- லண்டனில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் இருப்பு வைத்திருந்த தங்கத்தில் 100.3 டன் தங்கத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இது மிகவும் முக்கியமான பொருளாதார நடவடிக்கையாகும்.
- ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வலுவாகக் கட்டமைப்பதில் தங்கத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் கையிருப்பில் சுமார் 36,700 டன் தங்கம் உள்ளது (2023 இறுதி நிலவரம்). இது உலகில் இதுவரை உற்பத்தியான தங்கத்தில் 17% ஆகும்.
- இதில் அமெரிக்கா (8,134 டன்), ஜெர்மனி (3,552 டன்), இத்தாலி (2,451டன்), பிரான்ஸ் (2,437 டன்), ரஷியா (2,333 டன்), சீனா (2,262 டன்), ஸ்விட்சர்லாந்து (1,040 டன்), ஜப்பான் (844 டன்) ஆகியவை முதல் எட்டு இடங்களை வகிக்கின்றன. சர்வதேச நிதியம் 2,814 டன் இருப்பு வைத்திருக்கிறது. உலக அளவில் தங்கம் கையிருப்பில் இந்தியா 9-ஆம் இடம் வகிக்கிறது.
- நமது நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் கையிருப்பாக உள்ள மொத்த தங்கத்தின் அளவு 2024 ஏப்ரல் 26-ஆம் தேதி நிலவரப்படி 827.69 டன். இதன் இன்றைய மதிப்பு ரூ.5.8 லட்சம் கோடி.
- உலக பொது அந்நியச் செலாவணியாக அமெரிக்காவின் டாலர் நாணயம் பின்பற்றப்படும் நிலையில், அதன் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே டாலருக்கு மாற்றாக, உயர்மதிப்பு உலோகமான தங்கத்தை இருப்பு வைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அண்மையில் உலக அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்ததற்கு டாலர் மதிப்பு வீழ்ச்சியே காரணம்.
- சர்வதேச அளவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களைப் பராமரிப்பதிலும் நிலையற்ற பொருளாதாரச் சூழல்களிலிருந்து தேசிய பொருளாதாரத்தைக் காப்பதிலும் தங்கம் கையிருப்பு பெரும் பங்கு வகிக்கிறது.
- நாட்டின் ஏற்றுமதி- இறக்குமதிக்கு அந்நியச் செலாவணி கையிருப்பு அவசியமானதாகும். கரன்சி நோட்டுகள், வங்கிகளின் மொத்த வைப்புத் தொகைகள், அரசின் நிதிப் பத்திரங்கள், தங்கம் கையிருப்பு ஆகியவை அந்நியச் செலாவணிக்கு உத்தரவாதம் அளிப்பவை. நமது நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் தங்கத்தின் மதிப்பு 8.9% ஆகும்.
- அதேபோல, கரன்சி தாள்கள், அரசுப் பத்திரங்கள், வைப்புத் தொகைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதாக தங்கமே இருந்து வருகிறது. நமது நாட்டில் புழக்கத்திலுள்ள அச்சிட்ட ரூபாய் நோட்டுகளுக்கு ஈடான தங்கம் ரிசர்வ் வங்கியிடம் இருந்தாக வேண்டும் என்பது நிலையான விதி. அந்த வகையில் 308 டன் தங்கம் ரிசர்வ் வங்கியின் பொறுப்பில் இருந்து வருகிறது. அதுபோலவே, இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளின் ஆதாரமாக 514.1 டன் தங்கம் (மார்ச் 31 நிலவரம்) உள்ளது.
- இந்தத் தங்கத்தை இந்தியாவில் பராமரிக்கப் போதுமான பாதுகாப்புப் பெட்டக வசதி இல்லை. நமது தங்கத்தில் பெரும்பகுதி வெளிநாடுகளிலுள்ள பாதுகாப்புப் பெட்டகங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லண்டனிலுள்ள பாங்க் ஆஃப் இங்கிலாந்து (பிரிட்டனின் மத்திய வங்கி) பெட்டகத்திலும், ஸ்விட்சர்லாந்திலுள்ள பாங்க் ஆஃப் இன்டர்நேஷனல் செட்டில்மென்ட் பெட்டகத்திலும் இந்தியாவின் தங்கம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
- இவ்வாறு இருப்பு வைக்கும் தங்கத்திற்காக பராமரிப்புக் கட்டணம், சிறப்பு வரி ஆகியவற்றை இந்திய அரசு செலுத்த வேண்டும். இவ்வாறு ஆண்டுக்கு சுமார் ரூ.2,000 கோடி செலுத்தப்படுகிறது.
- நமது மொத்த தங்கம் கையிருப்பில் (822.1 டன் - மார்ச் 31 நிலவரம்) உள்நாட்டில் பாதுகாக்கப்பட்டு வந்தது 308 டன் மட்டுமே. தற்போது லண்டனிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள தங்கத்துடன் சேர்த்து இதன் அளவு 408.3 டன்னாக உயர்ந்துள்ளது. இன்னமும் 413.8 டன் தங்கம் வெளிநாட்டு வங்கிகளின் பெட்டகங்களில் உள்ளது.
- தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 100.3 டன் தங்கம் மும்பை, நாகபுரியிலுள்ள உயர் பாதுகாப்புக் கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளிடம் இருப்பிலுள்ள இதர தங்கத்தையும் ஓராண்டுக்குள் இந்தியா கொண்டுவர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
- குடும்பத்தின் அவசரத் தேவைக்கு உதவுவது போலவே, நாடுகளின் அவசரத் தேவைக்கும் கைகொடுப்பது தங்கம் மட்டுமே. இந்தியாவில் கடந்த 1991ஜூலையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது லண்டனில் தன்வசமிருந்த 46.9 டன் தங்கத்தை ஜப்பான் வங்கியிடம் அடமானம் வைத்து 405 மில்லியன் டாலர் கடன் பெற்றது வரலாறு.
- எனவேதான் எந்தக் கட்சியின் அரசு அமைந்தாலும் ரிசர்வ் வங்கியின் தங்கம் கையிருப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகின்றன. 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கம் கையிருப்பு சிறுகச் சிறுக உயர்த்தப்பட்டுள்ளது.
- 2009-இல் 200 டன் தங்கம் வாங்கப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில் மேலும் 270 டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் 27.5 டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாங்கப்படும் தங்கத்தை பத்திரமாகப் பாதுகாக்கும் பெட்டக வசதி இல்லாதிருப்பது, நமது சுயசார்புத் திறனுக்கு அவமானமாகும்.
- உலக அளவிலான நாணயமாக அமெரிக்க டாலர் இருப்பதற்கு அந்நாட்டின் தங்கம் கையிருப்பே மூல ஆதாரமாக உள்ளது. அதுபோல இந்திய ரூபாயும் ஏற்றம் பெற வேண்டுமானால், நமது தங்கம் கையிருப்பும் உயர்த்தப்பட வேண்டும். அதற்கு சுயசார்பான பெட்டகங்கள் தேவை. அந்த வகையில் இந்தியா சரியான திசையில் செயல்படத் தொடங்கி இருக்கிறது. மாறிவரும் புவி அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயமும் இந்த முடிவில் பிணைந்துள்ளது.
நன்றி: தினமணி (04 – 06 – 2024)