TNPSC Thervupettagam

ராணுவத்திற்கும் அஞ்சாத கவிஞர் சா வாய்!

November 17 , 2024 8 days 35 0

ராணுவத்திற்கும் அஞ்சாத கவிஞர் சா வாய்!

  • முதலாவது கவிஞரும் இரண்டாவது கவிஞரும் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு மூன்றாவது கவிஞர் எழுதினார்:
  • “தலையில் சுடுகிறார்கள்
  • ஆனால், அவர்களுக்குத் தெரியவில்லை
  • ‘புரட்சி’ எங்கள் இதயத்தில் வாழ்கிறது.”
  • மூன்றாவது கவிஞர் கொல்லப்பட்ட பிறகு, நான்காவது கவிஞர் ஒரு கவிதை எழுதினார்.
  • “உங்கள் இரத்தத்தைத் தரையுறிஞ்ச விடாதீர்கள்
  • இந்தப் போராட்டத்திற்கு
  • உங்கள் இரத்தம் சேகரமாகிக் குளமாகட்டும்.”
  • நான்காவது கவிஞர் மே 14, 2021இல் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, அவரது உடல் தீயில் கருகியது, எந்தக் கவிதையும் இல்லை, அதன்பின் சில கணம்.
  • பின்னர் கேட்டது இன்னொரு கவி முழக்கம்,
  • எங்களிடம் துப்பாக்கிகள் இல்லைதான் - ஆனால்
  • உருவிக் கையில் வைத்திருக்கும் போர்வாள்
  • அதைவிட வலிமை, அறிவீர்!
  • அந்தப் போர்வாள் கவிதைப் போர்வாள்!
  • துப்பாக்கிகளுக்கு எதிரே, வழக்கமற்ற, அசாதாரணமான போராயுதந்தானேயிது? (சும்மாவா சொன்னார்கள், “Pen is mightier than the sword” என்று?)

சரி, இந்நிகழ்வுகளுக்கான பின்புலம் என்ன?

