TNPSC Thervupettagam

ராஜஸ்தான் நீ அல்லது நான் ஆட்டம்

November 27 , 2023 411 days 274 0
  • பல வகைகளிலும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது 2024 மக்களவைத் தேர்தல். அதற்கு முந்தைய கடைசித் தேர்தலான மிஸோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா - ஐந்து மாநிலத் தேர்தலை அரசியல் ஆர்வமுடைய எவரும் கவனிப்பது அவசியம்.
  • பத்தாண்டுகளில் பிரதமர் மோடியும், பாஜகவும் எத்தகைய மாற்றங்களைத் தேர்தல் களத்திலும் சமூகத்திலும் உருவாக்கியுள்ளனர் என்பதை மிக நெருக்கமாகக் காட்டும் தேர்தல் இது. அரிதாக, பாஜகவுக்கு இணையாகவோ, பாஜகவைக் காட்டிலும் பலமாகவோ காங்கிரஸ் உள்ள மாநிலங்கள் இவை.
  • 2014 மக்களவைத் தேர்தல் சமயத்தில் நாடு தழுவிப் பயணித்து, ‘இந்தியாவின் வண்ணங்கள்’ தொடரை எழுதிய சமஸ், 2024 மக்களவைத் தேர்தலை ஒட்டிய பயணத்துக்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தலை ஒட்டிப் பயணித்தார். தேர்தல் மாநிலங்களின் வரலாற்று - சமூக - அரசியல் பின்னணியுடன் அந்தந்த மாநிலத்தவர்களுடனான உரையாடலின் அடிப்படையில் 5 மாநிலங்களின் சூழலையும் இங்கே தருகிறார்.
  • முன்னதாக ‘தினமலர்’ இதழில் வெளியான கட்டுரைகளின் முழு வடிவம் இப்போது ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகிறது.
  • ஆம்பர் கோட்டையிலிருந்து இந்தக் கதையை ஆரம்பிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். “நீங்கள் நிற்கும் இடத்தில்தான் பேரரசர் அக்பர் தன்னுடைய ராஜப்புத்திர மனைவியிடம் மனதைப் பறிகொடுத்தார். அக்பருக்குப் பிடித்தமான மனைவி அவள். பேரழகி. பிகராசமானவள். அன்பானவள். கண்ணியமானவள். நேர்மையானவள். படுபுத்திசாலித்தனமாவள். இந்த ஆம்பர் ராஜ்ஜியத்தின் சிற்றரசராக இருந்த ராஜா பர்மாலுடைய மூத்த மகள் அவள்.  தன்னுடைய அரசியல் எதிரிகளை எதிர்கொள்ள அக்பருடன் உறவை உண்டாக்கிக்கொண்ட ராஜா பர்மால் தன்னுடைய மகளை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்து உறவைப் பலப்படுத்திக்கொண்டார். அரசியல் திருமணம்தான் அது. ஆனால், அக்பர் மனதை அவள் வென்றாள்.
  • அக்பரின் மனைவியரிலேயே அவருக்கு மிகவும் பிடித்தமானவள் அவள். தன்னுடைய இந்து மனைவிக்காக அந்தப்புரத்தில்  சிறு கோயிலை நிர்மாணித்துத் தந்திருந்தார் அக்பர். அவளுடைய தந்தையான ராஜா பர்மாலுக்கு கௌரவமிக்க இடத்தை அரசவையில் வழங்கினார். அவளுடைய சகோதரன் மான்சிங் அக்பருடைய படையில் முக்கியமான தளபதி ஆனான். அதோ தெரிகிறதே அந்த ஜெய்கர் கோட்டை மான்சிங் கட்டியாண்டது. கீழே தெரிகிறதே, இந்த ஜெய்ப்பூர் நகரம் மான்சிங் உருவாக்கியது. ராஜபுத்திரர்களில் கணிசமானவர்கள் அக்பரைத் தங்களுடையவராகக் கண்டார்கள். அக்பருக்கு அன்பை மட்டும் அல்லாது, ஆலோசனைகளை வழங்குபவளாகவும் அவள் இருந்தாள். அவளுடைய இயற்பெயர் என்னவென்று தெரியவில்லை.
  • அக்பரை மணந்த பின் அவளுடைய பெயர் மரியம் உஸ் ஜமானி என்று ஆயிற்று. ஜோதா என்ற பெயரால் தவறுதலாகப் பலரால் குறிப்பிடப்படுவது அவள்தான். அக்பருடைய அரசின் மத நல்லிணக்கத்துக்கும் தாராளத்தன்மைக்கும் பின்னணியில் அவளும் இருந்தாள்; முகலாய அரசின் நீடித்தத்தன்மைக்கு அவளுடைய சந்ததியே முக்கியமான காரணமாக இருந்தது. ஜஹாங்கீர் அவள் புதல்வர். ஷாஜஹான் அவளுடைய பேரன். வரலாற்றுக்கு ராஜஸ்தானுடைய  பெருங்கொடை எங்கள் மூத்தாள்.”
  • இன்றைய ராஜஸ்தான் சமூகத்தை ஒருவர் புரிந்துகொள்ள ராஜஸ்தானுடைய வரலாற்றைக் கொஞ்சமேனும் அறிந்திருப்பது அவசியம். ராஜஸ்தான் என்ற சொல்லுக்கு சம்ஸ்கிருதத்தில் ‘ராஜாக்களின் நிலம்’ என்று அர்த்தம். சுதந்திரத்துக்குப் பிறகு, 1949இல் ராஜஸ்தான் என்று ஒரு மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பு பல்வேறு ராஜாக்களின் கீழ் ஆளப்படுவதாக இந்த நிலம் இருந்தது. சிறிதும் பெரிதுமான இந்த 22 சமஸ்தானங்களில் பெரும்பாலானவை தனித்துவமான பண்பாட்டையும் பல்வேறு போக்குகளையும் கொண்டிருந்தன.
  • ராஜஸ்தானுடைய இன்றைய தலைநகர் ஜெய்பூரை ஒட்டியுள்ள ஆம்பர் கோட்டை அக்பருக்கும் மான்சிங்குக்கும் இடையிலான நெருக்கமான உறவை நமக்குச் சொல்கிறது என்றால், ஜெய்பூரிலிருந்து 310 கி.மீ. தொலைவில் உள்ள சித்தார்கரில் உள்ள சித்தார்கர் கோட்டை அக்பருக்கும் ரானா உதய்சிங்குக்கும் இடையிலான பகையைச் சொல்கிறது. ஜெய்பூரில் இந்து – முஸ்லிம் உறவின் வரலாறு வேறு; உதய்பூரில் இந்து – முஸ்லிம் வரலாறு வேறு. அதேபோல, ஜெய்சல்மர் பிராந்தியத்தில் பேசப்படும் ராஜஸ்தானி வேறு; கோட்டா பிராந்தியத்தில் பேசப்படும் ராஜஸ்தானி வேறு. ஒரே மாநிலமாக இன்று நின்றாலும், ஒவ்வொரு பிராந்தியத்தின் கடந்த கால வரலாறும், பண்பாடும் சமகால ராஜஸ்தானுடைய பண்பாட்டிலும் அரசியலிலும் பெரும் பங்காற்றுகின்றன.

