- மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை, இந்தியப் பொருளாதாரம் மேலும் மேலும் சரிவையே சந்திக்கும் என்கிறது. பொருளாதாரச் சூழல் குறித்தும் அடுத்து வரவிருப்பவை குறித்தும் அதன் கணிப்பு மோசமான சித்திரத்தையே முன்வைக்கிறது.
- தனிநபர் நுகர்வு பெரிதும் குறைந்திருப்பதால் கேட்பு கிட்டத்தட்ட வறண்டுபோன சூழ்நிலை உருவாகியிருக்கிறது; கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கத்தின் கையிருப்பும் கரைந்துபோயிருக்கிறது; பெருநிறுவனங்கள் புதிய முதலீடுகளில் ஆர்வமாக இல்லை; வங்கிகளும் கடன் கொடுப்பதைப் பெரிதும் குறைத்துக்கொண்டுள்ளன.
- இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், கரோனாவுக்காக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு ஜூலை-செப்டம்பர் வரையிலான காலாண்டுக்கும் நீடிக்கும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.
- நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மறுபடியும் பொது முடக்கத்தைக் கொண்டுவந்ததாலும் அல்லது பொது முடக்கத்தை மேலும் கடுமையாக்கியதாலும் அதற்கு முந்தைய இரண்டு மாதங்களில் சற்றே துளிர்விட்ட பொருளாதார நடவடிக்கைகளும் மறுபடியும் மந்தமாகிவிட்டன.
- பொருளாதாரச் செயல்பாடுகளில் முன்னுதாரணமற்ற வகையில் மேலும் சுணக்கம் ஏற்படுவதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன என்றும் ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது.
- மத்திய அரசு தன் வருமானத்திலிருந்து செய்யும் செலவை முதல் காலாண்டில் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்ததன் மூலம் `பெருந்தொற்றால் பாதிக்கப்படாத அளவிலான’ கேட்பை உருவாக்க முயன்றது.
- எனினும், வரும் மாதங்களில் மத்திய அரசு நிதியாதாரங்கள் இல்லாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகப் போகிறது. இதன் விளைவாக, மேலும் பொருளாதாரத் தூண்டுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ முடிவுகளை எடுக்கவோ மிகக் குறைவாகவே வாய்ப்புகள் இருக்கும். தனியார் முதலீடுகளை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி பரிந்துரைக்கிறது; எஃகு, நிலக்கரி, மின்சக்தி, நிலம், ரயில்வே துறை போன்ற அரசுத் துறை நிறுவனங்களின் பண மதிப்புடைய சொத்துகளை விற்பதன் மூலம் நிதி திரட்டி ஊக்குவிப்புகளுக்குச் செலவிடலாம் என்று ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.
- ஆனால், தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் வாராக் கடனில் சிக்கிக்கொண்டுள்ளன; அவை அரசு அளிக்கக் கூடிய நிறுவன வரிச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றன; கேட்பு வலுவாக இல்லாததால் முதலீட்டுச் செலவுகளை அதிகப்படுத்த அவை விரும்பவில்லை.
- ஆகவே, அரசுத் துறை நிறுவனப் பங்குகளை விற்பதால் பெரிய அளவில் அரசுக்கு வருமானம் கிடைக்கப்போவதில்லை. எனவே, அரசு தன்னிடமுள்ள குறைவான நிதியாதாரங்களை மிகுந்த கவனத்துடன் ஒன்றுதிரட்டுவதிலேயே தீவிரமாக இருக்கும் என்று தெரிகிறது.
- கரோனா நோய்த் தொற்று வேகம் குறைந்த பிறகே பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தும் என்று தெரிகிறது. அப்படி நடப்பதற்கான சாத்தியம் கண்ணுக்கெட்டும் தொலைவு வரை அண்மையில் தெரியவில்லை.
நன்றி: தி இந்து (31-08-2020)