  • வாங்க ... நமக்கு அருகிலிருக்கும் நாடென்பதால் கொஞ்சம் விலாவாரியாகவே பார்த்து மேற்செல்வோம்.
  • ‘சூரியன் மறையா’ப் பிரிட்டன் ஏகாதிபத்திய காலத்தில் – இந்தியாவைப் போலவே - ஒரு காலனி நாடாக இருந்த பர்மா  (தற்போது, மியான்மர்), நமக்குப் பின், 1948 இல் விடுதலையடைந்தது. ஆரம்பம் முதலே ராணுவப் பசலைதான் அந்நாட்டில்! முதல் ஏழரை + அரை (எட்டு) ஆண்டுகள் (1948 –1956) ராணுவத்தின் தலைமையில், பிரதமராக யு நூ பர்மாவை ஆண்டார். ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே பர்மாவின் முதல் பொதுத் தேர்தல் 1960இல் நடைபெற்றது. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றமும் ராணுவத்தின் ஆதிக்கத்தின் கீழ் இரண்டே ஆண்டுகள்தான் செயல்பட்டது (!). ஜெனரல் நி வின் தலைமையில்,1962 இல் –மீண்டும் ராணுவப் புரட்சி. அதன் விளைவாக, நி வின் ராணுவ ஆட்சி நீடித்தது, இருபத்தாறாண்டுகள். அங்கே பொறுத்துப் பொறுத்துப் பொங்கியெழுந்து 1988 இல் ஜெனரல் நி வின்னுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சிகள் வெடித்தன. பதவி நீக்கப்பட்ட ஜெனரல் நி வின்னுக்கு மாற்றாக - அப்போதும் - செப்டம்பர் 1988-ல் பர்மிய ராணுவத்தின் மூத்த படைத் தலைவர்களால் நிறுவப்பட்ட அமைதி மற்றும் வளர்ச்சிக் குழு கரங்களுக்கே ஆட்சி சென்றது.
  • இக்காலக்கட்டத்தில்தான் ஆங் சான் சூகி நாடாளுமன்ற ஜனநாயகத்திற்காகப் போராடிக் கொண்டிருந்தார். ஆங் சான் சூகியை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்து 1990 பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்றது. வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சியே தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்றது. ராணுவம் ஒரு புதுப் பூதத்தைக் கிளப்பியது. அது, ஆங் சான் சூகி மியான்மர் நாட்டில் பிறக்காதவர்; ஆகவே பிரதமராகவோ அதிபராகவோ ஆக முடியாது என முரண்டு பிடித்தனர். மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாதல்லவா?
  • ஆனால், ‘வாராதுபோல் வந்த மாமணியாக’, மக்களாட்சிக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பைத் தானும் முரண்டுபிடித்து நழுவவிட்டுவிடக்கூடாது எனும் கருத்தில் மியான்மர் அரசின் தலைமை ஆலோசகராக மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டதை ஆங் சான் சூகி ஏற்றுக்கொள்ள நேர்ந்தது. ஆதலால், ராணுவத்தின் ஆட்சியே 2011 ஆண்டு வரை தொடர்ந்தது.
  • இதற்கிடையில் 2008-ல் மியான்மர் நாட்டிற்கான அரசியல் அமைப்பு வரைவுச் சட்டம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்த பல்வகைப்பட்ட அரசியல் நடவடிக்கைகளையடுத்து மியான்மர் நாடாளுமன்றத்திற்கு 2015 இல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலிலும் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. இருப்பினும் ராணுவத்தினர் முக்கியமான துறைகளைத் தங்கள் வசம் எடுத்துக் கொண்டனர். ஆங் சான் சூகி மியான்மர் அரசின் தலைமை ஆலோசகராக மட்டும் பெயரளவுப் பொறுப்பில் இருந்தார்.
  • அதன்பின், நான்காண்டுகளுக்கு முன் - 8 நவம்பர் 2020-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி, நாடாளுமன்றத்திற்கான மொத்தமுள்ள 476 தொகுதிகளில் 396 தொகுதிகளைக் (83%) கொத்தாகக் கைப்பற்றியது. மியான்மர் ராணுவத்தின் பிரதியாக உள்ள ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கான கட்சி வெறும் 33 தொகுதிகளை மட்டுமே பெற முடிந்தது. வேறென்ன நிகழும் மியான்மரில்? வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்!
  • ஆங் சான் சூகியின் தேர்தல் வெற்றி மோசடியானது என ராணுவத்தினர் குற்றம் சாட்டி, பிப்ரவரி 1, 2021இல், மியான்மரில் பழகிப்போய்விட்ட ராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றினர்; ஆங் சான் சூகி, ஜனாதிபதி போன்றோரைச் சிறையில் வைத்தனர்; நாடாளுமன்றத்தை முடக்கினர்; நெருக்கடி நிலையை அறிவித்தனர். ராணுவத்தின் காட்டு தர்பாருக்கு எதிராகக் கடும் அதிருப்தியில் தன்னெழுச்சியாகப் பலதரப்பு மக்களும் இயன்ற எல்லாவகையிலும் எதிர்ப்பினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றுவரை இதுவே நிலை.
  • நடுநிலையான பன்னாட்டு மனித உரிமைகளுக்கான அமைப்புகளின் கணிப்பில், குறிப்பாக அக்டோபர் 24, 2024 நாளிட்ட ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் செய்திக்குறிப்பின்படி, ’’மியான்மரில் 2021 ஆம் ஆண்டு ராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு, அந்நாட்டு மக்களின் மனித உரிமைகள் குறித்த களங்களில் பேரழிவு உண்டாக்கும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் ராணுவம் இதுவரை 5,000 -க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்று குவித்துள்ளது; 25,000-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ’’பிப்ரவரி 2021முதல் டிசம்பர் 2023 வரையில் மட்டுமே பல கவிஞர்களும், 43 குற்றமிலாக் குழந்தைகளும் கொன்று குவிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் உண்டு.
  • வெகு கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சொற்களின் சக்தி யாவுந் திரட்டிச் அதிநுட்பமாகச் சேர்த்துத் தாள்களில் ஏவப்படும் கவிதைகளின் வீரியமும் விளைவுகளும் அதிகாரத்திலிருப்போர்க்கு நன்கு தெரிந்திருக்கிறது. ஆம், துப்பாக்கிகளைக் கையில் ஏந்தியிருப்பவர்கள், தூவல் (பேனா) ஏந்திய கைகளைக் கண்டு – அஞ்சுகிறார்கள். அதனால்தான், 40-க்கும் மேற்பட்ட கவிஞர்களை இன்றும் சிறைவாசத்தில் வைத்திருக்கிறது அந்நாட்டு ராணுவம்.
  • நிலவும் இந்தப் பின்னணியில்தான், முன் சொ(கொ)ல்லப்பட்ட நான்கு கவிஞர்களுக்கும் நெற்றியில் துப்பாக்கிக் குண்டுப் பொட்டு! நால்வரும் மத்திய மியான்மரின் வெப்பமான சமவெளிப் பகுதியிலுள்ள மோனிவா (Monywa) நகரத்தைச் சேர்ந்தவர்கள். வாக்குச் சீட்டு மூலம் மக்களால் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பைத் துப்பாக்கி முனையில் மாற்றி எழுதிக் கொடுங்கோலாட்சி நடத்திவரும் ராணுவ தர்பாரைக் கடுங்கூர்க் கவியாயுதத்தால் நெம்பித்தள்ளும்  உக்கிர மையமாக உருவெடுத்துள்ளது அந்நகர். கவிதை அங்கு உயிர்ப்போடு இருக்கிறது; கவிஞர்கள்தான் கொல்லப்பட்டு வருகிறார்கள்.

