TNPSC Thervupettagam

ரத்தக் கொதிப்பில் இத்தனை வகைகளா?

October 26 , 2024 3 days 22 0
  • ‘பி.பி.’ குறித்த அடிப்படையான விஷயங்களைப் பார்த்துவருகி றோம். ‘ஒய்ட் கோட்’ ரத்தக் கொதிப்பு தொடர்பாகப் பேசும்போது அதற்கு நேர்மாறாக ஒரு வகை ரத்தக் கொதிப்பு இருக்கிறது என்று சொன்னோம். அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

மறைக்கப்பட்ட ரத்தக் கொதிப்பு:

  • ஓய்வுபெற்ற பொறியாளர் ஒருவர் என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு ரத்தக் கொதிப்பு உண்டு. விநோதம் என்ன வென்றால், என்னிடம் வரும்போதெல்லாம் அவருக்கு ‘பி.பி.’ சரியாகவே இருக்கும். வீட்டுக்குச் சென்றதும் ‘பி.பி.’ கூடிவிடும். உடனே பதறிப்போய் அலைபேசியில் என்னை அழைப்பார். “பயப்பட ஒன்றுமில்லை. ரத்தக் கொதிப்பில் இது ஒரு வகை. கொடுத்த மாத்திரை யைச் சாப்பிடுங்கள். சரியாகிவிடும்” என்று சமாதானப்படுத்துவேன்.
  • ஒருவருக்கு மருத்துவமனையில் ‘பி.பி.’ சரியாக இருந்து, வீட்டிலோ வெளியிலோ ‘பி.பி.’ அதிகமாக இருந்தால், அதற்கு ‘மறைக்கப்பட்ட ரத்தக் கொதிப்பு’ (Masked hypertension) என்று பெயர். பெரும்பாலும் வயதில் மூத்தவர்கள், புகைபிடிப்பவர்கள், மது போதையில் இருப்ப வர்கள் ஆகியோருக்குத்தான் இது ஏற்படும். டாக்டரிடம் வரும்போது ‘பி.பி.’ சரியாக இருக்கிறது என்பதற்காக இவர்கள் ‘பி.பி.’ மாத்திரை எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடக் கூடாது என்பது முக்கியம். காரணம், ‘ஒய்ட் கோட்’ ரத்தக் கொதிப்பைவிட மறைக்கப்பட்ட ரத்தக் கொதிப்பு ஆபத்தானது.

தற்காலிக ரத்தக் கொதிப்பு:

  • ஒருவருக்கு முதல் முறையாக ‘பி.பி.’யை அளக்கும்போது, ஒரேஒரு முறை மட்டும் அளந்துவிட்டு, அவருக்கு ரத்தக் கொதிப்பு இருக்கிறது என்று ‘நோய் முத்திரை’ குத்தக் கூடாது. காரணம், ‘பி.பி.’என்பது இயல்பாகவே மாறிக் கொண்டு இருக்கிற ஓர் உடலியல் நிலை. மகிழ்ச்சி, கவலை, கோபம், பயம், ஓட்டம், அதிர்ச்சி, உறக்கம், உடற்பயிற்சி போன்றவற்றுக்குத் தகுந்தவாறு ‘பி.பி.’ சிறிது அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். உதாரணமாக, உணர்வுவயப்படும்போது இது ரொம்பவே எகிறிவிடும். இது தற்காலிக மாற்றம்தான். உடலும் மனமும் ஓய்வுகொள்ளும்போது ‘பி.பி.’ நார்மல் ஆகிவிடும். இதுபோல், கர்ப்பக் காலத்தில் சில பெண்களுக்கு ‘பி.பி.’ அதிகரிக்கும். குழந்தை பிறந்தவுடன் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.
  • ஆகவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் நான்கு அல்லது ஐந்து முறையாவது ‘பி.பி.’யை அளந்து பார்த்து, அதில் பெரும்பாலான அளவுகள் ‘பி.பி.’ அதிகமாக இருப்பதை உறுதி செய்தால் மட்டுமே அவருக்கு ரத்தக் கொதிப்பு உள்ளது என்று தீர்மானிக்க வேண்டும்.

அதிகாலை ரத்தக் கொதிப்பு:

