TNPSC Thervupettagam

ராபர்ட் ரிப்ளி 75 ஆவது நினைவு ஆண்டு: நம்பினால் நம்புங்கள்!

May 30 , 2024 226 days 190 0
  • ராபர்ட் ரிப்ளி அமெரிக்காவைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட், தொழில்முனைவோர், மானுடவியலாளர். 16 வயதில் தன் தந்தையின் மரணம் காரணமாகப் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டுப் பத்திரிகைகளுக்கு வரையத் தொடங்கினார். 1918ஆம் ஆண்டு ‘நியூயார்க் குளோபல்’ பத்திரி கையில் ‘நம்பினால் நம்புங்கள்’ என்கிற பகுதியை ஆரம்பித்தார். நாளுக்கு நாள் அந்தப் பகுதிக்கு வாசகர்களின் ஆதரவு அதிகரித்துக்கொண்டே சென்றது.
  • 1929இல் ‘கிங் ஃபீச்சர் சிண்டிகேட்’ நிறுவனத்தின் மூலம், ரிப்ளி உருவாக்கிய ‘நம்பினால் நம்புங்கள்’ தகவல் சித்திரங்கள் உலகமெங்கும் 360 செய்தித்தாள்களில், 17 மொழிகளில் வெளியிடப்பட்டன. பின்னர் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுப் புகழ்பெற்றார் ரிப்ளி.
  • 1929 நவம்பர் 3 ‘நம்பினால் நம்புங்கள்’ பகுதியில் ‘அமெரிக்காவுக்குத் தேசிய கீதம் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா’ என்று கேட்டார் ரிப்ளி. அது ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • காரணம், ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ எழுதிய ‘தி ஸ்டார் ஸ்பாங்கிள்டு பேனர்’ என்கிற பாடல் அமெரிக்கா முழுவதும் மதிப்புக்குரிய பாடலாகக் கருதப்பட்டாலும், அதற்கு அதுவரை தேசிய கீதம் என்கிற அந்தஸ்து தரப்படவில்லை. ரிப்ளி சுட்டிக்காட்டிய பிறகு 1931இல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் அதை அமெரிக்காவின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளும் சட்டத்தில் கையெழுத்திட்டார்.
  • நாளடைவில் விநோதங்களைத் தேடி ரிப்ளி உலகின் பல்வேறு பகுதி களுக்கும் பயணம் மேற்கொண்டார். ‘உலகில் அதிக எண்ணிக்கை யிலான நாடுகளுக்குப் பயணம் செய்தவர்’ என்கிற பெருமையை அப்போது பெற்றார். 1922இல் இந்தியாவுக்கும் வந்திருக்கிறார்.
  • பல்வேறு நாடுகளில் காணப்படும் அதிசயங்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்க ஆராய்ச்சியாளர்கள், கலைஞர்கள், மொழிபெயர்ப்பாளர் களைப் பணிக்கு அமர்த்தி, அவர் களையும் பயணிக்க வைத்தார். ஹாலிவுட் குறித்துப் பலரும் அறியாத தகவல்களைத் திரட்டி வெளியிட்டு, மக்களின் கவனத்தைக் கவர்ந்தார். தான் திரட்டிய தகவல்களை வானொலி, குறும்படங்கள் மூலமாகப் பகிர்ந்துகொண்டார். தொலைக்காட்சி அறிமுகமானபோது, ‘நம்பினால் நம்புங்கள்’ நிகழ்ச்சிகள், தொடர்களாக ஒளிபரப்பாயின.
  • அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமாகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட 1930களில்கூட, அன்றைய ஹாலிவுட் நட்சத்திரங்கள் சம்பாதித்ததைவிட ரிப்ளி அதிகமாகச் சம்பாதித்தது இன்றளவும் ஆச்சரியமாகப் பேசப்படுகிறது.
  • ‘நீங்கள் பெரியவரானதும் யாரைப் போல இருக்க வேண்டும்?’ என்று நியூயார்க் நகரத்தின் பாய்ஸ் கிளப், 1936இல் குழந்தைகளிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. அதில் அதிக வாக்குகள் பெற்று, குழந்தைகள் மனதில் முதலிடம் பிடித்தவர் ரிப்ளிதான்!
  • ரிப்ளி சேகரித்த அதிசயப் பொருள்கள், மாதிரிகள், படங்கள் எல்லாம் ‘ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் அருங்காட்சியகங்கள்’ மூலம் பல்வேறு நாடுகளிலும் வைக்கப்பட்டிருக்கின்றன.
  • 1934இல் நியூயார்க் மாகாணத்தில் ஒரு தீவை வாங்கி, அங்கே 28 அறைகள் கொண்ட ஒரு மாளிகையை எழுப்பினார் ரிப்ளி. உலகமெங்கும் தான் சேகரித்த பொருள்கள் அனைத்தையும் அங்கே வைத்துப் பாதுகாத்தார். அந்தத் தீவுக்கு அவர் வைத்த பெயர் பியோன் (BION). அப்படியென்றால் ‘Believe It or Not’.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்