ராஜஸ்தானின் முக்கியத்துவம்

  • நாட்டிலேயே அதிகமான நிலப்பரப்பைக் கொண்ட மாநிலமான ராஜஸ்தான் வாய்ப்புகளின் பிராந்தியம் என்று சொல்லலாம். இடையில் வளர்ச்சியில் பின்தங்கிய தேக்கத்திலிருந்து விடுபட்டு வேகமாக வளரும் மாநிலங்களில் ஒன்றாக அது மாறுகிறது. பஞ்சாப், ஹரியாணா, டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் என்று 6 மாநிலங்களை எல்லையில் கொண்டிருப்பதால், வசதியான வர்த்தகப் பாதையாக இன்று அடையாளம் காணப்படுகிறது. மாநிலம் முழுவதும் வியாபத்திருக்கும் தொல்லியல் களங்கள் சுற்றுலாத் தொழிலைக் கொழிக்க வைக்கிறது. பரந்திருக்கும் பாலை நிலம் சூரிய மின்சக்தி உற்பத்தி சாத்தியங்களை விரிக்கிறது.
  • அரசியல்ரீதியாக நாட்டின் இரு பெரும் தேசிய கட்சிகளுக்கும் ராஜஸ்தான் முக்கியமான களம். காங்கிரஸ், பாஜக இரண்டும் சம பலத்தோடு நிற்கும் மாநிலம் இது. மூன்றாவது சக்தி கண்ணுக்கு எட்டிய தொலைவில் இல்லை.
  • இன்று மக்களவையில் வெறும் 25 தொகுதிகளைக் கொண்ட நடுத்தர அளவிலான மாநிலமாக ராஜஸ்தான் கருதப்பட்டாலும், 2026க்குப் பின் கொண்டுவரப்படவுள்ள ‘தொகுதிகள் மறுவரையறை’யில் நாட்டிலேயே அதிகமான பலனை அடையவிருக்கும் மாநிலம் இது. 1971இல் 2.5 கோடியாக இருந்த ராஜஸ்தானுடைய மக்கள்தொகை இப்போது தமிழ்நாட்டுக்கு இணையாக 8.3 கோடியாக வளர்ந்திருக்கிறது (1971இல் தமிழ்நாட்டின் மக்கள்தொகை 4.11 கோடி). விளைவாக, மக்களவையில் ராஜஸ்தானுடைய பிரதிநிதித்துவம் 50 இடங்களாக – அப்படியே இரட்டிப்பாகி, பெரிய மாநிலம் எனும் இடம் நோக்கி அரசியல்ரீதியாகவும்  நகரவுள்ளது. ஆகையால், மத்திய – மாநிலம் இரு ஆட்சி பீடங்கள் சார்ந்தும் இது இழக்க முடியாத மையம்.

