- லட்சுமி விலாஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி வர்த்தகத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை 2020 நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரையிலான ஒரு மாதக் காலத்துக்கு அமலில் இருக்கும். இந்த ஒரு மாதத்துக்கு வங்கி எந்த வர்த்தகத்திலும் ஈடுபட முடியாது.
- வங்கியின் சேமிப்புதாரர்களில் ஒருவர் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை மட்டுமே எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும். மருத்துவச் செலவு, உயர் படிப்பு, திருமணம், இதர தவிர்க்க முடியாத அவசரக் காரணத்துக்காக விசேஷமாக ஒருவர் கணக்கிலிருந்து அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும்.
- ரிசர்வ் வங்கியினுடைய பரிந்துரையின் அடிப்படையில் இந்திய அரசு இந்தத் தடையை விதித்துள்ளது.
- வழக்கம்போலவே பொதுமக்களிடத்திலும், குறிப்பாக வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியிலும் இது பீதியை உருவாக்கியுள்ளது.
- வங்கியில் உள்ள தங்கள் பணம் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்ற கேள்வி எல்லோரிடத்திலும் உருவாகியுள்ளது. முக்கியமாக, வங்கித் துறை மீதான நம்பகத்தன்மை அடிவாங்கலாகியிருக்கிறது.
ஐந்தாவது நிதி நிறுவனம்
- கரூர் நகரத்தில் பதிவு அலுவலகத்தைக் கொண்டு இயங்கிவரும் லட்சுமி விலாஸ் வங்கி 1926-ல் உருவாக்கப்பட்டது.
- 16 மாநிலங்கள், 3 ஒன்றியப் பிரதேசங்களில் மொத்தம் 563 கிளைகளோடு செயல்படும் இந்த வங்கியில் 4,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
- 2020 செப்டம்பர் நிலவரப்படி ரூ.21,000 கோடி வைப்புத் தொகை மற்றும் ரூ.16,000 கோடி கடன் என்று மொத்தம் ரூ.37,000 கோடி வியாபாரத்தைக் கொண்டது இது. கவனிக்க வேண்டிய அம்சம், 2018 மார்ச் நிலவரப்படி ரூ.59,000 கோடியாகவும், 2019 மார்ச் நிலவரப்படி ரூ.49,000 கோடியாகவும் இருந்த அதன் வணிகம் இரண்டு வருடங்களுக்குள் ரூ.22,000 கோடி அளவுக்குக் குறைந்திருக்கிறது.
- கடந்த இரண்டு வருடங்களில் இப்படி திவாலாகும் நிலையைச் சந்திக்கும் ஐந்தாவது நிதி நிறுவனம் லட்சுமி விலாஸ் வங்கி. பிஎம்சி வங்கி இப்படியான நெருக்கடியைச் சந்தித்ததன் தொடர்ச்சியாக 10 வாடிக்கையாளர்கள் உயிரிழந்ததை இங்கே நினைவுகூரலாம்.
- இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், பிஎம்சி போன்ற கூட்டுறவு வங்கிகளோ, யெஸ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி போன்ற தனியார் வங்கிகளோ திவாலானால் ஒரு சேமிப்புக் கணக்குதாரருக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரைதான் வைப்பு & கடன் காப்பீடு உத்தரவாத நிறுவனம் மூலமாகத் திரும்பக் கிடைக்கும்.
- ஆனால், ஐஎல் & எப்எஸ், டிஹெச்எப்எல் போன்ற வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் திவாலானால் அவற்றின் வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு அந்தப் பாதுகாப்பும் கிடையாது.
- பொதுவாக, திவாலாகும் சூழலை எட்டிய இந்த ஐந்து நிதி நிறுவனங்களுக்குமான காரணங்களாக மூன்று விஷயங்களைக் கூறலாம்.
- அவை உயர்நிலை ஊழல், ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் உள்ள கோளாறு, ஒன்றிய அரசு - ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கை மற்றும் கடன் வசூல் கொள்கையில் உள்ள குறைபாடுகள்.
அதிகரிக்கும் வாராக் கடன்
- பொதுவாகவே லட்சுமி விலாஸ் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி போன்ற பாரம்பரியமிக்க தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளை மதித்து, கிட்டத்தட்ட பொதுத் துறை வங்கிகளைப் போலவே சாமானிய மக்களுக்குச் சிறந்த சேவையாற்றி வருபவை.
- ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக லட்சுமி விலாஸ் வங்கியின் கடன் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. தகுதிக்கு மீறிய வகையில் பெருநிறுவனங்களுக்குக் கடன் கொடுக்கத் தொடங்கியது அந்த வங்கி.
- கூடவே உயர்நிலை ஊழலும் கலந்தது. இதன் காரணமாக, அந்த வங்கியின் மொத்த வாராக் கடன் ரூ.4,000 கோடிக்கு மேல் (25% வரை) உயர்ந்தது. மேலும், பேசல் விதிகளின்படி 9%-ஆக இருக்க வேண்டிய ‘போதுமான மூலதன விகிதம்’ பூஜ்ஜியத்துக்கும் கீழே சென்றுவிட்டது.
- லட்சுமி விலாஸ் வங்கியின் இயக்குநர் குழுவில் ரிசர்வ் வங்கியின் இரண்டு பிரதிநிதிகள் உள்ளனர்.
