TNPSC Thervupettagam

ரிசர்வ் வங்கியின் செயல்பாடு சரியா?

March 17 , 2022 873 days 439 0
  • வங்கிகள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டியது, "நாம் பொதுமக்களின் நிதியைக் கையாள்கிறோம், அதனை சரியான முறையில் நிர்வகித்து ஒப்பந்தப்படி திருப்பித் தர வேண்டும்' என்பதே.
  • வங்கிகள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட வரைமுறைக்குட்பட்டே டெபாசிட் வாங்கி கடன் கொடுக்க முடியும். வாங்கும் டெபாசிட்டில் 4% கேஷ் ரிசர்வ் ரேஷியோ அனுசரிக்க வேண்டும்.
  • மேலும் பதினெட்டு சதவீதம் அரசு பத்திரம் முதலியவற்றில் முதலீடு செய்யவேண்டும். இதுபோக மீதி உள்ள நிதியிலேயே கடன் வழங்க முடியும்.
  • கடன் வழங்குவதிலும் பல கட்டுப்பாடுகள் உண்டு. முன்னுரிமை கடன்களுக்கும் விவசாய கடன்களுக்கும் தனித்தனி குறியீடுகள் உண்டு.
  • ஒரே நபருக்கோ ஒரே நிறுவனத்திற்கோ தொடர்புடைய நிறுவனங்களுக்கோ கடன் வழங்குவதில் கட்டுப்பாடுகள் உண்டு. பிணையில்லாமல் கடன் வழங்குவதற்கும் கட்டுப்பாடுகள் உண்டு.
  • இவ்வளவு கட்டுப்பாடுகளுக்கும் காரணம், வங்கிகள் எந்தக் காரணம் கொண்டும் திவாலாக கூடாது என்பதே.
  • வங்கிகள் தொடர்ந்து ரிசர்வ் வங்கிக்கு அறிக்கைகளை அளிக்கின்றன. அந்த அறிக்கையில் அந்தந்த வங்கிகளின் நிதிநிலை துல்லியமாக தெரிவிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கிக்கு எல்லா வணிக வங்கிகளின் மீதும் பலவித அதிகாரங்கள் உண்டு.
  • வங்கிகளை மேற்பார்வையிடவும், தரவுகளைப் பெறவும், கட்டுப்பாடுகளை விதிக்கவும், தன் சார்பாக இயக்குநர்களை பணியில் அமர்த்தவும் ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உண்டு. உண்மையில் ரிசர்வ் வங்கிக்கு வானளாவிய அதிகாரம் உண்டு.
  • ரிசர்வ் வங்கிக்கு இவ்வளவு அதிகாரங்கள் இருந்தும், சமீபத்தில் சில வங்கிகள் திவாலாகும் நிலைமைக்கு உள்ளானது அதிர்ச்சிகரமானது.
  • கடந்த சில வருடங்களாக எஸ் வங்கியும் லட்சுமி விலாஸ் வங்கியும் எவ்வாறு நடைபெற்றன என்பதும் இந்த வங்கிகளை ரிசர்வ் வங்கி எவ்வாறு தன்னிச்சையாக செயல்பட அனுமதித்தது என்பதும் அலசப்பட வேண்டிய விஷயம்.
  • மார்ச் 5, 2020 அன்று, வங்கியின் சரிவைத் தவிர்க்கும் முயற்சியில் யெஸ் பேங்க் லிமிடெட்டின் கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி எடுத்தது. யெஸ் பேங்க் லிமிடெட் அதிக அளவு வாராக் கடன்களைக் கொண்டிருந்தது.
  • வங்கி டெபாசிட்டிற்கு பொருத்தமில்லாத அதிக கடன் (கிரெடிட் டெபாசிட் ரேஷியோ) வழங்கியிருந்ததை ரிசர்வ் வங்கி கவனிக்கத் தவறிவிட்டது.
  • மார்ச் 2017, மார்ச் 2018, மார்ச் 2019, மார்ச் 2020 நிலவரப்படி, அனைத்து வங்கிகளின் கடன் வைப்பு வீதம் (கிரெடிட் டெபாசிட் ரேஷியோ) முறையே 73.15%, 75.66%, 77.93%, 76.59%-ஆக இருந்தது.
  • ஆனால் யெஸ் பேங்க் லிமிடெட் 92%, 101%, 106%, 162% கடன் வைப்பு விகிதத்தைக் கொண்டிருந்தது. இது அவர்களின் நிதித் தேவையில் 14%, 27%, 43%, 66% என சந்தையில் கடன் வாங்கியிருந்ததை தெரிவிக்கிறது.
