TNPSC Thervupettagam

வங்க தேசத்தில் தற்போதைய நிலைமை என்ன? தூண்டப்படும் இந்திய வெறுப்பு!

September 10 , 2024 78 days 137 0

வங்க தேசத்தில் தற்போதைய நிலைமை என்ன? தூண்டப்படும் இந்திய வெறுப்பு!

  • இந்தியாவுக்கான தலைவலி தொடங்கிவிட்டது!
  • வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தின்போது நடந்த படுகொலைகள் தொடர்பான வழக்குகளின் விசாரணைக்காக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்தச் செய்து அழைத்துவர வேண்டும் என்று வங்கதேசத்தின் பன்னாட்டுக் குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை வழக்குரைஞர் முகம்மது தஜுல் இஸ்லாம் தெரிவித்திருக்கிறார்.
  • அனேகமாகப் புலி வாலைப் பிடித்த நிலைதான் இந்தியாவுக்கு ஏற்படப் போகிறது!
  • புதிய நீதிபதிகளை நியமித்துக் குற்றவியல் தீர்ப்பாயமும் விசாரணைக் குழுவும் அமைக்கப்படுவதுடன், போராட்டத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பான விசாரணைக்காக, ஷேக் ஹசீனா உள்பட தலைமறைவான அனைத்துக் குற்றவாளிகளுக்கும் எதிராகக் கைது ஆணை பிறப்பிக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்றும் அறிவித்திருக்கிறார் இஸ்லாம்.
  • வங்கதேசத்தில் போராட்டம் வலுப்பெற்றதும் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இடைக்கால ஏற்பாடாக இந்தியாவுக்குத் தப்பிவந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குத் தஞ்சமடையச் செல்வார் என்று கூறப்பட்டது. எனினும், ஒரு மாதத்துக்கும் மேலாக இந்தியாவில்தான் தங்கியிருக்கிறார்.
  • விடுதலைப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக என்று மாணவர்களால் தொடங்கப்பட்டுத் தீவிரமடைந்த போராட்டங்களில் 600-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பெருங்குழப்பத்துக்கு இடையே ராணுவம் யார் பக்கம் என்றுகூட தெரியாத சூழ்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஹசீனா தப்பி இந்தியா வந்தார்.
  • காவல்துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் வன்முறைக் கும்பல்கள் பெரும் கலவரத்திலும் சூறையாடலிலும் இறங்கினர். சிறுபான்மையினர் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். இதனிடையே, ஒருவழியாகப்  போராடும் மாணவர்களின் ஒப்புதலுடன் நோபல் பரிசு பெற்ற பொதுவான  மனிதரெனக் கருதப்படும் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
  • நாடு தழுவிய பெரும் வன்முறைக்குப் பிறகான ஒரு மாத காலத்துக்குப் பின்  இப்போது வங்க தேசத்தின் நிலைமை எப்படி இருக்கிறது? இந்த அரசு என்ன செய்யப் போகிறது?
  • பதவிப் பொறுப்பேற்றதும் மீண்டும் அமைதியும் சட்ட ஒழுங்கையும்  ஏற்படுத்துவது, லஞ்சத்தை ஒழிப்பது, புதிதாகத் தேர்தல் நடத்தத் தயாராவது ஆகியவைதான் முதன்மையான – முக்கியமான பணி என்றறிவித்தார் முகமது யூனுஸ்.
  • போராட்டத்தை முன்னின்று நடத்திய இரு மாணவர் தலைவர்களையும் உள்ளடக்கிய யூனுஸின் அமைச்சரவை, தற்போது வங்கதேசத்தின் நீதிமன்றங்கள், காவல்நிலையங்கள் தொடங்கித் தேர்தல் ஆணையம் வரை சீரமைப்பதில் கவனம் செலுத்துகிறது. இதற்காக, ஐக்கிய நாடுகள் அவையின் வளர்ச்சித் திட்டத்தின் உதவியையும் கேட்டிருக்கிறது.
  • ஹசீனாவின் அதிகாரத்துக்கு எதிராகப் போராடத் தொடங்கியவர்கள் பெருங்கோபம் கொண்டிருந்த நிலையில் நிர்வாக சீரமைப்புகள்தான் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஹசீனாவின் அரசு, எதிர்க்கட்சியினரைச் சிறையில் அடைத்ததுடன் ஊடகங்களின் சுதந்திரத்தை முடக்கியது; மக்களுக்கு எதிராகக் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.
  • ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதுடன், அவருடைய 15 ஆண்டு கால ஆட்சியில் தேர்தல் ஆணையம் உள்பட அரசுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் சீரழிந்துவிட்டதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
  • இந்தப் பிரச்சினைகள் எதுவுமே யாராலும் உடனடியாகச் செய்து முடிக்கக் கூடியவை அல்ல என்பதுதான் உண்மை நிலை. மகளிருக்கான சிறுகடன்கள் திட்டத்தை முன்னெடுத்ததற்காக நோபல் பரிசு பெற்றவரான யூனுஸ், பதவியேற்றதும் நாட்டுக்கு ஆற்றிய உரையில் பொறுமையாக இருக்கும்படிதான் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
  • வன்முறைகளை ஒடுக்கி, சட்ட ஒழுங்கைத் திரும்ப ஏற்படுத்துவதில் தனது அரசு மிகவும் முனைப்பாகச் செயல்பட்டதாகத் தெரிவித்த யூனுஸ், எல்லாரும் சற்றுப் பொறுமையாக இருங்கள், அரசு அமைப்புகள் / நிறுவனங்கள் மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

