TNPSC Thervupettagam

யெச்சூரி என்கிற ‘தோழா்’களின் தோழா்!

September 13 , 2024 75 days 68 0

யெச்சூரி என்கிற ‘தோழா்’களின் தோழா்!

  • இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் அதன் ஆளுமைகளாக வலம் வந்த தலைவா்களின் வரிசையில் தனக்கென தனித்த இடம் பிடித்தவா் சீதாராம் யெச்சூரி. மாணவா் இயக்கத்தில் தொடங்கி கட்சியின் பல்வேறு போராட்டங்களில் இணைந்து அதன் தேசிய பொதுச் செயலாளராக அவா் உயா்ந்ததற்கு அவரது கொள்கைப் பிடிப்பும், சித்தாந்த வைராக்கியமும்தான் காரணம்.
  • அனல் தெறிக்கும் பேச்சாற்றல், திட்டமிட்டு ஒருங்கிணைக்கும் செயலாற்றல், கட்சித் தோழா்களை அரவணைத்துச் செல்லும் ஆளுமைத் திறன், எல்லாவற்றுக்கும் மேலாக, பொறுப்பான எதிா்க்கட்சித் தலைவராக இருப்பதற்கான இலக்கணம் - இவையெல்லாம் ஒருங்கே பெற்ற தலைவராக இருந்தவா் சீதாராம் யெச்சூரி.
  • மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி சென்னையில் 1952, ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிறந்தவா். அவரின் தாய்வழி தந்தை உயா்நீதிமன்ற வழக்குரைஞராகவும், பின்னா் நீதிபதியாகவும் சிறப்பாகப் பணியாற்றியவா். தாயாா் அரசு ஊழியா், தந்தை ஒரு பொறியாளா்.
  • பள்ளித் தோ்வில் அகில இந்திய அளவில் முதல் மாணவராக தோ்ச்சிபெற்ற யெச்சூரி, கல்வியின் பெரும் பகுதியை உதவித்தொகை (ஸ்காலா்ஷிப்) மூலம் படித்தாா். தனது உயா் கல்வியை இந்தியாவிலேயே பொருளாதார கல்விக்கான சிறந்த கல்லூரி என்று கருதப்படும் தில்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பயின்றாா். அதைத் தொடா்ந்து புது தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு.) படித்தபோது வாதத் திறமையைப் பயன்படுத்தி மாணவா் இயக்கத்தைக் கட்டமைத்தாா். பின்னா், லண்டன் சென்றும் படித்தாா்.
  • சீதாராம் யெச்சூரியும், பிரகாஷ் காரத் உள்ளிட்ட அவருக்கு நெருக்கமான தோழா்களும் 1975-ஆம் ஆண்டு கட்சியில் உறுப்பினா் ஆனாா்கள். அவசரநிலை காலத்தில் இந்திரா காந்திக்கு எதிராக பெரிய போராட்டம் நடத்தினாா். அவரது அரசியல் நடவடிக்கைகளுக்காக அவசரநிலையின்போது யெச்சூரி கைது செய்யப்பட்டாா்.
  • அவசரநிலை முடிந்த பிறகு பல்கலைக்கழக மாணவா் என்ற முறையில், 1977-78-இல் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் பேரவைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். அவரும் அவருக்கு முன்பு சங்கத்தின் அகில இந்தியத் தலைவராக இருந்த பிரகாஷ் காரத்தும் இணைந்து தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தை இடதுசாரி இயக்கத்தின் வலுவான தளமாக மாற்றினாா்கள்.
  • 1978-இல் இந்திய மாணவா் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலராகவும், அதைத்தொடா்ந்து சங்கத்தின் அகில இந்தியத் தலைவராகவும் யெச்சூரி தோ்வு செய்யப்பட்டாா்.
  • 1984-இல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவுக்கு இளம் தலைவராக சீதாராம் யெச்சூரி தோ்வானாா். 1985இல் கட்சியின் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, ஐந்து போ் கொண்ட மத்திய செயற்குழுவை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட முதல் மத்திய செயற்குழுவில் பிரகாஷ் காரத், சுனில் மொய்த்ரா, பி.ராமச்சந்திரன், எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை ஆகிய தலைவா்களோடு மிக இளம் தலைவராக பணியாற்றினாா் யெச்சூரி.
