TNPSC Thervupettagam

ரிசர்வ் வங்கியின் சமரசத் தீர்வு சரியானதா

July 24 , 2023 544 days 310 0
  • கடன்களை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் மற்றும் கடன் மோசடி செய்தவர்களுடன் வங்கிகள் சமரசத் தீர்வு மேற்கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அறிவித்தது. மேற்படி நபர்களின் கடன்களில் ஒரு பகுதி அளவிலான தொகையைப் பெற்றுக் கொண்டு மீதமுள்ள நிலுவைத் தொகையை இழப்பாக கருதி கொள்ளலாம் என்பதே ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ள சமரசத் தீர்வின் அடிப்படை.
  • இந்த சமரசத் தீர்வின் மூலம் வரவேண்டிய கடன் நிலுவைத் தொகையை வசூலித்துக் கொள்ளவும் தங்களின் இருப்பு நிலையை சரி செய்து கொள்ளவும் வங்கிகளுக்கு வாய்ப்பாக அமையும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
  • வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள் யார்? - வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் திறனும் வசதியும் இருந்தும் வேண்டுமென்றே கடன்நிலுவையை செலுத்தாதவர்களை ‘வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள்’ (Wilful defaulters) என்று ரிசர்வ் வங்கி வரையறை செய்துள்ளது.
  • வங்கிகளில் வாங்கிய கடன்களை அது வாங்கப்பட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தாமல் வேறுகாரணங்களுக்காகப் பயன்படுத்துவது கடனுக்கு பிணையமாக வழங்கப்பட்ட சொத்துக்களை வங்கிகளுக்குத் தெரியாமல் விற்பனை செய்தல் போன்ற காரணங்களால் வேண்டுமென்றே கடன்களை திருப்பி செலுத்தாத நிலை ஏற்படுகிறது.
  • சமரசத் தீர்வு என்பது என்ன? - கடன் நிலுவைத் தொகையை திருப்பி செலுத்துதல் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் மூலம் ஏற்படும் ஒப்பந்தமே சமரசத் தீர்வு என்று அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கடன் வாங்கியவர் தான் வாங்கிய கடன் தொகையை விடகுறைவான தொகையை வங்கியிடம் கொடுப்பார்.
  • இந்தக் குறைவான கடன் தொகையை வங்கியானது பெற்றுக் கொண்டு அதனை முழுமையான மற்றும்இறுதியான செட்டில்மென்டாக ஏற்றுக்கொள்ளும். அதாவது கடனாளியின் கடனில் ஒரு பகுதியை வங்கி தள்ளுபடி செய்கிறது. இந்தத் தள்ளுபடியை செய்து கொள்ள ஒரே ஒரு முறை மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
  • நமது நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் வங்கிகளுடன் இதுபோல் பல சமரச தீர்வுகளுக்கு ஒப்புதல் அளிகப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளுக்கு கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது.
  • கடனாளிகள் திருப்பி செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகையின் அளவை குறைக்கும் செயலை ‘ஹேர் கட்’ (Hair Cut) என்று குறிப்பிடுகிறார்கள். ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட டிரான்ஸ்யூனியன் சிபில் என்ற கடன் விவரங்களை வெளியிடும் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி. 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கடன்களை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்களிடமிருந்து வரவேண்டிய கடன் நிலுவைத் தொகை ரூ.2,45,767 கோடி ஆகும். 2022-ம் ஆண்டு டிசம்பரில் அது ரூ.3,46,449 கோடியாக அதிகரித்துள்ளது.
  • ரிசர்வ் வங்கி சில நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த சமரசத் தீர்வுக்கு அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக, இது தொடர்பான சட்ட பூர்வ நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவையும் நேரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். வங்கி நிர்வாகத்தின் கொள்கையோடு சமரசத் தீர்வு பேச்சுவார்த்தைகள் ஒத்துப் போக வேண்டும்.
  • மேலும் அவ்வப்போது ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். நடைமுறை விதிகளில் உள்ளபடி கடனாளிகள் மீதான சட்டபூர்வ நடவடிக்கைகள் தொடர வேண்டும். வங்கிகளுடன் சமரச தீர்வு கண்டவர்களுக்கு குறைந்தபட்சம் 12 மாதங்கள் கழித்துதான் புதிய கடன்கள் வழங்க வேண்டும் என்று கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