பர்மாவில் அரசியல் கவிதைகள்

  • போருக்கு முன் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே சொல்லாற்றலுள்ள வீரர்களைத் தனி அணியாக (separate squad, ‘troubadours’) நியமித்து வைத்திருந்த பர்மிய இராச்சியங்களின் நாள்களிலிருந்தே மியான்மரில் அரசியல் கவிதைகள் என்றவகை ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகக் கொள்ளலாம். அதே பாரம்பரியத்தின் தொடராக, இப்போதும் எதுகை, மோனை (ரைம்ஸ்) பொதிந்து வரும் கவிஞர்களின் ஈரடிக் கவிதைகள் ராணுவ ஆட்சி எதிர்ப்புப் போராட்ட இயக்கத்திற்குத் தேவைப்படும் போர்முழக்கங்களாக ஒலித்து வருகின்றன.
  • மியான்மரின் ராணுவ ஆட்சிக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கும் நிழல் ஜனநாயக அரசாங்கத்தின் (Shadow Government) பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றும் கவிஞர் யூ யீ மோன் 'எதேச்சாதிகார எதிர்ப்பு உணர்வுகள் எப்போதும் எங்கும் கவிஞர்களின் ரத்தத்திலும், ரத்தம் பாயும் நாளங்களிலும் நிறைந்துள்ளன ' என்று கூறியிருப்பது உண்மைதானே?ராணுவத்தினர் மீது மக்கள் கொண்டிருக்கும் மொத்தக் கசப்புணர்வின் தீவிரத்தை வெளிப்படுத்தும் கோ மவுங் சௌங்கா (2016-ல், வயது 23 ) என்ற கவிஞர் எழுதிய கவிதை ஒன்று பெரும் விவாதங்களை எழுப்பியது. ராணுவத்தால் நியமிக்கப்பட்ட ஒரு (பொம்மை) ஜனாதிபதியின் படத்தைத் தனது ஆண்குறியில் பச்சை குத்தியிருப்பதாகவும், அதனைக் கேள்விப்பட்ட அவரது காதலி அவரை ஈனத்தனமானவனைப் பார்ப்பதுபோல் வெறுப்புமிழ்ந்து ஒதுக்கியதாகவும் எழுதினார். உண்மையில், அவருடலில், அதுபோன்றதொரு பச்சை குத்தல் இல்லை. கவிதையில் ஜனாதிபதியின் பெயரும் குறிப்பிடவில்லை. வேறென்ன? இக்கவிதைக்காக மவுங் சௌங்கா 2016இல் சிறைக்குள் தள்ளப்பட்டார்.
  • ஆட்சியை ராணுவம் கவிழ்த்த பின்னர், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட முதல் இரு கவிஞர்கள் கோ சான் தார் ஸ்வே  (Ko Chan Thar Swe) மற்றும் மா மைன்ட் மைன்ட் சின் (Ma Myint Myint Zin) ஆவர். 2021 மார்ச் மாதத் தொடக்கத்தில் மோனிவாவில் நடந்த வெகுஜன எதிர்ப்பின்போது கவிஞர், சான் தார் ஸ்வே நெற்றியிலும், கவிஞர் மா மைன்ட் மைன்ட் சின் மார்பிலும் சுடப்பட்டார்கள். நெற்றியில் சுடப்பட்ட சான் தார் ஸ்வே புத்த துறவறத்தை விட்டுப் 2009இல் வெளியேறி நாட்டுப் பொதுப் பணிக்கு வந்தவர்.
  • சான் தார் ஸ்வேயின் இறுதிச்சடங்கில், பொறியாளர் - கவிஞர் கோ கேத் தி (Ko Khet Thi), பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டவர்களுக்காக ஒரு கவிதையை வாசித்தார்,
  • ‘’தலையில் ஒரு தோட்டாவுடன்
  • கவிஞர்களை வேகமாக எரிக்கத் தொடங்கியவர்களே!
  • உங்களை எதிர்க்கும் எண்ணங்களின் உறுதியால்
  • ஏற்கெனவே இறுகிக்கனத்திருக்கும்
  • எங்கள் நுரையீரலை
  • எரிந்த புத்தகங்களின் புகை நுழைந்து,
  • இனியும்,மேலும்
  • மூச்சுத்திணற வைக்க முடியாது.’’
  • .....    .....   ....
  • ‘’கவிஞர்களை எரிக்கத் தொடங்கினீரே
  • மண்ணில் கலக்கும் அவர்களது  சாம்பல்
  • அதி வீரமான மண்ணாக அதை மாற்றும். அறிவீரோ?’’
  • என்பது அவரது இரங்கல் கவிதை வரிகள்.
  • சான் தார் ஸ்வேயின் இறுதிச்சடங்கில் மேற்கண்ட இரங்கல் கவிதை வாசித்த பொறியாளரும் கவிஞருமான கேத் தி, அந்த இறுதிச் சடங்கு முடிந்த சில வாரங்களுக்குள் சிறைக்குள் வைக்கப்பட்டார். வெகுவிரைவிலேயே சிறையிலிருந்து, அவரது குடும்பத்தார்க்கு, கேத் தி இறந்துவிட்டார் என்ற தகவல் சென்றது. அவரது உடலிலும், சான் தார் ஸ்வே உடலில் இருந்தது போல, நீண்ட வெட்டுக் கோடு இருந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
  • இவற்றின் பின்னர், இருவருக்கும் நெருக்கமான மோனிவாவைச் சேர்ந்த மற்றொரு கவிஞரான கோ கி சாவ் அயே (Ko Kyi Zaw Aye),"நானும் கைதுசெய்யப்பட்டுக் கொல்லப்படுவேன் என்று ஐயங் கொள்கிறேன்; ஆனாலும், நான் தொடர்ந்து கவிதை வாளேந்திப் போராடுவேன்" என்று அஞ்சாமல் முழங்கினார்.