கெலாட் - வசுந்தரா

  • சுதந்திரத்துக்குப் பிந்தைய கால் நூற்றாண்டு காலம் அசைக்க முடியாதபடி மாநில அரசைத் தன்னுடைய கையில் வைத்திருந்தது காங்கிரஸ். மோகன் லால் சுஹாடியா ராஜஸ்தானின் பெரும் தலைவராக உருவெடுத்தார். மூன்று முறை முதல்வராக இருந்த இவருடைய ஆட்சிக் காலகட்டத்தில்தான் நவீன ராஜஸ்தானுக்கான பெரும்பான்மைக் கட்டமைப்புகள் உருவாயின. 1977இல் காங்கிரஸின் கோட்டையை உடைத்து ஆட்சியை அமைத்தார் பைரோன் சிங் ஷெகாவத்.
  • சென்ற மூன்று தசாப்தங்களாக ஒருமுறை காங்கிரஸ், ஒருமுறை பாஜக எனும் சுழற்சியிலேயே ராஜஸ்தான் ஆட்சி மன்றம் அமைகிறது. சென்ற கால் நூற்றாண்டில் ராஜஸ்தானில் உருவெடுத்த இரு பெரும் தலைவர்கள் என்று காங்கிரஸின் அசோக் கெலாட், பாஜகவின் வசுந்தரா ராஜே இருவரையும் குறிப்பிடலாம். நேரெதிர் பின்புலங்களைக் கொண்ட இருவருக்குமே மக்கள் பெரிய இடம் கொடுத்திருக்கிறார்கள் என்பதுதான் சுவாரஸ்ய முரண்.
  • ராஜஸ்தானில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கெலாட். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். தோட்டப் பணிகளோடு சம்பந்தப்பட்ட அவர் சாந்த மாலி சமூகத்துக்குப் பெரிய எண்ணிக்கை பலம் கிடையாது. மும்பையில் பிறந்தவரான ராஜே அடிப்படையில், மத்திய பிரதேசத்தின் குவாலியர் அரச குடும்ப வாரிசு. ராஜஸ்தானின் தோல்பூர் அரச குடும்ப வாரிசான ராணா ஹேமந்த் சிங்கை மணந்த வகையில் ராஜஸ்தானில் அடியெடுத்து வைத்தார். இல்லற வாழ்க்கை ஒரு ஆண்டோடு முறிந்துவிட்டாலும், ராஜஸ்தானோடு அவர் கலந்துவிட்டார். சாதியமைப்பு இறுக்கம் அடைந்த ராஜஸ்தான் சமூகத்தில், பொது அடையாளத்தை ஒரு தலைவர் அடைவது பெரும் சவால்.
  • இருவரும் தத்தமது கட்சியில் இதன் வாயிலாகவே அடைந்திருக்கிறார்கள். “நான் ராஜஸ்தானின் மகன்; எல்லோருக்கும் உரியவன் என்று கெலாட் பேசினால், நான் ராஜபுத்திரர்களின் மகள் ஜாட்டுகளின் மருமகள், குஜ்ஜர்களின் சம்பந்தி; எல்லோருக்கும் உரியவள் என்று வசுந்தரா பேசுவார். மக்களைப் பொறுத்தமட்டில் இருவரையும் பொதுவானவர்களாக ஏற்றுக்கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும்” என்கிறார்கள். “கெலாட் அமைதியானவர். எல்லோரையும் அனுசரிப்பார். கெலாட் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவருக்குப் பக்கத்தில் இருப்பவர்களால்கூட அறிய முடியாது. ராஜேவுக்கு கோபம் வந்தால் பொது மேடையாக இருந்தால்கூட முகத்தைக் காட்டிவிடுவார். தலைமை மீது அதிருப்தி என்றால்கூட வெளிப்படையாகக் கொட்டிவிடுவார்” என்கிறார்கள்.
