TNPSC Thervupettagam

ரைட் சகோதரர்கள்

December 18 , 2024 7 days 38 0

ரைட் சகோதரர்கள்

  • பறவையைப் பார்த்துப் பறக்க ஆசைப்பட்டனர். கண்ட கனவுக்காகப் பல ஆண்டுகள் உழைத்தனர். சோதனை என்கிற பெயரில் பயமின்றித் தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். இறுதியில் தங்கள் கனவை நிஜமாக்கினர். அவர்கள்தான் விமான உருவாக்குதலில் வெற்றி பெற்ற ரைட் சகோதரர்கள்.
  • வில்பர் ரைட் (1867 ஏப்ரல் 16), ஆர்வில் ரைட் (1871 ஆகஸ்ட் 19) அமெரிக்காவில் பிறந்தனர். தந்தை மில்டன் ரைட் தேவாலயத்தின் பாதிரியார். இதனால் குடும்பம் அடிக்கடி இடம்பெயர்ந்தது. ஓரடி நீளம் கொண்ட பறக்கும் ஹெலிகாப்டர் பொம்மை ஒன்றை தந்தை வாங்கிக் கொடுத்தார். அந்தப் பொம்மை மீது வில்பருக்கும் ஆர்விலுக்கும் ஆர்வம் அதிகம் இருந்தது. அந்தப் பொம்மையைப் போல் பெரிய அளவில் ஒரு வாகனத்தை உருவாக்கி, பறக்க வைக்க வேண்டும் என்று நினைத்தனர். மரம், கம்பி, உலோகக் குழாய்களை வைத்து அந்த வயதிலேயே முயன்று பார்த்தனர்.
  • விபத்தில் காயமடைந்ததால் வில்பரால் கல்லூரிக்குச் செல்ல முடியவில்லை. ஆனால் ஏராளமான நூல்களைப் படித்தார். தந்தையின் தேவாலயப் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவினார். காசநோயால் பாதிக்கப்பட்ட தாயைக் கவனித்துக்கொண்டார். பின்னர் அச்சுத் தொழிலில் இறங்கினார். ஆர்விலையும் சேர்த்துக் கொண்டு செய்தித்தாள் வெளியிட்டார். மாத இதழையும் ஆரம்பித்து நடத்தினர். அந்த அச்சு இயந்திரங்கள் ரைட் சகோதரர்களின் இயந்திர வடிவமைப்பு, தொழில்நுட்பத் திறன் போன்றவற்றுக்குத் தீனியிட்டன.
  • சைக்கிள் வியாபாரத்தில் இறங்கினர். 1896இல் சொந்தமாக சைக்கிளை உருவாக்கி விற்பனை செய்தனர். பல எளிய இயந்திரக் கருவிகளை உருவாக்கினர். சைக்கிள் கடையில் கிடைத்த நிதியும் செய்த ஆராய்ச்சியும் அவர்களை வானூர்தியின் பக்கம் திருப்பின.
  • பறக்கும் ஆற்றல் கொண்ட இறக்கைகள், காற்றின் வழியாக நகர்த்துவதற்குத் தேவையான உந்துவிசை, அதைச் செலுத்தவதற்கான எளிதான இயந்திரம் போன்றவற்றை உருவாக்கினர். விமானம் பறக்கும் உயரத்தையோ திசையையோ விமானி நினைத்தால்தான் மாற்ற வேண்டும். அதற்கு இறக்கைகளின் மையத்தைத் துல்லியமாகக் கையாள வேண்டும்.
  • 1900இல் கிளைடரை உருவாக்கினர். அதைச் சோதனை செய்ய உயரமான, காற்றோட்டமான இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மனம் தளரவில்லை. மேலும் நான்கு ஆண்டுகள் தங்கள் வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்து சோதனை செய்தனர்.
  • வட கரோலினாவில் உள்ள டெவில் மலையில் 1903 டிசம்பர் 14 இல் விமானம் பறக்கத் தயாரானது. சகோதரர்களில் யார் செலுத்துவது என்று நாணயம் சுண்டிப் பார்த்ததில், வில்பர் வென்றார். அமர முடியாது. குப்புறப் படுத்துக்கொண்டு கை, கால்களால் விமானத்தைச் செலுத்த வேண்டும். விமானம் துளியும் நகரவில்லை. அவர்கள் அப்போதும் மனம் தளரவில்லை. அடுத்த மூன்று நாள்களில் மேலும் சில மாற்றங்களைச் செய்தனர். டிசம்பர் 17இல் விமானம் மீண்டும் தயாரானது. ஆர்வில் படுத்துக்கொண்டு விசையை இழுத்தார். விமானம் ஆடி ஆடி, புகை விட்டுக்கொண்டு மெதுவாக மேலே எழுந்தது. 12 நொடிகள் பறந்தது! 120 அடி தூரத்துக்கு அப்பால் பத்திரமாகத் தரை இறங்கியது.
  • அப்படிப் பறந்த அந்த 12 விநாடிகள்தான் வான்வழிக்கு அடிகோலிய நேரம். ஆர்விலும் வில்பரும் பலமுறை பறந்து சோதனை செய்தனர். வில்பர் நான்காவது முறையாக முயற்சி செய்தபோது, 59 நொடிகளில் 852 அடி உயரத்துக்குப் பறந்தார்.
  • விமானங்களை மேலும் மேம்படுத்தி மாற்றி, மாற்றிப் பறந்தனர். காப்புரிமை பெற்றனர். 1908இல் அமெரிக்க ராணுவத்துடன் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பிரெஞ்சு நாட்டுடன் இரண்டாவது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த வெற்றியின் வளர்ச்சிதான் தற்போது நடைமுறையில் உள்ள விமானங்கள்.
  • 1912 மே 30இல் வில்பர் ரைட் மறைந்தார். ஆர்வில் 1948 ஜனவரி 30 அன்று மறைந்தார். இவர்கள் முதன் முதலில் வடிவமைத்து, பயணம் செய்த அந்த விமானம் வாஷிங்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்