  • பர்மிய மொழியின் பாடல் வரிகள், அதன் எதுகை, மோனை (ரைமிங்) அசைகள் மற்றும் அன்றாடச் சொற்றொடர்களில்கூட எளிதாகக் கட்டமைக்கப்படக் கூடிய தெளிவான படிமங்கள் இணையும் தன்மைகள் உள்ளிட்ட மொழிக்கூறுகளால், பர்மியக் கவிதையை ஒரு சக்திவாய்ந்த தேசிய கலை வடிவமாக உருவாக்கி, உயர்த்தியும் வைத்துள்ளது எனச் சொல்லலாம். கவிதைகளைத் தணிக்கை செய்யக் காத்திருக்கும்  காலனித்துவ நிர்வாகிகள், ராணுவ ஜெனரல்கள் போன்றோரைக் கவிதைகளில் சுட்டும்போது, உண்மையான அர்த்தங்கள் மேலோட்டப் பார்வைக்கு உடனே வெளிப்படையாகத் தெரியாமல், ‘சொற்கரவு’ உத்திகொண்டு திரையிட்டு மறைக்கவும் அம்மொழியின் கட்டமைப்பு உதவுகிறது  என்கிறார்கள், அம்மொழி வல்லார்கள். இதன் காரணமாகவே, லாவகத்தோடு மொழியைக் கையாளும் தனித்திறன் பெற்ற கவிஞர்கள் மக்களால் மதிக்கப்படுகிறார்கள்; மக்களை நசுக்குபவர்களால் மிதிக்கப்படுகிறார்கள்.
  • 2015 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் ராணுவத்தின் ‘பிநாமி’ கட்சிக்குச் சவால் விடுத்துத் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் தேர்தல்களம் கண்டபோது, அக்கட்சி கிட்டத்தட்ட ஒரு டஜன் கவிஞர்களை வேட்பாளர்களாகக் களமிறக்கியது, அவர்கள் அனைவருமே வெற்றி பெற்றனர்! முன்பு இங்கு குறிப்பிடப்பட்ட நிழல் அரசாங்கத்தின் தற்காப்பு அமைச்சரான கவிஞர் யீ மோன் அத்தகைய வெற்றியாளர்களில் ஒருவர். அவர், அப்போது ராணுவ ஆட்சியில் பதவியிலிருந்த பாதுகாப்பு அமைச்சரைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிட உரியது.
  • பர்மா (மியான்மர் என்று மாற்றம் பெற்றிருக்கும்) நாட்டில் கவிதைகளும் போராட்டங்களும், பாரம்பரியமாகவே பிணைப்புப் பெற்றிருப்பதும், தற்காலங்களில் கவிஞர்களைக் குருவியைச் சுட்டுக் கொல்வதுபோலச் சுட்டுக் கொல்வது வாடிக்கையாகவும் ஆகியுள்ள சூழல்களில், ஒரு எட்டுவரிக் கவிதைக்காகவே - கவிதைதான் குற்றம் என்ற வகையில் – சிறைப்பட்ட கவிஞர் சா வின் (Saw Win). அவரது புனைபெயர் சா வாய் (Saw Wai). தனது புனை பெயரிலேயே அவர் வெளியுலகில் அதிகம் அறியப்பட்டிருக்கிறார் என்பதால் அப்பெயரிலேயே தொடர்வோம். ஒரு கவிதையால் அவர் பட்டபாடு குறித்து இங்கு காண்போம். வாங்க.
  • ரங்கூனிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த வார இதழான ‘லவ்’ இதழில் ஜனவரி 1, 2008இல், (காதலர் தினமான) ‘’பிப்ரவரி 14‘’ (February, the Fourteenth) எனத் தலைப்பிட்டு, அவரது பர்மிய மொழிக் கவிதை வெளியானது. இதழில் வெளியான உடனேயே அக்கவிதை எந்த அதிர்வினையும், எதிர் வினையையும் ஏற்படுத்தவில்லை. காதல் தோல்வி குறித்த சாதாரண கவிதையாகவே அதனைப் படித்த பலரும் கடந்து சென்று கொண்டிருந்தனர். அக்கவிதையில் சா வாய் நுட்பமாகச் செய்திருந்த ஒரு சங்கேதக் குறும்பினை, கழுகுக்கண் கொண்ட ஒரு குறும்புக்கார வாசகர் கண்டுபிடித்து, முந்திரிக் கொட்டைத்தனமாக சமூக ஊடகங்களில், அந்த நுட்பத்தைப் போட்டுடைத்துவிட்டார். காட்டுத் தீ பற்றிப் பரவுவதுபோல, நாட்டுக்குள் அக்கவிதை பரபரப்பாகப் பரவியது. கவிதை வெளிவந்த ‘லவ்’ இதழ் முற்றிலும் விற்றுத் தீர்ந்தது. தெருமுனைகளில், மக்கள் கூட்டம் சேரும் இடங்களில் எல்லாம் இக்கவிதையே பேசுபொருளானது.
  • சாதாரணமாகக் கண்கொத்திப் பாம்பாகக் காத்திருக்கும் ராணுவத் தணிக்கையாளர்கள் (Censors), இக்கவிதை - ‘பிப்ரவரி 14’ - பரபரப்பாகும் வரையில் அது பற்றி ஏதுமறியா உறக்கத்தில் இருந்தனர் போலும். கவிதை ஏற்படுத்திய அதிர்வுகளால், பீரங்கிச் சப்தம் கேட்டு விழிப்படைந்ததுபோல திடுக்கிட்டு விழித்தெழுந்து சா வாய் எங்கிருக்கிறார் என அங்குமிங்கும் விரைந்து தேடி, 22-1-2018 இல் அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.
  • ஒருவாரம் கழிந்துதான் கவிஞர் கைதான செய்தி வெளியில் தெரிந்தது. அதற்குப் பின், அவரை இன்சேன் (Insein) சிறையில் சந்திக்கச் சென்ற அவரது மனைவி நான் சான் சான் அயே (Nan San San Aye)க்குக்கூட அனுமதி தரப்படவில்லை, ராணுவக் கட்டுப்பாடுகளால். சுமார் மூன்று வாரங்களுக்குப் பின்னர்தான், கவிஞரை அவரது மனைவியும் குடும்பத்தாரும் சிறையில் பார்க்க முடிந்தது. (மியான்மரின் இன்சேன் (Insein) சிறை, இதற்குமுன் நாம் சந்தித்த  ஈரான் கவிஞர் ஃபதேமே எக்தேசரியைச் சித்திரவதை செய்து அடைத்து வைத்திருந்த எவின் சிறை (Evin Prison) போலச் சிறைக்கொடுமைகளுக்கான இழிபெயர் பெற்றதாகும்).

