TNPSC Thervupettagam

லாங்வுட் சோலை கான்கிரீட்டுக்கு பலியாகக் கூடாது

December 2 , 2023 405 days 267 0
  • நீலகிரி மாவட்டத்தில் பருவமழைதோறும் நிலச்சரிவிற்கு உள்ளாகும் கோத்த கிரிக்கு மிக அருகில் 116 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள அடர் காட்டின் பெயர் ‘லாங்வுட் சோலா’ (சோலா - சோலைக்காடு). தேயிலைக்காடுகளுக்கு இடையே எஞ்சியிருக்கிறது இந்தக் காடு. இங்கே காட்டுமாடுகள், பெரிய பழந்தின்னி வௌவால்கள் மலை அணில்கள், கூரன்பன்றிகள் (mouse deer), முள்ளம்பன்றிகள், மரநாய்கள், சீகாரப்பூங்குருவிகள் என, நகரமயமாகும் நீலகிரிக் காடுகளி லிருந்து விரட்டி அடிக்கப்பட்ட எண்ணற்ற உயிர்களுக்கு கடைசிப் புகலிடமாக விளங்குகிறது லாங்வுட் சோலைக்காடு. இந்தக் காட்டுப்பகுதி வரலாற்றுத் துயரங்களையும், நம்பிக்கைகளையும் தன்னகத்தே கொண்டது.

மீட்கப்பட்ட காடு

  • சில ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் எரிபொருள் தேவைக்காக லாங்வுட் சோலைக் காட்டில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு, காட்டில் செழித்திருந்த பசுமையும், பல்லுயிர்களின் வாழ்வும் வழக்கொழிந்து போயின. இந்தக் காட்டுப்பகுதியை ஒட்டி 18 குக்கிராமங்கள் மேட்டுப்பகுதியில் இருந்தன. அம்மக்கள் தண்ணீர் தேடி கீழே வரும் நிலை ஏற்பட்டது. கீழிருந்து தண்ணீரை மேலே கொண்டுசெல்ல முடியாமல் திணறியபோதுதான், காட்டை அழித்த பெருந்தவறை அப்பகுதி மக்கள் உணர்ந்தார்கள்! அதன் பிறகு சில உள்ளூர் மக்களின் துணையோடு காட்டைப் புனரமைக்க களமிறங்கிய இயற்கை செயற்பாட்டாளர்களின் அயராத முயற்சியால் மறுபடியும் உயிர்த்தெழுந்தது காடு.
  • அழிக்கப்பட்டு மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட ஒரு காட்டைக் காட்டுங்கள் என்றால்... நமது சுட்டுவிரல் லாங்வுட் சோலைக்காட்டை நோக்கி நீளும்! உயிரினங்களுக்கு மட்டுமில்லாமல் கோத்தகிரியைச் சுற்றிலும் வசிக்கும் சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேலான மக்களின் நீராதாரமும் லாங்வுட் சோலைக்காடுதான்! இயற்கையின் உயிர்மூச்சான இக்காட்டில் தனித்துவமான தாவரத்தொகுதிகளும் உள்ளன. லாங்வுட் சோலைக்காட்டின் வற்றாத சில நீரோடைகள்தாம் வறட்சி காலத்தில் எல்லா உயிர்களுக்கும் தாகம் தணிக்கின்றன! சோலைக்காடுகள் தரும் பெருங்கொடையே இந்த நீரூற்றுகள்தாம்! இந்த ஊற்றுக்கண்களைக்குருடாக்கும் எந்த முயற்சியிலும் மனிதர்கள் ஈடுபடக் கூடாது!

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

  • லாங்வுட் சோலைக்காடு பகுதியில்அமைந்துள்ள ‘சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மையம்’ மாணவர்களை முன்னமே லாங்வுட் சோலைக்காட்டுக்குள் அழைத்துப்போய் அழிக்கப்பட்ட காட்டின் மீட்டுருவாக்கம் குறித்தும், காடுகளின் தேவை குறித்தும் அறிமுகம் செய்துவந்தது. இக்காட்டுக்குள் கண்களை மூடி ஒரு நிமிடம் அமர்ந்திருந்தால் சுமார் முப்பது பறவைகளின் குரலொலிகளை உள்வாங்க முடியும்! இக்காட்டில் சின்னச்சின்ன நீரூற்றுகள் பெருக்கெடுக்கும் பேரழகைப் பார்க்கலாம்! குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தலையும் வண்ணத்துப்பூச்சிகளை ரசிக்கலாம்! லாங்வுட் சோலைக்காட்டில் இயங்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மையத்திற்கு ‘குயின்ஸ் கேனபி’ என்கிற உலகளாவிய அங்கீகாரம் கிடைத்தது. இந்த அங்கீகாரத்தை அடிப்படையாகக்கொண்டு தற்போது இயங்கிவரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மையத்தை நவீனப்படுத்த தமிழ்நாடு அரசு ரூ. 5 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

இப்படி நடக்கலாமா

  • கோடிக்கணக்கில் பணம் புரளும் திட்டத்தில் கட்டுமானச் செலவுகளே முதன்மை இடத்தைப் பிடிக்கின்றன. ஆனால், ஒரு காட்டுக்கு இது எப்படிப் பொருந்தும்? ஆறாயிரம் சதுர அடியில் கட்டிடமும், அதற்கேற்ப சாலை வசதிகளும், மின்சாரத்தில் இயங்கும் கார்களும் என வெகு துரிதமாகத் தொடங்கும் கட்டுமானப்பணிகளைப் பார்க்கையில் மக்கள் மட்டுமில்லாமல் காட்டுயிர்களும் அஞ்சவே செய்யும்.
  • லாங்வுட் சோலைக்காட்டில் இந்தச் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டம் நிறைவேறுமானால் இப்பகுதியில் வாழும் மக்களுக்கும் காட்டுயிர்களுக்கும் துன்பம் நேரும். அதன் பொருட்டே மக்களும் இயற்கை ஆர்வலர்களும் இந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறார்கள். நாளொரு போராட்ட அறிவிப்பை வெளியிட்டு இந்தத் திட்டத்தை உடனே கைவிடுமாறு அரசை வலியுறுத்திவருகிறார்கள். ஒவ்வோர் இரவும் பறவைகளின் இன்னிசையோடு விடியும் காட்டில், சுற்றுலா திட்டம் நடைமுறைக்கு வந்தால் ... மனிதர்களின் இரைச்சலோடுதான் காட்டின் இரவு விடியும் என்கிறார்கள்.

தேயிலைத் தோட்டங்களில் தொடங்கலாம்

  • காலநிலை மாற்றத்தையும் காட்டின் இருப்பையும் கருத்தில் கொண்டு காட்டுக்குள் நவீன சுற்றுலா முயற்சிகளைக் கொண்டுவரும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். இப்படியான திட்டங்கள் காலத்தின் தேவை என அரசு கருதினால், கோத்தகிரியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் இத்திட்டங்களைத் தொடங்கலாம்.
  • லாங்வுட் சோலைக்காட்டில் அயல் தாவரங்களின் பெருக்கம் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த வேண்டும். இயல் தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவும் திட்டங்களை மேற்கொள்ளவேண்டும். தனியார் தேயிலைத் தோட்ட முதலாளிகள் போட்டுவைத்துள்ள மின்வேலிகளால் ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டிற்குப் பயணிக்க முடியாத சூழல் இருப்பதை அரசும் அரசு சார்ந்த துறைகளும் கவனத்தில் கொண்டு எஞ்சியுள்ள காடுகளைக் காப்பாற்ற வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்