என்னதான் நடக்கிறது?

  • ஷேக் ஹசீனா வெளியேறி புதிய அரசு நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகும்கூட வங்க தேசத்தில் இன்னமும் அமைதியின்மையும் குழப்பமும்தான் நிலவுகின்றன.
  • கூடுதல் ஊதியம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் காரணமாக நூற்றுக்கும் அதிகமான தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இன்னமும் ஹசீனாவுக்கும் அவாமி லீகிற்கும் எதிராகப் பரவலான கோபம் நிலவுகிறது. இந்தியாவில் தஞ்சமடைந்து தங்கியிருக்கும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக 100-க்கும் அதிகமான வழக்குகளில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா நாடு திரும்ப நேர்ந்தால் இந்த வழக்குகளின் விசாரணை முடிவில் என்ன நடக்கும் என்பதை யார் வேண்டுமானாலும் எளிதில் ஊகிக்கலாம். ஹசீனாவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்ட முக்கியமான அரசு – ராணுவ உயர் அலுவலர்கள் அனைவரும் பதவிகளிலிருந்து விலகிவிட்டனர்.
  • ஹசீனாவுடன், அவருடைய கட்சியுடன் அல்லது அவருடைய அரசுடன் இணைந்து செயல்பட்ட முன்னாள் அமைச்சர்கள், நீதிபதிகள் தொடங்கி பத்திரிகையாளர்களிலிருந்து கிரிக்கெட் வீரர் வரையிலும் எண்ணற்றோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் பலரும் தாக்கப்பட்டனர், நாட்டிலிருந்து வெளியேறிவிடாமல் தடுக்கப்பட்டனர். சிலர் சிறைகளிலும் தள்ளப்பட்டுள்ளனர்.
  • இதுபோன்று பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டுவதென்பது தவறானதாகவே முடியும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த வழக்குகளில் பெரும்பாலானவை சட்டப்படி கொஞ்சமும் வலுவற்றவை; அரசியல் நோக்கம் கொண்டவை என்று டாக்காவிலுள்ள ஆளுமைக் கல்வி மையத்தின் செயல் இயக்குநரான ஸில்லூர் ரஹ்மான். பழி வாங்கும் இந்த நீதியானது ஹசீனா தோற்றுவித்த பாணியெல்லாம் அப்படியேதான் இருக்கிறது; பழி வாங்குவோரும் வாங்கப்படுவோரும்தான் இடம் மாறியிருக்கின்றனர் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மாணவர்களின் நிலைமை என்ன?