அதென்ன அந்த எட்டுவரிக் கவிதையில் நுட்பம்?

  • அந்தக் கவிதையின் நுட்பத்தைக் காணுமுன், பர்மியக் கவிதைகள் 1990-களிலிருந்த போக்குகளிலிருந்து புறப்பட்டு இருபத்தொன்றாம் நூற்றாண்டின் வைகறைக் காலங்களில் ஒரு புதிய கருத்து நிலைக்கு வந்து சேர்ந்ததைத் தெரிந்துகொள்ள வேண்டும். கவிதை, காலங்காலமாக ‘இதயக் கவிதை’யாகவே (Poetry of the heart) இருந்து வந்த நிலையிலிருந்து மாறிப், புதிய தடமாகப்  மூளைக் கவிதை (Poetry of the brain) என்ற நிலைக்கு வந்தது. 1948 இல் பர்மா விடுதலை பெற்றதிலிருந்தே, மக்களாட்சியின் மலர்ச்சி முழுமையாகவில்லை. தொடர்ந்து ராணுவத்தின் தலையீடு, ராணுவச்சட்டப் பிரகடனம், ராணுவ ஆட்சி என்பதே அரசியல் நிலவரம் அங்கே பலகாலமாக. இவற்றால் பெருகிவரும் கசப்புணர்வும், கட்டுக்குள் வைக்க முடியாத எதிர்ப்புணர்வும் மனங்களில் வளர்ந்து  மண்டிக்கிடந்து வரும் காலச் சூழல்களில், கவிதையானது, ‘செயல்படும் கருவிகளாக’ -மக்களைக் கூர்தீட்ட உதவும் மூளைக் கவிதைகளாக- வெளிப்பட்டுப் பரவ வேண்டும் என்ற சிந்தனைப் பாதையைப் புகழ்பெற்றிருந்த பர்மியக் கவிஞர் ஜியார் லின் (Zeyar Lynn) அமைத்தார். அப்புதிய வழிக் கவிதைப் பயணம் முனைந்தவர்களில் சா வாய் (Saw Wai) முன்னவர்.
  • வாங்க... அவர் கவிதைக்கு.
  • பிப்ரவரி 14
  • ஆரென்ஸ்பெர்க் கூறியது:
  • ஒருமுறைதானந்த உயிர்வாதை அனுபவம்;
  • அது பதின்ம வயதினரின் பைத்தியக்காரத்தனம்!
  • இதொருமாடலின் மங்கல் நிழற்படம், சிறந்த கலைதான்!
  • இவளாலென் இதயம் நொறுங்கியதெனலாமா?
  • காதலிக்கத் தெரிந்த,கணக்கிலா மக்களே
  • தயையாகத் தங்கள் பொற்கரங்களைத் தட்டுங்கள்;
  • சப்தமாகச் சிரியுங்கள்.
  • *[இக் கவிதையில் முதல் வரியில் குறிப்பிடப்பட்டுள்ள ஆரென்ஸ்பெர்க் என்ற பெயர் (Walter Conrad Arensberg, Ap 1878- Jan 29,1954, என்ற அமெரிக்கக் கவிஞர், விமர்சகர், கலைப்பொருள் சேகரிப்பாளர் மற்றும் தன் தந்தை வழி எஃகுத் தொழில் அதிபரைக் குறிப்பதாகும். இவர் தனது கவிதைகளில், வரிகளின் முதல் அல்லது கடையெழுத்துகளை ஒருவகையாக - மேலிருந்து கீழ் அல்லது கீழிருந்து மேல் - இணைத்தால் கவிதையிலில்லாத புதிய சொல்லுண்டாகும், கரந்துரைப்பாட்டு அல்லது புதிர்வகைப்பாட்டு (acrostic) உத்தியை விரும்பிக் கையாண்டவர். மேலும், ஒரு சொல்லின் எழுத்துகளை மாற்றியமைத்து பிறிதொரு சொல் உருவாக்கும் கரந்துரை மொழி (Anagram) உத்தியையும் தனது கவிதைகளில் இழையோடவிட்டவர்].
  • அந்தக் கவிதை வெளிப்படையாகச் சொல்வது ஒரு எளிதான செய்தியே. ‘’ஒரு பேஷன் மாடலைக் காதலித்த ஒருவன், அப்பெண் அடுத்தடுத்து (பேஷன் ஷோக்களில்) ஆடைமாற்றுவதுபோல இவனையும் கழற்றிப்போட்டு விட்டதால், இவன் மனமுடைந்து பிதற்றுவதாக உள்ள கவிதைதான் அது! ஆனால், உள்ளே செருகி இருக்கு கூர்மையான குத்தூசி!
  • எட்டு வரி, ‘பிப்ரவரி 14’ பர்மிய மொழிக் கவிதையின் ஒவ்வொரு வரியின் முதல் எழுத்தையும் மேலிருந்து கீழாக இணைத்தால், அம்மொழி வாசகம் ஒன்று வரும். தமிழில் அந்த வாசகம் என்னவென்றால்,"ஜெனரல் தான் ஷ்வே அதிகாரப் பைத்தியம்" (பைத்தியம் என்ற பொருள் தரும் அந்தப் பர்மிய மொழிச்சொல், ‘முட்டாள், வெறியன்’என்ற பொருள்களும் சுட்டுமாம்!).

யார் அந்த ஜெனரல் தான் ஷ்வே?

