- அரசுக்கு மிக பெரிய அளவில் வருவாய் ஈட்டித்தர வேண்டிய இந்திய ரயில்வே அரசின் வரிப்பணத்தை கபளீகரம் செய்யும் வெள்ளை யானையாக மாறிவிட்டிருக்கிறது.
- ரயில்வே நிர்வாகம் முறையான கவனமோ, கண்காணிப்போ இல்லாமல், கட்டுக்கடங்காத நிலைமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அரசின் கவனம் இந்திய ரயில்வேயின் மீது திரும்பியிருப்பது வரவேற்புக்குரியது.
- இந்திய ரயில்வேயின் கொள்கை முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரம் படைத்ததாக ரயில்வே ஆணையம் மாற்றி அமைக்கப்படுவது மிக முக்கியமான முடிவு.
- இந்தியாவில் முதல் ரயில் ஓடியது தமிழகத்தில்தான். 1837-இல் செங்குன்றத்தில் இருந்து சாலைப் பணிகளுக்காக சிந்தாதிரிப்பேட்டை பாலம் வரை இருப்புப் பாதை போடப்பட்டு, கற்கள் ரயிலில் கொண்டு செல்லப்பட்டன.
- ஹார்தர் காட்டன் என்பவரால் அந்த ரயில் பெட்டிகள் உருவாக்கப்பட்டன. மும்பையிலுள்ள போரி பந்தரிலிருந்து 400 பயணிகளுடனும், 14 பெட்டிகளுடனும் தானே வரை 34 கி.மீ. தூரம் 1853 ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.
ரயில் போக்குவரத்து
- இப்போது புறநகர் ரயில்களும், தொலைதூர ரயில்களுமாக 20,000-க்கும் அதிகமான பயணிகள் ரயில்கள் இயங்குகின்றன. 7,349 ரயில் நிலையங்கள், 2,77,987 சரக்குப் பெட்டிகள், 70,937 பயணிகள் பெட்டிகள், 11,452 ரயில் என்ஜின்கள், 13 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் என்று ஒரு பிரம்மாண்ட போக்குவரத்து நிறுவனமாக இந்திய ரயில்வே வளர்ந்திருக்கிறது.
புள்ளிவிவரம்
- மார்ச் 2017 நிலவரப்படி 67,368 கி.மீ. நீள இருப்புப் பாதைகளுடன் உலகின் 4-ஆவது பெரிய ரயில் போக்குவரத்து அமைப்பாக இருக்கும் இந்திய ரயில்வே, 2018 மார்ச் புள்ளிவிவரப்படி 826 கோடி பயணிகளையும், 116 கோடி பில்லியன் டன் சரக்குகளையும் ஆண்டுதோறும் கையாள்கிறது. இவ்வளவு பெரிய ரயில்வே துறை, நியாயமாகப் பார்த்தால் லாபம் கொழிக்கும் துறையாக இருந்திருக்க வேண்டும்.
- ஆனால், ரயில்வே துறையின் முதலீட்டுக்கும் வருவாய்க்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி காணப்படுகிறது.
கணக்குத் தணிக்கை
- கடந்த 25 ஆண்டுகளில் ரயில்வேயை மேம்படுத்துவதற்கு பல்வேறு குழுக்கள் அரசால் நியமிக்கப்பட்டன. பிரகாஷ் தாண்டன் குழு (1994), ராகேஷ் மோகன் குழு (2001), சாம் பித்ரோடா குழு (2012), விவேக் தேவ்ராய் குழு (2015) ஆகியவை பல்வேறு பரிந்துரைகளைச் செய்தும்கூட, அவை குறித்து மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.
- நாடாளுமன்றத்தில் கணக்குத் தணிக்கை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில் ரயில்வே துறையின் நிதிநிலைமை குறித்து கடுமையான எச்சரிக்கையை முன்வைத்த பிறகுதான் இப்போது அரசு விழித்துக்கொண்டு சில மாற்றங்களை மேற்கொள்ள முன்வந்திருக்கிறது.
- 2017 - 18 நிதியாண்டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வரவு - செலவு விகிதத்தை ரயில்வே துறை எதிர்கொண்டது. ரயில்வே ஈட்டிய ரூ.100 வருவாயில், ரூ.98.44 நிர்வாக செயல்பாட்டுக்கான செலவினங்கள். ரயில்வேயின் நிகர வருவாய் உபரி 2016 - 17-இல் ரூ.4,913 கோடியாக இருந்தது, 2017 - 18-இல் ரூ.1,665.61 கோடியாகக் குறைந்திருப்பதை கணக்குத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
- இந்த நிலையிலிருந்து ரயில்வே துறையை மீட்டெடுக்க வேண்டுமானால், அதிரடியான சில நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும் என்பதை அந்த அறிக்கை உணர்த்தியது.
- முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது, அதிக அளவில் சரக்கு ரயில்களை இயக்கி வருவாயை அதிகரித்தார். அதன் பின்விளைவை இப்போது ரயில்வே சந்தித்துக் கொண்டிருக்கிறது. இருப்புப் பாதைகளின் தேய்மானம் கடுமையாக அதிகரித்ததால், இப்போது இருப்புப் பாதைகளை பெருமளவில் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
மாற்றங்கள்
- பயணிகள் கட்டணத்தில் பல்வேறு மாறுதல்களைச் செய்து, வருவாயை அதிகரிக்க ரயில்வே நிர்வாகமும், அரசும் முயற்சிகளை மேற்கொள்கின்றனவே தவிர, சரக்குப் போக்குவரத்தில் காணப்படும் மிகப் பெரிய ஊழல்களை ஒழித்து முறையான வருவாய் பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை.
- அதற்குக் கடைநிலை ஊழியர்களிலிருந்து உயரதிகாரிகள் வரை அனைவருமே உடந்தையாக இருக்கிறார்கள் என்கிற உண்மை தெரிந்தும்கூட, ஆட்சியாளர்கள் மெளனமாக இருப்பதற்கான காரணம் அவர்களது மனசாட்சிக்கு தெரியும்.
ரயில்வே ஆணையம்
- ரயில்வே ஆணைய உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்காகக் குறைக்கப்படுகிறது. தலைமை நிர்வாக அதிகாரி அந்த ஆணையத்துக்கு தலைமை வகிப்பார். பல துறைகள் இணைக்கப்படுகின்றன.
- இதன் அடுத்தகட்டமாக ராகேஷ் மோகன், விவேக் தேவ்ராய் குழுக்கள் பரிந்துரைத்திருப்பது போல ரயில்வே ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அந்த ஆணையம், ரயில்வே ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்துத் திருத்தங்களை வழங்க வேண்டும்.
- குறைந்த கட்டணத்தில் வசதியான பயணிகள் போக்குவரத்தாகவும், சரக்குப் போக்குவரத்தின் மூலம் வருவாய் ஈட்டுவதாகவும் ரயில்வேயின் குறிக்கோள் இருக்க வேண்டுமே தவிர, ஊழல் நிறைந்த சரக்குப் போக்குவரத்துப் பிரிவும், அதிகக் கட்டணமும், குறைந்த வசதிகளும் கொண்ட பயணிகள் போக்குவரத்துப் பிரிவும் தொடருமானால், ரயில்வே ஆணையத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் வழக்கம்போல ஏமாற்றங்களாகத்தான் முடியும்.
நன்றி: தினமணி (30-12-2019)