TNPSC Thervupettagam

லதா மங்கேஷ்கர்: ஒரு இனிய பாடல் என்றும் முடிவதில்லை

February 7 , 2022 910 days 460 0
  • கலையாளுமையின் வழியாகத் தென்னிந்திய மனங்களில் குடிகொண்ட பல பாலிவுட் நட்சத்திரங்களை அறிவோம்.
  • அவர்களை மீறிய நீடித்த செல்வாக்கு, சில இந்தி இசையமைப்பாளர்களுக்கும் பின்னணிப் பாடகர்களுக்கும் உண்டு.
  • மொழியைக் கடந்து, அவதாரங்களைப் போல் பாடகர்கள் கொண்டாடப்படுவது, திரைப்படக் கலையின் வீச்சும் அதன் ஒலிப்பதிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியும் கொண்டு வந்து சேர்த்த மரியாதை.
  • அதற்கு முன்பு, நாற்பதுகள் வரையிலும் நாடக மேடைகள், தெருக் கச்சேரிகளில் பாடிக் கொண்டிருந்தவர்களை வடஇந்திய மக்கள் ‘கானா வாலா’ எனக் கொச்சையாக அழைத்தார்கள். அதே காலகட்டத்தில், நாடகக் கலைஞர்களை நாம் ‘கூத்தாடி’ என அலட்சியப் படுத்தியதைப் போல.
  • ‘கானக் குயில்’, ‘குயின் ஆஃப் மெலடி’, ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என இன்று நாடு கொண்டாடும் லதா மங்கேஷ்கர், ஓர் எளிய, மராட்டிய ‘கானா வாலா’ குடும்பத்தில் பிறந்தவர்.
  • தந்தை பண்டிட் தீனாநாத், தாய் ஷிவந்தி இருவரும் இசையையும் நாடகத்தையும் நேசித்தவர்கள்.
  • பசியை வெல்வதற்காகக் கலையிடம் தஞ்சமடைந்த குடும்பத்துக்கு, மூத்த மகளாகத் தனது பங்களிப்பைச் செலுத்த, 13 வயது முதல் பாடவும் நாடகங்களில் நடிக்கவும் தொடங்கினார் லதா.
  • ஒரு கட்டத்தில் தந்தையின் மறைவு, குடும்பத்தைக் காக்க வேண்டிய தலைமகளாக அவரது கலை வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. அப்போது ஒரு பிறவிக் கலைஞராக இன்னும் தீவிரமாக வெளிப்பட்டு நின்றார்.
  • தன்னுடைய பதின்ம வயதில், மராட்டிய சினிமாவில் முதல் பின்னணிப் பாடலைப் பாடித் திரையுலகுக்கு அறிமுகமான காலத்தில் அவர் எப்படிப் பாடினாரோ, அதேபோல்தான் கடைசி வரை லதா மங்கேஷ்கர் பாடினார்.
  • தொடக்கத்தில் சில மராத்திப் படங்களில் பாடியிருந்தாலும் 1949-ல் வெளியான ‘மஹல்’ இந்திப் படத்தில் ‘ஆயஹா.. ஆனே வாலா’ என்கிற பாடலில் தொடங்கியது லதாவின் உண்மையான திரையிசைப் பயணம்.
  • ‘வர வேண்டியவர் ஒருபோதும் வராமல் போக மாட்டார்’ என்கிற அந்தப் பாடலின் பொருளும் கூட லதாவின் வருகையைச் சொல்லிவிட்டது.
  • இந்தித் திரையிசையில் அவரது குரல் அறிமுகமான பிறகு, இந்தியாவின் எட்டாவது அட்டவணையில் இருக்கும் இந்தி உள்ளிட்ட மொழிகளைக் கடந்து, பல மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிக் குவித்திருப்பது முறியடிக்க முடியாத கின்னஸ் சாதனையாக இருக்கிறது.
  • வயதுக்குரிய தடம் காலம்தோறும் அவரது குரலில் சிறிதுசிறிதாகத் தென்பட்டபோதும், பாடும் முறை என்பது அவருக்கே உரித்தான பிறவி வரமாகவே தொடர்ந்தது.

ஓர் உலக அதிசயம்!

  • “லதா மங்கேஷ்கர் தானாக நிகழ்ந்த ஓர் உலக அதிசயம்! அவர் போன்ற ஒரு பாடகியை உலக வெகுஜன இசையில் வேறு எங்கேயுமே நாம் பார்க்க முடியாது. பாடும் முறையில் அவர் வெளிப்படுத்தும் ஆழம், நூலளவுக்குக்கூட உணர்வுகளை மிகைப்படுத்தாத தன்மை இரண்டும் அவரது தனித்த அடையாளங்கள்.
  • ஒரு பாடலின் மெட்டுக்கு, வரிகள் காட்டும் உண்மைக்கு என்ன உணர்வு தேவையோ அதைக் கச்சிதமாகத் தன்னுடைய குரலில் கொண்டுவந்துவிடும் ஆற்றல், இறைவன் அவருக்கு வழங்கிய கொடை.
  • வாழ்க்கையின் இயல்பான அத்தனை உணர்வுகளும் அவரது குரல்வழியே துல்லியமாக வெளிப்பட்டிருக்கின்றன.
  • பாடகிகளுக்குப் பொதுவான குரல் பிரச்சினை ஒன்று உண்டு. அது உச்ச ஸ்தாயியில் பாடினால் கீச்சுத் தன்மையும் கீழ் ஸ்தாயியில் பாடும்போது கட்டைக் குரலும் வந்துவிடும்.
  • ஆனால், எப்படிப் பாடினாலும் துல்லியமான குரல் லதா மங்கேஷ்கருடையது. இது அவர் கற்றுக்கொண்டு வந்ததல்ல; இதைக் கற்றுக்கொள்ளவும் முடியாது. கடந்த 45 ஆண்டுகளில் அவர் பாடிய ஒரு பாடலையாவது கேட்காமல் என்னுடைய நாட்கள் கடந்து சென்றதில்லை” என்று வியந்துபோகிறார் வெகுஜன இசை விமர்சகர் ஷாஜி.