  • ‘பி.பி.’ மாறும் தன்மையில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. சிலருக்கு உறங்கும்போது குறைவாகவும் உறங்கி எழுந்த முதல் ஒரு மணி நேரத்துக்கு மிக அதிகமாகவும் ‘பி.பி.’ இருப்ப தாகக் கண்டிருக்கிறார்கள். கண் விழித்ததும் காலைநேரப் பரபரப்பு ஒட்டிக்கொள்வதுதான் இதற்குக் காரணம் என்றும் கண் டறிந்திருக்கிறார்கள். அதுபோல், பணிக்குச் செல்வோர் பலருக்கும் திங்கள்கிழமை காலையில் ‘பி.பி.’ அதிகரிப்பதைப் பல ஆய்வுகளில் உறுதி செய்திருக்கி றார்கள்.
  • அந்த வாரப் பணி அழுத்தங்களும் இலக்குகளும் கண் முன்னே விரிவதால் ஏற்படும் ஒரு வகை விபரீதம் இது. அத்துடன், வார இறுதியில் குடித்த மதுவின் தாக்குதல் காலை வரை நீடிப்பதும் ஒரு காரணம் என்கிறார்கள்.
  • இதை உறுதிசெய்யும் விதமாக, காலையில் உறங்கி எழுந்த முதல் ஒரு மணி நேரத்தில்தான் அதிக அளவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பல கணக்கெடுப்புகள் பதிவுசெய்துள்ளன. இரவில் நன்றாக உறங்கி, காலையில் எழுந்தவுடனேயே காலில் சக்கரம் மாட்டிக் கொண்டது போன்று பரபரப்பாக வேலைகள் செய்வதைக் குறைத்துக்கொண்டால் இந்த ஆபத்துகளைத் தவிர்க்க முடியும். அலுவலக இலக்குகளுக்குப் போதிய திட்டங்கள் வகுத்துக் கொள்வதும் முக்கியம்.

தனித்த ரத்தக் கொதிப்பு:

  • ரத்தக் கொதிப்பில் மற்றொரு ‘விஐபி’ வகை இருக்கிறது. அதற்கு ‘தனித்த சிஸ்டாலிக் ரத்தக் கொதிப்பு’ (Isolated Systolic Hypertension) என்று பெயர். இதில் சிஸ்டாலிக் ‘பி.பி.’ மட்டும் 140க்கு மேல் உச்சம் தொடும். டயஸ்டாலிக் ‘பி.பி.’ 90க்கும் குறைவாக இருக்கும். அடுத்து, ‘அவசர கால ரத்தக் கொதிப்பு’ (Hypertensive urgency) என்றும் ஒரு வகை இருக்கிறது. அதில் சிஸ்டாலிக் ‘பி.பி.’ 180க்கு மேல் எகிறும். டயஸ்டாலிக் ‘பி.பி.’ 120க்கு மேல் குதிக்கும். மேலும், மறைந்திருந்து தாக்குவதுபோன்று அறிகுறி தெரியாமல் இருந்து, இதயத்துக்கும் மூளைக்கும் திடீர் ஆபத்து தருகிற மோசமான ரத்தக் கொதிப்பு (Hypertensive emergency) ஒன்றும் இருக்கிறது.

ரத்தக் கொதிப்பு நிலைகள்:

  • இதுவரை சொல்லப்பட்டதெல்லாம் ‘சிறப்பு’ ரத்தக் கொதிப்பு வகைகள். இனி,எல்லாருக்கும் பொதுவான ரத்தக் கொதிப்பு வகைகளைப் பார்ப்போம். தேசியச்சுகாதாரப் பணிகள் கழகத்தின் (NHM) பரிந்துரைப்படி, 18 வயதுக்கு மேல் உள்ள வர்களுக்கு ‘பி.பி.’ அளவுகளை மருத்துவர்கள் மூன்று நிலை களாகப் பிரிக்கின்றனர்.
  • சிஸ்டாலிக் ‘பி.பி.’ 140 – 159 வரையிலும், டயஸ்டாலிக் ‘பி.பி.’ 90 – 99 வரையிலும் இருந்தால், அது ரத்தக் கொதிப்பு நிலை – 1. சிஸ்டாலிக் ‘பி.பி.’ 160 – 179 வரையிலும் டயஸ்டாலிக் ‘பி.பி.’ 100 - 109 வரையிலும் இருந்தால் அது ரத்தக் கொதிப்பு நிலை – 2. சிஸ்டாலிக் ‘பி.பி.’ 180க்கு மேல், டயஸ்டாலிக் ‘பி.பி.’ 110க்கு மேல் இருந்தால் அது ரத்தக் கொதிப்பு நிலை – 3.
  • இப்படி ‘வகுப்பு’ பிரிப்பதற்குக் காரணம் இருக்கிறது. பயனாளிக்கு ரத்தக் கொதிப்பு எந்த நிலையில் இருக்கிறதோ, அதைப் பொறுத்துத்தான் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகப் பாதிப்பு, கண் பாதிப்பு போன்ற விபரீதங்களும் ஏற்படும். அதை மருத்துவர்கள் அறிவார்கள். ஆகவே, அவற்றைத் தடுப்பதற்குத் தகுந்தவாறும் சிகிச்சை முறைகளை அமைத்துத் தருவார்கள். உதாரணமாக, மருத்துவர் உங்களுக்கு ஒரு மாத்திரை மட்டும் தருகிறார் என்றால், உங்கள் ரத்தக் கொதிப்பு நிலை -1. உள்ளங்கை நிறைய மாத்திரைகளை அள்ளித் தருகிறார் என்றால், அது நிலை – 3 அல்லது அதற்கும் மேல்.
  • நிலைமை இப்படி இருக்க, ரத்தக் கொதிப்புக்கு மருத்துவ ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே மருந்துக் கடைக்குச் சென்று “தம்பி, ‘பி.பி.’க்கு ஒரு மாத்திரை கொடு!” என்று வாங்கிச் சாப்பிட்டால், உரிய பலன் கிடைக்காது.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்