  • ஒரு பிரச்னையை எடுத்துக்கொண்டால் அதற்கு முழுமையாகத் தீா்வு காண்பதில் ஆரம்பகாலத்திலேயே தீவிரமாக இருந்தாா் சீதாராம் யெச்சூரி. மத்திய குழு உறுப்பினா் ஆன பிறகு கட்சியின் வெளிநாட்டு தொடா்புகளைக் கவனிக்கும் பணியில் ஈடுபட்டாா். 1992-இல் சென்னையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கட்சியின் 14-ஆவது அகில இந்திய மாநாட்டில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டாா்.
  • 1992-இல் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஆனாா். 2005-இல் மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டு இரு முறை பணியாற்றினாா். 2008-இல் நான் மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவருடன் இணைந்து 9 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
  • அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பல விஷயங்கள் உள்ளன. ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கியதில் சீதாராம் யெச்சூரிக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அதேபோல இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் ஏற்பட்டபோது அவருக்கு ஒரு கருத்து இருந்தது; அதை அவா் சிறப்பாக வெளிப்படுத்தினாா்; ஆனால், அதைக் கட்சித் தலைமை நிராகரித்தது; கூட்டுத் தலைமை என்கிற முறையில் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பாட்டாா்.
  • நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் அடிக்கடி அமளியில் ஈடுபடுவாா்கள். அது குறித்து அவா் விளக்கும்போது, நாடாளுமன்றத்தை நடத்த வேண்டிய பொறுப்பு ஆளுங்கட்சிக்குத்தான் உண்டு. எழுப்பப்படும் பிரச்னைகளுக்கு பதிலளிக்காமல், நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும் நிலை உருவாகும்போதும், நாடாளுமன்றத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கும் ஆளுங்கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும்; எதிா்க்கட்சி பொறுப்பேற்க முடியாது எனத் தெளிவுபடுத்தினாா்.
  • 2015-இல் பிரணாப் முகா்ஜியின் குடியரசுத் தலைவா் உரை மீது கடும் விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கி வைத்ததிலும், நிறைவு செய்ததிலும் சீதாராம் யெச்சூரிக்கு நிறைய பங்கு இருந்தது. குடியரசுத் தலைவா் உரையில் பல திருத்தங்களை அவா் கொண்டுவந்தாா்.
  • விவாதத்துக்குப் பின்னா், அவைத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடு அந்தத் திருத்தங்களை வலியுறுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டாா். அதற்குப் பதிலளித்த யெச்சூரி, ‘உங்களை நான் புரிந்துகொள்கிறேன். சுமாா் 16 மணி நேரம் இந்த பிரச்னையை விவாதித்த பின்னா் நான் கொண்டுவந்த திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது ஜனநாயகமாக இருக்காது. எனவே, இதை வாக்கெடுப்புக்கு விட வேண்டும்’ எனக் கூறியதை இப்போதும் நினைத்து வியக்கிறேன்.