  • ராஜபுத்திரர்கள், ஜாட்டுகள், குஜ்ஜர்கள் இந்த மூன்று செல்வாக்கு மிக்க சமூகங்களும் அரசியலதிகாரத்துக்கு முட்டி மோதும் சூழலில், மூன்று பின்னணியும் இல்லாத கெலாட் சமநிலையுடையவராகப் பார்க்கப்படுகிறார். வசுந்தராவுக்குப் பெண்கள் ஆதரவு இருக்கிறது. கட்டுப்பாடுகள் நிறைந்த சமூகத்தில் அவர் தலைக்கு மேல் அணியும் கூலிங் கிளாஸ், வண்ணமயமான உடைகள், ஆங்கிலப் பேச்சு, அலட்டலான அணுகுமுறை எல்லாமே பெண்களால் ரசிக்கப்படுவதை உணர முடிகிறது. மாநிலத்தில் 88% பேர் இந்துக்கள்; அடுத்த நிலையில் 9% முஸ்லிம்கள். முற்பட்ட சமூகத்தினர் கிட்டத்தட்ட 25% என்கிறார்கள்.
  • பிராமணர்கள் – பனியாக்கள் 15%. ராஜபுத்திரர்கள் 10%. பிற்படுத்தப்பட்டவர்கள் 44%. இவர்களில் ஜாட்டுகள் 8%, குஜ்ஜர்கள் 4%. கணிசமான தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் இடத்தில் இவர்கள் இருக்கிறார்கள். தலித்துகள் 18%. பழங்குடியினர் 13%. தலித்துகள் கணிசமான அளவில் இருந்தும், மாநிலம் தழுவிய செல்வாக்கில் இங்கு குறிப்பிடத்தக்க தலித் இயக்கமோ, தலைவர்களோ இல்லை. பொதுவாக, தலித்துகள், பழங்குடியினர், முஸ்லிம்கள்  காங்கிரஸ் ஆதரவுத் தளத்தில் அதிகமாகவும் பிராமணர்கள், பனியாக்கள், குஜ்ஜர்கள் பாஜகவுக்கு ஆதரவுத் தளத்தில் அதிகமாகவும் இருக்கின்றனர்.
  • கெலாட் – வசுந்தரா இருவரும் ராஜஸ்தான் அரசியல் கலாச்சாரத்தில் உருவாக்கியிருக்கும் ஒரு நல்ல மாற்றம் என்றால், கட்சியின் மாநிலத் தலைமைக்கு என்று ஒரு மரியாதையை உருவாக்கியிருப்பதைச் சொல்லலாம். தன் கட்சிக்கே அனுகூலம் வரும் என்றாலும், மாற்றுக் கட்சியின் அதிருப்தியாளர்களையோ, டெல்லியின் ஆட்டத்தையோ இருவரும் ஊக்கப்படுத்துவதில்லை.  விளைவாகவே இவர்களுக்கு முன்னிருந்த ஆட்சிக் கவிழ்ப்பு ஆட்டக் கலாச்சாரம் முடிவுக்கு வந்திருக்கிறது.
  • காங்கிரஸில் கெலாட்டோடு முரண்பட்டு, அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்களை உடைத்துக்கொண்டு பாஜகவுக்கு வர இளந்தலைவர் சச்சின் பைலட் முயன்றபோது, பாஜகவின் தேசிய தலைமையின் எண்ணத்துக்கு மாறாக அதற்கு முட்டுக்கட்டை போட்டவர் ராஜே. அதேபோல, பிற்பாடு அகில இந்திய கட்சித் தலைவராக கெலாட்டை ஆக்கிவிட்டு, ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட்டை நியமித்துவிடலாம் என்று காங்கிரஸின் தேசிய தலைமை முடிவெடுத்தபோது, தன்னுடைய ஆதரவாளர்கள் மூலம் அந்த முடிவை உடைத்தவர் கெலாட். இருவரும் ‘நீ அல்லது நான்’ விளையாட்டை தந்திரமாக விளையாடுகிறார்கள் எனும் பேச்சை இரு கட்சியினரிடமுமே கேட்க முடிந்தது.

