- காந்திஜி 1927இல், “எனக்கு வாரிசாக விளங்கக்கூடியவர் அவர் ஒருவர்தாம்” என்று ராஜாஜியைப் பற்றிச் சொன்னார்: அரசியல்ரீதியில் அவர் காந்திஜியின் வாரிசு ஆகாவிட்டாலும் சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக ராஜாஜி விளங்கினார். மகாத்மாவுக்குப் பக்கபலமாக இருந்து, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியத் தளபதிகளுள், தென்னிந்தியர் இவர் ஒருவரே. ராஜாஜிக்கும் காந்திஜிக்கும் இடையிலிருந்த தொடர்பில் உள்ளார்ந்த சுவாரசியமும் உண்டு. அவ்விருவருக்குமான தொடர்பின் ஆழத்தினைச் சீடர், தூதர், சகா, கொள்கை விளக்க உரையாளர் முதலிய வார்த்தைகளால் முழுமையாக உணர்த்த முடியாது. புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் பின்னர் தீவிர காங்கிரஸ்காரராகவும் மாறியிருந்த ஸி.ஆர்.(ராஜாஜி), தென் ஆப்ரிக்க காந்தியின் அகிம்சை வழியே, இந்திய சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கான பாதை என உள்ளுணர்வால் உணர்ந்து தெளிந்து, மனதளவில் காந்தியைத் தனது குருவாகவே வரித்துக்கொண்டுவிட்டார்.
மறுமணம் மறுத்தார்
- அவரது மனைவி மங்கா காலமாகி ஓராண்டுக்குப் பிறகு, ஐயங்காரான ஸி.ஆரின் கட்சிக்காரர் ஒருவர், தமது மகளை ஸி.ஆர். மணந்துகொள்வாரா என்று கேட்டார். மனைவியை இழந்தவர்கள் மறுமணம் செய்துகொள்வது சகஜம்தான் என்றாலும் ஸி.ஆர். அந்த யோசனையை ஏற்காததுடன் கடுமையாகவும் பேசினார். “எனக்கு ஐந்து குழந்தைகள் போதும். ஆறாவதாக ஒரு குழந்தைக்கு நான் பொறுப்பேற்க விரும்பவில்லை” என்று கோபம் தொனிக்கப் பதிலளித்தார். உண்மை என்னவெனில், இளம் மனைவியின் மரணம் என்கிற ரூபத்தில் ஸி.ஆர்.மீது விழுந்த அடி, அவர் சிரத்தை எடுத்துக்கொள்கிற அம்சங்களைக் குறுக்கிவிடவில்லை. மாறாக, அவரது ஆத்மா விசாலமடைந்தது.
- அதன் பின்னர் அவர் வீட்டின் சுவர்களுக்குள்ளே குடும்பப் பொறுப்புகளில் அல்லாது, அரசியல் ஈடுபாட்டிலேயே அதிகமான மனநிறைவைக் கண்டார். காந்தியை அதுவரை சந்திக்காவிட்டாலும் அவரது வழியே இந்திய மண்ணில் பலன் கொடுக்கும் என்று உறுதியாக நம்பினார். மிதவாத காங்கிரஸ் தலைவர்களான கோகலேயும் எம்.ஃபிரோஸ்ஷா மேத்தாவும் 1915இல் இறந்துவிட்டார்கள். அடுத்த இரு வருடங்களில் பொங்கிப் பிரவகிக்கும் சக்தியுடன் அன்னி பெசன்ட்டும் உடல் பலவீனமடைந்திருந்தாலும் உள்ளத்தில் உறுதியுடன் இருந்த திலகரும் ஜனத் திரள்களின் சிந்தனைகளைக் கவர்ந்து விடுதலை அரசியல் அரங்கை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தனர்.
தண்டனையை ஏற்கத் தயார்
- காந்தியோ தென் ஆப்ரிக்காவின் கிராமப்புறத்தில் இருந்தார். தனது விசித்திரமான விதைகளை ஊன்றிக்கொண்டிருந்தார். அவை தென் ஆப்ரிக்காவில் முளைவிட்டன. அதற்கு இந்திய மண்ணில் பலன் கிடைக்குமா? பயிர் விளையும் என்று முதலில் உணர்ந்த இந்தியர்களுள் ஸி.ஆரும் ஒருவர். 1916 பிப்ரவரியில், ‘எம்.கே.காந்தி - இந்தியாவுக்கு அவர் விடுக்கும் செய்தி’ என்கிற தலைப்பில் ஸி.ஆர். எழுதிய கட்டுரை இதனை மெய்ப்பிக்கிறது. இக்கட்டுரையில் காந்தியின் சிந்தனைப் போக்கைப் பின்வருமாறு ஸி.ஆர். விளக்கினார்: “ஆங்கிலேயரைக் குறை கூறிப் பிரயோஜனம் இல்லை. அவர்கள் வருவதும் இங்கே இருப்பதும் நம்மால்தான்.
