ரஃபேல் நடால்: டென்னிஸ் களத்தின் காளைச்சண்டை வீரன்
- ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மகத்தான டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் தொழில்முறைப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். டென்னிஸ் ரசிகர்களுக்கு இதுவொன்றும் அதிர்ச்சியூட்டக்கூடிய செய்தியல்ல. கடந்த சில வருடங்களாகவே காயங்களாலும் அறுவை சிகிச்சைகளாலும் அவருடைய உடல் விளையாடுவதற்கு ஒத்துழைக்க மறுத்துக்கொண்டிருந்தது. கடுமையான உடல் வலிகளை மீறிப் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக மிக உயர்ந்த தரத்துடன் விளையாடிவந்த வீரர் டென்னிஸ் சரித்திரத்திலேயே நடாலாகத்தான் இருப்பார்.
- விளையாட்டுக் களத்தைப் போர்க்களத்தோடு ஒப்பிடுவது அபத்தமென்றாலும், நடாலின் ஆட்டம் ரத்தம் சிந்தாத போர்க் காட்சியாகத்தான் தெரிந்திருக்கிறது. டென்னிஸ் களத்தில் நடால் ஒரு ஸ்பானியக் காளைச் சண்டை வீரரைப் போலத்தான் போராடியிருக்கிறார்.
தணியாத போர்க் குணம்:
- டென்னிஸ் சரித்திரத்தில் புள்ளிவிவரக் கணக்குகளால் நடால் நினைவுகூரப்பட மாட்டார். இவ்வளவுக்கும் ‘கிராண்ட் ஸ்லாம்’ என்று அழைக்கப்படும் உலகின் நான்கு முதன்மையான டென்னிஸ் போட்டிகளான விம்பிள்டன், ஃபிரெஞ்சு ஓபன், யு.எஸ்.ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் 22 முறை அவர் வென்றிருக்கிறார்.
- ஜோகோவிச் 24 வெற்றிகளோடு முதலிடத்திலும், ஃபெடரர் 20 வெற்றிகளோடு மூன்றாவது இடத்திலும் உள்ளனர். சாதனைக் கணக்கில் வரலாற்றின் ஆகச்சிறந்த இம்மூவரின் அருகில்கூட பழைய வீரர்கள் எவரும் இல்லை. ஆனாலும் நடாலின் சிறப்பு 22 கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளோ, அசாதாரண சாதனையான 14 ஃபிரெஞ்சு ஓபன் வெற்றிகளோ அல்ல.
- தலைசிறந்த டென்னிஸ் வீரர்களின் வெற்றிக்கான அடிப்படை அம்சங்கள் என - விளையாட்டுத் திறமை, உடல்தகுதி, மனவலிமை, வியூகத்தந்திரம் ஆகிய நான்கு திறன்களைச் சொல்லலாம். சமீபத்திய உதாரணங்களான ஃபெடரர், ஜோகோவிச், முன்னாள் வீரர்களான சாம்ப்ராஸ், அகஸ்ஸி, பெக்கர், மெக்கன்ரோ, போர்க், கானர்ஸ் ஆகியோரிடம் மேற்குறிப்பிட்ட நால்வகைத் திறன்களும் இருந்தாலும், இவர்களைத் தாண்டி நடால் உயர்ந்து நிற்பது போர்க் குணம் என்கிற ஐந்தாவது திறனால்தான்.
- மன வலிமைக்கும் போர்க் குணத்துக்கும் நுட்பமான வேறுபாடு உண்டு. அது 2022ஆம் ஆண்டு விம்பிள்டன் காலிறுதிப் போட்டியில் டெய்லர் ஃபிரிட்ஸுடன் நடால் மோதியபோது துலக்கமானது. அந்த வருடம் விம்பிள்டனில் நடால் ஆடுவாரா என்பதே சந்தேகமாக இருந்தது. அறுவைசிகிச்சை செய்திருந்த காயங்கள் முற்றிலும் குணமாகியிருக்கவில்லை.