மோதும் தலைமை

  • இரு கட்சிகளுமே எழுபதுகளில் இருக்கும் இருவரையும் ராஜஸ்தானிலிருந்து தூக்க விரும்புகின்றன. மாநிலத்தில் அடுத்த தலைமுறை அரசியல் தலைவர்கள் உருவாவதற்கு இவர்கள் தடையாக இருப்பதாக தேசிய தலைமைகள் நினைக்கின்றன. பாஜக முற்றிலுமாக வசுந்தராவை ஓரங்கட்டுகிறது; காங்கிரஸ் தேசிய அரசியல் நோக்கி கெலாட்டை நகர்த்த விரும்புகிறது.
  • பாஜக தலைமை இம்முறை தங்களுடைய முதல்வர் முகம் யார் என்று அறிவிக்கவில்லை; 2018 சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு ராஜே ஓரங்கட்டப்பட்டார். இந்த முறை பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் ராஜேவின் பெயர் இடம்பெறவில்லை; மாறாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேருடைய பெயர்கள் இடம்பெற்றிருந்தன; அடுத்த பட்டியலிலேயே ராஜே மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பெயர்கள் இடம்பெற்றது. காங்கிரஸ் தலைமை கெலாட்டுக்கு மிக நெருக்கமான மூத்த அமைச்சரான தாரிவால் பெயரை அறிவிப்பதைக் கடைசி நாள் வரை இழுத்தடித்தது; இன்னொரு சகாவான தர்மேந்திர ரத்தோருக்கான வாய்ப்பை நிராகரித்தது. கட்சி எல்லைக்கு அப்பாற்பட்டு, ‘ராஜஸ்தானின் தலைவிதி ராஜஸ்தானிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும்’ என்ற கெலாட் – வசுந்தரா அணுகுமுறை தேசிய தலைமைகளின் எரிச்சலுக்கு முக்கியமான காரணம்.  