இனிய குரலின் கடவுள்

  • எந்தவொரு திரையிசைப் பாடகரையும் அவர் பாடத் தொடங்கிய மூன்றாவது படத்திலிருந்து அவரை ‘இனிய குரலின் கடவுள்’ எனக் கொண்டாடியிருப்பார்களா என்று தெரியவில்லை.
  • லதா மங்கேஷ்கருக்கு அது நடந்தது. ‘மஜ்பூர்’, ‘அந்தாஸ்’, ‘பர்ஸாத்’ தொடங்கி ‘அனார்கலி’, ‘முகல்- ஏ-ஆஸம்’ எனக் காதலின் அமரத்துவம் இசையின் வடிவமாக வெளிப்பட்ட அத்தனை படங்களிலும் காவியக் குரலாக ரசிகர்களின் மனதை ஊடுருவிப் பாய்ந்தார் லதா.
  • அத்தகைய பாடல்கள் மெலடியாகத் தாலாட்டியதுடன் ரசிகர்களின் மனக் காயங்களுக்கு மருந்தாகவும் அமைந்துபோயின.
  • 50 முதல் 70-கள் வரையிலான இந்தித் திரையிசையின் பொற்காலத்தில், ஆணுலகில் மிதிபட்டு நசுங்கும் குடும்பப் பெண்களின் கண்ணீரையும் மீட்சியையும் ஒலித்த குரலும் லதாவுடையதாக மாறியிருந்தது.
  • அவர் வந்து பாடிக்கொடுக்க வேண்டும் என்பதற்காக மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை காத்திருந்த இசை ஜாம்பவான்கள் பாலிவுட்டில் இருந்தார்கள். ‘லதாவின் குரலுக்காக ஐந்து மாதங்கள் காத்திருந்தேன்’ என்று இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி சொல்லியிருக்கிறார்.
  • அன்று, புகழின் உச்சத்தில் விளங்கிய பாடகர்களான முகமது ரஃபியும் கிஷோர் குமாரும் லதா மங்கேஷ்கரின் கால்ஷீட்டுக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துப் பாடித் தந்ததெல்லாம் திரையிசை வரலாறு.

சிவாஜி கணேசனின் தங்கை

  • இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒருசில கறுப்பு - வெள்ளைப் படங்களுக்கு 60-களில் சில பாடல்களைத் தமிழ் தெரியாமலேயே பாடியிருக்கிறார் லதா.
  • அதன் பின்னர், தமிழ் சினிமாவில் அவரது குரலை நேரடியாக ஒலிக்க வைத்தவர் இளையராஜா. 1987-ல் பிரபு நடித்து, ராஜா இசையில் வெளியான ‘ஆனந்த்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆராரோ… ஆராரோ...’ பாடலில் வந்து தமிழகத்தைத் தாலாட்டினார்.
  • இளையராஜாவின் இசையில் ‘சத்யா’ படத்துக்காக அவர் பாடிய ‘வளையோசை கலகலவென’ பாடல் தலைமுறைகள் தோறும் கடத்தப்பட்டுவரும் அதிசயமாகிவிட்டது.
  • அவருடைய லட்சக்கணக்கான தமிழக ரசிகர்களின் கைபேசிகளில் ரிங்டோனாக இன்னும் அப்பாடல் வசீகரம் குறையாமல் ஒலித்துக்கொண்டிருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் இந்தியில் பல பாடல்களை லதா பாடியிருக்கிறார்.
  • திலீப்குமார் போன்ற பாலிவுட்டின் நட்சத்திரங்கள் தமிழ்த் திரையுலக ஆளுமைகளுடன் நெருக்கமான நட்பைக் கொண்டிருந்ததுபோல், சிவாஜி கணேசனைத் தன்னுடைய சொந்த சகோதரனாகக் கருதி அன்பு செலுத்தியவர் லதா மங்கேஷ்கர்.
  • சென்னை வரும்போதெல்லாம், ‘அன்னை இல்லம்’தான் அவரது இல்லம். “நமது இந்தியக் கலாச்சாரத்தில் ரக்ஷா பந்தன் என்பது சகோதர - சகோதரி இடையிலான பாசப் பிணைப்பை எடுத்துக்காட்டும் பண்டிகை.
  • ரக்ஷா பந்தன் சமயத்தில் லதாஜி சென்னையில் இருந்தால், அப்பாவுக்கு ராக்கி கட்டுவதற்கு ஓடோடி வந்துவிடுவார்.
  • அவரது வருகைக்காக அன்னை இல்லம் விழாக்கோலம் பூண்டுவிடும். அப்பாவின் மறைவுக்குப் பிறகு எங்கள் குடும்பத்தின் மீது துளி பாசமும் குறையாதவர்.
  • அவர் மறைவு எங்கள் குடும்பத்துக்கும் இந்தியத் திரையுலகத்துக்கும் பேரிழப்பு” என லதா மங்கேஷ்கருடனான நினைவுகளை, உடைந்த குரலுடன் பகிர்ந்துகொள்கிறார் பிரபு.
  • சிவாஜியின் குடும்பத்தினர் மட்டுமல்ல; இந்தியாவே தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டதாகத்தான் கண்ணீர் வடிக்கிறது.

நன்றி: தி இந்து (07 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்