- அரசியலோடு நெருங்கிப் பிணைந்தது பொருளியல். உலகளவில் பொருளியல் கொள்கைகளே அரசியலின் அடிப்படையாகவும் இருக்கின்றன. ஒருசில இனக்குழுக்களை மட்டுமே கொண்டிருக்கும் நாடுகளில் பொருளியல் வாதங்களே அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கலாம்.
- ஆனால், பல்வேறு இனக்குழுக்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்களைக் கொண்ட இந்தியாவில் அரசியலைத் தீர்மானிப்பதில் பொருளியலைக் காட்டிலும் சமூகவியலே முக்கியப் பங்காற்றுகிறது. அதை அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தியவர் ரஜனி கோத்தாரி. அரசியல்-சமூகவியல் என்ற புதியதொரு ஆய்வுத் துறையைத் தொடங்கிவைத்தவர் அவரே.
- இந்திய அரசியலைப் பற்றிய விவாதங்களில் ரஜனி கோத்தாரி அளவுக்குத் தாக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஆய்வாளர்கள் வேறு யாரும் இல்லை. லண்டன் பொருளியல் பள்ளியில் பொருளியலும் அரசியலும் படித்தவர் அவர். அறுபதுகளின் தொடக்கத்தில் பரோடா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் விரிவுரையாளராகத் தனது கல்விப் பணியைத் தொடங்கினார்.
- ஆய்வேட்டுக்காக, 1962 தேர்தலில் பரோடா கிழக்குத் தொகுதியில் வாக்காளர்களின் இயல்புகளை ஆய்வுசெய்யத் தேர்ந்தெடுத்தார். அந்த ஆய்வுப் பணி அவரது வாழ்க்கையின் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. அப்போது ‘எகானமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி’ ஏட்டில் ‘இந்திய அரசியலில் வடிவமும் பொருளும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை இந்திய ஆய்வுலகின் கவனத்தை ஈர்த்தது.
- பரோடா பல்கலைக்கழகப் பணியிலிருந்து விலகி, முசெளரியில் உள்ள சமூக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தில் சேர்ந்தார். விடுமுறை நாட்களையெல்லாம் அவர் கள ஆய்விலேயே செலவிட்ட நாட்கள் அவை. நண்பர்களையும் பயிற்றுவித்துக் களப் பணிகளில் ஈடுபடுத்தினார்.
- தொடர்ந்து அவர் தொகுத்தும் எழுதியும் வெளியிட்ட ‘பாலிட்டிக்ஸ் இன் இந்தியா’, 'கேஸ்ட் இன் இந்தியன் பாலிட்டிக்ஸ்’, ’ஃபுட்ஸ்டெப்ஸ் இன்ட்டூ ஃப்யூச்சர்’ போன்ற நூல்கள் இந்திய அரசியலோடு சாதி வேறுபாடுகள் ஊடாடிக் கலந்திருப்பதை நுணுகி ஆராய்ந்தவை. அரசியல் என்பது இந்தியச் சமூகத்தின் ஒரு துணை அமைப்பு இல்லை, மாறாக அதுவே சமூகப் பண்பாட்டு மாற்றங்களுக்கான முதன்மையான விசையாக இருக்கிறது என்று அவரது ஆய்வுகள் எடுத்துக்காட்டின.
ஒற்றைக்கட்சி அமைப்பு முறை
- ‘பாலிட்டிக்ஸ் இன் இந்தியா’ புத்தகத்தில் ‘காங்கிரஸ் அமைப்புமுறை’ என்றொரு புதிய பார்வையை ரஜனி கோத்தாரி வெளிப்படுத்தினார். காங்கிரஸ் என்பது கட்சி என்பதைக் காட்டிலும் ஒரு அமைப்பாகவே இருக்கிறது, ஒற்றைக் கட்சி ஆதிக்கம் என்பதே அதன் இயங்குமுறையாக இருக்கிறது என்ற அந்தப் பார்வை இந்திய அரசியலை, குறிப்பாக இந்திய ஜனநாயகத்தைப் பற்றிய ஆய்வுகளில் புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சியது.