  • ஹசீனா வெளியேற்றப்பட்ட ஒரு வாரத்துக்குள்ளாகவே – காவல்துறையினரும் வேலைநிறுத்தத்தில் இறங்கிவிட்டதால் - தலைநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியைக்கூட மாணவர்கள் மேற்கொண்டனர். சில பள்ளிகளும் ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்களுக்கு மையமாகத் திகழ்ந்த டாக்கா பல்கலைக்கழகம் உள்பட சில பள்ளிகளும் கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றன. என்றபோதிலும் இயல்பு நிலை இன்னமும் திரும்பவில்லை.
  • பல கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைக்கப்பட்டனர். சில இடங்களில் முறைப்படி வகுப்புகள் தொடங்கிவிட்டாலும் மிகவும் குறைவான மாணவர்களே வகுப்புகளுக்கு வருகின்றனர்.
  • புதிதாக உருவாக்கப்பட்ட இடைக்கால அரசு நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்துவிடும் என்றே இன்னமும் நம்பிக்கையுடன் மாணவர்கள் இருக்கிறார்கள்.
  • ‘நாட்டில் ஏற்கெனவே அதிகாரத்தில் இருந்தவர்களை அகற்றுவது முதல் படி.
  • இவர்களை அகற்றுவதன் மூலம் கடந்த காலத் தவறுகள் திருத்தப்படுகின்றன. ஒரே மாதத்தில் ஒட்டுமொத்தமாக நாட்டையே மாற்றிவிடுவதும் சாத்தியமான ஒன்றல்ல; அரசுக்கு இன்னமும் கொஞ்சம் கால அவகாசம் தரத்தான் வேண்டும்’ என்கிறார் டாக்கா பல்கலைக்கழக மாணவியான ஸ்னேகா அக்தர்.
  • அர்த்தமுள்ள சீர்திருத்தங்கள் செய்யப்படும் வரையிலும், அது மூன்று மாதங்களோ, மூன்று ஆண்டுகளோ அல்லது ஆறு ஆண்டுகளேகூட ஆகட்டும், முகமது யூனுஸ் தலைமையிலான அரசே பதவியில் தொடர வேண்டும் என்று குறிப்பிடுகிறார் டாக்கா பல்கலை. மாணவர் ஹபிஸுர் ரஹ்மான்.

அடுத்தது என்ன?

  • நாட்டில் இயல்பு நிலை மெதுவாகத் திரும்பத் தொடங்கியிருப்பது நன்றாகவே தெரிகிறது. டாக்கா நகர வீதிகள் தற்போது பாதுகாப்புப் படையினருக்கும் மாணவர்களுக்கு இடையிலான போராட்டக் களமாக இல்லை. இணையதள சேவை மீண்டுவிட்டது. நாடு தழுவிய ஊரடங்குகள் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன. கண்டதும் சுட உத்தரவு போன்றவையும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
  • பெருமளவில் வன்முறை தணிந்துவிட்ட நிலையில், புதிய அத்தியாயத்துக்கான நம்பிக்கை துளிர் விட்டிருக்கிறது. கடைகள், வங்கிகள், ஹோட்டல்கள் திறந்திருக்கின்றன. தங்கள் பாதுகாப்பு பற்றிய அச்சம் காரணமாக வேலை நிறுத்தத்தில் இறங்கிவிட்டிருந்த காவல்துறையினர் மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளனர்.
  • ஆனாலும், மக்களிடையே நம்பிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. வீதிகளில் உயர் அலுவலர்களின் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ஏனெனில், போராட்ட காலத்தில் மாணவர்களுக்கு எதிராக இந்த அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் எல்லாம் இன்னமும் வங்க தேச மக்களிடையே மறக்கப்படாமல்தான் இருக்கிறது. போராட்டத்தின்போது பல காவலர்கள் கொல்லப்பட்டனர். காவல்நிலையங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன; கொள்ளையடிக்கப்பட்டன.
  • வங்கதேசத்தின் முன்னுள்ள இன்னொரு பெரும் சவால் – நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைப்பது. போராட்டங்கள் காரணமாக வாரக்கணக்கில் தொழிற்சாலைகள் உள்பட எல்லாமும் மூடிக்கிடந்ததால் உணவுப் பொருள்களில் தொடங்கி அனைத்தும் விலைகள் உயர்ந்துவிட்டன. எளிய மக்களால் எதையும் விலை கொடுத்து வாங்க முடியாத நிலைமை.