  • அவர், தத்மதாவ், (Tatmadaw) என அழைக்கப்படும் ராணுவ (ஆட்சி)த்தலைமைத் தளபதி! எழுபத்தி நான்கு (அப்போது) வயதுதான். ஷ்வே சும்மா இருப்பாரா? ராணுவப் படை விரைந்தது; கவிஞரைக் (சா வாய், வயது 50 ) கைது செய்தது. பின்னர், ‘ஒரு கவிதை மூலம், பொது அமைதிக்கு ஊறு செய்யும் குற்றங்களைத் தூண்டிவிட்டதற்காக (“inducing crime against public tranqu illity through one of his poems’’). இரண்டாண்டு சிறை என நீதிமன்றில் நவம்பர் 11, 2008இல் அறிவிக்கப்பட்டது. சிறை சென்றார் கவிஞர்.
  • ஆனாலும், இரண்டாண்டு முடிந்த பின்னரும் சா வாய் உடனே விடுவிக்கப்படவில்லை. கவிஞரின் தண்டனைக் காலம் முடிந்தும் சிறையிலிருந்து விடுவிக்கப்படாதது குறித்துப் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளின் கண்டனங்கள் உரத்த குரல்களில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின. போகட்டும் என்று மே 26, 2010 இல் அவர் விடுவிக்கப்பட்டார். இது ஆரம்பந்தான், முடிவல்ல என்பதற்கேற்பத் தொடர்ந்து அவர்மீது வழக்குகள் ஏற்றப்பட்டன.
  • கவிதைதான் குற்றம், இரண்டாவது வழக்கு, சா வாய் மீது.
  • ஏப்ரல் 3, 2019இல் மியான்மரின் தென்கிழக்கு பிராந்தியத்தில் உள்ள கவ்தாங் நகரில் நடந்த ஒரு பேரணியில் கவிஞர் சா வாய், மனித உரிமைகள் வழக்குரைஞரான கீமைண்ட், மற்றும் நேமியோசின் ஆகிய மூவரும் கலந்துகொண்டனர். சுமார் 700 பேர் கலந்துகொண்ட அப்பேரணியில், பின்சொன்ன இருவரும் உரை நிகழ்த்தினர், அதில் அவர்கள் மியான்மர் ராணுவத்தை அரசியலில் எப்போதும் மூக்கை நுழைத்து மக்களாட்சியை குலைத்துவரும் அதன் போக்கை, தலையீடுகளைக் கடுமையாக விமர்சித்தனர். இறுதியாகக் கவிஞர் சா வாய் எதிர் காலத்தில் ராணுவம், ஆட்சியில் எந்த வகையிலும் தலையிட முடியாத வண்ணம் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு கவிதையை வாசித்தார்; அக்கவிதை சிறு தாள்களில் அச்சிடப்பட்டு கூட்டத்தில் வழங்கப்பட்டது. வாசித்து முடிந்ததும்,"தீயசட்டங்கள் யாவற்றையும் நிராகரிக்கிறோம்’’ என்று கோஷமிடுமாறுஅவர் கூட்டத்தினரைக் கேட்டுக்கொண்டார். கூட்டம் உற்சாகமாகக் குரலெழுப்பியது.
  • இது நடந்து ஆறுமாதங்களுக்குப் பிறகு, 17 அக்டோபர் 2019இல் மியான்மர் ராணுவத்தின் கடலோரக் கட்டளையின் லெப்டினன்ட் கர்னல் ஜாவ்ஜாவ் பெயரில், தண்டனைச்சட்டத்தின் பிரிவு 505 (அ)இன் கீழ், முன் குறிப்பிடப்பட்ட மூவருக்கும் எதிராகக் குற்றச்சாட்டுகள் கவ்தாங் டவுன் ஷிப் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. (கற்பூர வாசனையறியுமோ கழுதை? கவிதையை, அறிக்கை என்றார்கள், துண்டுப் பிரசுரம்போல விநியோகித்ததால்!) அவதூறு அறிக்கை மூலம் பொதுக் கூட்டத்தில் ராணுவத்தை அவதூறு செய்ததாகக் கவிஞர் மீது குற்றச்சாட்டு,
  • நீதிமன்றம் சா வாயின் விசாரணையை ஜனவரி 20, 2020இல் தொடங்கத் தேதி நிர்ணயித்தது; இருப்பினும், இரு தரப்பினரும் (அரசுத் தரப்பு உள்பட) ஆஜராகவில்லை.  விசாரணைக்கு ஆஜராகச் சட்டப்பூர்வ அழைப்பாணையைத் தாம் பெறவில்லை என்று சா வாய் வாதிட்ட போதிலும்,  நீதிமன்றம் சா வாய் மீது கைது வாரண்ட் பிறப்பித்தது. பிறகு, பிப்ரவரி 3, 2020இல், சா வாய் நீதிமன்றத்தில் ஆஜரானதால், கைது வாரண்டை நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், அவரது வயது, இதய நோயாளியான அவரது உடல்நிலை ஆகியவற்றின் காரணமாக ஜாமீன் அனுமதியும் கிடைத்தது. அவருடன் வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கும் மற்ற இருவருள் ஒருவரான கீமைண்ட்க்கும் உடல்நிலை கருதி ஜாமீன் கிடைத்தது. மற்றொருவர், முன்னாள் மியான்மர் ராணுவ கேப்டன் நேமியோஜின். அவருக்கு வேறொரு வழக்கில் ஓராண்டுத் தண்டனை இருந்ததால் அவருக்குச் சிறைவாச ஆணை. நீண்டுவரும் இந்த விசாரணை முடிவுறவில்லை.