- அவர்களது நாகரிகத்தை நாம் ஏற்பதன் மூலம் அவர்களையும் நம்முடன் இருத்திக்கொள்கிறோம். ஒன்றுவிட்ட சகோதரர்கள்போல் விளங்கும் இந்திய வழக்கறிஞர்கள், நீதிபதிகள், போலீஸ்காரர்கள் ஆகியோர் காரணமாகத்தான் அந்நியர் ஆட்சி சாத்தியமாகிறது. பிரச்சினை தீர வழி இறக்குமதியான நாகரிகத்தை விரட்டியடிப்பதுதான். அதேநேரத்தில், பால்ய விவாகங்கள், சிறுமித் தாய்மார்கள், குழந்தைக் கைம்பெண்கள், பலதாரத் திருமணங்கள், மதத்தின் பெயரால் விபச்சாரம், மிருகங்களைப் பலியிடுதல் போன்றவை நமது நாகரிகத்தைச் சேர்ந்தவையல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று எழுதினார்.
- அநீதியான உத்தரவுகளையும் மனசாட்சிக்கு அருவருப்பான சட்டங்களையும் புறக்கணிக்கவும் அவற்றை மீறுவதால் கிடைக்கும் தண்டனையை ஏற்கவும் தயாராக இருந்தார் என்பதை ஸி.ஆர். சுட்டிக்காட்டினார். இவை வாய்கிழியப் பேசிய எந்தத் தீவிரவாதியும் செய்ய எண்ணாதவை. அதேநேரத்தில், இவை எந்த மிதவாதியும் மனம் வைத்தால் செய்யக்கூடியவை. “உறுதியுடன் இருந்து கஷ்டப்படவும் தயாரானால் மனிதனுடைய மனோபலத்துக்கு எல்லையே கிடையாது என்று தென் ஆப்ரிக்காவில் காந்தி செயலாற்றிக் காட்டியுள்ளார். கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் ஆன்ம பலத்தை ஆயுத பலத்துக்கு எதிராக நிறுத்தி வைக்கும் இந்த அணுகுமுறையை இந்தியர்கள் கையாள்வதா, இல்லையா என்பது மிகப்பெரிய கேள்வி. அது பற்றி ஏதேனும் ஒருகட்டத்தில் யோசித்துப் பார்த்தேயாக வேண்டும்.”
ஐவரில் முதன்மையானவர்
- 1916 இல் ‘எம்.கே.காந்தி - இந்தியாவுக்கு அவர் விடுக்கும் செய்தி’ என்ற கட்டுரையைச் சேலம் இலக்கியச் சங்கத்தில் ஸி.ஆர்வாசித்தார். பின்னால் அதே ஆண்டில் காந்தியை முதன்முதலாகப் பார்த்தார். உத்தரப் பிரதேசத்தில் காஷ்மீரப் பெற்றோருக்குப் பிறந்த ஜவாஹர்லால் நேருவுக்கு காந்தி எங்கோ தொலைவில் இருப்பவராகவும் மிக வித்தியாசமானவராகவும் அரசியலேஅறியாதவராகவும் தோற்றமளித்தார். இதற்கு ஓராண்டுக்கு முன்னதாக வல்லபபாய் பட்டேல் காந்தியை முதன்முதலாகப் பார்த்தார். குஜராத்தி குடியானவர் குடும்பத்தில் பிறந்திருந்த அவர், அப்போது சீட்டாடிக்கொண்டிருந்தார். காந்தியைப் பார்த்துவிட்டு, அவர் தம் மனதில் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாததால் ஆட்டத்தைத் தொடரத் திரும்பிவிட்டார். 1917இல், பிஹாரில் வழக்கறிஞராக இருந்த ராஜேந்திர பிரசாத், தமது ராஜதானியைச் சேர்ந்த சம்பாரணில் அவுரித் தோட்டத் தொழிலாளர்களிடையே காந்தி செயலாற்றுவதைப் பார்த்தார். புலமை மிக்கவரும் எழுத்தாளருமான அபுல் கலாம் ஆஸாத், வங்கத்தில் வாழ்ந்தார். அவர் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஐந்தாண்டு காலம் சிறையிலிருந்த பிறகு 1920இல் காந்தியைச் சந்தித்தார்.
