- கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இந்திய ரிசா்வ் வங்கி, கொவைட் 19 நோய்த்தொற்று காரணமாக தொழில்களுக்கு ஏற்பட்டுவிட்ட கஷ்டங்களைக் குறைப்பதற்காக பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தது.
- இந்த அறிவிப்பின் மூலம் வங்கிக்கடனைத் திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை அதிகரிக்கவும், அதுபோன்று திருப்பி செலுத்துவதற்கான மாற்றி அமைக்கப்பட்ட கால அவகாசத்தினால் அதுபோன்ற கணக்குகளை வாராக்கடன்களாக காண்பிப்பதையும் நிறுத்தி வைத்தது.
தீர்ப்பு
- ஆனால் ஹரியாணாவின் சிறுதொழில் துறை உற்பத்தியாளா்கள் சங்கம் ரிசா்வ் வங்கியின் சலுகைகள் போதுமான அளவில் இல்லை எனவும், தங்களுக்கு தகுந்த நிவாரணம் கிடைக்க உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை (எண்: 476/2020) சமா்ப்பித்தது. மார்ச் 23-ஆம் தேதி மேற்படி ரிட் வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பினை வெளியிட்டது.
- விரிவான பகுப்பாய்விற்குப் பிறகு, ஹரியாணாவின் சிறு அளவிலான தொழில்துறை உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிய மாரடோரியம் காலத்திற்கான வட்டி தள்ளுபடி, மாரடோரிய காலத்தை நீட்டிப்பது, ரிசா்வ் வங்கியால் துறைவாரியான நிவாரணங்கள் மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சலுகைகள் தவிர அதிக சலுகைகளும் நிவாரணங்களும் ஏற்படுதல், உச்சநீதிமன்றம் வங்கிகளால் வசூலிக்கப்படும் கூட்டு வட்டிக்கு நிவாரணம் வழங்கியிருப்பது ஆகிய நிவாரணங்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- மேலும் ‘இடைக்காலத்திற்கான வட்டி / கூட்டு வட்டி / அபராத வட்டி ஆகியவற்றிற்கு வட்டி வசூலிக்கக் கூடாது என்றும், ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட எந்தத் தொகையும் கடன் வாங்கியவா்களுக்கு திருப்பித் தரப்படும் அல்லது கடன் கணக்கின் அடுத்த தவணையில் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிவாரணம் கூட்டு வட்டி எனப்படும் வட்டிக்கு வட்டிக்கு மட்டுமே பொருந்தும்.
- அதாவது வங்கிகள் வட்டிக்கு வட்டி வசூலித்திருந்தால் அந்த கூட்டுவட்டியை மட்டுமே கடன் காரா்களுக்கு திருப்பித் தரவேண்டும்.
- இதைத் தவிர முன்பு கணக்குகளை வங்கிகள் வாராக்கடன்களாக அனுசரிக்க விதித்திருந்த தடையையும் நீக்கியுள்ளது.
- ஆதலால் இனிமேல் கடன் வசூல் ஆகாத கணக்குகள் வாராக்கடன்களாக அனுசரிக்கப்பட்டு அதற்குரிய முறையில் நிர்வகிக்கப்படும்.
- உச்சநீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவுகள் மிகவும் தெளிவானவை. இதில் எந்த தெளிவற்ற தன்மையும் இல்லை.
- மற்றும் இந்தத் தீா்ப்பில் வெவ்வேறு விளக்கங்களுக்கு எந்த வாய்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
- கூட்டு / அபராத வட்டியை மட்டுமே திருப்பித் தர நீதிமன்றம் உத்தரவிட்டதால் வங்கிகளுக்கு பெரிய நிம்மதி. வங்கிகள் வழக்கமாக வசூலிக்கும் ஒப்பந்த வட்டி, நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- கூட்டு / அபராத வட்டி திருப்பிச் செலுத்துவதற்கான இந்தச் சுமையை யார் சுமக்க வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிடவில்லை என்பதால், தனிப்பட்ட வங்கிகள் இந்தச் செலவைச் சுமக்கக்கூடும்.
- தற்போதுள்ள நிதி நிலைமையில் அரசாங்கம் இந்த சுமையினை ஏற்க முன் வராது என்றே தோன்றுகிறது.
