இதுவரை
- இந்திய ரிசர்வ் வங்கியானது தனது சொந்த இருப்பிலிருந்து 1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.
- இந்த இருப்புகள் என்பவை என்ன என்றும் இத்தொகையானது எவ்வாறு அரசிற்கு உதவும் என்றும் இந்த நடவடிக்கை ரிசர்வ் வங்கிக்கு எவ்வாறு பாதகமாக அமையும் என்றும் பிற விவரங்களையும் இங்கு காணலாம்.
இருப்புகளின் மூலங்கள்
- இந்த நிதி மாற்றங்களைப் புரிந்து கொள்ள அவை எங்கிருந்து வருகின்றன என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
- மத்திய வங்கியில் மூன்று வெவ்வேறு நிதிகள் உள்ளன. அவை மூன்றையும் இணைத்து இந்த இருப்புகள் உருவாக்கப் படுகின்றன.
- அவை பணம் மற்றும் தங்க மறுமதிப்பீட்டு கணக்கு (Currency and Gold Revaluation Account - CGRA), அவசர கால நிதி மற்றும் சொத்து மேம்பாட்டு நிதி ஆகியவையாகும்.
- இவற்றில் மிகப் பெரியதான CGRA ஆனது ரிசர்வ் வங்கியின் இருப்புகளில் கணிசமான தொகையை உருவாக்குகிறது.
- அந்நிய செலாவணி மற்றும் தங்கம் ஆகியவற்றின் மறு மதிப்பீட்டின் மூலம் பெறப்பட்ட நிதியானது 2017-18 நிதியாண்டில் 6.91 லட்சம் கோடியாக இருந்தது.
- CGRA ஆனது 2010 ஆம் ஆண்டு முதல் கணிசமாக வளர்ந்துள்ளது. ஒட்டு மொத்தமாக ஆண்டுக்கு 25% என்ற விகிதத்தில் இதன் வளர்ச்சி உள்ளது.
- மூன்று நிதிகளில் அவசர கால நிதியானது இரண்டாவது பெரிய இருப்பு ஆகும். இதன் அளவு 2017-18 ஆம் ஆண்டுகளில் 2.32 லட்சம் கோடியாகும்.
- இந்த அவசர கால நிதியானது பரிமாற்ற வீத நடவடிக்கைகள் மற்றும் பணவியல் கொள்கை முடிவுகளினால் வரும் எதிர்பாராத சிக்கல்களை சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது பெரும்பாலும் ரிசர்வ் வங்கியின் இலாபத்திலிருந்து இதற்குப் பங்களிக்கப்படுகிறது.
- சொத்து மேம்பாட்டு நிதியானது இருப்புகளில் மிகச் சிறிய பங்கினையே கொண்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இருப்பு வரம்பு
- இது ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக உள்ளது. எவ்வளவு தொகை மத்திய அரசிற்கு மாற்றப்பட வேண்டும் என்பதில் ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சகமும் சிறிது காலமாக முரண்படுகின்றன.
- இவை இரண்டிற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அண்மையில் மிகவும் அதிகரித்தது. அரசானது மத்திய வங்கியின் சுயாட்சியை குறைக்கின்றது எனவும் இதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் அப்போதைய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா பேசினார்.
- இது நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், ரிசர்வ் வங்கியின் பண இருப்புகளை அரசு சோதனை செய்தது.
- உலகளாவிய விதிமுறைகளின்படி இருக்க வேண்டிய அளவை விட ரிசர்வ் வங்கியில் இருப்புகள் அதிகம் இருப்பதாகவும், அந்த அதிகப் படியான நிதியை அரசிற்கு மாற்ற வேண்டும் என்றும் அரசாங்கம் கூறியது.
- இறுதியாக, இந்த விவகாரத்தை ஆராய்வதற்காக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலானின் கீழ் 2018 நவம்பரில் ஒரு குழுவை அரசு அமைத்தது.
- அந்தக் குழுவானது தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது, அதன் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே சமீபத்திய நிதிப் பரிமாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன.
ஜலான் குழுவின் பரிந்துரைகள்
- பொதுவாக ஜலான் குழு என அழைக்கப்படும் இக்குழுவானது, உண்மையில் இந்திய ரிசர்வ் வங்கியின் விரிவான பொருளாதார மூலதனக் கட்டமைப்பை மறு ஆய்வு செய்வதற்கான நிபுணர் குழு என்று அழைக்கப்படுகிறது.