- ஆனாலும் ஆட வந்தார். பழைய மணிக்கட்டுக் காயம், வழக்கமாகத் தொல்லை கொடுத்துவரும் கால் தசைக்கிழிசல் ஆகியவற்றோடு கடுமையான வயிற்றுத் தசைப்பிடிப்பும் சேர்ந்துகொள்ள, நரக வேதனையோடு ஃபிரிட்ஸ் என்ற அந்தத் துடிப்பான இளம் வீரரோடு நடால் அன்று ஆடியது விளையாட்டல்ல, பொருதல் என்றே சொல்ல வேண்டும்.
- அன்றைய ஆட்டம் உண்மையில் நடாலுக்கும் ஃபிரிட்ஸுக்கும் இடையில் நடைபெற்றதல்ல. அது நடாலின் மனதுக்கும் உடலுக்கும் இடையே நடைபெற்ற போர். உடல் வலி எல்லை மீறும்போது, மன வலிமை சற்றுச் சுணங்கினாலும், நடாலின் உள்ளார்ந்த போர்க் குணமே அவருக்கு வெற்றியை ஈட்டித் தந்தது.
முழுமையான ஆட்டத்திறன்:
- நடால் டென்னிஸ் ஆடும் முறை ஃபெடரரைப் போல நளினமானதல்ல, முரட்டுத்தனமானது. ஜோகோவிச் போல எல்லா ‘ஷாட்’டுகளும் கைவரப் பெற்றவரோ, அவரளவுக்கு வேகமாக ஓடக்கூடியவரோ அல்ல. ஆனால், இவ்விருவரையும்விட வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வெறி நடாலிடம் இருந்தது. தோல்வி நிச்சயம் என்கிற கட்டத்தில்கூட கடைசிப் புள்ளிவரை அவர் சோர்வடைந்ததோ, விட்டுக்கொடுத்ததோ கிடையாது.
- நடாலைப் போலவே முரட்டுத்தனமாக ஆடிய வீரர்கள் இதற்கு முன்பும் இருந்திருக்கிறார்கள் - தாமஸ் முஸ்டரைப் போல. ‘பேஸ்லைன்’ எனப்படும் மைதானத்தின் பின் கோட்டை ஒட்டியே ஆடிக்கொண்டு, வலையின் அருகே பெரும்பாலும் வராமல் பந்தை மிகவும் வலுவாக அடித்து ஆடியவர்களும் இருந்திருக்கிறார்கள் - லெண்டில், அகஸ்ஸியைப் போல.
- அவர்களுக்கும் நடாலுக்கும் இடையிலிருந்த முக்கியமான வேறுபாடு, எதிராளியின் பலவீனப் பகுதியையே தொடர்ந்து தாக்கிக்கொண்டிருப்பது. அந்த உத்தியை எல்லா விதமான வீரர்களுக்கும் எதிராகப் பயன்படுத்துவதற்கு ஒருவரிடம் முழுமையான ஆட்டத் திறனும் மதி நுட்பமும் இருந்தாக வேண்டும். அது நடாலிடம் இருந்தது.
மகத்தான யுத்தங்கள்:
- விம்பிள்டனில் இயல்பான புல்தரை ஆட்டம் ஆடுகின்ற பெக்கர், எட்பெர்க் போன்றோரை வீழ்த்துவதற்காக லெண்டில் தனது சொந்த ஆட்ட முறையையே மாற்றி, ‘சர்வ் அண்டு வாலி’ ஆட்டத்தை ஆடியதால்தான் விம்பிள்டனை வெல்லவே முடியவில்லை. ஆனால், விம்பிள்டன் சரித்திரத்திலேயே மகத்தான ஆட்டம் என்று கருதப்பட்ட 1980ஆம் வருட போர்க், மெக்கன்ரோ போட்டியையே பின்னுக்குத் தள்ளிய போட்டி, ரோஜர் ஃபெடரர் என்கிற விம்பிள்டன் நாயகனை நடால் 2008இல் இறுதிப் போட்டியில் வீழ்த்தியது.
