிற ரீதியிலான பேச்சுக்களே அதிகமாக இருப்பதுதான் பிரச்சினை. இவ்வாறு பேசியதால்தான் காந்தராஜ், முக்தார் மீது இப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அம்பலப்படுத்தும் பாவனை:
- பல தமிழ் யூடியூப் அலைவரிசைகள், அரசியல் - காட்சி ஊடகப் பிரபலங்கள், குறிப்பாக சினிமா நடிக-நடிகையர் தொடர்பான அந்தரங்க விஷயங்கள் பற்றி விவாதிக்கும் நிகழ்ச்சிகளை நம்பியே இயங்கிவருகின்றன. இவை யூடியூப் அலைவரிசைகளில் பதிவேற்றப்படுவதோடு ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ரீல்களிலும் யூடியூப் ஷாட்களிலும் அதிகமாகப் பகிரப்படுகின்றன.
- ஒரு காலத்தில் சில அச்சுப் பத்திரிகைகளில் நடிகர் நடிகையரைப் பாலியல்ரீதியாகத் தொடர்புபடுத்திக் கிசுகிசுக்கள் வெளியிடப்பட்டன. ஆனால், அவற்றில் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகையரின் பெயர்கள் நேரடியாகக் குறிப்பிடப்படாது. ஆனால், இன்றைய யூடியூப் அலைவரிசைகளில் பேசுவோர் பிரபலங்களின் பெயர்களை வெளிப்படையாகச் சொல்லி பாலியல்ரீதியிலான அவதூறுகளை முன்வைக்கின்றனர்.
- தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஒருவர் பிரபல ஊடக நிறுவனம் ஒன்றில் தனது பணியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக பாலியல் சமரசம் செய்துகொண்டதாக ஒருவர் பேசும் காணொளி சமூக ஊடகங்களில் அண்மையில் பகிரப்பட்டுவருகிறது. அந்த நபர் அந்தத் தொகுப்பாளினியின் பெயரை வெளிப்படையாகச் சொல்கிறார். ஊடக நிறுவனத்தின் பெயரைப் பூடகமாகக் குறிப்பிடுகிறார். ஆண்கள் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. இவரது குற்றம் காந்தராஜ், முக்தார் செய்ததற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல.
- இத்தகைய ஊடகங்கள் திரைத் துறையிலும் பிற காட்சி ஊடகத் துறைகளிலும் நிகழும் பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் பாவனையில் பெண் பிரபலங்கள் மீதான பாலியல் அவதூறுகளை அள்ளித் தெளித்துப் பார்வையாளர்களின் மலினமான உணர்வுகளுக்குத் தீனிபோடுகின்றன. அத்தோடு, சமூகத்தில் நிலைபெற்றுவிட்ட பெண்களுக்கு மட்டுமேயான ஆணாதிக்க ஒழுக்க மதிப்பீடுகளை வலியுறுத்துகின்றன.
- காந்தராஜ்-முக்தார் பேசியது பெரிய அளவில் சர்ச்சையாகிவிட்டதால் இவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இதேபோல் திரைத் துறையினர் பற்றி ஆபாசமாகப் பேசும் பலர் யூடியூப் பிரபலங்களாக உலாவந்துகொண்டிருக்கின்றனர். காந்தராஜ், முக்தார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இத்தகையோருக்கான பாடமாக அமைந்தால் நல்லதுதான்.
சுயதணிக்கை:
- அரசு நடவடிக்கைகளைத் தாண்டி, ஊடக நிறுவனங்களும் ஊடகர்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது அவசியம். பயில்வான் ரங்கநாதன் ஒருமுறை திரைத் துறைப் பிரபலங்கள் குறித்துத் தான் பேசுபவை அனைத்தும் உண்மைகளே என்பதால், தான் செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்று குறிப்பிட்டார். உண்மையாகவே இருந்தாலும் ஒருவரின் அந்தரங்க வாழ்க்கை குறித்துப் பொதுவெளியில் பேசுவது முற்றிலும் அநாகரிகமானது. இதை யூடியூப் ஊடகர்கள் மட்டுமல்லாமல், ஊடகப் பயனாளர்களும் உணர வேண்டும்.
- பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தகவல்களை ஒளிபரப்புவதை அறவே தவிர்க்கும் வகையில் யூடியூப் ஊடகங்கள் சுயபரிசீலனையும் சுயதணிக்கையும் செய்துகொள்ள வேண்டும். இன்று பதின்பருவத்தை அடையாத சிறார்களும் யூடியூப் அலைவரிசைகளையும் சமூக ஊடகங்களையும் கணிசமாகப் பயன்படுத்துகிறார்கள்.
- இத்தகைய ஆபாசக் கருத்துகள் அவர்களைச் சென்று சேர்வது நாளைய சமூகத்தை எந்த அளவு பாதிக்கும் என்பதை யோசித்துப் பார்த்தாவது ஊடக நிறுவனங்களும் ஊடகர்களும் ஆபாச, அவதூறுப் பேச்சுக்களிலிருந்து வெளியே வர வேண்டும். அப்படி தார்மிக நியாயம் இல்லாமல் செயல்படுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 09 – 2024)