TNPSC Thervupettagam

வகுப்பறை எல்லோருக்குமானதாக மாறுவது எப்போது

July 21 , 2023 547 days 330 0
  • சிறப்புக் குழந்தைகளால் கற்க முடியாது, அவர்களால் வகுப்பறைச் செயல்பாடுகளில் ஈடுபட முடியாது என்பன போன்ற தவறான முன் முடிவுகள் பலருக்கும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. கல்வித் துறையில் பணியாற்றுபவர்களிடம்கூட இத்தகைய முன்முடிவுகள் இருப்பதுதான், நம் வகுப்பறைகளை அனைவரையும் உள்ளடக்கிய வகுப்பறைகளாக (Inclusive classroom) மாற்ற முடியாமைக்கான அடிப்படைக் காரணம் எனச் சொல்லலாம்.

புரிதல் அவசியம்:

  • கற்றல் குறைபாடு தொடங்கி ஆட்டிசம், மன வளர்ச்சிக் குறைபாடு, டவுன் சிண்ட்ரோம் எனும் மரபணுக் கோளாறு, மூளை முடக்குவாதம் எனப் பல வகையான மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் நம் வகுப்பறைக்கு வந்துசேரக்கூடும். இவர்கள் அனைவருக்கும் தனித்தனியான தேவைகளும் ஆற்றல்களும் இருக்கும். அவற்றை முதலில் புரிந்துகொண்ட பிறகே, அவர்களைக் கற்றல் செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபடுத்த முடியும்.
  • சிறப்புத் தேவை கொண்ட குழந்தைகளை அவர்களின் தேவையைப் பொறுத்து, 1. கற்பிக்கப்பட சாத்தியமுள்ளவர்கள்; 2. பயிற்றுவிக்கப்படக் கூடியவர்கள்; 3. தொடர்ச்சியான பராமரிப்பு தேவைப்படுபவர்கள் என வகைப்படுத்தலாம்.
  • இதில் முதல் பிரிவினரான கற்பிக்கப்படச் சாத்தியம் உள்ளவர்களைப் பொதுப் பள்ளிகளில், சாதாரண வகுப்பறையிலேயே அமர்த்தி கற்பிக்க வேண்டும். குழந்தைப் பருவத்திலிருந்தே சாமானியத் திறனுடையோருடன் ஒன்றிணைந்து, அவர்களின் அரவணைப்போடு வளரும்போது, இவர்களின் ஆளுமை முழுமையடைய வாய்ப்பு அதிகம்.
  • அதே நேரம், சாமானியக் குழந்தைகள் இந்தச் சிறப்புக் குழந்தைகளுடன் இணைந்து பழகும் போது, அவர்களும் பல்வேறு புரிதல்களைப் பெறுவர். மற்ற இரண்டு வகை மாணவர்களுக்கும் சற்றுக் கூடுதல் கவனிப்புத் தேவை என்பதால், அவர்கள் சிறப்புப் பள்ளியை நாட வேண்டியதாகிறது.
  • இக்குழந்தைகளின் தன்னம்பிக்கை, திறன்கள் போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கான மிகச் சிறந்த சூழல், அனைவரையும் உள்ளடக்கிய வகுப்பறைகள்தான். அதன் தொடக்கமாக இரண்டு முக்கியமான மாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.
  • முதலில், ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்புக் கல்வி பயின்ற ஆசிரியர்களை - குறைந்தபட்சம் ஒருவர் - பணியமர்த்த வேண்டும். அந்த ஆசிரியர்கள் குழந்தைகளின் நிலையை மதிப்பிட்டு, அதன் அடிப்படையில் தனித் தேவைக்கேற்பப் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் (Individualized Education Plan – IEP). இப்படி மாற்றியமைக்கப்பட்ட பாடத் திட்டத்தின்படி வகுப்பாசிரியரும் சிறப்புக் கல்வி ஆசிரியரும் இணைந்து இக்குழந்தைகளுக்குப் பாடங்களைக் கற்றுத்தர முடியும்.
  • இரண்டாவதாக, இக்குழந்தைகள் வகுப்பறைச் சூழலில் பொருந்திப்போகவும் பாடங்களைப் புரிந்துகொள்ளவும் உதவும், ‘கல்வி கற்றல் உதவியாளர்’ (Shadow teacher) ஒருவரை வகுப்புக்குள் இருக்க அனுமதிக்க வேண்டும். ஒரு குழந்தை தன்னிச்சையாகச் செய்யும் பணிகளுக்கும் உதவி தேவைப்படும் நிலையை வகுப்பாசிரியருக்கும் சக மாணவர்களுக்கும் எடுத்துச்சொல்வது இந்த உதவியாளர்களின் முக்கியப் பொறுப்பு.

ஆசிரியர்களுக்குப் பயிற்சி:

  • பள்ளிக் கல்வித் துறை மூலம் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு பணியிடப் பயிற்சிகளில், கல்வி கற்றல் உதவியாளர்களை வகுப்பறைக்குள் அனுமதிப்பதன் தேவை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறப்புக் குழந்தைகளைப் பள்ளியில் அனுமதித்தால் மட்டும் போதாது, அவர்கள் உண்மையாகவே கற்கும்படிச் செய்தால்தான் வகுப்பறைகள் எல்லோருக்குமானவையாக மாறும்.
  • இன்று உலகெங்கும் கூடிவாழ்தல் (Allyship) எனும் கருத்தாக்கம் வலுப்பெற்றுவருகிறது. உரிய பிரதிநிதித்துவம் பெறாத, விளிம்புநிலையில் வாழும் அனைவரையும் அரவணைத்து வாழ்வதே சமூக லட்சியம் என்று சொல்வதே இந்தக் கூடிவாழ்தல் கொள்கை.
  • இனம், மதம், நிறம், உடல்/ அறிவு சார்ந்த குறைபாடுகள், பாலினம் என மக்களை ஒடுக்கும் எல்லாக் காரணிகளையும் தகர்த்து, அனைவருக்கும் சம வாய்ப்புகள் தரும் சமூகமே நமது லட்சியம் என்று சொல்லும் இளம் தலைமுறையினர் பெருகிவருகின்றனர். எனவே, உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல் எனும் அடிப்படையிலும் நமது வகுப்பறைகளை எல்லோருக்குமானவையாக மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நன்றி: இந்து தமிழ் திசை (21  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்