  • மார்ச் 2020-இல் ஒட்டுமொத்த வங்கி அமைப்பும் ரூ.3,13,946 கோடி கடன் வாங்கியபோது, யெஸ் பேங்க் லிமிடெட் மட்டும் ரூ.1,13,791 கோடி கடன் வாங்கியது. இந்தப் பொருத்தமின்மை குறித்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கவில்லை.
  • வங்கியின் மொத்த வாராக்கடன் 2016, 2020 ஆண்டுகளில் பின்வருமாறு நகர்ந்தது: ரூ.748.98 கோடி, ரூ.2,018.56 கோடி, ரூ.2,626.80 கோடி, ரூ.7,882.56 கோடி, ரூ.32,877.59 கோடி.
  • 2016-ஆம் ஆண்டில், வங்கியால் அறிவிக்கப்பட்ட வாராக்கடன் ரூ.748.98 கோடிக்கு எதிராக, ரிசர்வ் வங்கி அதை ரூ.4,925.68 கோடியாக மதிப்பிட்டது.
  • ரிசர்வ் வங்கி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வங்கிகளிடமிருந்து அறிக்கையைப் பெறுகிறது.
  • ரிசர்வ் வங்கி, அதிக அளவு யெஸ் வங்கி கடன் வாங்குவதைக் கண்டறிந்து, அதனை நிறுத்தியிருக்கலாம்; வங்கி அதன் வாராக்கடன் புள்ளிவிவரங்களைக் குறைவாகப் பதிவு செய்த போது நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
  • ரிசர்வ் வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மே 2019 முதல் வங்கி நிர்வாக போர்டில் ரிசர்வ் வங்கியின் பிரதிநிதித்துவம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட யெஸ் வங்கிக்கான இறுதி மறுசீரமைப்புத் திட்டமானது, 100-க்கும் மேற்பட்ட பங்குகளைக் கொண்ட தற்போதைய பங்குதாரர்களுக்கு மூன்று வருட காலத்திற்கு அவர்களின் பங்குகளில் 75% வரை முடக்கப்பட்டுள்ளது.
  • அடுத்ததாக லக்ஷ்மி விலாஸ் வங்கி. இவ்வங்கி மீது ரிசர்வ் வங்கி சில திருத்த நடவடிக்கைகளை எடுத்திருக்கக்கூடிய பல சந்தர்ப்பங்கள் இருந்தன.
  • ஒரு வங்கியின் சீரழிவு ஒரே நாளில் நடக்காது. 2016-ஆம் ஆண்டில் வங்கியின் மூலதனம் போதுமான அளவு 11% இருந்தது. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் 10%, 10%, 7% இறுதியாக மார்ச் 2020-இல் 1% விழுக்காடாகக் குறைந்துள்ளது.
  • மொத்த வாராக்கடன்கள் 2016-இல் வெறும் 2% ஆக இருந்தது, 2020-இல் 25% ஆக அதிகரித்துள்ளது . 2016-இல் 1% ஆக இருந்த நிகர வாராக்கடன்கள் 2020-இல் 10.4 % ஆக அதிகரித்துள்ளது.
  • 2017-இல் வங்கி வாங்கிய கடன் ரூ.1,773 கோடியாக இருந்தது, அடுத்த ஆண்டு ரூ. 4,012 கோடியாக அதிகரித்தது. வங்கியால் கடன் வழங்க தேவையான அளவு வைப்புத் தொகையை உருவாக்க முடியவில்லை. 2018-இல் வங்கியின் வைப்புத் தொகை ரூ.33,309 கோடியாகக் குறைந்தது. 2019-இல் 29,279 கோடியாக குறைந்தது.
  • நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைப்புத் திட்டத்தின்படி, நவம்பர் 27, 2020 அன்று அனைத்து பங்கு மூலதனம், கையிருப்பு, எல்விபி-யின் உபரி ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டு, பங்குகளின் மதிப்பு பூஜ்ஜியமாக மாறியது.
  • இந்த இரண்டு வங்கிகளின் செயல்பாடுகளை கூர்ந்து நோக்கினால் இந்த வங்கிகள் சில ஆண்டுகளாகவே தடுமாறிக்கொண்டிருந்தன என்பது தெளிவாகும். வங்கிகள் திவாலாவது ஒரே நாளில் நிகழ்வதல்ல.
  • அது உடலில் ஏற்படும் நோய் போல கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகும், பரவும். சரியான நேரத்தில் கண்டறிந்து சரி செய்ய வேண்டிய விஷயம்.
  • ஆனால் ரிசர்வ் வங்கி உரிய நேரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எல்லாம் முடிந்த பிறகு தற்போது மாற்று வழியை முன்னெடுத்துள்ளது.
  • பொது நலன் கருதி, உச்சநீதிமன்றம், தானே முன் வந்து ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி: தினமணி (17 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்