- இன்றைக்கு காங்கிரஸ் இடத்தில் பாஜக. ஆனால், ரஜனி கோத்தாரி முன்வைத்த ஒற்றைக்கட்சி ஆதிக்க முறை என்ற விமர்சனம் முன்பைக் காட்டிலும் தற்போது மேலும் பொருத்தமாக இருக்கிறது.
- சமூகத்தின் உயர்மட்டங்களைச் சேர்ந்தவர்கள் அரசியலை எப்படிப் பார்க்கிறார்கள் என்று அறிந்துகொள்வதற்காகப் பல்வேறு அமைப்புகளின் கூட்டங்களில் ரஜனி கோத்தாரி பார்வையாளராகக் கலந்துகொண்டிருக்கிறார்.
- ஆய்வுகளின் முடிவில், அரசியல் என்பது வெளியிலிருந்து வரும் அழுத்தங்களுக்கு எதிர்வினையாற்றுகிற அல்லது வெளியிலிருந்து வருகிற விருப்பங்களை ஒன்றிணைக்கிற பிரதிநிதித்துவ அமைப்பு இல்லை, மாறாக அத்தகைய சூழல்களில் செயல்படுகிற மாபெரும் படைப்புச் சக்தி என்று அவர் மதிப்பிட்டார். அரசியலைப் படைப்புச் சக்தியாக அவர் கண்டுகொண்டதிலிருந்து பிரதிநிதித்துவம், விருப்பங்களின் ஒன்றிணைவு தொடர்பான ஆய்வுகளில் மேலும் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார்.
- ‘அரசியல் என்பது வளர்ச்சி மாற்றத்தைப் பற்றியது. மரபான சமூகமான இந்தியாவைப் பொறுத்தவரை, அது வளர்ச்சி மாற்றத்துக்கான ஒரு கூறு’ என்று ஜனநாயக அரசியலை விதந்தோதினார்.
- இந்திய ஜனநாயகத்தின் சிறப்பியல்புகளை எடுத்துரைக்கும் ரஜனி கோத்தாரியின் ‘பாலிட்டிக்ஸ் இன் இந்தியா’ நூல் வெளிவந்த அடுத்த சில ஆண்டுகளிலேயே இந்திரா காந்தி நெருக்கடிநிலையைக் கொண்டுவந்தார். அதையடுத்து அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும், தேர்தல் முறைகேடுக் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப் பட்டன. இந்தக் காலக்கட்டம், ரஜனி கோத்தாரியை ஒரு ஆய்வாளர் என்பதோடு மனித உரிமைச் செயற்பாட்டாளராகவும் செயல்பட வைத்தது. இந்திரா காந்தியுடனும் காங்கிரஸ் கட்சியுடனும் நெருக்கமாக இருந்துவந்த அவர், அவருக்கும் கட்சிக்கும் எதிராகக் களத்தில் நின்றார்.
வியக்கத்தக்க வழிகாட்டி
- ரஜனி கோத்தாரியின் ஆய்வு முயற்சிகளில் ஆய்வாளர்கள் பலரும் விரும்பிப் பங்கேற்றதற்கு அவரது ஆளுமையும் அணுகுமுறையும் ஒரு முக்கியக் காரணம். இளம் ஆய்வாளர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தியவர் அவர். நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளை ஏற்றிருந்தாலும் இயல்பில் அவர் நிறுவனங்களுக்கும் பதவி படிநிலைகளுக்கும் எதிரானவராகவே இருந்தார். சக ஆய்வாளர்களின் மீது முழு நம்பிக்கை வைத்து அவர்களை சுதந்திரமாகச் செயல்பட வைப்பது அவரது வழக்கம். ஆய்வு நிறுவனங்களின் போதாமைகளை நன்கு உணர்ந்தவர் அவர். எந்தவொரு புதிய சிந்தனைக்கும் அவை தடையாக இருந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். இன்று நாட்டின் மிகச் சிறந்த ஆய்வு நிறுவனங்களுள் ஒன்றான ‘வளர்ந்துவரும் சமூகங்கள் பற்றிய ஆய்வுகளுக்கான மைய’த்தை அவர் தொடங்கியதற்கு அதுவே காரணம்.
