TNPSC Thervupettagam

ராமதாஸுக்கு இயற்கை வளங்கள் குறித்த கொள்கையில் தெளிவு தேவை!

December 18 , 2024 4 days 24 0

ராமதாஸுக்கு இயற்கை வளங்கள் குறித்த கொள்கையில் தெளிவு தேவை!

  • பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய ‘போர்கள் ஓய்வதில்லை’ என்ற நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ், தன்னை தமிழக மக்கள் சாதி என்ற குறுகிய வட்டத்துக்குள் சுருக்கி விட்டனர் என்று வருத்தப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து பேசும்போது, ‘‘பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் என்னிடம் வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழகம் வேண்டும்; ஒரு சொட்டு தண்ணீர்கூட கடலுக்குச் சென்று கலக்காத தமிழகம் வேண்டும்; கஞ்சா இல்லாத தமிழகம் வேண்டும்’’ என கேட்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • மது இல்லாத, போதைப்பொருள் இல்லாத தமிழகம் வேண்டும் என்ற அவரது எண்ணம் தமிழக மக்கள் மீது அவர் கொண்டுள்ள அக்கறையால் வெளிவந்துள்ள உயர்ந்த சிந்தனை. அதேநேரம், ஒரு சொட்டு தண்ணீர்கூட கடலுக்குப் போகாத தமிழகம் வேண்டும் என்ற அவரது கருத்து விமர்சனத்துக்குரியது.
  • வானில் இருந்து பொழியும் மழைநீர் கடலைச் சென்றடைய வேண்டும் என்பது இயற்கையின் நியதி. நீர் சென்றடையும் வழியில் குடிநீருக்காகவும், விவசாயத்துக்காகவும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, கடலுக்குச் சென்றடைவதை தடுக்கும் உரிமை நமக்கு இல்லை. வேறு எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பசுமைத் தாயகம் அமைப்பை கொண்டிருக்கும் கட்சியின் நிறுவனர் என்ற முறையில் இயற்கை வளங்களை பயன்படுத்துவது குறித்த கொள்கையில் தெளிவு இருப்பது அவசியம்.
  • இயற்கை வளங்களை மனிதர்கள் நியாயமான அளவில் பயன்படுத்திக் கொள்ள தடுப்பணை உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்குவதில் தவறில்லை. அதேநேரம், இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தவோ, தடுக்கவோ, அழிக்கவோ மனிதர்களுக்கு உரிமையில்லை. மழைநீர் நதியாக ஓடி கடலில் கலக்கும்போது, கடலில் உள்ள கோடிக்கணக்கான ஜீவராசிகளுக்கு உணவு கிடைக்கும். பருவமழையின் மூலம் கிடைக்கும் நீர் கடலில் கலப்பது அவசியம். ‘மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது’ என்ற வாக்கியமே தவறானதும் அபாயகரமானதுமாகும்.
  • கடல் நீர் உப்புத்தன்மை வாய்ந்தது. பருவமழையின்போது கிடைக்கும் நன்னீர் உரிய அளவில் கடலுக்குச் செல்லவில்லை என்றால், கடலின் உப்புநீர் நிலப்பரப்புக்குள் ஊடுருவும் என்பது அறிவியல் உண்மை. இந்தியா 7,500 கி.மீ., கடலோரப் பரப்பை கொண்டுள்ள நிலையில், மழை நீரை கடலுக்குச் செல்லவிடாமல் தடுத்தால், 100 முதல் 130 கி.மீ., தூரம் வரை கடல் நீர் நிலத்துக்குள் ஊடுருவும் என்று கணக்கிடப்படுகிறது.
  • மழைநீர் வீணாகாமல் ஏரி, குளங்களை பராமரித்து மக்களுக்கு பயன்படும் வகையில் கட்டமைப்பை நிர்வகிக்க வேண்டும் என்ற பொருளில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கருத்தை வெளிப்படுத்தியிருப்பார் என்று நாம் நம்பலாம். சொல் நயம் மிகையானதால் ஒரு சொட்டு நீர் கூட கடலுக்குப் போகக் கூடாது என்ற வார்த்தை வந்திருக்கலாம். இருப்பினும் இதே சமூக பொறுப்புடன் பாமக-வும், பசுமைத் தாயகமும் சுற்றுச்சூழல் காக்க பாடுபட வேண்டும் என்பதே நம் விருப்பம்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்