- நடாலின் ஆட்டம் புல்தரை ஆட்டத்துக்கு ஏற்றதல்ல. விம்பிள்டனைப் பொறுத்தவரை ஃபெடரர் உச்சத்தில் இருந்த காலம் அது. புல்தரையில் அவரிடமிருந்து ஒரேயொரு ‘செட்’டை அபகரிப்பதுகூட மற்ற வீரர்களுக்குச் சாத்தியமற்றதாக இருந்த நேரத்தில், முதல் இரண்டு செட்களை வென்று, அடுத்த இரண்டு செட்களை இழந்தும் ஐந்தாவது செட்டில் நம்ப முடியாத ஆட்டத் திறனை வெளிப்படுத்தி ஃபெடரரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
- டென்னிஸ் உலகின் மகத்தான காதல் கதை என்று நடாலுக்கும் ஃபிரெஞ்சு ஓபன் அரங்கமான ரோலண்ட் கரோஸுக்கும் இடையிலான பந்தத்தைத்தான் சொல்லலாம். களிமண் ஆட்டக்களம் அவரின் தாய்நிலம். ஃபிரெஞ்சுக் களிமண் எனும் செம்மண் தரை புல்தரைக்கு நேரெதிரானது. மின்னல் வேக சர்வீஸ்கள் செம்மண்ணில் எடுபடுவதில்லை. பந்து ‘டாப் ஸ்பின்’னாகி அதிகமாக எழும்பிவரும். தோள்பட்டை உயரத்தில்தான் பந்தைச் சந்தித்து அடிக்க வேண்டியிருக்கும்.
- மிக வலுவான உடற்தகுதி தேவைப்படும் ஆட்ட முறை அது. நடால் 2005ஆம் வருடத்திலிருந்து சென்ற வருடம் வரை 14 முறை பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றிருக்கிறார். நான்கு முறைதான் தோல்வி. தொழில்முறைப் போட்டிகளாக டென்னிஸ் மாற்றப்பட்டதற்குப் பிறகு, எந்தவொரு வீரரும் ஒரு குறிப்பிட்ட போட்டியில் நடாலைப் போல ஆதிக்கம் செலுத்தியதில்லை.
- பெரும்பாலான விளையாட்டு வீரர்களின் ஆட்ட முறையைப் போலவேதான் அவர்களுடைய உண்மையான குணமும் இருக்கும். ஆனால் முரட்டுத்தனமாக, வெறிக் கூச்சலிட்டுக்கொண்டு விளையாடும் நடால், இயல்பில் மிகவும் மென்மையானவர். அது மட்டுமல்லாமல் ஜோகோவிச், கானர்ஸ் போல போட்டியாளர்களை மதிக்காமல் இகழ்ந்தவரல்ல. ஃபெடரர் ஓய்வு பெற்றபோது நடால் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுததை உலகமே கண்டு வியந்தது.
- தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனையோ சிக்கல்கள், பெற்றோரின் மணமுறிவு, இடைவிடாமல் துன்புறுத்திக்கொண்டிருந்த காயங்கள் என்று சோதனைகள் சூழ்ந்திருந்தாலும் நடாலின் ஸ்பானிய ரத்தத்தில் கலந்திருந்த புறமுதுகு காட்டாத போர்க் குணம், அவரை 18 வருடங்களாகத் தலைசிறந்த டென்னிஸ் வீரராக உச்சத்தில் வைத்திருந்தது. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் வெற்றிகளோடு தோல்விகளும் வருவது இயற்கை. ஆனால், நடாலைப் போன்ற வீரர்கள்தான் தோல்வியுறும்போதும் தோற்றவர்களாக இருப்பதில்லை.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 10 – 2024)