- ஆய்வு மையத்தின் துணை அமைப்பான லோகாயன், பல்வேறு மக்கள் அமைப்புகளுடன் இணைந்து பங்காற்றிவருகிறது. ஆய்வுமையத்தின் முக்கிய ஆய்வுக் கட்டுரைகளை இந்தி மொழியில் மொழிபெயர்க்கும் பணிகளையும் செய்துவருகிறது. ஆங்கிலத்தில் நடக்கும் ஆய்வுகளைப் பிராந்திய மொழியிலும் வெளியிட்டுவரும் அதன் பணி, மற்ற ஆய்வு நிறுவனங்களும்கூட முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கது.
- ஆய்வுகளில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கு வாய்ப்பாகப் புதிய ஆய்வு மையத்தை உருவாக் கினார் என்றாலும், அரசு அமைப்புகளுடன் அதற்கு உண்டான வரையறை எல்லைக்குள் பணியாற்றிடவும் அவர் தயங்கியதில்லை. வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் திட்டக்குழுவில் அவரும் ஒரு உறுப்பினராக இருந்திருக்கிறார். அவ்வாறு அரசு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும்போது கருத்துவேறுபாடுகள் எழுந்தால், அதிலிருந்து விலகவும்கூட அவர் தயங்கியதில்லை.
மனித உரிமைப் போராளி
- மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தொடக்கக் கால முகங்களில் ரஜனி கோத்தாரியும் ஒருவர். வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் பழங்குடிகளை அவர்களின் பூர்வீக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றுவதற்கு எதிராகக் களத்தில் நின்று போராடியவர். சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள், சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்கள் என்று மனித உரிமைகள் மீறப்பட்டபோதெல்லாம் அதைக் கடுமையாகக் கண்டித்தவர் ரஜனி கோத்தாரி.
- அவர் ஒரு இடதுசாரி, ஆனால் அவர் மார்க்ஸியர் இல்லை. அவர் ஒரு ஆய்வாளர், ஆனால் புத்தகங்களுக்குள் முகத்தை மூடிக்கொள்கிறவர் அல்லர். தன்னை மட்டுமே முன்னிறுத்தும் குணம் இல்லாதவர். அவரைப் பற்றி பேசும்போதெல்லாம் அவரது எழுத்துகள் மட்டும் பேசப்படுவதில்லை. அவரது ஆய்வு நிறுவனமும் சேர்த்துதான் பேசப்படுகிறது. ரொமேஷ் தாபர், ஆஷிஸ் நந்தி என்று அவரோடு இணைந்து பணியாற்றிய மற்ற ஆய்வாளர்களையும் பற்றிய பேச்சாகத்தான் அது தொடரும்.
- இந்திய அரசியலையும் ஜனநாயக முறையையும் பற்றிய ஆய்வுகளில் தன்னைக் கரைத்துக்கொண்ட ரஜனி கோத்தாரிக்கு பத்ம விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லை; இதில் ஆச்சர்யமடைவதற்கு எதுவுமில்லை. ரஜனி கோத்தாரி காண விரும்பிய இந்திய ஜனநாயகம் என்பது வேறு. அதை நோக்கிய பயணம் இன்னும் பல மாற்றங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.
- அவரது பார்வையின்படி, அரசியல் என்பது ஒரு குழுவிடம் அதிகாரம் இருப்பதல்ல, விளிம்பு நிலையில் இருப்பவர்கள் அதிகாரத்தை நோக்கி வருவதுதான். அதற்கு அரசியல் இன்னும் பல உருமாற்றங்களை அடைய வேண்டியிருக்கிறது. அந்த உருமாற்றங்களைப் பற்றிய சமகால ஆய்வுதான் அரசியல்-சமூகவியல்.
நன்றி: இந்து தமிழ் திசை (18-01-2020)