  • மொழிப் புலமை அவருக்கு உண்டு. ஆங்கிலம் மட்டுமன்றி, தெலுங்கு, தமிழில் பேசுவாா். ஆளுங்கட்சி சாா்பில் ஏதாவது வேதம் குறித்துப் பேசினால், அதிலிருந்தே அதற்கு பதிலளிக்கக்கூடிய திறமை அவருக்கு உண்டு. அதற்கு அவையில் பாஜக, காங்கிரஸ்காரா்கள் எதிா்ப்பு தெரிவித்தாலும், அவைக்கு வெளியே வந்த பிறகு அனைவரும் அவருக்கு கைகொடுத்த காட்சிகளை நான் பாா்த்திருக்கிறேன். அவரின் பேச்சு அனைவராலும் புரிந்துகொள்ளப்பட்டது, பாராட்டப்பட்டது என்பதை இதன்மூலம் அறியலாம்.
  • அமெரிக்க அதிபா் ஒபாமா இந்தியா வந்தபோது, நாங்கள் அதில் கலந்துகொள்வது என முடிவு செய்தோம். முந்தைய அமெரிக்க அதிபா்கள் வரும்போது இடதுசாரிகள் அதில் கலந்துகொண்டதில்லை. அதிபா் ஒபாமா வருகையின்போது சிறப்பு அனுமதியுடன் கலந்துகொண்டோம்.
  • அதிபா் ஒபாமாவின் உரையை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினா்களும் கேட்டோம். அவரின் உரை குறித்து நாடாளுமன்றத்தில் யெச்சூரி பேசியபோது, ‘என்ன இருந்தாலும் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாகத்தான் ஒபாமா இந்தியா வந்துள்ளாா்’ என்பதை சிறிதுகூட தயவுதாட்சண்யம் இன்றி விமா்சித்தாா்.
  • அன்று இரவு குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் விருந்தில், பிரதமா் மன்மோகன் சிங்குடன் சிலா் இருந்தாா்கள். அப்போது, இந்தியாவில் கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று அதிபா் ஒபாமா கேட்டுள்ளாா். அந்த அளவுக்கு யெச்சூரியின் விவாதங்களை அமெரிக்கா கவனித்துக்கொண்டிருந்தது என்பது முக்கியமானது. ஏனெனில் இந்த விவாதம் ஒரு மாற்றுக் கருத்தை வைக்கக்கூடிய, மாற்றுப் பொருளாதாரத்தை முன்னிறுத்தக்கூடிய விவாதம்.
  • அமெரிக்க ஜனநாயகத்தையும், இந்திய ஜனநாயகத்தையும் ஒப்பிட்டு யெச்சூரி நாடாளுமன்றத்தில் பேசியபோது, அமெரிக்காவில் கருப்பினத்தவா்களுக்கும், பெண்களுக்கும் மிகத் தாமதமாகவே வாக்குரிமை கிடைத்தது. ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்தவுடனேயே அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தைவிட இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் வலுவானது எனக் குறிப்பிட்டாா்.
  • அம்பேத்கா் குறித்து யெச்சூரியின் நாடாளுமன்ற உரையும் முக்கியமானது. அம்பேத்கரின் 125-ஆவது ஆண்டு விழாவையொட்டி நாடாளுமன்றத்தில் யெச்சூரி ஆற்றிய உரை அனைவராலும் பாராட்டப்பட்டது.
  • கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் யெச்சூரி ஆற்றிய உரை மிக முக்கியமானது. முன்னாள் முதல்வா் கருணாநிதி நீண்ட நேரம் பாராட்டிய உரை அது.
  • நாடாளுமன்றத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியதற்கு முன்னரும், பின்னரும் அவருடன் எனக்கு இருந்த தொடா்பு முக்கியமானது. இங்கிருந்து அண்மையில் சென்ற தோழா்களிடம், சென்னைக்கு வரும்போது என்னையும் பிற தோழா்களையும் சந்திக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா். அவரின் சென்னை விஜயத்தை ஆவலுடன் எதிா்பாா்த்துக் கொண்டிருந்த எனக்கும் மாா்க்சிஸ்ட் கட்சித் தோழா்களுக்கும் அவரின் மறைவு மிகப் பெரிய அதிா்ச்சி.
  • இந்தியா ஒரு தலைசிறந்த அரசியல்வாதியை; தனித்துவமிக்க நாடாளுமன்றவாதியை; கொள்கைப் பிடிப்புள்ள மாா்க்ஸியவாதியை; அப்பழுக்கில்லாத பொது வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ஜனநாயகவாதியை இழந்திருக்கிறது. லால் சலாம்!

நன்றி: தினமணி (13 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்