நாட்டின் முன்னுள்ள மிகப் பெரிய கேள்வி: புதிய தேர்தல்கள் எப்போது நடைபெறும்?

  • நாட்டில் புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான அதிகாரங்கள் எதுவும் இடைக்கால அரசுக்கு வழங்கப்படவில்லை. அரசியல் கட்சிகளுக்கு இடையே சீர்திருத்தங்கள் தொடர்பாக இணக்கத்தை உருவாக்குவதிலும் நாட்டில் தேர்தலை நடத்துவதிலும்தான் இவர்கள் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். ஹசீனாவின் அவாமி லீக் கட்சி இன்னமும் கண்காணிப்பின் கீழ்தான் இருக்கிறது. இன்னமும் யூனுஸுக்கு போராட்டக்கார மாணவர்களின் ஆதரவு இருந்தபோதிலும் இதற்கும் ஏதாவது காலவரையறை இருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
  • பாதுகாப்பு என்பது தொடர்ந்து ஒரு பிரச்சினையாக இருந்து, பொருளாதார மீட்சியும் மெதுவாக இருந்தால் இளைய தலைமுறை பொறுமை இழக்க நேரிடலாம்.
  • தேர்தல் நடக்கும்பட்சத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான அதிகபட்ச வாய்ப்புள்ள – ஷேக் ஹசீனாவின் பிரதான எதிர்க்கட்சியான - வங்கதேச தேசிய கட்சியும் விரைவில் தேர்தலை நடத்தச் செய்வதற்கான முனைப்புகளில் இறங்கும்.
  • இப்போது இருக்கும் இடைக்கால அரசில் வங்கதேச தேசிய கட்சிக்கு முறைப்படியான எவ்வித பங்களிப்பும் இல்லாத நிலையில், தாங்கள் எதிர்பார்க்கும் தேர்தல் விரைவில் நடத்தப்படாவிட்டால் என்ன செய்வார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
  • மறுபடியும் தேசிய கட்சியே போராட்டத்தைத் தொடங்குமா? அல்லது நாட்டில் பதற்றத்தை உருவாக்கும் வேலைகளில் இறங்குமா? அப்படி ஏதேனும் நேர்ந்தால் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு வங்க தேசத்தின் அரசியல் நிலைத் தன்மை குலைய நேரிடும் அபாயம் உருவாகிவிடும். இது யாருக்குமே நல்லதல்ல.
  • இதனிடையேதான், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதற்காகக் கண்டனங்களைத் தெரிவித்து வரும் வங்கதேச அரசியல் கட்சிகள், இந்தியாவுக்கு எதிரான மனநிலையை மக்களிடையே உருவாக்க முனைகின்றன.
  • ஷேக் ஹசீனாவை நாடு கடத்தித் திருப்பித் தங்கள் நாட்டுக்கே அனுப்ப வேண்டும் என்ற வங்க தேசத்தின் பன்னாட்டுக் குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை வழக்குரைஞர் முகம்மது தஜுல் இஸ்லாமின் கோரிக்கையானது, நாட்டு மக்களிடையே பொருளாதாரம் உள்ளிட்ட பிற விஷயங்களின் மீதான தீவிரத் தன்மையைக் குறைத்து இந்திய வெறுப்பைத் தூண்டிக் காலத்தைக் கடத்துவதாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது.
  • வங்க தேச அரசியல் எதிர்காலம் பற்றிக் கணிக்க இந்த ஒரு மாதம் என்பது மிகவும் குறைவே. இந்தியாதான் தற்போது வங்க தேச விவகாரங்களை மிகக் கவனமாகக் கையாள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது!

நன்றி: தினமணி (09 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்