  • சமரசத் தீர்வு மூலம் கடன் நிலுவைத் தொகையில் ஒரு பகுதியையாவது வங்கிகளால் வசூலிக்க முடியும். சட்ட ரீதியான சிக்கல்கள் மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை தவிர்க்க விரும்பும் கடனாளிகளுக்கு இந்த சமரசத் தீர்வு பயன் அளிக்கும் என்பதெல்லாம் இந்த சுற்றறிக்கைக்கு ஆதரவாக சொல்லப்படும் காரணங்களாகும்.
  • ஆனால், உண்மையில் சமரசத் தீர்வானது வங்கிகளின் நம்பகத்தன்மையையும் பொறுப்புடைமையையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. சட்டங்களை மீறுவோர் மீது எந்தவிதமான கடும் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட மாட்டாது என்பதை ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு மறைமுகமாக உணர்த்துகிறது. எதிர்காலத்திலும் கடன்களைத் திருப்பி செலுத்தாமல் இருக்கவும் கடன் மோசடிகளில் திரும்பத் திரும்ப ஈடுபடவும் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு செயலாக இது அமைந்துவிடும்.
  • இந்தச் சமரசத் தீர்வினால் வங்கிகளுக்கு கடனாளிகளிடமிருந்து வந்து சேர வேண்டிய முழு நிலுவைத் தொகையும் கிடைப்பதில்லை. இதனால் வங்கிகளுக்கு நஷ்டமே ஏற்படும். தங்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தலாம்.
  • கடன் வழங்கும் அளவை குறைத்துக் கொள்ளலாம். இதன் விளைவாக வங்கிகளின் லாபம் ஈட்டும் திறன் மற்றும் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும். நேர்மையான முறையில் கடன்களைத் திருப்பி செலுத்துபவர்களின் நலன்கள் புறந்தள்ளப்பட்டு மோசடி செய்தவர்கள் பலன் பெறுகின்றனர். நேர்மையற்றவர்களுக்கு இது போன்ற சலுகைகள் வழங்கப்படுவதால் அவர்களுடன் வங்கிகளும் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றன என்ற எண்ணம் மக்களுக்கு உருவாகலாம்.
  • கடன்களைத் திருப்பி செலுத்தாமல் சிலர் நமது நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் அல்லது திவால் ஆகிவிட்டதாக அறிவித்திருக்கலாம். அவர்களைக் கண்டுபிடிப்பதும் அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதும் வங்கிகளுக்கு கடினமான செயல்களாகும்.
  • பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கடன் சீரமைப்புதிட்டத்தை (Restructuring) பயன்படுத்தி கடன்களைதிருப்பி செலுத்தும் அவகாச காலத்தை நீட்டித்தல்மற்றும் புதிய கடன்களைப் பெற்று ஏற்கெனவேஉள்ள கடனை ரத்து செய்தல் போன்றவற்றின் மூலம் பலன் அடைந்துள்ளன என்று வங்கியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
  • 2019-ம் ஆண்டில் கடன் மோசடியாளர்களும் வேண்டுமென்றே கடன்களைத் திருப்பி செலுத்தாதவர்களும் கடன் மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் பலன் பெற தகுதியற்றவர்கள் என்று ஆர்பிஐ சுற்றறிக்கை வெளியிட்டது. ஆனால், சமீபத்திய ஜூன் மாத சுற்றறிக்கை வங்கி துறையின் மீதான நம்பிக்கைக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது.
  • ரிசர்வ் வங்கி இந்த அனுமதியின் வாயிலாக கடன் மோசடியில் ஈடுபட்டவர்களின் செயல்களை மன்னிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் தவறுகளால் ஏற்பட்ட சுமையை சாமானியர்களின் மீது சுமத்துகிறது. இதனால் வங்கிகள் தங்களது நேர்மை தன்மையில் சமரசம் செய்து கொள்ளும் ஆபத்து உள்ளது.
  • கடன் தள்ளுபடிகளில் பாரபட்சம் காட்டப்படும் நிலை இன்று வரை நீடித்து வருகிறது. நூறு கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்களின் பெயர்களைக் கூட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒரு சில வங்கிகளை தவிர பிற வங்கிகள் வெளியிடுவதற்கு தயங்குகின்றன.
  • ஆனால் வீட்டுக் கடன், வாகன கடன், சிறு தொழில் கடன் என்று ரூபாய் ஒரு கோடிக்கும் குறைவான கடன்களை பெற்று தவணை செலுத்தத் தவறியவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடும் நடைமுறையை வங்கிகள் எந்தவித தயக்கமும் இன்றி செயல்படுத்துகின்றன.
  • எந்த ஒரு சமரசத் தீர்வும் வசூலிக்கப்பட வேண்டிய கடன்களைக் குறைந்த செலவிலும் மிகக் குறுகிய காலத்திலும் திரும்பப் பெறுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். சமரச பேச்சு வார்த்தைகளின் போது கடனாளிகளின் நலன்களை விட பொதுமக்களின் நலனே முக்கியம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

நன்றி: தி இந்து (24 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்