சிறையில் நூலகங்கள் அமைத்த கைதி, கவிஞர் சா வாய்

  • ‘’மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை, நமைமாட்ட நினைக்கும் சிறைச்சாலை’’ என்று தமிழ்ப் பாவேந்தர் முழங்கினார். பர்மியக் கவிஞர் சா வாய், தமை மாட்டிவைத்திருக்கும் சிறைச்சாலையைப் பூஞ்சோலையாக அல்ல, புத்தகச் சோலையாக மாற்ற எண்ணினார்.
  • பர்மாவில் சிறையில் அடைக்கப்பட்ட போராட்டக்காரர்களும் அரசியல்வாதிகளும் படிப்பதற்காகத் தத்தமக்கு விருப்பமான நூல்கள் வேண்டுமென்றால் அவற்றைக் கடத்திதான் தங்கள் அறைகளுக்குள் கொண்டு வரமுடியும். சென்ஸார் செய்யப்பட்டு, சிறையில் கைதிகள் படிக்க வழங்கப்படும் உப்புச் சப்பற்ற புத்தகங்கள் தவிர வேறு நூல்கள் சிறைக்காவலர்களிடம் பிடிபட்டால் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டும். அந்த முட்டுக்கட்டை சிறையில் அடைக்கப்பட்ட கவிஞரால் - சா வாயால் - உடைக்கப்பட்டது.
  • அவர் அடைக்கப்பட்டிருந்த இரண்டு சிறைகளில்- முதலில் 2008இல் சிறைவைக்கப்பட்ட ‘இழிபுகழ்’ இன்சேன் சிறை மருத்துவமனையிலும்,பின்னர் மாண்டலே டிவிஷனிலுள்ள யாமெதின் சிறையிலும்– உரிய அனுமதிபெற்று கவிஞர் நூலகங்களை நிறுவினார். கைதியாக இருந்த அவரே நூலகராகவும் ஆர்வமுடன் தன்விருப்பமாகப் பணியாற்றினார், இப்போது அங்கு கைதிகள் இலக்கியம், நாவல்கள் மற்றும் பிறவெளியீடுகளையும் வாசிக்க முடியும். "சிறையில் நான் செய்திருக்கக்கூடிய மிகவும் அர்த்தமுள்ள விஷயம் இதுதான்’’ என்றும்"இந்த நூலகங்களை அமைப்பதன் மூலம், வலிகள் நிறைந்த சிறையுலக வாழ்க்கையில் மற்றவர்களுக்கும் அளிக்க முடிந்த ஒரே மகிழ்ச்சியை நான் கண்டுபிடித்தேன்" என்றும் கவிஞர் சா வாய் கூறியிருக்கிறார்.
  • நூல்கள் தொடர்பாகப் பாரதிக்கும் பர்மாவுக்கும் ஒரு தொடர்பிருக்கிறது. அது பாரதி மறைந்து ஏழாண்டுகள் கழித்து ஏற்பட்டது. அது என்னவென்றால்,  1928இல், பர்மா அரசாங்கம் (பிரிட்டிஷார்தான்) பாரதியின் நூல்களைத் தடை செய்தது. அதனைத் தொடர்ந்து சென்னை மாகாண ஆட்சியினரும் தடைசெய்து பாரதியின் நூல்களைப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனைக் கடைகள் முதலிய எல்லா இடங்களிலிருந்தும் பறிமுதல் செய்தனர். பாரதி மறைவதற்கு முன்னும், மறைந்த பின்னும் அவரைக் கண்டுகொள்ளாத பலரும், பிரிட்டிஷாரின் இந்தத் தடையாணைக்கு எதிராகத் திரண்டனர். பாரதி மீண்டும் நினைக்கப்பட இந்தத் தடையாணையே பெரிதும் உதவியது.(பாட்டிடையிட்ட பாரதியார் சிறுகதைகள் (2021), பக்.5-8)
  • கவிதைதான் குற்றம் என்று ஒருமுறையல்ல, இருமுறை குற்றம் சாற்றப்பட்டு - ஒருமுறை இரண்டாண்டுகளுக்கு மேல் சிறைவாசமும், இரண்டாவது முறை வழக்கு நிலுவையிலும்- இருக்கும் கவிஞர் சா வாய் வைக்கும் -
  • இன்னல் வந்துற்றிடும் போததற் கஞ்சோம்
  • ஏழையராகி இனிமண்ணில் துஞ்சோம்
  • தன்னலம்பேணி இழிதொழில் புரியோம்
  • தாய்த்திருநாடெனில் இனிக்கையை விரியோம் - (எங்கள் நாடு)
  • என்று முழங்கிய பாரதிக்கும் ஒரு ‘கறை’ ஒற்றுமை இருப்பதையும் நேர்மையுடன் இங்கே சுட்டவேண்டும்.
  • இந்திய விடுதலைப்போராட்டத்தில் லட்சக்கணக்காணோர் ஆண்டுக்கணக்கில் நாடெங்குமுள்ள சிறைகளில் சொல்ல இயலாக் கடுமைகளுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாகி அல்லற்பட்டு வாடுகின்ற காலத்தில் - நவம்பர் 1918 இல், ஒருவாரத்திற்கு மேல் சிறைவாசம் தாங்க முடியாமல் - கடலூர் மாவட்டச் சிறையிலிருந்து நவம்பர் 28, 2018 நாளிட்டுச் சென்னை மாகாணக் கவர்னர் லார்டு பென்ட்லாண்டுக்கு கடலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் மூலமாகக் கடிதம் அனுப்பினார் பாரதி.