- இந்த ஐவரும் - ஸி.ஆர்., நேரு, பட்டேல், பிரசாத், ஆஸாத் ஆகியோர் - காந்தியுடன் சேர்ந்தது மட்டுமல்ல; அடுத்த முப்பதாண்டுகளுக்கு - காந்தி படுகொலை செய்யப்படும் வரை - காந்தியின் அரசியல் சகாக்களுள் மையப் புள்ளிகளாகத் திகழ்ந்தனர். சுதந்திரம் பெற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேரு கூறியதுபோல், மக்கள் பொதுவாக இந்த ஐவரையும் காங்கிரஸ் மற்றும் சுதந்திரத்தின் காவலர்கள் என்று கருதினார்கள். இந்த ஐவரில் ஆஸாத் ஒருவரைத் தவிர மற்ற நால்வரும் வழக்கறிஞர்கள்; காந்தியும் அப்படியே. ஐவரில் காந்தியைச் சந்தித்த வரிசையில் நான்காவது இடம்பெறுபவர் ஸி.ஆர்.; ஆஸாத் கடைசி. ஆனால், காந்தியின் சக்தியை முதன்முதலாக உணர்ந்தவர் ஸி.ஆர்.தான் என உறுதியாகக் கருதுகிறேன். ஸி.ஆருக்குள்ளே அவரது மனம் அறிவுக்கும் முன்பாக எதிரொலிகளை எழுப்பியது.
ராஜாஜியின் இல்லத்தில்
- காந்தி மதராஸ் மாகாணத்துக்கு முதன்முதலாக வருகைதந்தபோது சேலத்திலிருந்து சென்னைக்குக் குடியேறியிருந்த ஸி.ஆரின் இல்லத்தில் தங்கியதும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், ‘ரௌலட் சட்ட’த்துக்கு எதிரான காந்தியின் போராட்ட வாழ்வு நிலைப்பாட்டில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியதும் அதற்கு ஸி.ஆருடன் காந்தி நடத்திய தொடர் உரையாடல் காரணமாக அமைந்ததும் ஸி.ஆரை முழு வீச்சில் களப்போராளி ஆக்கியதும் இந்திய விடுதலை வரலாற்றின் உணர்ச்சிகரமான பக்கங்கள். ராஜாஜியின் பொது வாழ்க்கைப் பணி, சுதந்திரத்துக்குப் பிறகும் அதிமுக்கியத்துவம் பெற்று விளங்கியது. பிரிட்டிஷ் அரசின் நடவடிக்கைகளை எதிர்த்ததுபோல் புதிய அரசின் போக்குகளையும் அவர் எதிர்த்தார்.
- சுதந்திரத்துக்காகப் போராடுபவர்களும், நிர்வாக ஆற்றல்மிக்கவர்களும் சிறந்த எழுத்தாளர்களாகவும் இருப்பதென்பது அபூர்வம்; ராஜாஜி அவ்விதம் இருந்தார். அவர் லஜ்ஜையின்றி ஆசைப்பட்டது ஒரே ஒரு விஷயத்துக்குத்தான்: ‘தாமும் மற்றவர்களும் நல்லவர்களாக வாழ வேண்டும்.’ அரசியலில் அவர் எப்படி இயங்குவார் என்பதை அனுமானிப்பது கடினமாக இருந்தாலும் தார்மிகக் கோட்பாட்டில் நிலைத்திருப்பார் என்பதில் ஐயமே இருந்ததில்லை. ராஜாஜியின் பொதுவாழ்க்கை இயல்பாகவே மூன்று பாகங்களாக அமைகிறது. 1937வரை அவர் அகிம்சாவாதியான ஒரு புரட்சியாளராக விளங்கி, பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தார். 1937 முதல் 1954 வரை - யுத்த ஆண்டுகள் நீங்கலாக அவர் பொறுப்பான பதவிகளை வகித்தார். ஐம்பதுகளின் இறுதி ஆண்டுகளில் அவர் மீண்டும் எதிர்ப்பாளராக மாறினார். இம்முறை அவர் எதிர்த்தது இந்திய ஆட்சியாளரை! 1972இல் மரணம் சம்பவிக்கும் வரை தனது விமர்சனத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தினார்.
- ‘ராஜாஜி: ஒரு வாழ்க்கை’ நூல் முன்னுரையின் மொழிபெயர்ப்பு (சுருக்கப்பட்ட வடிவம்); தமிழில்: கல்கி ராஜேந்திரன்.
- டிசம்பர் 10: ராஜாஜி பிறந்த நாள்
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 12 – 2023)