இரு முன்மாதிரிகள்

  • களம் இப்போது மோடி எதிர் கெலாட் என்று அமைந்திருக்கிறது. பாஜகவின் நம்பிக்கை அதீதமானது என்று சொல்வதற்கு இல்லை. சென்ற இரு தசாப்தங்களில் பாஜக வெல்லும்போதெல்லாம் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றுவதையும், காங்கிரஸ் வெல்லும்போதெல்லாம், சுயேச்சைகள் உள்ளிட்டோரின் ஆதரவுடன்தான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருப்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.  அதேபோல, 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்குத் தெளிவான பெரும்பான்மையைக் கொடுத்தாலும், அடுத்த ஆறே மாதங்களில் நடந்த 2019 மக்களவைத் தேர்தலில், 58.5% வாக்குகளுடன் மாநிலத்தின் 25 மக்களவைத் தொகுதிகளையும் மோடிக்கு அளித்தவர்கள் ராஜஸ்தானியர்கள்.
  • ஆகையால், ஏனைய மாநிலங்களைப் போன்றே இங்கும் மோடி முகத்துடன் அது தேர்தலை எதிர்கொள்கிறது என்றாலும், வலுவான மனநிலையை அது கொண்டிருக்கிறது. ராஜஸ்தானைப் பொறுத்த அளவில் கெலாட்டும் இணையற்ற செல்வாக்கைக் கொண்டிருக்கிறார். பாஜகவினரேகூட “கெலாட் நல்லவர். கீழேயுள்ளவர்கள் ஊழல்கார்கள்” என்றுதான் பெரும்பாலும் பேசுகிறார்கள்.
  • முன்னுதாரணமற்ற பல நலத் திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறது கெலாட் அரசு. “ராஜஸ்தானின் ஒவ்வொரு வீடும் கெலாட் அரசின் ஏதோ ஒரு திட்டத்தின் பலனைப் பேசும்” என்ற காங்கிரஸின் பேச்சு அர்த்தபூர்வமானது. குறிப்பாக, ரூ.25 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கும் சிரஞ்சீவி திட்டம் பெரும் வரவேற்பை மக்களிடம் பெற்றிருக்கிறது.  “மோடி மாதிரியா; கெலாட் மாதிரியா என்று மக்கள் பதில் சொல்ல வேண்டிய தேர்தல் இது” என்கிறார்கள். கெலாட் வென்றால், அவருடைய மாதிரி ஒரு முன்மாதிரியாக உருவெடுக்கும்.
  • இரு கட்சிகளுக்குமே உள்ளடி மோதல்கள் எங்கே போய்விடும் என்ற கவலை இருக்கிறது. கட்சியை எதிர்த்து நிற்கும் 25 அதிருப்தி வேட்பாளர்கள் பாஜகவின் கவலை என்றால், சச்சின் பைலட்டுக்காக கடந்த முறை காங்கிரஸுக்கு வாக்களித்த அவர் சார்ந்த குஜ்ஜர் சமூகத்தினர் இந்த முறை அதிருப்தியில் இருப்பதால், 30 தொகுதிகள் நிலை என்னவாகும் என்ற கவலை காங்கிரஸைப் பீடித்திருக்கிறது.
  • பலரையும்போல, “அடுத்து யார் வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்?” என்று ஜெய்பூரில் இளநீர் விற்கும் முகேஷிடம் கேட்டேன். “இரண்டு பேரும் ஒன்றாகத்தான் ஓடிவருகிறார்கள்; கெலாட் மூக்கு கொஞ்சம் முன்னே தெரிகிறது, இல்லையா?” என்றார். கணக்குகள் அவ்வளவு எளிதாக இல்லை. தேர்தலில் வெல்கிறாரோ இல்லையோ, மக்கள் மனதை கெலாட் வென்றிருக்கிறார்!

நன்றி: அருஞ்சொல் (27 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்