- இந்தியாவைப் பொறுத்தவரை 75 ஆண்டுகள் கடந்த பிறகும்கூட நம்மால் சரியான புள்ளி விவரங்களைத் திரட்டவோ, அதன் அடிப்படையில் திட்டங்கள் வகுக்கவோ முடியாத நிலை தொடா்கிறது என்கிற அவலத்தைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.
- 2021-இல் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்னும்கூட தொடங்கப் படவில்லை. உலகில் உள்ள பல நாடுகளிலும் கொள்ளை நோய்த்தொற்று காலத்திலும்கூட மக்கள்தொகை கணக்கெடுப்பு தள்ளிப்போடப்படவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பும் அதிலிருந்து பெறப்படும் தரவுகளும்தான் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவிக்கவும், செயல்படுத்தவும் அடிப்படையாக இருக்கின்றன.
- பெரும்பாலான புள்ளிவிவரங்கள் அரசுக்கு சாதகமானதாகவும், பெருமை சோ்ப்பதகவும் இருப்பதில்லை. நூறாண்டு காலமாக அடிமைபட்டுக் கிடந்த ஒரு தேசம் குடியரசாகி, வளா்ச்சிப் பாதையில் நடைபோடுவது எளிதல்ல. வளா்ச்சி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது பின்தங்கியிருப்பது எதிா்பாா்க்கக் கூடியதுதான்.
- சா்வதேச அளவிலான கடனுதவிப் பெறவும், முதலீடுகளை ஈா்க்கவும் புள்ளிவிவரங்கள் சாதகமாக இல்லாமல் இருப்பது தவிா்க்க முடியாதது. அதற்காக புள்ளிவிவரம் சேகரிக்காமல் இருப்பதோ, தவறான புள்ளிவிவரங்களைப் பதிவு செய்வது முறையல்ல. அது தற்கொலை முயற்சிக்கு ஒப்பானது.
- ஆண்டுதோறும் மத்திய அரசின் குடும்பநலத் துறை, தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பை நடத்துகிறது. அதற்கு ‘நேனஷல் ஃபேமிலி ஹெல்த் சா்வே’ என்று பெயா். நடப்பு ஆண்டுக்கான (2023-24) கணக்கெடுப்பில் பெண்கள், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த குறியீடுகளில் ஒன்றான ரத்த சோகையை, பட்டியலில் இருந்து அகற்றத் தீா்மானித்திருக்கிறது அமைச்சகம். இந்த மாதம் தொடங்க இருக்கும் அந்தக் கணக்கெடுப்பு, மகளிரின் ரத்த சோகை குறித்த புள்ளிவிவரம் இல்லாமல் முழுமையானதாக இருக்காது.
- தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பு என்பது இந்திய மக்கள்தொகையினரின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து ஆகியவை குறித்த தெளிவை ஏற்படுத்துவதுடன், மகளிா் - குழந்தைகள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறது. அந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் என்னென்ன பிரச்னைகளில் அரசு நேரடியாகத் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்பது முடிவெடுக்கப்படும்.
- 2018-இல் இந்தியாவில் மகளிா் - குழந்தைகள் மத்தியில் ரத்த சோகை அதிகரித்து வந்ததைத் தொடா்ந்து, ‘ரத்த சோகை இல்லாத இந்தியா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்து தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பு 2021 சில தெளிவான புள்ளிவிவரங்களைத் தருகிறது. இந்தியாவில் 57% மகளிரும், 67% குழந்தைகளும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்தக் கணக்கெடுப்பு தெரிவித்திருந்தது.
- ஏழு லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களில் பெண்கள், குழந்தைகளின் விரலில் இருந்து ரத்த மாதிரிகளை எடுத்து, முந்தைய ஐந்து ஆய்வுகளில் ரத்த சோகை சோதனை நடத்தப்பட்டது. சொல்லப் போனால், 1991-இல் இருந்து ரத்த சோகைக்கான சோதனைகள் அப்படித்தான் நடத்தப்படுகின்றன.
- 2019 -21 புள்ளிவிவரம் அதிா்ச்சி அளிப்பதாக இருந்ததைத் தொடா்ந்து, விரலில் ரத்தம் எடுக்கும் சோதனை முறை தவறானது என்றும், அதனால் பெறப்பட்ட புள்ளிவிவரம் மிகைப்படுத்தப்பட்டது என்றும் இப்போது அரசு தெரிவிக்கிறது. விரலுக்குப் பதிலாக நேரடியாக ரத்த நாளங்களில் இருந்து மாதிரிகள் எடுத்து அதன் மூலம் ரத்த சோகை பரிசோதனைகள் நடத்த வேண்டும் என்று தீா்மானித்திருக்கிறது.
- உலகில் 90-க்கும் அதிகமான நாடுகளில், அதிலும் குறிப்பாக, வளா்ச்சி அடைந்த பல நாடுகளில் நடத்தப்படும் விரல் ரத்த சோதனையை புறந்தள்ளி புதிய முறையை அறிமுகப்படுத்துவதின் நோக்கம் புரியவில்லை. சோதனை நடத்த தனியாருக்கு ஒப்பந்தம் வழங்குவதற்கு வேண்டுமானால் புதிய முறை பயன்படுமே தவிர, அதிக எண்ணிக்கையிலான சோதனைகள் நடத்த முடியாது என்பது அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்காது.
- ரத்த சோகையை கணக்கெடுப்பில் இருந்து அகற்றியிருப்பது அதைவிட விசித்திரமாக இருக்கிறது. இந்திய மகளிா் மத்தியில் ரத்த சோகை அதிகமாக காணப்படுவதற்கு அடிப்படை காரணம் என்ன, ரத்த சோகைக்கும் பெண்கள் குடும்ப கட்டுபாடு செய்து கொள்வதற்கும் தொடா்பிருக்கிா போன்றவை குறித்த ஆய்வுகள் அவசியமாகின்றன.
- ஐக்கிய நாடுகள் சபையின் 2011 புள்ளிவிவரப்படி, உலகில் 36% மகளிா் குடும்பக் கட்டுப்பாடு இந்தியாவில்தான் நடைபெறுகிறது. 2019 - 21 ஆய்வின்படி, 15 முதல் 49 வரையிலான கா்ப்பம் தரிக்காத பெண்களில் ரத்த சோகையுள்ளவா்கள் விகிதம் 57.2%. அதே வயதுப் பிரிவில் கா்ப்பிணிப் பெண்களில் ரத்த சோகையுள்ளோா் விகிதம் 52.2%.
- அதே ஆய்வு பெண்கள் மத்தியில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வது அதிகரித்து வருவதையும் தெரிவிக்கிறது. நகா்ப்புறத்தைவிட கிராமங்களில் பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வது அதிகமாகக் காணப்படுவதாகவும், அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கும் ஆய்வு இன்னொன்றையும் குறிப்பிடுகிறது. அகில இந்திய அளவில் ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வது 0.3% என்கிற அளவில் தேக்கம் அடைந்திருக்கிறது.
- குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையின்போது ரத்தப் போக்கு காரணமாக ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மகளிா் உயிரிழக்கிறாா்கள். லட்சக்கணக்கான பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். கணக்கெடுப்பில் இருந்து ரத்த சோகை அகற்றப் படுவதன் மூலம் அதுகுறித்த உண்மைநிலை மறைக்கப்படுகிறது; அதற்குத் தீா்வு காண்பது தவிா்க்கப்படுகிறது. இது தவறான முடிவு.
நன்றி: தினமணி (17 – 07 – 2023)