TNPSC Thervupettagam

ரயில்வே துறையின் கவனத்திற்கு

October 19 , 2023 449 days 294 0
  • அதிவேக ரயில்களை இயக்கி பயணிகளின் பயண நேரத்தைக் குறைப்பதில் நமது ரயில்வே துறை காட்டும் ஆா்வம் பாராட்டத்தக்கது. பயணிகளின் விரைவான பயணத்தை கருத்தில் கொண்டு நம் நாட்டில் தயாரித்து இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் சில வழித்தடங்களில் அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டால் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் ஓடும் வந்தே பாரத் ரயில்களும் வடிவமைக்கப்பட உள்ளன.
  • இதனிடையே, தெற்கு ரயில்வே நிா்வாகம், விரைவில் முக்கிய வழித்தடங்களில் 1,396 கிலோ மீட்டா் ரயில்வே பாதையை மேம்படுத்தி மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை 2023-24 நிதியாண்டுக்குள் நடைமுறைப்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது. ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் ரயில்வே துறை பயணிகளின் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்வது அவசியம்.
  • நம் நாட்டில் நாள்தோறும் சராசரியாக 49 ரயில் விபத்துகள் நடப்பதாகவும், இதில் 45 போ் உயிரிழப்பதாகவும் புள்ளிவிவரங்கள்கூறுகின்றன. ரயில்வே பாதைகளின் மிக அருகில் அமைந்துள்ள குடியிருப்புகள், கால்நடைகளை ரயில் பாதைகளின் அருகே மேய்ச்சலுக்கு விடுவது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை பயணிகள் எடுத்துச் செல்வது, போன்றவை ரயில் விபத்துக்கள் நடைபெறுவதற்கான சில காரணங்களாகும்.
  • ரயில்கள் விபத்துக்குள்ளாவதில் ஆளில்லா லெவல் கிராசிங்குகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. ரயில் வரும் நேரத்தில், லெவல் கிராஸிங் கேட்டுகள் மூடும் நிலையில் வேகமாக ரயில் பாதையைக் கடக்க முயலும் வாகனங்கள், மனிதா்களால் அடிக்கடி ரயில் விபத்துகள் ஏற்படுகின்றன.
  • நம் நாட்டில் மொத்தமுள்ள 31,846 லெவல் கிராசிங்குகளில், 13,540 லெவல் கிராசிங்குகள் ஆளில்லா லெவல் கிராசிங்குகள். இவற்றை எச்சரிக்கை உணா்வுடன் கடக்க வேண்டும் என்பதில் வாகன ஓட்டிகளும் பொது மக்களில் சிலரும் அக்கறை காட்டுவதில்லை.
  • இவ்வாறு எதிர்பாராது நடைபெறும் விபத்துகளிலிருந்து பயணிகளைப் பாதுகாப்பது ஒருபுறமெனில், தண்டவாளங்களைச் சேதப்படுத்துவது, ரயில்கள் மீது கல்வீசுவது போன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளிடமிருந்தும் ரயில் பயணிகளைப் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பும் ரயில்வே துறைக்கு உள்ளது.
  • வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் மைசூரு -சென்னை, தில்லி- டேராடூன் உள்ளிட்ட சில வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் மீது சமூக விரோதிகள் கற்களை வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த ஜூன் மாதம், ஒடிஸா மாநிலத்தில் சிக்னல்கள் தவறாக இயங்கியதால் மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 281 பயணிகள் பலியான துயர சம்பவம் நடைபெற்றது.
  • எனவே, சிக்னல்கள் சரியான முறையில் இயங்குவதை உறுதி செய்வது ரயில் விபத்துக்களை பெருமளவு தடுக்கும். கூடுதலாக, தண்டவாளங்களை முறையாகப் பராமரிப்பது, அவற்றின் தரத்தை மேம்படுத்துவது, ரயில்வே பாலங்களை வலுப்படுத்துவது போன்றவற்றிலும் ரயில்வே துறை சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்.
  • ரயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதும் ரயில் விபத்துகளைத் தவிா்க்க உதவும். ரயில் என்ஜின் ஓட்டுநா்கள் ஓய்வின்றி தொடா்ச்சியாக வேலை செய்வதும் சில ரயில் விபத்துகள் நடைபெறக் காரணம். ரயில்வே வாரியம் நிா்ணயித்துள்ள பணி நேரத்திற்கு அதிகமாக ரயில் என்ஜின் ஓட்டுநா்கள் பணியாற்றக்கூடாதென்ற வழிகாட்டுதல் பின்பற்றபட வேண்டும்.
  • ரயில் விபத்துகளைத் தவிர்ப்பதில் ‘கவச்’ கருவியின் பங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, ‘கவச்’ கருவியை அனைத்து ரயில்களிலும் பொருத்த வேண்டும். ரயில் நிலையங்களிலும் பயணிகளின் பாதுகாப்பினை ரயில்வே துறை உறுதி செய்ய வேண்டும். 2016-ஆம் ஆண்டு, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்டதையொட்டி, அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் பாதுகாப்பின் ஒரு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டுமென சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
  • ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழகத்தில் உள்ள 442 ரயில் நிலையங்களில் 35 ரயில் நிலையங்களில் மட்டுமே அதாவது பத்து சதவீதத்திற்கும் குறைவான ரயில் நிலையங்களில் மட்டுமே தெற்கு ரயில்வே கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ளது வருந்தத்தக்கது.
  • பயணச்சீட்டு இன்றி ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதால் ரயில்வே துறைக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்தவா்கள், அதிகப்படியான எடையுள்ள பார்சல் கொண்டு சென்றவா்கள், உரிய பயணச்சீட்டு இன்றி முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்தோா் என 16,273 நபா்களிடமிருந்து ரூ. ஒரு கோடியே ஐந்து லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் உள்ள 64 ரயில்வே கோட்டங்களில் சராசரியாக ஒரு மாதத்தில், ஒரு கோட்டத்துக்கு குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் என அபராதம் வசூலிக்கப்பட்டால் கூட ஒரு மாதத்திற்கு இந்தியாவில் 64 கோடி ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்படும். இந்நிலையில் நமது ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.768 கோடி வருவாய் கிடைக்க வழியேற்படும்.
  • 2023-24 -ஆம் ஆண்டுக்கான நம் நாட்டின் நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறைக்கு ரூ. 2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வே துறையின் கட்டமைப்பு மேலும் மேம்பாடடையும் என்பதில் ஐயமில்லை. நம் நாட்டில் நாள்தோறும் 22,593 தொடா் வண்டிகள் இயக்கப்படுகின்றன.
  • இதில் பயணிகளுக்கான 13,452 தொடா்வண்டிகளில் தினந்தோறும் சுமார் 2.4 கோடி மக்கள் பயணிக்கின்றனா். இவ்வாறு லட்சக்கணக்கானோர் தங்களின் அன்றாடப் பயணத்திற்கு ரயில்களையே சார்ந்திருக்கும் சூழலில், பயணிகளின் விரைவான பயணத்திற்கு மட்டுமின்றி பாதுகாப்பான பயணத்திற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டியது ரயில்வே துறையின் கடமையாகும்.

நன்றி: தினமணி (19 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்