- ரிசர்வ் வங்கி காலத்தே தலையிட்டிருந்தால் இந்த நெருக்கடியைச் சரிசெய்திருக்க முடியும். அப்படி நடக்கவில்லை.
- பெருநிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு 15 – 20% வரை சொத்து அடமானம் பெற்றால் போதும் என்ற கடன் கொள்கையும் இத்தகைய நெருக்கடிக்கு ஒரு காரணமாகும்.
- அதேபோல், கடன் வசூல் தீர்ப்பாயம், லோக் அதாலத், சர்ஃபேசி சட்டம், திவால் சட்டம் உள்ளிட்ட எந்தச் சட்டமும் பெருநிறுவனங்களின் கடன்களை முழுமையாக வசூலிக்கப் போதுமானதாக இல்லை.
- “2016-ல் உருவாக்கப்பட்ட ஐபிசி சட்டம் மூலமாக இது வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடனில் 44% வரைதான் வசூலிக்க முடிந்துள்ளது” என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு கூறியதை இங்கே குறிப்பிடலாம்.
- அவ்வாறு வசூலிக்கப்படும் பணமும் உடனடியாக முழுமையாக வங்கிகளுக்குக் கிடைப்பதில்லை. ஆகையால், கடன் வசூல் கொள்கையிலும் கோளாறு உள்ளது.
தேவையான நடவடிக்கை
- வசதியிருந்தும் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதை கிரிமினல் குற்றமாக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.
- கடன் பெற்றவர்களின் அசையும், அசையா சொத்துகள் முழுவதையும் முடக்கி, கடனுக்கு ஈடாக எடுத்துக்கொள்ளும் வகையில் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும். அதன் அடிப்படையில் ஏனைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதுவே சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.
- மாறாக, லட்சுமி விலாஸ் வங்கியை டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் சிங்கப்பூர் வங்கியின் இந்தியத் துணை நிறுவனத்துடன் இணைக்கலாம் என்ற முடிவை நம்முடைய ஆட்சியாளர்கள் எடுக்கின்றனர்.
- இந்தியாவில் 22 நகரங்களில் 33 கிளைகள் மட்டுமே கொண்ட டிபிஎஸ் வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கியை இணைப்பது எந்த வகையிலும் சரியான முடிவாக இருக்காது.
- லட்சுமி விலாஸ் வங்கியின் அசையா சொத்தை மறு நிர்ணயம் செய்தால் அது பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும்.
- ஆனால், அதை விடுத்து ரூ.2,500 கோடி முதல் போட முன்வந்துள்ள ஒரே காரணத்துக்காக இந்த வங்கியை ஒரு வெளிநாட்டு வங்கியுடன் அவசர அவசரமாக இணைப்பது லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் சேமிப்புப் பணத்தைப் பாதுகாக்கவோ, நான்காயிரம் ஊழியர்களின் பணியைப் பாதுகாக்கவோ நிச்சயம் உதவாது.
பொதுத் துறையைக் கவனியுங்கள்
- 1969-க்குப் பிறகு இதுவரை திவாலான மிகப் பெரும்பாலான தனியார் வங்கிகள் பொதுத் துறை வங்கிகளுடன்தான் இணைக்கப்பட்டுள்ளன.
- உதாரணமாக, பேங்க் ஆப் தஞ்சாவூர் வங்கியானது இந்தியன் வங்கியுடனும், பேங்க் ஆப் தமிழ்நாடு வங்கியானது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடனும், பேங்க் ஆப் கொச்சின் வங்கியானது ஸ்டேட் வங்கியுடனும், குளோபல் டிரஸ்ட் வங்கியானது ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் வங்கியுடனும் இணைக்கப்பட்டன.
- முதன்முறையாக, லட்சுமி விலாஸ் வங்கி என்ற தனியார் வங்கியை டிபிஎஸ் என்ற வெளிநாட்டு வங்கியுடன் இணைக்க ஒன்றிய அரசும் நம் ரிசர்வ் வங்கியும் முயற்சிக்கின்றன. இது ஒரு மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.
- எனவே, இந்த முயற்சி உடனடியாகக் கைவிடப்பட வேண்டும். மாறாக, லட்சுமி விலாஸ் வங்கியைப் பொதுத் துறை வங்கி ஒன்றுடன் இணைக்க வேண்டும்.
- இப்படிச் செய்யும்போது ஏற்படக்கூடிய இழப்பை ஒன்றிய அரசாங்கம் ஏற்க வேண்டும். உடனடியாக இது சிறு சங்கடத்தை அரசுக்கு உருவாக்கினாலும் தொலைநோக்கில் அதுவே சரியான தீர்வுக்கு வித்திடும். ஒரு வங்கியின் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நலனையும் 4,000 பணியாளர்களின் நலனையும் இதுவே பாதுகாக்கும்.
- பொதுவாக, ரிசர்வ் வங்கி தனது கண்காணிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். உயர்நிலை ஊழலில் ஈடுபடுபவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அவர்களின் சொத்து முழுவதையும் முடக்கி இழப்பை ஈடுகட்ட வேண்டும்.
- வங்கிகளின் கடன் கொள்கை, கடன் வசூல் கொள்கையில் முன்னேற்றகரமான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.
- இதுதான் இத்தகைய பிரச்சினைகளுக்கு ஒட்டுமொத்த தீர்வாக அமையும்.
நன்றி : இந்து தமிழ் திசை (24-11-2020)