  • “தான் எல்லாவகையான அரசியல் செயல்பாடுகளையும் ஏற்கெனவே அறவே துறந்துவிட்டதை மீண்டும் உறுதிப்படுத்தி, இனிச் சர்வகாலமும் தான் பிரிட்டிஷ் அரசுக்கு உண்மையாக இருப்பேன்; அதன் சட்டங்களை மதித்தொழுகுபவனாகவே வாழ்வேன்” என்று உறுதிகூறிச் சிறைவாசத்தில் இருந்து (மொத்தம் 25 நாள்) விடுதலையாகப் பாரதி மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து வெளிவந்தது விளக்கமளிக்க முடியாததொரு ஓர் அழியாக் கறை. அது மகாகவிஞன் பாரதி , ஒரு சாதாரண மனிதனாகச் சறுக்கிய நிகழ்வு. கவிராஜனுக்குக் களிறு தந்த துயர் பின்னாளில்; கடலூரில் உண்டான கறை முன்னாளில்.
  • அதைப்போலவே, கவிதைகளால் அரிமா முழக்கங்கள் நிகழ்த்திவந்த சா வாய்க்கும் ஓர் அழியாக் கறை ஏற்பட்டது. ராணுவ அடக்குமுறைகள், எதேச்சாதிகாரம் அநீதிகளுக்கு எதிராக, மனித உரிமைகளுக்காக, சிறைவாசங்களுக்குச் சிறிதும் அஞ்சாமல் வாழ்நாளெல்லாம் முழுவீரியத்தோடு போராடிவருபவர் சா வாய்.
  • 2017 - 18 ஆம் ஆண்டுக் காலத்தில், அந்நாட்டில் மதச் சிறுபான்மையினரான முஸ்லிம் இன ரோஹிங்கியாக்களுக்கு எதிரான வன்முறை அட்டூழியங்கள், இனப்படுகொலைகள் உச்சத்தில் இருந்தபோது, சா வாய் மியான்மர் டைம்ஸ் என்ற பத்திரிகையில் தன் கருத்தைக் கட்டுரையாக வெளியிட்டார். அதில் ரோஹிங்கியாக்களை ராணுவ அரசாங்கம் விரோதமாக நடத்துவதை ஆதரிப்பது போன்ற வெளிப்படையான தொனி உள்ளது, நாட்டில் நடைபெறும் அந்த மோதலுக்குத் "தயவுசெய்து ராணுவத்தைக் குற்றம்சாட்டுவதை நிறுத்துங்கள்" என்று மக்களை வலியுறுத்தியது அவரது தலையங்கப்பக்கக் (Op-ed) கட்டுரை. ‘ரோஹிங்கியாக்கள் மீதான வன்முறைகளில் மியான்மரின் ராணுவத் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இருக்கிறதா?’ என்று அக்கட்டுரையில் சா வாய் கேள்வியும் எழுப்பினார். உலகமறிந்த உண்மை, தத்மதாவ் (மியான்மர் ராணுவம்) ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றது!
  • கவிஞர் பார்வையில் கள நிலவரம் வேறாக இருந்திருக்கலாம். எது எப்படியிருப்பினும், ஆயிரக்கணக்கில் மனித உயிர்கள் பலியாகும்போது – அவர்கள் இஸ்லாமியரா, பர்மியரா என்ற பாகுபாடுகளைக் கடந்து நிற்க வேண்டிய மானுடநேயக் கவிஞர் சா வாயின் இந்த நிலைப்பாடு- யானைக்கு அடி சறுக்கியது போல - விளக்கம் சொல்ல முடியாததொரு நெருடலாகவே இருக்கிறது.
  • கவிஞர் சா வாய் 1988இல் அரசுப் பணியில் இருந்தபோதே ராணுவ நடவடிக்களுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வேலையை இழந்தவர். ’’சலுகை போனால் போகட்டும், என் அலுவல் போனால் போகட்டும்” என உரிமை காக்கச் சளைக்காமல் வீறுடன் எழுந்து நிற்பவர். ‘’கொன்றன்ன செயினும் இன்னா செயினும் அவர்செய்த  ஒன்று நன்றுள்ளக்கெடும்’’ (குறள்109) என்ற வழிகாட்டுதலுக்கேற்ப நாம் கவிஞர்களையும் அணுகக் கற்கனும் போல.
  • 2018இல் கவிஞர் சா வாய் வெளிப்படுத்திய ரோஹிங்கியாக்கள் குறித்த நிலைப்பாட்டை ராணுவம் மெச்சி அவருக்குச் சலுகைகள் ஏதும் காட்டியதா என்றால்... ஊஹூம்... இல்லவேயில்லை.
  • அதற்குப் பின்தானே, ஏப்ரல் 2019இல் பொதுக்கூட்டத்தில் அவர் வாசித்த கவிதைதான் குற்றம் (இரண்டாவது) வழக்கு? அவ்வழக்கு இன்னும் நிலுவையிலிருப்பதை ஏற்கெனவே அறிந்து வந்திருக்கிறோம். அதுபோக, மே 31, 2021 இல் ராணுவ ஆட்சிக்குழு அவரது மகளைக் கடத்தி ஒரு குற்றவாளியாக அறிவிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது.
  • பல்லாண்டுகளாக அதிகாரபலத்தை எதிர்த்துத் தீரமுடன் போராடிவரும் கவிஞர் சா வாய், கடந்த ஆண்டு,  அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் உலகளாவிய ஹெல்மேன் / மம்மெட் விருது மூலம் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். மேலும் பல பன்னாட்டு அங்கீகாரங்கள் அவரது வீரம் நிறைந்த போராட்டங்களுக்காகக் கிடைத்திருக்கின்றன.
  • இருமுறை ‘கவிதைதான் குற்றம்’ என்ற வழக்கு ஏற்றப்பட்ட முதல் கவிஞர் மியான்மரின் சா வாய் என்பதிவர் சிறப்பு, ஏனெனில் அவர் கவிதை நெருப்பு!

நன்றி: தினமணி (17 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்