TNPSC Thervupettagam

ரயில்வே பணியாளர் பற்றாக்குறை முடிவுக்கு வர வேண்டும்

September 23 , 2024 115 days 122 0

ரயில்வே பணியாளர் பற்றாக்குறை முடிவுக்கு வர வேண்டும்

  • இந்தியாவில் பயணிகள், ரயில்கள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்கும் வகையில், ரயில்வே துறையில் போதுமான அளவுக்குப் பணியாளர்கள் இல்லை என்பது நீண்ட நாள் முறையீடாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில் விபத்துகள் ஏற்படுவது அதிகரித்துள்ளதற்குப் பணியாளர்களின் பணிச்சுமையும் பற்றாக்குறையும் முதன்மைக் காரணமாகக் கூறப்படுகின்றன. இந்நிலையில், அண்மையில் ரயில்வே வாரியத்தின் தலைவர் - தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள சதிஷ் குமார், பணியாளர் பற்றாக்குறை குறித்து நிதித் துறை அமைச்சகத்துக்கு எழுதியிருக்கும் கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது.
  • 2021 நிலவரப்படி, இந்தியாவில் சராசரியாக 13,555 ரயில்கள் பயணிகளுக்காகவும் சரக்குகள் எடுத்துச்செல்வதற்காகவும் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 2 கோடி பேர் பயணம் செய்கின்றனர்; 150 கோடி டன் சரக்குகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. மொத்தம் 18 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள ரயில்வேயில், மத்திய மண்டலத்தில் மட்டும் ஏறக்குறைய 50% காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ரயில்களை இயக்குவது, பராமரிப்பது ஆகிய பணிகளை உள்ளடக்கிய பயணிகளது பாதுகாப்பு நோக்கிலான துறைகளில் மட்டும் இவ்வளவு பற்றாக்குறை இருப்பது கவலையளிக்கிறது.
  • கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேயில் 31,000 கிமீ வழித்தடம் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. 2019-2024 காலக்கட்டத்தில் 772க்கும் மேற்பட்ட புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. 2019இல் இருந்த இன்ஜின்களின் எண்ணிக்கை, 2024இல் 59.86% உயர்த்தப்பட்டுள்ளது. புதிய இன்ஜின்களை இயக்குவதற்கு மட்டுமல்லாமல், இந்தக் கட்டமைப்பைப் பராமரிப்பதற்கும் போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் வேண்டும்.
  • ரயில் நிலையங்களில் உள்ள மின்படிகள் (எஸ்கலேட்டர்), மின்தூக்கிகள் போன்றவற்றின் எண்ணிக்கையும் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. இன்றைய சூழலின் தேவை கருதி, வந்தே பாரத் உள்படப் புதிய ரயில்களும் சேவைகளும் தொடங்கப்படுவது வரவேற்கத்தக்கது; எனினும், அவற்றை நிர்வகிக்கத் தேவையான விகிதத்தில் பணியாளர் நியமனமும் நடைபெற வேண்டும்.
  • வருவாய் நோக்கில் அரசுக்குத் திருப்தி அளிக்கும் விதத்தில்தான் இந்திய ரயில்வேயின் செயல்பாடு உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் பயணிகள் ரயில்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் 40 சதவீதமும் சரக்கு ரயில்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் 31.40 சதவீதமும் அதிகரித்துள்ளன.
  • புதிய பணியாளர் நியமனத்துக்குப் பொருளாதாரத் தடைகள் இருக்க வாய்ப்பு இல்லை. எனினும், பணிகளை மின்னணு மயமாக்குதல், பணி அயலாக்கம் (அவுட்சோர்சிங்) ஆகிய நடவடிக்கைகள் மூலம் பணியாளர்களுக்கான இடங்கள் குறைக்கப்படுகின்றன. எனினும் மனிதர்களின் நேரடிப் பங்களிப்பு இன்றிப் பல வேலைகள் தேக்கமடைவதும் வேலையின் தரம் குறைவதும் தொடர்ந்து சுட்டிக்காட்டப்படுகின்றன.
  • ரயிலின் ஒரு பெட்டிக்கு ஒரு பயணச்சீட்டு பரிசோதனை அதிகாரி (டிடிஇ) இருந்த நிலை மாற்றப்பட்டு, தற்போது ஒரு ரயிலுக்கே மொத்தமாக இரண்டு அல்லது மூன்று அதிகாரிகள்தான் உள்ளனர். ஓட்டுநர்கள் பற்றாக்குறையாக இருப்பதால், ஒரே பணியாளரே தொடர்ந்து இரண்டு ஷிஃப்ட்கள் ரயிலை இயக்க வேண்டிய நிலையும்கூட இருப்பதாக ரயில்வே தொழிலாளர் அமைப்புகள் முறையிட்டு வருகின்றன. இது சில வேளைகளில் விபத்துகளுக்கு வழிவகுப்பதும், அது ஓட்டுநரின் தவறாகவும் அலட்சியமாகவும் மட்டுமே சித்திரிக்கப்படுவதும் புதிதல்ல.
  • இந்தச் சூழலில்தான், பணியாளர் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வு தேவை என ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் சதிஷ் குமார் சரியாகவே சுட்டிக்காட்டியிருக்கிறார். ரயில்வே துறைக்குள்ளிருந்து எழுந்திருக்கும் இந்த முக்கியக் குரலுக்குச் செவிமடுத்து, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசு முன்வர வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்