- சென்னை லயோலா கல்லூரி, 2024-2025 இல் நூற்றாண்டுப் பயணத்தைப் புது எழுச்சியோடு தொடர்கிறது. 1925 முதல் 2025 வரை கடந்த 100 ஆண்டுகளில் இக்கல்லூரி இந்திய அறிவுசார் தளத்தில் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நூற்றாண்டு காலப் பயணமானது விரிவாக்கம், அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, அறிவுசார் பயணம் என்ற மூன்று கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.
உருவான பின்னணி:
- லயோலா கல்லூரி மதராஸ் கத்தோலிக்க மறை மாவட்டப் பேராயர் ஜே.ஆலன் விடுத்த அழைப்பின் அடிப்படையில், இயேசு சபையினரால் (Society of Jesus) நிறுவப்பட்டது. லயோலா கல்லூரியின் வரலாறு 1924 மார்ச் 10 மதராஸ் மாகாணத்தின் ஆளுநர் வெல்லிங்டனும், அவரது மனைவியும் இணைந்து நாட்டிய அடிக்கல்லில் இருந்து தொடங்கியது. தந்தை பிரான்சிஸ் பெட்ரம் முதல் பத்து வருடங்கள் தலைவராகவும் முதல்வராகவும் கல்லூரிக்கான சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தினார்.
- கல்லூரியின் இரண்டாவது நிறுவனர் என்று பெருமையோடு அழைக்கப்படும் தந்தை ஜெரோம் டிசோசாவின் (1942-1950) பணிக் காலத்தில் பல புதிய துறைகள் உருவாக்கப்பட்டு கல்லூரி விரிவாக்கப்பட்டது. ஜே.குரியாகோஸ் (1970 முதல் 1983), தலைமையின் கீழ் லயோலா கல்லூரி அடுத்த கட்ட நகர்வை நோக்கி முன்னேறியது.
- பல்கலைக்கழக மானியக் குழு வழங்கிய தன்னாட்சி அதிகாரத்தை (Autonomous) இந்தியாவில் எட்டு கல்லூரிகளில் ஒரு கல்லூரியாக லயோலா பெற்றது. இதன் மூலம் தனது பாடங்களை, பாடத்திட்டத்தினை உருவாக்கவும், தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடவும் அதிகாரம் பெற்றது.
சமூக நோக்கம்:
- லயோலா கல்லூரியின் முக்கிய லட்சியம் மக்களுக்குப் பாகுபாடற்ற கல்வி வழங்க வேண்டும் என்பதே. அதன் அடிப்படையில் கல்லூரியின் அனைத்துச் செயல்பாடுகளிலும் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து மக்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
- கல்லூரி மாணவர் சேர்க்கையில், இத்தகைய பின்புலத்தில் இருந்து வரும் மாணவர்களுக்குத் தனி வாய்ப்பும், அந்த மாணவர்கள் கல்லூரியில் இணைந்த பிறகு சிறப்புக் கவனமும் மேம்பாடும் வழங்க வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது. அதனைக் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாகச் செயல்படுத்தி, சமூகத்தில் ஒரு மெளனப் புரட்சியை ஏற்படுத்தி, இன்றும் செயல்படுத்திவருகிறது.
- லயோலாவின் பாடத்திட்டம் மாணவர்களை அறிவுத் திறத்துடனும், மனிதர்கள் சார்ந்த அக்கறையுடனும் ஒருங்கிணைந்து உருவாக்க வேண்டும் என்ற உயரிய கொள்கையோடு உருவாக்கப்பட்டது. தொடக்கம் முதலே மதிப்பீட்டுக் கல்வி (Value Education), மதிப்பீடுகள் அடிப்படையான கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
- லயோலாவின் பாடத்திட்டம் என்பது வெறும் வகுப்புகளோடு நில்லாமல் சமூக, கள முன்னெடுப்புகள் மூலம் மாணவ, மாணவிகளின் அறிவுசார் ஆளுமை வளர்ச்சியையும், சமூகப் பொறுப்பையும் ஒருங்கே வழங்குகிறது.
பெருமைக்குரிய மாணவர்கள்:
- இக்கல்லூரி தனது வரலாற்றுப் பயணத்தில் பல துறை வல்லுநர்களை, தலைவர்களை, விளையாட்டு வீரர்களை உருவாக்கிக்கொண்டும், தொடர்ந்து பயணித்துக்கொண்டும் இருக்கிறது. இக்கல்லூரியில் படித்துப் பின்னாள்களில் பெரும் உயரங்களைத் தொட்ட இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன், ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும், பின்னர் பன்னிரண்டாவது இந்திய நிதிக் குழுமத்தின் தலைவராகவும் இயங்கிய டாக்டர் சி.ரங்கராஜன், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகராகவும் - அதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராகவும் பதவிவகித்த எம்.கே.நாராயணன், கல்வியாளர்களான முனைவர் மால்கம் எஸ்.ஆதிசேஷய்யா, முனைவர் டி.என்.அனந்தகிருஷ்ணன் போன்றோர் இங்கு பயின்றவர்கள்தான்.
- மேலும், புகழ்பெற்ற பத்திரிகையாளர்களான என்.ராம், சசிகுமார் மேனன், மகசேசே விருது பெற்ற பி.சாய்நாத் ஆகியோர் இக்கல்லூரியின் மாணவர்களே. உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள், பல இந்தியக் குடிமைப் பணி அதிகாரிகள், தலைவர்கள் எனப் பலரை இக்கல்லூரி உருவாக்கி தேசத்துக்கு வழங்கியிருக்கிறது.
- தவிர, பல்வேறு விளையாட்டு வீரர்களையும் உருவாக்கியுள்ளது. அதில் குறிப்பாக புகழ்பெற்ற டென்னிஸ் வீரர்களான ராமநாதன் கிருஷ்ணன், அமிர்தராஜ் சகோதரர்கள், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் போன்றவர்கள் இக்கல்லூரி வரலாற்றின் ஓர் அங்கத்தினர். இத்துடன் புகழ்பெற்ற திரைப்படக் கலைஞர்களையும் இயக்குநர்களையும் உருவாக்கிய பெருமை லயோலாவின் காட்சித் தொடர்பியல் (Visual Communication) துறைக்கு உண்டு.
தொடரும் பயணம்:
- 1925ஆம் ஆண்டு மூன்று இளங்கலைப் படிப்புகளில், 75 மாணவர்களோடு தொடங்கிய லயோலாவின் கல்விப் பயணமானது இன்று விரிவு பெற்று 24 இளங்கலைப் பட்டப்படிப்புகள், 21 முதுகலைப் படிப்புகள், 15 வெவ்வேறு துறைகளில், முழு நேரம், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வு என்று பெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.
- இன்று இக்கல்லூரியில் 450க்கும் மேற்பட்ட பேராசிரியர்களின் வழிகாட்டலில் 10,000 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். என்றும் எதிலும் உயர்வானதை அடைய வேண்டும் என்கிற உத்வேகத்துடன் இயங்கும் பேராசிரியர்களின் வழிகாட்டுதல் மூலம் ‘பிரகாசிக்கட்டும் உங்கள் ஒளி’ (Let Your Light Shine) என்ற விருது வாக்கோடு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கிறது இக்கல்லூரி. ஆணும் பெண்ணும் பிறருக்காகவும் சமூகத்துக்காகவும் (Men and Women for and With Others) என்ற நோக்கத்துடன் பல மாணவ, மாணவிகளை உருவாக்கும் பயணத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, தடைகளைத் தாண்டிப் பயணிக்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (01 – 08 – 2024)