- இப்போது அந்த நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த, ரிசா்வ் வங்கி 2021 ஏப்ரல் 7-ஆம் தேதி வங்கிகளுக்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
- நீதிமன்றத்தீா்ப்பை அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களும் ஒரே மாதிரியாக செயல்படுத்த வேண்டும் என்றும், வெவ்வேறு வசதிகளுக்காக திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய / சரிசெய்யப்பட வேண்டிய தொகையை கணக்கிடுவதற்கான வழிமுறை இந்திய வங்கிகள் சங்கத்தால் இறுதி செய்யப்படும் என்றும், இது மற்ற தொழில் பங்கேற்பாளா்கள் / அமைப்புகளுடன் கலந்தாலோசித்து செய்யப்பட வேண்டும் என்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களது குழு மூலம் இதற்கான ஒப்புதல் அளித்து செயல்படுத்தவேண்டும் என்றும் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- இந்த வழக்கிலும் இந்த வழக்கின் தீா்ப்பை செயல்படுத்துவதிலும் இந்திய வங்கிகள் சங்கத்தின் பயன்பாடு என்ன என்பது ஒரு புரியாத புதிர்.
- உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை அமல்படுத்த வேண்டிய ரிசா்வ் வங்கி, இதில் இந்திய வங்கிகள் சங்கத்தை உள்ளே நுழைத்திருப்பது ஏன் என்பது தெரியவில்லை.
- மேலும், ரிசா்வ் வங்கி வெளியிட்ட இந்த அறிவிப்பு வங்கிகளுக்குத்தான் வெளியிடப்பட்டுள்ளது, இந்திய வங்கிகள் சங்கத்திற்கு அல்ல.
பொறுப்பற்ற செயல்
- நீதிமன்ற உத்தரவு தெளிவாக உள்ளது. ஏதேனும் வேறுபட்ட விளக்கத்திற்கான சாத்தியம் இருந்தாலும், தேவையான விளக்கங்களை வழங்குவதற்கும், கூட்டு / அபராத வட்டி திருப்பிச் செலுத்தும் திட்டத்தை ஒரே மாதிரியாக செயல்படுத்த நிதி நிறுவனங்களை வழிநடத்துவதற்கும் ரிசா்வ் வங்கிக்கு அதிகாரமும் தகுதியும் உண்டு. ரிசா்வ் வங்கியை விட இந்திய வங்கிகள் சங்கம் திறமையானதா?
- சரி, இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) என்பது என்ன? அவா்கள் கூற்றின்படி ஐபிஏ என்பது உறுப்பினா் வங்கிகளின் தன்னார்வ சங்கமாகும்.
- இது ஒரு அரசு நிறுவனம் அல்லது ஒழுங்குமுறை ஆணையம் அல்ல என்று ஐபிஏ கூறுகிறது. இது (அரசு நிறுவனம் இல்லாததால்) நீதிமன்றங்களின் ரிட் அதிகாரங்களுக்குள் வராது.
- மேலும், இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல. தலைமை தொழிலாளா் ஆணையா் (தில்லி) முன்பு, ‘ஐபிஏ செயல்பாட்டில் அரசாங்கம் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை‘ என்று ஐபிஏ கூறியுள்ளது.
- நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த, மற்ற தொழில்துறை பங்கேற்பாளா்களையும் நிறுவனங்களையும் ஏன் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதும் தெளிவாக இல்லை.
- அத்தகைய எந்த உத்தரவையும் நீதிமன்றம் வழங்கவில்லை. கூட்டு வட்டியைத் திருப்பி கொடுக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இதில் தொழில்துறையின் ஆலோசனை எதற்கு?
- நிதி நிறுவனங்களை சரியாக மேற்பார்வை செய்வதும், கட்டுப்படுத்துவதும், தொடா்ந்து வழி நடத்துவதும்தான் ரிசா்வ் வங்கியின் பொறுப்புகளாகும்.
- இந்தப் பொறுப்புகளை மற்ற நிறுவனங்களுக்கு, அதுவும் ஐபிஏ போன்று எந்த சட்டத்திற்குள்ளும், கட்டுப்பாட்டிற்குள்ளும் வராத அமைப்பிற்கு, தாரைவார்ப்பது பொறுப்பற்ற செயல்.
நன்றி: தினமணி (21 – 05 - 2021)