- பெரும்பாலும் மத்திய வங்கியின் இருப்பு நிலைக் குறிப்பில் 5.5-6.5% என்ற அளவிற்கு இடையில் வரும் அவசர கால நிதியை ஒரு எதிர்பாரா இடர் இடையகமாக பராமரிக்க இக்குழு வங்கிக்குப் பரிந்துரைத்தது.
- சமீபத்திய அவசரகால நிதியின் அளவு ரிசர்வ் வங்கியின் இருப்பு நிலைக் குறிப்பில் சுமார் 6.8% ஆக இருப்பதால், அந்த அதிகப்படியான தொகையானது அரசாங்கத்திற்கு மாற்றப்பட வேண்டும்.
- பரிசீலிக்கப்பட்ட ஆண்டில், பரிந்துரை செய்த வரம்பில் 5.5% என்ற அளவை குறைந்தபட்ச வரம்பாக பயன்படுத்தவும் இக்குழு முடிவு செய்தது.
- எனவே, அதன் அடிப்படையில், அவசரகால நிதியில் உள்ள ரிசர்வ் வங்கியின் இருப்பு 5.5% என்ற அளவிற்கு அதிகமாக இருந்தால் அது அரசுக்கு மாற்றப்பட வேண்டும். அந்த தொகையின் அளவு 52,637 கோடி ரூபாயாகும்.
- ரிசர்வ் வங்கியின் பொருளாதார மூலதன நிலைகளின் அடிப்படையான CGRAவை இருப்பு நிலைக் குறிப்பில் உள்ள தொகையில் 20-24.5% அளவு என்ற வரம்பில் வைக்கவும் இக்குழு பரிந்துரைத்தது.
- இது ஜூன் 2019 நிலவரப்படி 23.3% ஆக இருந்ததால், இதில் கூடுதலாக சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்று இக்குழு உணர்ந்தது. எனவே ரிசர்வ் வங்கியின் ஒட்டு மொத்த நிகர வருமானமான 1,23,414 கோடி ரூபாய் மத்திய அரசிற்கு மாற்றப்பட வேண்டும்.
- இந்த 1.23 லட்சம் கோடி மற்றும் மேற்கண்ட 52,637 கோடி என்பது ரிசர்வ் வங்கியானது அரசாங்கத்திற்கு மாற்ற முடிவு செய்த 1.76 லட்சம் கோடியில் உள்ளடங்கியது ஆகும்.
- மேலும், இந்த 1.76 லட்சம் கோடியில், முன்பு மத்திய அரசிற்கு மாற்றப்பட்ட 28,000 கோடி இடைக்கால ஈவுத்தொகையும் அடங்கும் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ரிசர்வ் வங்கிக்கு ஏற்படும் பாதிப்புகள்
- இதனால் ரிசர்வ் வங்கிக்கு உடனடியாக எந்தத் பாதிப்புகளும் ஏற்படாது என்றாலும், அதன் இருப்புகள் அவற்றின் குறைந்தபட்ச நிலைகளில் உள்ளன அல்லது காலியாக உள்ளன எனும் போது நிதி நெருக்கடி ஏற்பட்டால் அவற்றை சரி செய்ய மத்திய வங்கியானது இப்போது மிகக் குறைவான வாய்ப்புகளையேக் கொண்டுள்ளது.
- அதாவது, நெருக்கடி ஏற்பட்டால் அதைச் சமாளிப்பதற்கான குறைந்தபட்ச தொகை இருப்பு உள்ளது. ஆனால் கூடுதலான பணம் எப்போதும் ஆபத்து காலத்தில் உதவும்.
- ரிசர்வ் வங்கியின் நிதி மாற்றங்கள் இப்போது எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு மாற்றப்பட்டு இருப்பு காலியாகி விட்டதால், எதிர்காலத்தில் இந்த நிதி ஆதாரத்தை அரசாங்கம் நம்புவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
- அரசாங்கம் தனது நிதி நிலை அறிக்கையில் ஏற்கனவே ரிசர்வ் வங்கியில் இருந்து 90,000 கோடி பரிமாற்றம் செய்துள்ளது. எனவே இந்த 86,000 கோடியானது எதிர்பாராத ஒரு தொகையாகும்.
- இது ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வெகுமதி ஆகும். மேலும் அரசு தேவைப்படுவதை விட நேரடி மற்றும் மறைமுக வரி ஆகிய இரண்டின் வழியாக வரும் வரி வருவாய் மிகக் குறைவாகவே கிடைக்கும் என்ற தகவலை இது சரி செய்ய வில்லை.
- - - - - - - - - - - - - - - -